Unnamed: 0
int64
0
1.34k
Book
stringclasses
75 values
Chapter
stringlengths
25
48
Content
stringlengths
252
17.1k
Url
stringlengths
47
62
100
லேவியர்
லேவியர் அதிகாரம் – 11 – திருவிவிலியம்
உண்ணத் தக்க விலங்குகள் (இச 14:3-21) 1 ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, அவர்களிடம் கூறியது: 2 “நீங்கள் இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; உலகில் உள்ள உயிரினங்களில் நீங்கள் உண்ணத்தக்கவை இவைகளே. 3 கால்நடைகளில், குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிற, விரிசல் குளம்புள்ள, அசைபோடுபவற்றை நீங்கள் உண்ணலாம். 4 அசைபோடும் கால்நடைக்கு விரிகுளம்பில்லையெனில், அதனை நீங்கள் உண்ணலாகாது. குறிப்பாக ஒட்டகம்; அது அசைபோடும்; ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை; எனவே, அது உங்களுக்குத் தீட்டு. 5 குழிமுயல் அசைபோடும்; ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை; எனவே, அது உங்களுக்குத் தீட்டு. 6 முயல் அசைபோடும்; ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை; எனவே, அது உங்களுக்குத் தீட்டு. 7 பன்றி இரண்டாகப் பிரிந்திருக்கும் விரிகுளம்புடையது; ஆனால், அது அசைபோடாது; எனவே, அது உங்களுக்குத் தீட்டு. 8 இவற்றின் இறைச்சியை உண்ணலாகாது. இவற்றின் சடலங்களைத் தொடவும் கூடாது. இவை உங்களுக்குத் தீட்டானவை. 9 நீர்நிலைகளில் இருப்பனவற்றில் நீங்கள் உண்ணத்தக்கவை; கடல்களும், ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் இருப்பனவற்றில் துடுப்பும் செதிலுமுள்ளவை அனைத்தும் நீங்கள் உண்ணத்தக்கவை. 10 ஆனால், கடல்களும் ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் செறிந்திருக்கும் உயிரினங்களும், துடுப்பும் செதிலும் அற்றவை உங்களுக்கு அருவருப்பு. 11 அவை உங்களுக்கு அருவருப்பு. அவற்றின் இறைச்சியை உண்ணலாகாது. அவற்றின் சடலங்களை அருவருப்பாகக் கருதுங்கள். 12 நீர்வாழ்வனவற்றில் துடுப்பும் செதிலும் அற்றவையாவும் உங்களுக்கு அருவருப்பு. 13 பறவைகளிலும் நீங்கள் உண்ணாமல் அருவருக்க வேண்டியவை; கழுகு, கருடன், கடலூராஞ்சி, 14 பருந்து, வல்லூறு, அதன் இனம், 15 காகம், அதன் இனம், 16 தீக்கோழி, கூகை, சம்புகம், சிறுகழுகு, அதன் இனம், 17 ஆந்தை, சகோரம், கோட்டான், 18 நாரை, கூழக்கடா, குருகு, 19 கொக்கு, இராசாளி, அதன் இனம், புழுக்கொத்தி, வெளவால். 20 பறப்பனவற்றுள் நான்கு கால்களால் நடமாடும் ஊர்வன யாவும் உங்களுக்கு அருவருப்பு. 21 ஆயினும், நான்கு கால்களால் நடமாடியும் தரையில் தத்திப் பாயும்படி நெடிய பின்னங்கால்கள் உடையனவற்றை உண்ணலாம். 22 நீங்கள் உண்ணக்கூடியவை; தத்துக்கிளி, அதன் இனம்; வெட்டுக்கிளி, அதன் இனம்; மொட்டை வெட்டுக்கிளி, அதன் இனம்; சுவர்க்கோழி, அதன் இனம். 23 பறப்பனவற்றுள் நான்கு கால்களால் நடமாடும் மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பு. 24 அவை உங்களுக்குத் தீட்டு, அவற்றின் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர். 25 அவற்றின் சடலத்தை எடுப்போர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். மாலைவரை அவர் தீட்டுடையவர். 26 இரண்டாய்ப் பிரிந்த குளம்புகள் இல்லாமலும் அசைபோடாமலும் இருக்கும் அனைத்து உயிரினங்களைத் தொடுகிற எல்லாரும் தீட்டுடையவர். 27 நான்கு கால் உயிர்களில் உள்ளங்கால் ஊன்றி நடக்கும் அனைத்தும் உங்களுக்குத் தீட்டு. 28 அவற்றின் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர். அவற்றின் சடலத்தை எடுப்போர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். மாலைவரை அவர் தீட்டுடையவர். அவர் உங்களுக்குத் தீட்டு. 29 நிலத்தில் செறிந்திருக்கும் ஊர்வனவற்றில் உங்களுக்குத் தீட்டானவை; எலி, சுண்டெலி, ஆமை இனம்; 30 உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி 31 ஊர்வனவற்றில் இவை உங்களுக்குத் தீட்டு. அவற்றுள் செத்ததைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர். 32 அவற்றுள் செத்த ஏதேனும், எதன்மேலாவது விழுந்தால் அது தீட்டுப்படும். அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும், தோலானாலும், கோணிப்பையானாலும், வேலைக்கு உதவும் எந்தக் கருவியானாலும் மாலைவரை அது தண்ணீரில் போடப்பட வேண்டும். மாலைவரை அது தீட்டுப்பட்டது. பின்னால் அது தூய்மையாகும். 33 அவற்றுள் ஏதேனும் மண் பாண்டத்துக்குள் விழுந்தால் அதனுள் இருக்கும் அனைத்தும் தீட்டுப்பட்டுவிடும். எனவே, அது உடைக்கப்பட வேண்டும். 34 உண்ணத்தக்க எந்த உணவிலும் இப்பாண்டத்துத் தண்ணீரில்பட்டால் அது தீட்டு; அந்தப் பாண்டத்திலிருக்கும் எந்தப் பானமும் தீட்டு. 35 அவற்றின் சடலம் எதன்மீது விழுந்தாலும் அது தீட்டு; அடுப்போ சமையல் பாண்டமோ எனில், அவை உடைக்கப்பட வேண்டும். அவை உங்களுக்குத் தீட்டு, ஏனெனில், அவை தீட்டுப்பட்டிருக்கும். 36 நீரூற்றும் மிகுந்த நீருள்ள கிணறும் எனில், அவை தூய்மையாய் இருக்கும்; ஆனால், அவற்றின் சடலம் தொடும்பகுதி தீட்டுப்பட்டது. 37 விதைக்கிற தானியத்தின் மீது அவற்றின் சடலம் விழுந்தால் அது தீட்டன்று. 38 தண்ணீர் விடப்பட்ட விதைமேல் விழுந்தால், அது தீட்டாகும். 39 உங்கள் உணவுப்பொருளான கால்நடை ஒன்று சாக, அதன் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர். 40 அதன் சடலத்தைத் தின்பவர் தம் உடைகளைத் துவைக்கவேண்டும். அவர் மாலைவரை தீட்டுடையவர். மேலும் அதன் சடலத்தை எடுத்துப் போகிறவரும் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். அவர் மாலைவரை தீட்டுடையவர். 41 தரையில் நகர்ந்து செல்லும் ஊர்வன அனைத்தும் அருவருப்பானவை. அவற்றை உண்ணலாகாது. 42 நிலத்தில் ஊர்வனவற்றையும், வயிற்றால் நகர்வனவற்றையும், நான்கு காலால் ஊர்வனவற்றையும் பல கால்களுள்ள எதனையும் உண்ணலாகாது. அவை அருவருப்பு. 43 நகருகிற எந்த ஊர்வனவும் உங்களையும் தீட்டுப்படுத்தலாகாது. அவற்றால் தீட்டுப்படாமல் இருங்கள். ஏனெனில், அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள். 44 நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள். எனவே, உங்களைத் தூய்மைப்படுத்தி, தூயவராயிருங்கள். ஏனெனில், நான் தூயவர். நிலத்தில் ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டுப்படுத்தலாகாது. 45 உங்கள் கடவுளாயிருக்குமாறு உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர் நானே! நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில், நான் தூயவர்! 46 விலங்கினம், பறவைகள், நீர்வாழும் எல்லா உயிரினங்கள், நிலத்தில் நகரும் உயிரினங்கள் ஆகியவை பற்றிய சட்டம் இதுவே. 47 இதனின்று, தீட்டுடையதற்கும் தீட்டற்றதற்கும், உண்ணத்தகுந்த உயிரினங்களுக்கும் உண்ணத்தகாத உயிரினங்களுக்கும் வேறுபாடு தெரிந்துகொள்க! 11:44 லேவி 19:2; 1 பேது 1:16.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-11
101
லேவியர்
லேவியர் அதிகாரம் – 12 – திருவிவிலியம்
பேறுகாலப் பெண்களைத் தூய்மைப்படுத்தல் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது: ஒருபெண், கருத்தரித்து ஆண் குழந்தை பெற்றால் ஏழு நாள் விலக்கு நாள்களில் இருப்பதுபோலவே, தீட்டுப்பட்டிருப்பாள். 3 எட்டாம் நாளன்று அதற்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். 4 தொடர்ந்து வரும் முப்பதி மூன்று நாள்கள், அவள் தன் உதிரத்தீட்டு நாள்கள் முடியும்வரை தூயதான எந்தப் பொருளையும் தொடலாகாது; தூயதலத்திற்குள் வரலாகாது. 5 அவள் பெண் குழந்தை பெற்றால், இரண்டு வாரம் விலக்கு நாள்களில் இருப்பது போலவே, தீட்டாயிருப்பாள். பின்னர், அறுபத்தாறு நாள் தன் உதிரத் தீட்டில் இருப்பாள். 6 குழந்தை பெற்றவள் அது ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் தூய்மையடையும் காலக்கெடுவிற்குப் பின்னர், ஓராண்டு நிறைவுற்ற செம்மறி ஒன்றை எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப் புறா ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும் குருவிடம் சந்திப்புக்கூடார நுழைவாயிலுக்குக் கொண்டுவர வேண்டும். 7 அதனை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து அவளுக்குக் கறைநீக்கம் செய்வார். அவள் தன் உதிர ஊறல் தீட்டிலிருந்து தூய்மையாவாள். இது ஆண் அல்லது பெண் குழந்தை பெற்றவருக்கு விதிக்கப்படும் சட்டம். 8 ஆட்டுக்குட்டி கொண்டுவர வசதி இல்லாதவள், இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டு வந்து, ஒன்றை எரிபலியாகவும், மற்றதைப் பாவம்போக்கும் பலியாகவும் படைத்து, அவற்றால் குரு அவளுக்குக் கறைநீக்கம் செய்வார்; அப்போது அவள் தூய்மையாவாள். 12:3 தொநூ 17:12; லூக் 2:21. 12:8 லூக் 2:24.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-12
102
லேவியர்
லேவியர் அதிகாரம் – 13 – திருவிவிலியம்
தொழுநோய்பற்றிய சட்டங்கள் 1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது; 2 “ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும். 3 அவர் உடலில் நோயிருக்கும் இடத்தைக் குரு பார்த்து, அந்த இடத்தில் உரோமம் வெண்மையாக மாறி, நோயிருக்கும் பகுதி அவர் உடலிலுள்ள மற்றத் தோற் பகுதியை விடக் குழிந்திருந்தால், அது தொழுநோய்; அவரைப் பார்த்த குரு அவரைத் தீட்டுடையவர் என முடிவு செய்வார். 4 அவர் உடலின் மேல் வெள்ளைப்படலம் இருந்தும், அந்த இடம் மற்றப் பகுதிகளிலுள்ள தோலைவிடக் குழிவாயிராமலும், அதன் மீதுள்ள உரோமம் வெண்மை ஆகாமலும் இருந்தால், குரு அவரை ஏழு நாள் அடைத்து வைப்பார். 5 ஏழாம் நாள் அவரைப் பார்க்கும் போது நோய் பரவாமல் குறைந்திருந்தால், மீண்டும் ஏழு நாள் குரு அவரை அடைத்து வைப்பார். 6 ஏழாம் நாளில் மீண்டும் அவரை அழைத்துப் பார்வையிடுவார். நோய் பரவாமல் குறைந்திருந்தால், அவர் தூய்மையானவர் எனக் குரு தீர்ப்புச் சொல்வார், அது சொறிசிரங்கு; அவர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும்; அவர் தீட்டற்றவர். 7 தீட்டற்றவர் என அறிவிக்கப்பட்டவர் தம்மைக் குருவுக்குக் காட்டியபின், மறுபடியும் சொறி சிரங்கு அவர் உடலில் ஏற்பட்டால் அவர் தம்மைக் குருவிடம் காட்ட வேண்டும். 8 மீண்டும் சொறி சிரங்கு அவர் உடலில் இருப்பதைக் குரு கண்டால் அவர் தீட்டுடையவர் என அறிவிப்பார். அது தொழுநோய். 9 ஒரு மனிதர் தொழுநோயாளி எனில், அவர் குருவிடம் கொண்டு வரப்படுவார். 10 தோலில் வெண்ணிறத்தடிப்பு இருந்து, அது உரோமத்தை வெண்மையாக மாற்றி, திறந்த புண்ணாயிற்று எனக்குரு கணிப்பார். 11 அது அவர் உடலில் நெடுநாளாயிருக்கும் தொழுநோய். குரு அவர் தீட்டுடையவர் என அறிவிப்பார். அவரை அடைத்து வைக்கவேண்டும். அவர் தீட்டுடையவரே. 12 வெண்குட்டம் உடலில் பரவி, நோயாளியின் கால்தொடங்கித் தலைவரைக் குரு காண்கிற எல்லா இடங்களிலும் தோலில் படர்ந்திருந்தால், 13 அவரைச் சோதித்துப் பார்க்கவேண்டும். அவர் உடலில் முழுவதும் நோய் படர்ந்திருந்தால், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். உடல் முழுவதும் வெண்மையாகிவிட்டதால் தீட்டற்றவர். 14 ஆனால், திறந்த புண் காணப்படும் நாளில், அவர் தீட்டுள்ளவர். 15 எனவே, திறந்த புண்ணைக் கண்டால் அவர் தீட்டுள்ளவர் என அறிவிப்பார். திறந்தபுண் தீட்டுடையது; அது தொழுநோய். 16 திறந்த புண் மாறி வெண்ணிறம் அடைந்தால், அவர் குருவிடம் வருவார். 17 குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். நோய்த்தழும்பு வெண்மையாகி மாறிற்றெனில், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்; அவர் தீட்டற்றவர். 18 உடலில் கட்டி ஏற்பட்டு, அது குணமாகி, 19 கட்டி இருந்த இடத்தில் வெள்ளைத்தடிப்பு, அல்லது சிவப்பு கலந்த வெண்மை மறு தோன்றினால், அதனைக் குருவுக்குக் காட்டவேண்டும். 20 குரு அதைச் சோதித்துப்பார்ப்பார். அந்த இடம் மற்றத் தோலைவிடத் தாழ்ந்து, அந்த இடத்தில் உரோமம் வெண்மையாக மாறியிருந்தால், அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார். அது கட்டியால் உண்டான தொழுநோய். 21 குரு அதைச் சோதித்துப் பார்க்கும் போது, அதில் வெள்ளை உரோமம் இல்லை என்றும், மற்றத் தோலை விடக் குழிந்திராமல் சற்றுக் கருமையாக மட்டும் உள்ளது என்றும் கண்டால், அவர் அவரை ஏழு நாள் அடைத்து வைப்பார். 22 தோலில் புள்ளி படரக்கண்டால், அது தொழு நோய். அவர் தீட்டு உடையவர் எனக் குரு அறிவிப்பார். 23 வெள்ளை மறு பரவாமல் அது இருந்த இடத்தில் மட்டும் இருந்தால், அது கட்டியின் தழும்பு; எனவே, அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். 24 ஒருவரது உடலில் நெருப்புப்பட்டதனால் தீக்காயம் ஏற்பட்டு, நெருப்புப்பட்ட இடத்தில் சிவப்பு அல்லது வெண்மையான மறு தோன்றினால், அவரைக் குரு சோதித்துப் பார்க்க வேண்டும். 25 அந்த மறுவில் உரோமம் வெண்மையாக மாற அந்த இடம் தோலைப் பார்க்கிலும் குழியாக இருந்தால், அது நெருப்பினால் ஏற்பட்ட தொழுநோய். அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார். அது தோழுநோய்தான். 26 அதைச் சோதித்துப் பார்க்கும் குரு, அந்த மறுவில் வெள்ளை உரோமம் இல்லை என்றும் மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் சற்றுக் கருமையாக உள்ளது என்றும் கண்டால், அவரை ஏழு நாள் தனியாக வைப்பார். 27 ஏழாம் நாளில் அவரைச் சோதித்துப் பார்த்து, தோலில் அது பரவி இருந்தால், அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார்; அது தொழுநோய். 28 மறு தோலில் பரவாமல், அவ்விடத்திலேயே சற்றுக் கருமையாக இருந்தால் அது நெருப்பினால் ஏற்பட்ட தடிப்பு. அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். அது நெருப்பால் ஏற்பட்ட வடு. 29 ஆணுக்கோ, பெண்ணுக்கோ தலையிலோ தாடையிலோ, நோய் ஏற்பட்டால் 30 குரு அந்த நோயைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நோயுள்ள இடம் குழிவாயும், உரோமம் பொன்னிறமாகவும் குறைவாகவும் இருந்தால் தீட்டு எனக் குரு அறிவிப்பார். அது தாடையிலோ தலையிலோ ஏற்படும் சொறி வகையான தொழுநோய் ஆகும். 31 குரு அதைச் சோதித்துப் பார்த்து அவ்விடத்தில் மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் கருப்பு உரோமம் இல்லை என்றால், குரு ஏழுநாள் அவரைத் தனியாக வைப்பார். 32 ஏழாம் நாளில் அவரைக் குரு சோதித்துப் பார்ப்பார். அந்தச் சொறி படராமலும், அங்கு மஞ்சள் உரோமம் இல்லாமலும், மற்றத் தோலைவிடக் குழிவு இல்லாமலும் இருந்தால், 33 அவர் சொறி இருக்கும் இடம் நீங்கலாக, மற்ற இடங்களைச் சிரைத்துக் கொள்வார். மீண்டும் குரு அவரை ஏழுநாள் தனியாக வைப்பார். 34 ஏழாம் நாளில் குரு சோதித்துப் பார்க்கும்போது, தோலில் சொறி பரவாமல், மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் இருந்தால் அவர் தீட்டற்றவர் என அறிவிப்பார். தம் ஆடைகளைத் துவைத்தபின், அவர் தூய்மையாவார். 35 தூய்மையானவராக அறிவிக்கப்பட்டபின் உடலில் சொறி படர்ந்தால், 36 குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். தோலில் சொறி பரவி இருந்தால் உரோமம் மஞ்சள் நிறமா எனக் குரு பார்க்கத் தேவை இல்லை. அவர் தீட்டுள்ளவர். 37 சொறி குறைந்து, அந்த இடத்தில் கருப்பு உரோமம் முளைத்ததெனில் சொறி குணமாயிற்று; அவர் தீட்டற்றவராய் இருக்கிறார். அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். 38 ஓர் ஆண் அல்லது பெண்ணின் உடலில் வெள்ளைப் புள்ளிகள் காணப்பட்டால், 39 குரு சோதித்துப் பார்ப்பார். அவர்கள் மேல் தோலில் மங்கின வெண்ணிறத்தில் இருந்தால் அது தோலில் தோன்றுகிற வெள்ளைத்தேமல்; அவர் தூய்மையானவர். 40 தலைமுடி உதிர்ந்து ஒருவர் மொட்டையானால், அவர் தூய்மையானவர். 41 முன்புறத் தலைமுடி உதிர்ந்து, அரை மொட்டையானால், அவரும் தூய்மையானவர். 42 மொட்டைத் தலையில் செந்நிறம் கலந்த வெண்மையான புண் உண்டானால் அது தொழுநோயின் தொடக்கம். 43 குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். அவரது மொட்டைத் தலையிலோ, அரை மொட்டைத் தலையிலோ, உடலின் தோலில் தோன்றும் தொழுநோய் போன்ற செந்நிறம் கலந்த வெண்மையான தடிப்பு இருந்தால், 44 அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார். ஏனெனில், நோய் அவர் தலையில் உள்ளது. 45 தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, “தீட்டு, தீட்டு”, என குரலெழுப்ப வேண்டும். 46 நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே, தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார். 47 ஆட்டு உரோமம், அல்லது பஞ்சு நூலால் செய்யப்பட்ட உடையில், 48 அல்லது பஞ்சு நூலும் ஆட்டு உரோமமும் சேர்த்து நெய்யும் பாவில் அல்லது ஊடுநூலில், அல்லது தோலாடையில், அல்லது தோலால் செய்யப்பட்ட எதிலும், தொழுநோயின் அடையாளம் தோன்றி, 49 உடையிலோ, தோலாடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோல் அல்லது தோலினால் செய்யப்பட்ட எதிலாவது, நோய் பச்சை அல்லது சிவப்பு நிறமாகக் காணப்பட்டால், அது தொழுநோய். குருவுக்கு அதைக் காட்ட வேண்டும். 50 குரு அந்த நோயைச் சோதித்துப்பார்த்து, நோய் தீண்டியவற்றை ஏழுநாள் தனியாக வைத்து, 51 ஏழாம் நாளில் அதைக் கவனிக்க வேண்டும். உடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோலாடையிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ இருந்தால், அது வளரும் தொழுநோய். அது தீட்டானது. 52 அந்த நோயுள்ள ஆட்டு உரோமத்தாலோ பஞ்சு நூலாலோ ஆன உடையையும் பாவையும், ஊடுநூலையும், தோலாடையையும், தோலால் செய்யப்பட்ட எதையும் சுட்டெரிக்க வேண்டும். ஏனெனில், அது வளரும் தொழுநோய். அது நெருப்பில் சுட்டெரிக்கப்பட வேண்டும். 53 உடையிலோ, பாவிலோ, நூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ அந்த நோய் பரவவில்லை எனக் குரு கண்டால் 54 குரு நோய் தீண்டியதைக் கழுவச் சொல்லி, இரண்டாம் முறையும் ஏழுநாள் தனியாக வைப்பார். 55 அது கழுவப்பட்ட பின் அதைச் சோதித்தப்பார்ப்பார். நோய் தீண்டிய பகுதி நோய் பரவாதிருக்கும் நிறம் மாறாதிருந்தால், அது தீட்டானது. அது உட்புறம் இருந்தாலும் வெளிப்புறம் இருந்தாலும் அதை நீ நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். 56 கழுவப்பட்டபின், நோய் குறைந்துவிட்டது எனக் குரு கண்டால், அந்தப் பகுதியை உடையிலிருந்து, தோலாடையிலிருந்து அல்லது பாவு அல்லது ஊடுநூலிலிருந்து கிழித்தெறிந்து விடவேண்டும். 57 ஆடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ நோய் மீண்டும் காணப்படுமாயின் அது பரவும். எனவே, நோய் தீண்டியதை நெருப்பில் எரிக்க வேண்டும். 58 ஆடையோ, பாவோ, ஊடுநூலோ, தோலால் செய்யப்பட்ட எதுவோ கழுவியபின் அந்த நோய் நீங்கிப்போகும். இரண்டாம் முறை கழுவியபின் அது தூய்மையானது ஆகும். 59 ஆட்டு உரோம உடை, பஞ்சு நூல் உடை, பாவு, ஊடுநூல், தோலால் செய்யப்பட்ட பை ஆகியவற்றுள் எதுவும் தீட்டுடையதா தீட்டற்றதா என அறிவதற்குத் தொழுநோய் பற்றிய சட்டம் இதுவே.”
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-13
103
லேவியர்
லேவியர் அதிகாரம் – 14 – திருவிவிலியம்
தொழுநோய் கண்டபின் தூய்மை செய்தல் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 தொழுநோயாளியின் தீட்டகற்றும் நாளில் அவரைக் குறித்த சட்டம்; அவர் குருவிடம் அழைத்து வரப்பட வேண்டும். குரு பாளையத்திற்கு வெளியே வந்து, அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும். 3 தொழுநோயாளியின் நோய் குணமாயிற்று எனக் குரு கண்டால், 4 தீட்டு அகற்றப்பட இருப்போரை உயிருள்ள, குறையற்ற இரு குருவிகளையும், ஒரு கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வருமாறு பணிப்பார். 5 மண்பாண்டத்தில் ஊற்றிய ஊற்று நீரில் குருவி ஒன்றின் கழுத்தை அறுப்பார்; 6 உயிருள்ள குருவியையும், கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவை அனைத்தையும் உயிருள்ள குருவியையும் ஊற்று நீரில் கழுத்தறுக்கப்பட்ட குருவியின் குருதியில் தோய்ப்பார்; 7 தொழுநோயால் ஏற்பட்ட தீட்டை அகற்றப்படவிருப்போரின் மீது ஏழுமுறை தெளித்து, அவரது தீட்டை அகற்றுமாறு உயிருள்ள குருவியைத் திறந்த வெளியில் விட்டுவிடுவார். 8 தீட்டு அகற்றப்படுவோர் தம் உடைகளைத் துவைத்து, தம் தலையை மழித்து நீராடியதும் தூய்மையாவார்; பின்பு, பாளையத்திற்குச் சென்று, ஏழு நாள் தம் கூடாரத்துக்கு வெளியே தங்கியிருப்பார்; 9 ஏழாம் நாளில் தம் தலை, தாடி, புருவம், மற்றும் உரோமம் அனைத்தையும் மழுங்கச் சிரைத்துத் தம் உடலை நன்கு கழுவித் தூய்மையாவார். 10 எட்டாவது நாள், ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஓர் ஆட்டையும் இரு கிடாய்க்குட்டிகளையும், இருபதுபடி* அளவில் பத்தில் மூன்று பங்கு மாவை எண்ணெயில் பிசைந்து தயாரித்த உணவுப் படையலையும் ஆழாக்கு எண்ணெயையும் கொண்டு வரவேண்டும். 11 தூய்மைப்படுத்தவிருக்கும் குரு தீட்டு அகற்றப்படவிருக்கும் மனிதரையும், பலிப் பொருள்களையும், சந்திப்புக்கூடார வாயிலுக்குக் கொண்டு வருவார். 12 பின்னர், குரு ஆழாக்கு எண்ணெயையும் கிடாய்க் குட்டிகளில் ஒன்றையும் குற்றம் நீக்கும் பலியாக ஒப்படைப்பார். ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அவற்றைச் செலுத்துவார். 13 பாவம் போக்கும் பலிக்கும் எரிபலிக்கும் உரியவற்றை வெட்டும் தூய இடத்தில் கிடாய்க் குட்டியையும் வெட்டுவார். இந்தக் குற்றப்பழி நீக்கும்பலி பாவம் போக்கும் பலி போன்று குருவுக்கு உரியது. ஏனெனில், அது மிகவும் தூய்மையானது. 14 குற்றம் நீக்கும் பலியின் குருதியில் குரு சிறிது எடுத்துத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் மீது பூசுவார். 15 பின்பு, குரு அந்த ஆழாக்கு எண்ணெயில் சிறிது தன் இடக்கையில் ஊற்றி, 16 தன் வலக்கை விரலை அதில் தோய்த்து, ஏழு முறை அந்த எண்ணெயை ஆண்டவர் திருமுன் தெளிப்பார். 17 தன் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் முன்பு பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார். 18 பின்னர், அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறை நீக்கம் செய்வார். 19 பாவம் போக்கும் பலியைச் செலுத்தி, தீட்டகற்றப்பட இருப்போருக்குத் தீட்டு நீங்கக் கறை நீக்கம் செய்வார். பின்னர், எரிபலிக்குரியதை வெட்டுவார். 20 எரிபலியையும், உணவுப்படையலையும் பலிபீடத்தில் படைப்பார். இவ்வாறு, குரு கறைநீக்கம் செய்ய அந்த மனிதர் தூய்மையாவார். 21 இவற்றைச் செலுத்த இயலாத ஏழையாயிருந்தால் அவர் குற்றப்பழி நீக்கத்திற்கான ஆரத்திப் பலியாகவும், குறைநீக்கப் பலியாகவும் ஒரு கிடாய்க் குட்டியையும், உணவுப் பலியாக இருபது படி அளவில் மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மாவை எண்ணெயில் பிசைந்து தயாரித்த உணவுப்படையலையும் ஆழாக்கு எண்ணெயையும் 22 தம் நிலைமைக்கேற்ப, இரு புறாக்களையோ, புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர வேண்டும். ஒன்று பாவம்போக்கும் பலி; மற்றது எரிபலி. 23 அவற்றை அவர் எட்டாம் நாளில் சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் தம் தீட்டை அகற்றிக்கொள்வதற்காகக் கொண்டுவர வேண்டும். 24 குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியையும், ஆழாக்கு எண்ணெயையும் குரு வாங்கி, ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாகக் காட்டுவார். 25 குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியை அடித்து அதன் இரத்தத்தில் சிறிது பிடித்துத் தீட்டு அகற்றப்படவிருப்போர் வலக்காது மடலிலும் வலக்கைப் பெருவிரலிலும் வலக்கால் பெருவிரலிலும் பூசுவார். 26 பின்னர், அவர் தம் இடக்கையில் சிறிது எண்ணெயை ஊற்றி, 27 தம் வலக்கை விரலை அதில் தோய்த்து, ஏழுமுறை அந்த எண்ணெயை ஆண்டவர் திருமுன் தெளிப்பார். 28 தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்பட இருக்கிறவரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றில் முன்னர் பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார். 29 பின்னர், அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்பட விருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார். 30 பின்னர், தீட்டு அகற்றப்படவிருப்போர் தம் நிலைமைக்குத் தக்கவாறு கொண்டுவந்த புறா எனினும் புறாக் குஞ்செனினும், 31 அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் உணவுப் படையலோடு படைப்பார். இவ்வாறு, குரு தீட்டு அகற்றப்படுவோருக்கு ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார். 32 தம்மைத் தூய்மையாக்கிக் கொள்ளப் போதுமானவற்றைக் கொண்டுவர இயலாத தொழுநோயாளிக்கு உரிய சட்டம் இதுவே.” தொழுநோய் வீடு 33 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: 34 உங்களுக்கு உடைமையாக நான் வழங்கும் கானான் நாட்டிற்கு நீங்கள் வந்த பின்னர், அங்குள்ள ஒரு வீட்டில் தொழுநோயை நான் வரச்செய்தால், 35 அந்த வீட்டின் உடைமையாளன், என் வீட்டில் நோய்க்கான அறிகுறி தென்படுகிறது எனக் குருவுக்கு அறிவிக்க வேண்டும். 36 குரு நோயைச் சோதித்துப் பார்க்கச் செல்லுமுன் வீட்டிலுள்ள அனைத்தையும் வெளியேற்றுமாறு கட்டளையிடுவார்; இல்லையேல் வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டெனக் கருதப்படும். பின்னர், நோயைச் சோதிப்பதற்காகக் குரு வீட்டினுள் நுழைவார். 37 அவர் நோய் பற்றியிருக்கும் இடத்தைப் பார்வையிடுவார். வீட்டுச் சுவர்களில் பச்சையும் சிவப்புமான கறை இருந்து, அப்பகுதி சுவர்ப்பரப்பை விடக் குழிவாயிருந்தால், 38 குரு வீட்டைவிட்டு வெளியே வந்து வாயிலை ஏழு நாள் அடைத்து வைப்பார். 39 ஏழாம் நாள் மீண்டும் வந்து சோதித்துப் பார்ப்பார். அங்கு நோய்க்குறி சுவர்களில் பரவக்கண்டால், 40 அந்த இடத்திலுள்ள கற்களைப் பெயர்த்து நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் போடப் பணிப்பார். 41 வீட்டின் உட்சுவரைச் செதுக்கி, செதுக்கப்பட்ட பூச்சுமண்ணை நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்டிவிட்டு, 42 பெயர்த்த கற்களுக்குப் பதிலாக வேறு கற்களைக் கொண்டுவந்து வேறுமண்ணை எடுத்துப் பூசச் சொல்வார். 43 கற்களை மாற்றி, சுவரைக் கொத்திப் பூசிப் புதிதாக்கியபின்னர் அந்நோய் வீட்டில் மீண்டும் தென்பட்டால், 44 குரு வந்து பார்ப்பார். நோய் வீட்டில் இடம் பெற்றதெனில் அது வளரும் தொழுநோய். அது தீட்டு. 45 எனவே, வீட்டை இடித்து, அதன் மரங்களையும் மண்ணையும் நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்ட வேண்டும். 46 வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன். 47 வீட்டிலே படுத்திருந்தவனும், அவ்வீட்டில் உணவுண்டவனும், தங்கள் உடைகளை வெளுக்க வேண்டும். 48 குரு, வீடு பூசப்பட்டபின் மீண்டும் வந்து அங்கு நோய் பரவவில்லை எனக் கண்டால், அந்த வீடு தூயது என அறிவிப்பார். ஏனெனில், நோய் குணமாகிவிட்டது. 49 வீட்டின் கறையை நீக்க, இரு குருவிகள், கேதுருக்கட்டை, சிவப்பு நூல், ஈசோப்பு ஆகியவற்றைக் குரு எடுப்பார்; 50 ஒரு குருவியை மண்பாண்டத்திலுள்ள ஊற்று நீரில் கொல்வார்; 51 கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் கொல்லப்பட்ட அக்குருவியின் குருதியிலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின் மேல் ஏழு தரம் தெளிப்பார். 52 குருவியின் குருதி, ஊற்று நீர், உயிருள்ள குருவி, கேதுருக்கட்டை, ஈசோப்பு, சிவப்பு நூல், இவற்றால் கறை நீக்கம் செய்வார். 53 உயிருள்ள குருவியைக் குடியிருப்புக்கு வெளியே மைதானத்தில் விட்டு விடவேண்டும். இவ்வாறு, வீட்டிற்கான கறை நீக்கம் செய்ததும் அது தூய்மையாகும். 54 இது அனைத்துத் தொழுநோய்க்கும், சொறிக்கும் 55 உடைப் பத்துக்கும், வீட்டு நோய்க்கும் 56 வீக்கம், சிரங்கு, வெள்ளைமறு ஆகியவற்றிற்கான சட்டம். 57 எப்போது தீட்டு, எப்போது தூய்மை என முடிவு செய்வதற்குரிய தொழு நோய்க்கான சட்டமும் அதுவே.” 14:2 மத் 8:4; மாற் 1:44; லூக் 5:14; 17:14. 14:10 ‘லாகு’ என்பது எபிரேய பாடம்.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-14
104
லேவியர்
லேவியர் அதிகாரம் – 15 – திருவிவிலியம்
உடலில் ஏற்படும் தூய்மையற்ற ஒழுக்கு 1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: 2 “இஸ்ரயேல் மக்களுக்கு நீங்கள் கூறவேண்டியது: 3 ஒருவனுக்கு விந்து ஒழுக்கு இருப்பின் — உடலிலிருந்து அது வெளிப்பட்டாலும், உடலுள் அடக்கிவைக்கப்பட்டாலும் — அது அவனுக்குத் தீட்டு. 4 விந்து ஒழுக்கு உடையவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டு; அவன் அமரும் இருக்கை அனைத்தும் தீட்டே. 5 அவன் படுக்கையைத் தொடுபவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன். 6 விந்து ஒழுக்கு உடையவன் அமர்ந்தவற்றின் மீது அமர்பவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன். 7 அவன் உடலைத் தொடுபவனும் தன் உடைகளைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன். 8 அவன் தீட்டற்ற ஒருவன்மீது உமிழ்ந்தால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன். 9 அவன் ஏறிப் பயணம் செய்பவை அனைத்தும் தீட்டு. 10 அவன் அடியிலிருக்கும் எதையும் தொடுபவன் ஒவ்வொருவனும் மாலைமட்டும் தீட்டுடையவன். அதைச் சுமப்பவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன். 11 அவன் தன்னைத் தண்ணீரில் கழுவாதிருக்கையில், தன்கையால் எவனைத் தொட்டாலும், அவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன். 12 அவன் தொடும் மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; மரக்கலம் தண்ணீரில் அலசப்படவேண்டும். 13 அவனது ஒழுக்கு நின்று தீட்டு அகன்றால், அவன் தன்னைத் தீட்டகற்ற ஏழுநாள் காத்திருக்கவேண்டும்; பின்பு, அவன் தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்று நீரில் கழுவியதும், அவனது தீட்டு அகலும். 14 எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களை அல்லது புறாக் குஞ்சுகளை, சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் குருவிடம் கொடுக்க வேண்டும். 15 குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் செலுத்தி அவனுக்காக, ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். 16 விந்து கழிந்தவனும் தன் உடலைக் கழுவுவான். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன். 17 விந்து பட்டதோலும் உடையும் நீரால் கழுவப்படவேண்டும். மாலைமட்டும் அவை தீட்டாயிருக்கும். 18 அவனுடன் அவன் மனைவி படுத்திருந்தால், இருவரும் தண்ணீரில் முழுக வேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாயிருப்பர். 19 மாதவிலக்கில் இரத்தப்பெருக்குடைய பெண் ஏழுநாள் விலக்காய் இருப்பாள். அவளைத் தொடுபவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பர். 20 மாத விலக்கின்மீது எதன்மீது படுக்கிறாளோ, எவற்றின்மீது அமர்கிறாளோ அவை அனைத்தும் தீட்டே. 21 அவள் படுக்கையைத் தொடுபவர் அனைவரும் தம் உடைகளைத் துவைத்து நீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாய் இருப்பர். 22 அவள் அமரும் மணையைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான். 23 அவள் படுக்கையின்மீதும் அவள் அமர்ந்த மணையின்மீதும் இருந்த எதையாகிலும் தொட்டவனும் மாலைமட்டும் தீட்டாய் இருப்பான். 24 ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் தீட்டு அவன் மீதுபட்டது என்றால், அவன் ஏழுநாள் தீட்டுடையவன்; அவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டே. 25 பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே. 26 அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப் படுக்கைக்கு ஒத்ததே; அவள் அமரும் அனைத்தும் தீட்டுக் காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும். 27 அவற்றைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, நீரில் மூழ்கவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான். 28 அவள் தன் இரத்தப்பெருக்கு நின்றபின், ஏழு நாள் கழித்தபின் தீட்டற்றவள் ஆவாள். 29 எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களையோ புறாக் குஞ்சுகளையோ சந்திப்புக் கூடார வாயிலில் குருவிடம் கொண்டு வருவாள். 30 குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியும் மற்றதை எரி பலியுமாக்கி, அவளுக்காக ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். 31 இஸ்ரயேல் மக்கள், தங்கள் நடுவே இருக்கும் எனது தங்குமிடத்தைத் தீட்டாக்கி, சாகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் தீட்டுகளிலிருந்து அவர்களை விலக்கி வைக்க வேண்டும். 32 விந்து ஒழுக்கினாலும் விந்து அழிவினாலும் தீட்டானவனுக்கும் 33 தன் விலக்கினாலும் நோயுற்றவளுக்கும் — உடல் தூய்மையற்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் — தீட்டாயிருப்பவளோடு படுத்தவனுக்கும், உரிய சட்டம் இதுவே”.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-15
105
லேவியர்
லேவியர் அதிகாரம் – 16 – திருவிவிலியம்
பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாள் 1 ஆரோனின் புதல்வர் இருவர் ஆண்டவரது திருமுன்னிலையை நெருங்கியதால் சாவுக்குள்ளானபின், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “ஆரோனிடம் நீ கூற வேண்டியது; அவன் சாகாது இருக்க வேண்டுமெனில், தூயகத்தில் தொங்குதிரைக்கு உள்ளே இருக்கும் இரக்கத்தின் இருக்கையின் மூடிக்கு முன்பாக, அவன் விரும்பும் போதெல்லாம் வரக்கூடாது; வந்தால் சாவுக்குள்ளாவான். ஏனெனில், இரக்கத்தின் இருக்கையின்மேல் மேகத்தில் நான் தோன்றுவேன். 3 ஒரு காளையைப் பாவம் போக்கும் பலியாகவும் ஓர் ஆட்டுக்கிடாயை எரிபலியாகவும் செலுத்தி ஆரோன் தூயகத்திற்குள் நுழையலாம். 4 அவன் புனித நார்ப்பட்டு மேற்சட்டை அணியவேண்டும். நார்ப்பட்டாலான உள்ளாடை, கச்சை, தலைப்பாகை அணிய வேண்டும். இந்தப் புனித ஆடைகளை நீராடிய பின்னரே அவன் அணியலாம். 5 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் எரி பலிக்காக ஆட்டுக்கிடாய் ஒன்றையும் கொண்டுவர வேண்டும். 6 ஆரோன், பாவம் போக்கும் பலிக்குரிய காளையைத் தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். 7 வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் சந்திப்புக் கூடார வாயிலில், ஆண்டவர் திருமுன் நிறுத்த வேண்டும். 8 ஆண்டவருக்கென ஒன்றும் போக்கு ஆடாக விடப்படுவதற்கென ஒன்றுமாக அந்தக் கிடாய்கள்மேல் சீட்டு இடப்படும். 9 ஆண்டவருக்கெனச் சீட்டு விழுந்த ஆட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டும். 10 போக்கு ஆடாக விடப்படுவதற்கெனச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கிடாய், பாவக்கழுவாய்க்கெனப் பாலை நிலத்திற்கு அனுப்பப்படுமாறு, ஆண்டவர் திருமுன் உயிருடன் நிறுத்தி வைக்கப்படும். 11 ஆரோன் பாவம்போக்கும் பலிக்குரிய காளையைத் தன் குடும்பத்தாருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். 12 ஆரோன் கலசத்தை ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடத்து நெருப்புத்தணலால் நிரப்பிக்கொண்டு, பொடியாக்கப்பட்ட நறுமணமிக்க சாம்பிராணியும் எடுத்துக் கொண்டு, தொங்குதிரைக்கு உள்ளே வருவான். 13 அவன் சாகாதிருக்க, உடன்படிக்கைப் பேழையின்மேல் இருக்கும் இரக்கத்தின் இருக்கையைப் புனிதப்புகை மூடுமளவிற்கு ஆண்டவர் திருமுன் நெருப்பில் சாம்பிராணி போடுவான். 14 மேலும், அவன் கீழே நின்று கொண்டு, காளையின் இரத்தத்தில் சிறிது எடுத்து இரக்கத்தின் இருக்கைமீது தன் விரலால் தெளிப்பான். மீண்டும் சிறிது எடுத்து இரக்கத்தின் இருக்கை முன்னர் ஏழுமுறை தெளிப்பான். 15 மக்களின் பாவம்போக்கும் பலியான வெள்ளாட்டுக்கிடாயை அவன் அடித்து, அதன் இரத்தத்தைத் தொங்குதிரைக்கு உள்ளே கொண்டு செல்வான், காளையின் இரத்தத்தைக் தெளித்தது போலவே, இதனையும் இரக்கத்தின் இருக்கையின்மேலும், அதன் முன்னிலையிலும் தெளிப்பான். 16 இஸ்ரயேல் மக்களின் தீட்டுகளை முன்னிட்டும் அவர்களின் பாவங்களால் விளைந்த குற்றங்களை முன்னிட்டும் தீட்டுப்பட்ட தூயகத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்; அவர்களின் தூய்மையற்ற நிலைக்குள் அமைந்துள்ள சந்திப்புக் கூடாரத்துக்காகவும் அவன் அப்படியே செய்வான். 17 அவன் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் சபை மக்கள் அனைவருக்காகவும் பாவக்கழுவாய் நிறைவேற்றும்படி தூயகத்திற்குள் சென்று, பாவக்கழுவாய் நிறைவேற்றிவிட்டு வெளியே வரும் வரை சந்திப்புக்கூடாரத்தில் எவரும் இருத்தல் கூடாது. 18 அவன் ஆண்டவர் திருமுன் இருக்கிற பலிபீடத்திற்கு அருகில் வந்து அதற்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கிடாயின் இரத்தத்திலும் சிறிது எடுத்துப் பலிபீடக் கொம்புகளில் பூசுவான். 19 தன் விரலினால் அந்த இரத்தத்தை எடுத்து, ஏழு முறை அதன் மேல் தெளித்து, இஸ்ரயேல் மக்களின் தீட்டுகள் நீங்க அர்ப்பணிப்பான். போக்கு ஆடு 20 இவ்வாறு, அவன் தூயகத்திற்கும், சந்திப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் கழுவாய் நிறைவேற்றியபின், உயிரோடிருக்கிற ஆட்டுக்கிடாயைக் கொண்டுவருவான். 21 ஆரோன் இரு கைகளையும் உயிரோடிருக்கும் அந்தக் கிடாயின் மேல் வைத்து, இஸ்ரயேல் மக்களின் எல்லாக் குற்றங்களையும் தவறுகளையும் பாவங்களையும் அறிக்கையிட்டு அதன் தலைமேல் சுமத்தி, அதைப் பாலை நிலத்துக்குக் கொண்டு செல்ல நியமிக்கப்பட்ட ஆள் மூலம் அங்கு அனுப்பிவிடுவான். 22 அந்த வெள்ளாட்டுக் கிடாய் அவர்களின் பாவங்களைச் சுமந்துகொண்டு தனிமையான இடத்திற்குச் செல்லும்; அந்த ஆள் அதைப் பாலைநிலத்தில் விட்டுவிடுவான். 23 ஆரோன் சந்திப்புக் கூடாரத்திற்கு வந்து, தூயகத்தில் உடுத்தியிருந்த நார்ப்பட்டு ஆடைகளை அங்கே களைந்து வைத்துவிடுவான். 24 பின்பு, அவன் தூய்மையான இடத்தில் குளித்துத் தன் ஆடைகளை அணிந்துகொண்டு தன் எரி பலியையும் மக்களின் எரிபலிகளையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். 25 பாவம் போக்கும் பலியின் கொழுப்பை அவன் பலிபீடத்தில் எரித்து விடுவான். 26 போகவிட்ட போக்கு ஆடாகிய வெள்ளாட்டுக் கிடாயைக் கொண்டு போய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்த பின்னரே பாளையத்துக்குள் வருவான். 27 தூயகத்திற்குள் பாவம் போக்குவதற்கென இரத்தம் எடுக்கப்பட்ட காளையும் கிடாயும், பாளையத்திற்கு வெளியே கொண்டுபோகப்படும்; அவற்றின் தோல், இறைச்சி, சாணம் ஆகியவை நெருப்பில் சுட்டெரிக்கப்படும். 28 அவற்றை எரித்தவன் தன்உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்த பின்னரே பாளையத்திற்குள் வருவான். பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாளுக்கான நெறிமுறைகள் 29 ஏழாம் மாதம் பத்தாம் நாள் குடிமக்களும் உங்களோடு வாழும் அன்னியரும் வேலை ஒன்றும் செய்யாமல் நோன்பிருக்க வேண்டும். இது உங்களுக்கு என்றுமுள் நியமம் ஆகும். 30 அந்த நாளில் நீங்கள் தூய்மையாக்கப்படும்படி உங்களுக்கெனப் பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும்; ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களுக்காகக் கழுவாய் நிறைவேற்றப்பட, நீங்கள் தூய்மையடைவீர்கள். 31 அது உங்களுக்கு நோன்புநாள். அந்த நாள் நீங்கள் முழு ஓய்வெடுக்கும் ‘ஓய்வு நாள்’. இது என்றுமுள நியமம் ஆகும். 32 அருள்பொழிவு செய்யப்பட்டு, தன் தந்தைக்குப் பின்னர் குருவாக நியமனம் பெற்றவனே பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். அவன் தூய உடைகளான நார்ப்பட்டு ஆடைகளை அணிந்து கொண்டு, 33 தூயகத்திற்காகவும், சந்திப்புக் கூடாரத்திற்காகவும் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான். குருக்களுக்காகவும், சபையின் எல்லா மக்களுக்காகவும் பாவக் கழுவாய் செய்வான். 34 ஆண்டுக்கு ஒரு முறை இஸ்ரயேல் மக்களுக்காகவும் அவர்களுடைய எல்லாப் பாவங்களுக்காகவும் கழுவாய் நிறைவேற்ற வேண்டும். இது என்றுமுள நியமம் ஆகும் என்று சொல்” என்றார். ஆண்டவர் இட்ட ஆணையின்படி மோசே செய்தார். 16:2 எபி 6:19. 16:3 எபி 9:7. 16:15 எபி 9:12. 16:23 எசே 44:19. 16:27 எபி 13:11. 16:29-34 லேவி 23:26-32; எண் 29:7-11.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-16
106
லேவியர்
லேவியர் அதிகாரம் – 17 – திருவிவிலியம்
இரத்தத்தின் புனிதம் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “ஆரோன், அவன் புதல்வர், எல்லா இஸ்ரயேல் மக்கள் ஆசியோரிடம் நீ கூறவேண்டிய ஆண்டவரின் வார்த்தை இதுவே: 3 “இஸ்ரயேல் குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் மாடு, ஆடு, அல்லது வெள்ளாடு இவற்றைச் சந்திப்புக்கூடார வாயிலான ஆண்டவர் உறையும் இடத்தில் அவரது திருமுன் ஆண்டவருக்குச் செலுத்தும்படி கொண்டு வராமல், 4 குடியிருப்பிலோ, குடியிருப்பு எல்லைக்கு வெளியிலோ கொலை செய்தால், அது அவருக்குப் பழியாகும். குருதி சிந்தச் செய்ததால், அவர் தமது இனத்தினின்று அழிக்கப்படுவார். 5 எனவே, இஸ்ரயேல் மக்கள், வயல் வெளியில் பலியிடுகிற தங்கள் பலிகளைச் சந்திப்புக் கூடாரவாயிலுக்கு ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து, அங்கே அவருக்கு நல்லுறவுப் பலிகளாகச் செலுத்துவார்கள். 6 அங்குக் குரு அந்த இரத்தத்தைச் சந்திப்புக் கூடாரவாயிலில் இருக்கும் ஆண்டவரின் பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பை ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக எரிப்பார். 7 அவர்கள் கள்ளத்தனமாய்ப் பின்பற்றிவந்த பேய்களுக்கு இனித் தங்கள் பலிகளைச் செலுத்தக்கூடாது. இது அவர்களுக்கு என்றுமுள நியமம் ஆகும். 8 எனவே, நீ அவர்களிடம் கூறவேண்டியது: இஸ்ரயேல் வீட்டாரிலோ, அவர்களோடு தங்கும் அந்நியர்களிலோ யாரேனும் எரிபலி செலுத்தினால், 9 அதனைச் சந்திப்புக் கூடார வாயிலில் ஆண்டவருக்குச் செலுத்தும்படி கொண்டு வராவிடில், அவர் அவரது இனத்தவருள் இராமல் அழிக்கப்படுவார். 10 இஸ்ரயேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்கும் அந்நியரிலும் ஒருவர் குருதியை அருந்தினால், குருதி அருந்தியவருக்கு எதிராக நான் என்முகத்தைத் திருப்பி, அந்த மக்களிடையே அவர் இராதபடி அழிப்பேன். 11 உடலின் உயிர் குருதியில் உள்ளது. அதனை நான் உங்களுக்காகப் பலிபீடத்தின்மேல் உங்கள் உயிருக்கெனப் பாவக்கழுவாய் செய்யும்படி ஆணையிட்டேன். ஏனெனில், அது உயிருக்கான பாவக்கழுவாய் நிறைவேற்றும் குருதி. 12 எனவேதான், இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னேன்; உங்களில் ஒருவரும் குருதியை அருந்த வேண்டாம். உங்களிடையே தங்கும் அந்நியரும் அருந்த வேண்டாம். 13 இஸ்ரயேல் மக்களிலோ, உங்களிடையே தங்கும் அந்நியரிலோ ஒருவர் உண்ணத்தக்க ஒரு விலங்கை அல்லது பறவையை வேட்டையாடிப்பிடித்தால், அவர் அதன் குருதியைத் தரையில் சிந்தவிட்டு மண்ணால் மூடவேண்டும். 14 ஏனெனில், அனைத்து உடலுக்கும் அதுவே உயிர், அதன் குருதி உயிர் போன்றது. ஆகையால், இஸ்ரயேல் மக்களுக்கு, ‘எந்த உடலையும் குருதியோடு உண்ணாதீர்கள்’ என்று சொன்னேன். ஏனெனில், எல்லா உடலின் உயிரும் குருதியே; அதனை உண்பவர் அழிவார். 15 குடிமக்களிலும் அந்நியரிலும் செத்த உடலை அல்லது பீறிக் கிழிக்கப்பட்டதை உண்பவர் தம் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகுவார். அவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பார். பின்னர், தூய்மையாவார். 16 அவர் தம் உடைகளைத் துவைக்காமலும் தம் உடலைக் கழுவாமலும் இருந்தால், தம் குற்றத்தைத் தாமே சுமப்பார்”. 17:10 தொநூ 9:4; லேவி 7:26-27; 19:26; இச 12:16-23; 15:23. 17:11 எபி 9:22.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-17
107
லேவியர்
லேவியர் அதிகாரம் – 18 – திருவிவிலியம்
பாலியற் குற்றங்கள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கூறவேண்டியது: நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். 3 நீங்கள் குடியிருந்த எகிப்து நாட்டின் வழக்கப்படி செய்ய வேண்டாம்; நான் உங்களை அழைத்துச் செல்லும் கானான் நாட்டின் வழக்கப்படியும் செய்ய வேண்டாம். அவர்கள் முறைமையும் வேண்டாம். 4 நியமங்களை ஏற்று, என் ஆணைகளுக்குப் பணிந்து நடங்கள், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 5 எனவே, என் நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றிற்கேற்பச் செயல்படுவோர் அவற்றால் வாழ்வு பெறுவார். நானே ஆண்டவர்! 6 உங்களுள் எவரும் தமக்கு இரத்த உறவாயிருக்கும் எந்தப் பெண்ணோடும் உடலுறவு கொள்ள வேண்டாம்; நானே ஆண்டவர்! 7 தந்தையின் வெற்றுடம்பாகிய உன் தாயின் வெற்றுடம்பைப் பாராதே! ஏனெனில், அவள் உன் தாய்; உன் தாயை வெற்றுடம்பாக்காதே! 8 தந்தையின் மற்ற மனைவியரை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவர்கள் உன் தந்தையின் உடல் ஆவர்! 9 தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளான உன் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! 10 உன் மகனின் மகளையோ உன் மகளின் மகளையோ வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவர்கள் உன் வெற்றுடம்பு ஆவர். 11 உன் தந்தைக்கு அவனுடைய மனைவியிடம் பிறந்த மகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உனக்கு சகோதரி. 12 தந்தையின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தந்தையின் உடல். 13 தாயின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தாயின் உடல். 14 தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்காதே! அவன் மனைவியோடு உடலுறவு கொள்ள வேண்டாம்; ஏனெனில், அவள் உன் சிற்றன்னை. 15 மருமகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் மகனின் மனைவி; அவளை வெற்றுடம்பாக்காதே! 16 சகோதரனின் மனைவியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் சகோதரனின் வெற்றுடம்பு. 17 ஒரு பெண்ணையும் அவள் மகளையும் வெற்றுடம்பாக்காதே! அவள் மகனின் மகளையோ அவள் மகளின் மகளையோ மணம் புரியாதே. இவர்கள் அவளின் நெருங்கிய இரத்த உறவினர். அது முறைகேடு 18 மனைவி உயிருடனிருக்க, அவளுக்குச் சகக் கிழத்தியாக, அவள் சகோதரியை மணம் புரிந்து உடலுறவு கொள்ளாதே! 19 மனைவி மாதவிலக்கில் இருக்கும்போது, அவளை வெற்றுடம்பாக்காதே! 20 உனக்கு அடுத்திருப்பவனின் மனைவியுடன் இன்பக்கலவி கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே. 21 உன்பிள்ளைகளுள் யாரையேனும் மோலெக்கிற்கு எரிபலியாக்கி, உன் கடவுளின் திருப்பெயரை இழிவு படுத்தாதே. நானே ஆண்டவர்! 22 பெண்ணுடன் பாலுறவு கொள்வதுபோல் ஆணோடு கொள்ளாதே! அது அருவருப்பு. 23 எந்த விலங்கோடும் பாலுறவு கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே! எந்தப் பெண்ணும் விலங்கோடு பாலுறவு கொள்ள வேண்டாம். அது முறைகேடான அருவருப்பு. 24 இவற்றில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட வேற்றினத்தவர். இவற்றால் தீட்டானதால் நாடே தீட்டாகிவிட்டது. 25 இவ்வாறு, நாடு தீட்டுப்பட்டதால் நான் அதன் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கினேன். நாடும் அவர்களை வெளியே கக்கியது. 26 நீங்கள் என் கட்டளைகளையும் நியமனங்களையும் கடைப்பிடியுங்கள். குடிமக்களாயினும் உங்களோடு தங்கும் அந்நியராயினும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்ய வேண்டாம். 27 ஏனெனில், இந்த அருவருப்பானவற்றை உங்கள் முன் அந்த நாடுகளில் இருந்தவர்கள் செய்ததனால் நாடு தீட்டாயிற்று. 28 உங்களுக்குமுன் இருந்தோரை நாடு வெளியே கக்கிவிட்டது போல, நீங்கள் தீட்டாக்கினால் கக்கப்படுவீர்கள். 29 ஏனெனில்,யாராவது இவ்வகை அருவருப்புகளில் எதையேனும் செய்தால் அவன் தன் இனத்தில் இராதபடி அழிந்து போவான். 30 எனவே, உங்கள் முன்னோர் இத்தகைய அருவருப்புகளைச் செய்ததுபோல, நீங்களும் செய்து, அவற்றால் தீட்டுப்படாதபடி, என் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 18:5 நெகே 9:29; எசே 18:9; 20:11-13 ; லூக் 10:28; உரோ 10:5; கலா 3:12. 18:8 லேவி 20:11; இச 22:30; 27:20. 18:9 லேவி 20:17; இச 27:22. 18:12-14 லேவி 20:19,20. 18:15 லேவி 20:12. 18:16 லேவி 20:21. 18:17 லேவி 20:14; இச 27:23. 18:19 லேவி 20:18. 18:20 லேவி 20:10. 18:21 லேவி 20:1-5. 18:22 லேவி 20:13. 18:23 விப 22:19; லேவி 20:15-16; இச 17:21.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-18
108
லேவியர்
லேவியர் அதிகாரம் – 19 – திருவிவிலியம்
தூய்மை, நீதி ஆகியவை பற்றிய சட்டங்கள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; தூயோராய் இருங்கள். ஏனெனில், உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! 3 நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தாய் தந்தைக்கு அஞ்சுங்கள். என் ஓய்வு நாளைக் கடைப்பிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 4 சிலைகள் பக்கம் திரும்ப வேண்டாம். உங்களுக்கெனத் தெய்வப் படிமங்களை வார்த்துக் கொள்ள வேண்டாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 5 ஆண்டவருக்கு நல்லுறவுப்பலி செலுத்தினால் அதை மனமுவந்து செய்யுங்கள். 6 நீங்கள் பலி செலுத்தும் நாளன்றும், மறுநாளும் உண்டு, மூன்றாம் நாள் எஞ்சியதைச் சுட்டெரியுங்கள். 7 மூன்றாம் நாளில் எஞ்சியதை உண்டால், அது திகட்டும், விருப்பமாய் இராது. 8 அவ்வாறு உண்போர் தம்பழியைத் தாமே சுமப்பர். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தூய்மையானதை இழிவுக்குள்ளாக்கினர். அந்த மனிதர் அவர்கள் இனத்தில் இராதபடி அழிக்கப்படுவர். 9 உங்கள் நாட்டில் நீங்கள் பயிரிட்டதை அறுவடை செய்யும்போது, வரப்பு ஓரக் கதிரை அறுக்கவேண்டாம். சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்க வேண்டாம்; 10 திராட்சைத் தோட்டத்தில் பின்னறுப்பு வேண்டாம்; சிந்திக் கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம். அவற்றை எளியோருக்கும் அந்நியருக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் ஆண்டவராகிய கடவுள்! 11 களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், 12 என் பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். நான் ஆண்டவர்! 13 அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்; வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது. 14 காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்! 15 தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. 16 உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்! 17 உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள். 18 பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்! 19 என் கட்டளைகளைக் கடைப்பிடி. உன் கால்நடைகளை வேறுவகை விலங்குகளோடு பொலியவிடாதே. உன் வயலில் இருவகைத் தானியங்களை ஒரே நேரத்தில் விதைக்காதே! இருவகை நூலுள்ள உடை அணியாதே! 20 ஒருவனுக்கு மண ஒப்பந்தமான, ஆனால் பிணை கொடுத்து விடுவிக்கப்படாத அடிமைப் பெண்ணோடு வேறொருவன் உடலுறவு கொண்டால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்; கொல்லப்பட வேண்டாம்; அவள் தன்னுரிமை பெற்றவளல்ல. 21 அவன் தன் குற்றப்பழி நீக்கும் பலியாக ஆட்டுக்கிடாய் ஒன்றை ஆண்டவருக்குச் சந்திப்புக் கூடார வாயிலுக்குள் கொண்டுவர வேண்டும். 22 அதனால் அவன் செய்த குற்றத்திற்காக, ஆண்டவர் திருமுன் குரு கறைநீக்கம் செய்வார். அப்போது அவன் செய்த பாவம் மன்னிக்கப்படும். 23 நீங்கள் இந்நாட்டில் எவ்விதக் கனிமரங்களை நட்டாலும், அவற்றின் கனி துண்டிக்கப்பட வேண்டும்; அதாவது மூன்றாண்டு உண்ணப்படாமல் விலக்கப்பட்டிருக்கும். 24 நான்காம் ஆண்டு அவற்றின் கனி முழுவதும் ஆண்டவருக்குப் படைக்கப்பட்டுத் தூய்மையாகும். 25 ஐந்தாம் ஆண்டில் அவற்றின் கனியை உண்ணலாம். அதுமுதல் அவை உங்களுக்குப் பலன் அளித்துவரும். நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 26 எந்த இறைச்சியையும் குருதியோடு உண்ண வேண்டாம்; குறி பார்க்க வேண்டாம்; நாள் பார்க்க வேண்டாம். 27 தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டாம்; தாடியின் ஓரங்களைச் சிரைக்க வேண்டாம். 28 செத்தவனுக்காக உடலைக் கீறிக்கொள்ள வேண்டாம்; பச்சை குத்திக்கொள்ளவும் வேண்டாம்; நானே ஆண்டவர்! 29 நாட்டில் விபசாரம் வளர்ந்து, ஒழுக்கக்கேடு பெருகாதபடி, உன் மகளை இழிவுபடுத்தி வேசித்தனம் பண்ண அனுமதியாதே! 30 ஓய்வு நாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்தைக் குறித்து அச்சம் கொள்ளுங்கள்; நானே ஆண்டவர்! 31 பில்லி சூனியம் பார்க்க வேண்டாம்; குறிகாரரை அணுகவேண்டாம்; அவர்களைத் தேடி அவர்களால் தீட்டாக வேண்டாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 32 நரை திரண்டவருக்குமுன் எழுந்து நில். முதிர்ந்தவர் முகத்தை மதித்து நட; உன் கடவுளுக்கு அஞ்சி வாழ்; நானே ஆண்டவர்! 33 உங்கள் நாட்டில் தங்கியிருக்கும் அந்நியருக்குத் தீங்கிழைக்காதே! 34 உங்களிடம் தங்கும் அந்நியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள். ஏனெனில், எகிப்தில் நீங்களும் அந்நியர்களாய் இருந்தீர்கள்; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 35 நீட்டல், நிறுத்தல், கொள்ளல் ஆகிய அளவுகளில் நேர்மையைக் கடைப்பிடியுங்கள். 36 தராசும், படிக்கல்லும், மரக்காலும் அளவு சரியான படியும் உங்களிடம் இருக்கட்டும்! உங்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே! 37 நீங்கள் என் எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் கடைப்பிடித்து ஒழுகுங்கள்; நானே ஆண்டவர்! 19:2 லேவி 11:44-45; 1 பேது 1:16. 19:3 விப 20:8,12; இச 5:12,16. 19:4 லேவி 26:1; விப 20:23; 34:17; இச 27:15. 19:9-10 லேவி 23:22; இச 24:19-22. 19:11 விப 20:15,16; இச 5:19-20. 19:12 விப 20:7; இச 5:11; மத் 5:33. 19:13 விப 24:14-15. 19:14 இச 27:18. 19:15 விப 23:6-8; இச 16:19. 19:17 மத் 18:15. 19:18 மத் 5:43; 19:19; 22:39; மாற் 12:31; லூக் 10:27; உரோ 13:9; கலா 5:14; யாக் 2:8. 19:19 இச 22:9-11. 19:26 தொநூ 9:4; லேவி 7:26-27; 17:10-14; இச 12:16; 15:23; 18:10. 19:27-28 லேவி 2:5; இச 14:1. 19:29 இச 23:17. 19:30 லேவி 26:2. 19:31 இச 18:11; 1 சாமு 28:3; 2 அர 23:4; எசா 8:19. 19:33-34 விப 22:21; இச 24:17-18; 27:19. 19:35-36 இச 25:13-16; நீமொ 20:10; எசே 45:10.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-19
109
லேவியர்
லேவியர் அதிகாரம் – 20 – திருவிவிலியம்
கீழ்ப்படியாமைக்கான தண்டனைகள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “இஸ்ரயேல் புதல்வரிலோ இஸ்ரயேலில் தங்கும் அந்நியரிலோ யாரேனும் தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலெக்குக்குக் கொடுத்தால், நாட்டு மக்கள் அவனைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். 3 அவனை எதிர்த்து நான் என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன். எனது தூயகத்தைத் தீட்டுப்படுத்தி, திருப்பெயரை மாசுபடுத்தித் தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலெக்கிற்குக் கொடுத்ததால், அவனை அவன் இனத்தில் இராதபடி அழிப்பேன். 4 தன்வழிமரபில் ஒரு பிள்ளையை மோலெக்குக்குக் கொடுத்தும், நாட்டு மக்கள் அவனைக் கொலை செய்யாது விட்டுவிட, அவன் தலைமறைவாயிருந்தால், 5 நான் அவனையும் அவன் குடும்பத்தையும் எதிர்த்து என் முகத்தைத் திருப்பிக் கொள்வேன். மோலெக்கின் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட அவனையும் அவனைப் பின்பற்றிய யாவரையும் அவர்கள் இனத்தில் இராதபடி அழிப்பேன். 6 குறிசொல்வோரையும், மைபோடுவோரையும் பின்பற்றி வழி தவறியோரை எதிர்த்து என் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவர்களை அவர்கள் இனத்தில் இராதபடி அழிப்பேன். 7 எனவே, நீங்கள் உங்களைப் புனிதப்படுத்தி, தூயவர் ஆகுங்கள். ஏனெனில், நான் உங்கள் கடவுள்! 8 என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றின்படி நடங்கள். நானே உங்களைத் தூய்மைப்படுத்தும் ஆண்டவர்! 9 தம் தந்தையையும் தாயையும் சபிக்கும் எவரும் கொலை செய்யப்பட வேண்டும். தம் தந்தையையும் தாயையும் சபிப்பவரின் குருதிப்பழி அவர்மேலேயே இருக்கும். 10 அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும். 11 தன் தந்தையின் மனைவியோடு உடலுறவு கொள்பவன் தன் தந்தையை வெற்றுடம்பாக்கினான். எனவே, இருவரும் கொலை செய்யப்படுவர். அவர்களின் குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும். 12 ஒருவன் தன் மருமகளோடு உடலுறவுகொண்டு முறைகேடாக நடந்துகொண்டால், இருவரும் கொல்லப்படுவர். அவர்களது குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும். 13 பெண்ணோடு உடலுறவு கொள்வது போன்று, ஆணோடும் உடலுறவு கொண்டால், அவ்வாறு செய்வது அருவருப்பு. இருவரும் கொல்லப்பட வேண்டும். இருவரின் குருதிப்பழியும் அவர்கள் மேலேயே இருக்கும். 14 ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் மணம் செய்தால் அது பெருந்தவறு. அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். 15 விலங்கோடு ஒருவன் புணர்ந்தால், அவன் கொல்லப்பட வேண்டும். அந்த விலங்கையும் கொல்ல வேண்டும். 16 ஒரு பெண் ஏதேனும் ஒரு விலங்கோடு புணர்ந்தால், அந்தப் பெண்ணையும் விலங்கையும் கொல்லவேண்டும். அத்தகைய எந்த உயிரும் சாக வேண்டும். அவற்றின் குருதிப்பழி அவற்றின் மேலேயே இருக்கும். 17 யாரேனும் ஒருவன் தன் தந்தைக்கு, அல்லது தாய்க்குப் பிறந்த மகளோடு அதாவது அவன் சகோதரியோடு உடலுறவு கொண்டால், அவளும் அதற்கு இணங்கினால் அது வெட்கக்கேடான செயல். அவர்கள் தங்கள் இனத்தோரின் முன்னிலையில் அழிக்கப்படுவார்கள். தன் சகோதரியை வெற்றுடம்பாக்கிய அவன் தன் தீவினையைச் சுமப்பான். 18 மாதவிலக்கில் இருக்கும் ஒருத்தியுடன் ஒருவன் உடலுறவுக் கொண்டால், இருவரும் தங்கள் உதிர ஊற்றைத் திறந்ததால் அவர்கள் தங்கள் இனத்தாரிடையே இல்லாதபடி அழிக்கப்படுவார்கள். 19 உன் தாயின் சகோதரியையோ, உன் தந்தையின் சகோதரியையோ வெற்றுடம்பாக்காதே. மீறுபவர் தங்கள் உடலை இழிவுபடுத்தியதால் தங்கள் பழியைத் தாமே சுமப்பர். 20 ஒருவன் தன் தந்தையின் சகோதரனின் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்கினான். எனவே, அவர்கள் தங்கள் பாவத்தைத்தாமே சுமப்பர்; பிள்ளையன்றி இறப்பர். 21 ஒருவன் தன் சகோதரன் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் சகோதரனை வெற்றுடம்பாக்குகிறான். எனவே, அவர்கள் பிள்ளையன்றி இருப்பர். 22 நீங்கள் குடியிருப்பதற்காக உங்களை நான் கொண்டு போகிற நாடு உங்களைக் கக்கிவிடாதபடி, நீங்கள் என் அனைத்து நியமங்களைப் பற்றிக்கொண்டு அவற்றிற்கேற்ப வாழுங்கள். 23 உங்களுக்கு முன்பாக நான் விரட்டியிருக்கிற வேற்றினத்தாரின் செயற்படி நடக்க வேண்டாம்; மேற்குறிப்பிட்ட செயல்களையெல்லாம் அவர்கள் செய்தார்கள். எனவே, நான் அவர்களை வெறுத்தேன். 24 அவர்களின் நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்வீர்கள் என்று கூறினேன். பாலும் தேனும் ஓடும் அந்த நாட்டை உங்களுக்கு உடைமையாக்கினேன். உங்களை மக்களினங்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரே நான்! 25 எனவே, நீங்கள் தீட்டற்ற விலங்குகளுக்கும் தீட்டான விலங்குகளுக்கும், தீட்டான பறவைகளுக்கும் தீட்டற்ற பறவைகளுக்கும், வேறுபாடு கண்டு தீட்டென்று நான் உங்களுக்குச் சொல்லிய விலக்கப்பட்ட விலங்காலும் பறவையாலும் தரையில் ஊர்ந்து செல்லுகின்ற எந்த ஒருபூச்சியாலும் உங்களை இழிவுபடுத்திக் கொள்ளாது இருப்பீர்களாக! 26 எனக்கெனத் தூயவர்களாக இருப்பீர்களாக! ஏனெனில், ஆண்டவராகிய நான் தூயவராயிருந்து நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி உங்களை மக்களினங்களினின்று பிரித்தெடுத்தேன். 27 குறிசொல்லும் அல்லது மைபோட்டுப் பார்க்கும் எந்த ஆணும் பெண்ணும் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். அவர்களின் குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும்”. 20:9 விப 21:17; மத் 15:4; மாற் 7:10. 20:10 விப 20:14; லேவி 18:20; இச 5:18. 20:11 லேவி 18:8; இச 22:30; 27:20. 20:12 லேவி 18:15. 20:13 லேவி 18:22. 20:14 லேவி 18:17; இச 27:23. 20:15-16 விப 22:19; லேவி 18:23; இச 27:21. 20:17 லேவி 18:9; இச 27:22. 20:19-20 லேவி 18:12-14. 20:21 லேவி 18:16.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-20
110
லேவியர்
லேவியர் அதிகாரம் – 21 – திருவிவிலியம்
குருக்களின் தூய்மை 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சொல்; அவர்களுள் எவனும் தன் இனத்தாரில் இறந்துபோன ஒருவராலே தன்னைத் தீட்டப்படுத்த வேண்டாம். 2 தனக்கு இரத்த உறவான தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், 3 மணமாகாமல் தன்னுடன் வாழ்ந்த கன்னியான சகோதரி — ஆகியவர்களைத் தவிர 4 வேறேவராலும் — திருமணத்தால் உறவானவர் உட்பட — தன்னைத் தூய்மைக் கேட்டிற்கு உட்படுத்தித் தீட்டுப்படவேண்டாம். 5 அவர்கள் தலையை மொட்டையடித்துக் கொள்ளாமலும், தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், உடலைக் கீறிக் கொள்ளாமலும் இருப்பார்கள். 6 அவர்கள் தங்கள் கடவுளின் பெயரைக் கெடுக்காமல் அவருக்கு ஏற்ற தூயோராய் இருப்பார்கள். ஆண்டவரின் பலியான தங்கள் கடவுளின் அப்பத்தைச் செலுத்துவதால் அவர்கள் தூய்மையாய் இருக்க வேண்டும். 7 விலைமாதையோ தூய்மைக் கேடு உற்றவளையோ அவர்கள் மணம் புரியலாகாது. கணவனால் மணமுறிவு செய்யப்பட்ட பெண்ணையும் மணம்புரியலாகாது. ஏனெனில், குரு தன் கடவுளுக்கு ஏற்ற தூய்மை உடையவனாய் இருத்தல் வேண்டும். 8 அவர்கள் தூயோர்கள். ஏனெனில், அவர்கள் உங்களின் கடவுளுக்கு உணவு படைக்கிறார்கள். உங்களைத் தூய்மையாக்கும் நான் தூயவனாய் இருப்பதால், உங்களுக்குத் தூயோராய் அவர்கள் இருப்பார்கள். 9 குருவின் மகள் வேசியானால், அவள் தன் தந்தைக்குத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்துகிறாள். அவளை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். 10 தலையில் திருப்பொழிவு எண்ணெய் வார்க்கப்பட்டு குருத்துவ உடை அணிந்துள்ள தலைமைக் குருவாகிய உன் சகோதரன், தன் தலையை மூடிக் கொள்ள வேண்டும்; தன் உடைகளைக் கிழித்தலாகாது. 11 எந்தப் பிணமானாலும் — அது தந்தையுடையதாயினும் தாயுடையதாயினும் அதன் அருகில் சென்று அவன் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம். 12 தூய கூடத்திலிருந்து வெளிவராமலும் தன் கடவுளின் தூயகத்தை இழிவுபடுத்தாமலும் இருக்க வேண்டும். ஏனெனில், அவனுடைய கடவுளின் திருப்பொழிவு எண்ணெய் தாங்கும் சிறப்பு அவனுக்கு உரியது. நானே ஆண்டவர்! 13 கன்னிப்பெண்ணையே அவன் மணம் புரிய வேண்டும். 14 அவன் கைம்பெண்ணையோ மணமுறிவு பெற்றவளையோ, கற்பொழுக்கம் அற்றவளையோ, விலைமாதையோ மணம் புரியாமல், தன் இனத்திலுள்ள ஒரு கன்னிப் பெண்ணையே மணக்க வேண்டும். 15 தன் வழிமரபை இரத்தக் கலப்பற்றதாகப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், நானே அவனைத் தூய்மையாக்கும் ஆண்டவர்.” 16 ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது: 17 “நீ ஆரோனிடம் கூறவேண்டியது; உன் வழிமரபினரில் உடல் ஊனமுற்றவன் தன் கடவுளுக்கு உணவுப் படையலைச் செலுத்துதல் ஆகாது. 18 உடல் ஊனமுற்றவன் எவனும் அருகில் வரவேண்டாம்; பார்வையற்றவன், முடவன், குறைந்த அல்லது நீண்ட உறுப்பு உடையவன், 19 கால் கை ஒடிந்தவன், 20 கூனன், குள்ளன், கண்ணில் பூ விழுந்தவன், சொறி சிரங்கு உடையவன், அண்ணகன் எவனும் வேண்டாம். 21 குருவான ஆரோனின் வழி மரபில் உடல் ஊனமுற்ற எவனும் ஆண்டவரின் நெருப்புப் பலியைச் செலுத்த அருகில் வரவேண்டாம். மேலும், உடல் ஊனம் அவனுக்கு இருப்பதால், அவன் தன் கடவுளின் உணவுப் படையலைச் செலுத்தவும் வரக்கூடாது. 22 தன் கடவுளின் தூய அப்பத்தை அவன் உண்ணலாம். 23 ஆனால், தொங்குதிரை அருகில் வர வேண்டாம்; பீடத்தை அணுக வேண்டாம். ஏனெனில், அவன் உடலில் குறைபாடு உள்ளது. என் தூயகத்தை இழிவுபடுத்த வேண்டாம். ஏனெனில், நான் அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்.” 24 மோசே இவற்றை ஆரோனிடமும் அவர் புதல்வரிடமும், இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூறினார். 21:5 லேவி 10:27-28; இச 14:1.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-21
111
லேவியர்
லேவியர் அதிகாரம் – 22 – திருவிவிலியம்
காணிக்கைகளின் தூய்மை 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 இஸ்ரயேல் மக்கள் எனக்கு நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்களால் ஆரோனும் அவன் பிள்ளைகளும் என் பெயரை இழிவுபடுத்தாதபடி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறு. நானே ஆண்டவர். 3 அவர்களிடம் நீ கூற வேண்டியது: உங்கள் வழிமரபினருள் எவனும் தீட்டுப்பட்டிருந்து, இஸ்ரயேல் மக்கள் நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்கள் அருகில் வந்தால், அவன் என் முன் இராதபடி அழிவான். நானே ஆண்டவர். 4 ஆரோன் குடும்பத்தினரில் தொழுநோயாளியோ விந்து ஒழுக்கு உடையவனோ இருந்தால் குணமாகும் மட்டும் அவன் தூய பொருள்களை உண்ண வேண்டாம். பிணத்தால் தீட்டானதைத் தொட்டவனும் விந்தொழுகியவனும், 5 தீட்டு என ஒதுக்கிய ஊர்வனவற்றையோ, தீட்டான மனிதரையோ தொட்டவனும், 6 மாலைமட்டும் தீட்டுடன் இருப்பான். அவன் தூய பொருள்களை உண்ணாமல் தன் உடலைத் தண்ணீரால் கழுவ வேண்டும். 7 கதிரவன் மறைந்தபின் தூய்மை அடைவான், அப்பொழுது அவன் தூய பொருள்களை உண்ணலாம். ஏனெனில், அது அவன் உணவு. 8 தானாய்ச் செத்ததையும், பீறிக் கிழிக்கப்பட்டதையும் அவன் உண்டு தீட்டாக வேண்டாம். நானே ஆண்டவர். 9 எனவே, தூய்மையானதைத் தீட்டாக்குவதால் தங்கள் மேல் பாவத்தைச் சுமத்திக்கொண்டு சாகாதவாறு, நான் ஒப்படைத்தவற்றை அவர்கள் காப்பார்களாக! நானே அவர்களைத் தூயோராக்கும் ஆண்டவர்! 10 வேற்றினத்தார் எவரும் தூய பொருள்களை உண்ண வேண்டாம். குரு வீட்டிலுள்ள விருந்தினரும் கூலிக்காக வேலை செய்பவரும் தூய பொருளை உண்ண வேண்டாம். 11 குருவின் பணம் கொடுத்து வாங்கிய அடிமையும், அவன் வீட்டில் பிறந்தவனும் குருவின் உணவை உண்ணலாம். 12 குருவின் மணமுடித்த மகள் தூயபொருள்களை உண்ண வேண்டாம். 13 குருவின் குழந்தைகளற்ற கைம்பெண் அல்லது மணவிலக்குப் பெற்றவளான மகள் திரும்பிவந்து இளமையிலிருந்து தன் தந்தையோடு வாழ்ந்ததுபோல வாழ்ந்தாளாயின், தந்தையின் உணவில் பங்கு பெறலாம். ஆனால், பொது நிலையர் எவரும் அதை உண்ணலாகாது. 14 தூய பொருளை அறியாமல் உண்பவர். அப்பொருளின் விலையில் ஐந்தில் ஒரு பங்கைக் கூடுதலாகக் கொடுத்து தூய பொருளுடன் குருவுக்குக் கொடுக்க வேண்டும். 15 ஆண்டவருக்கு இஸ்ரயேலர் நேர்ச்சையாக அளிக்கும் புனிதப் பொருள்களைக் குருக்கள் இழிவுக்கு உள்ளாக்கக்கூடாது. 16 அப்புனிதப் பொருள்களை உண்டு இழிவுக்கு உள்ளாக்குவதால், அவர்கள் தண்டம் செலுத்தும் குற்றப்பழிக்கு ஆளாவர். ஏனெனில், நானே அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்! 17 ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது: 18 “ஆரோன், அவன் புதல்வர் மற்றும் இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூற வேண்டியது; இஸ்ரயேலரோ இஸ்ரயேலரிடையே தங்கியிருக்கும் அந்நியர்களோ தங்கள் பொருத்தனைக்கேற்ப அல்லது ஆர்வமிகுதியால் எரிபலியாகச் செலுத்தும் காணிக்கை 19 அவரவர் விருப்பப்படியே மாடு, ஆடு, வெள்ளாடு எவற்றிலேனும் பழுதற்ற ஓர் ஆணாய் இருப்பதாக! 20 பழுதான எதையும் உங்களுக்காகச் செலுத்தலாகாது. அது ஆண்டவருக்கு உகந்தது அன்று. 21 சிறப்புப் பொருத்தனையோ, தன்னார்வக் காணிக்கையோ மாடுகளில் அல்லது ஆடுகளில் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினால், அது ஏற்கத்தக்கதாக அமைய, மாசுமறுவற்றதாய் இருத்தல் வேண்டும். 22 குருடு, ஊனம், நெரிவு, கழிச்சல் நோய், சொறி, சிரங்கு முதலிய குறைபாடுள்ளவற்றைச் செலுத்தாமலும் அவற்றை ஆண்டவரின் பலிபீடத்தில் எரிபலியாக்காமலும் இருப்பீர்களாக. 23 உறுப்பு ஒழுங்கற்ற ஆடோ, மாடோ, மகிழ்வுப்பலி ஆகலாம். ஆனால், அது பொருத்தனைக்கு ஏற்றதன்று. 24 விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும், காயம்பட்டதையும் விதை அடிக்கப்பட்டதையும் ஆண்டவருக்கு நீங்கள் காணிக்கை ஆக்காமலும் உங்கள் நாட்டில் பலியிடாமலும் இருப்பீர்களாக! 25 வேற்றின மக்களிடமிருந்து இத்தகையவற்றை வாங்கி உங்கள் கடவுளுக்கு உணவுப் படையலாகச் செலுத்தாதீர். அவற்றில் கேடும் பழுதும் உள்ளன. அவை உங்கள் சார்பாக எற்றுக்கொள்ளப்பட மாட்டா.” 26 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 27 ஒரு கன்று, செம்மறி, அல்லது வெள்ளாட்டுக்குட்டி பிறந்தால், ஏழு நாளளவும் தன் தாயிடம் அது இருக்கட்டும். எட்டாம் நாளிலிருந்து அது ஆண்டவருக்குரிய எரிபலியாகச் செலுத்தப்படும். இது விரும்பத்தக்கது. 28 பசுவையும் அதன் கன்றையும் அல்லது ஆட்டையும் அதன் குட்டியையும் ஒரே நாளில் பலியிட வேண்டாம். 29 நன்றிப்பலியை ஆண்டவருக்குச் செலுத்தினால், அது உங்கள் சார்பாக ஏற்கத் தகுந்ததாக இருக்கட்டும். 30 அன்றே அது உண்ணப்படவேண்டும். விடியற்காலை மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வேண்டாம். நானே ஆண்டவர்! 31 கட்டளைகளைக் கடைப்பிடித்து அவற்றிற்கேற்ப ஒழுகுங்கள். நானே ஆண்டவர்! 32 இஸ்ரயேல் மக்களிடையே நான் தூயவராகக் கருதப்படுமாறு, என் திருப்பெயரை இழிவுப் படுத்தாதிருங்கள். நானே உங்களைப் புனிதர் ஆக்கும் ஆண்டவர்! 33 உங்களுக்குக் கடவுளாய் இருக்குமாறு உங்களை எகிப்தினின்று அழைத்து வந்தேன். நானே ஆண்டவர்! என்று சொல்.” 22:20 இச 17:1.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-22
112
லேவியர்
லேவியர் அதிகாரம் – 23 – திருவிவிலியம்
சமய பெருவிழாக்கள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “இஸ்ரயேல் மக்களிடம் நீ இவ்வாறு கூறு: நீங்கள் சபையாகக் கூடிப் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவருக்குரிய பண்டிகை நாள்களாவன: 3 ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் ஒரு வேலையும் செய்யவேண்டாம். நீங்கள் வாழும் இடமெங்கும் அது ஆண்டவருக்கான ஓய்வுநாள். 4 நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன; பாஸ்காவும் புளிப்பற்ற அப்பமும் (எண் 28:16-25) 5 முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா. 6 அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை; ஏழுநாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள். 7 பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. 8 ஏழுநாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. 9 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 10 இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது; நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். 11 உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார். 12 அதனை ஆரத்தியாக காட்டுகிற அன்று, ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள். 13 உணவுப்படையலாக இருபதுபடி* அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப் பழ இரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள். 14 உங்கள் கடவுளின் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்களுக்குப்பின் வரும் உங்கள் வழிமரபினரும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும். அறுவடைப் பெருவிழா (எண் 28:26-31) 15 ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். 16 ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள். 17 நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு முதற்பலனின் ஆரத்திப் பலியாகக் கொண்டு வாருங்கள். 18 இந்த அப்பத்துடன், ஓராண்டான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும். உணவுப் படையலோடும் நீர்மப் படையலோடும் ஆண்டவருக்கு எரிபலியாகச் செலுத்துங்கள். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலியாக இருக்கும். 19 வெள்ளாட்டுக் கிடாய்களில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், ஓராண்டான இரண்டு ஆட்டுக் குட்டிகளை நல்லுறவுப் பலியாகவும் செலுத்துங்கள். 20 இந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளை முதற்பலனான அப்பத்துடன் குரு ஆண்டவர் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார். அவை ஆண்டவருக்குத் தூயதான காணிக்கைகள்; குருவுக்குரியவை. 21 அந்நாளை திருப்பேரவை நாளாக அறிவியுங்கள். எத்தகைய வேலையும் அன்று செய்யலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும். 22 உங்கள் நாட்டில் நீங்கள் அறுவடை செய்யும்போது உங்கள் வயலோரத்தில் இருப்பதை முற்றிலும் அறுத்துவிடாமலும் சிந்திக்கிடக்கும் கதிர்களைப் பொறுக்காமலும் இருங்கள். அவற்றை எளியவருக்கும் அந்நியருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! புத்தாண்டுப் பெருவிழா (எண் 29:1-6) 23 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 24 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறு: ஏழாம் மாதம் முதல்நாள் உங்களுக்கு ஓய்வு நாள்; அதைத் திருப்பேரவையாகக் கூடி எக்காளம் ஊதிக் கொண்டாடுங்கள். 25 எத்தகைய வேலையும் அன்று செய்யாமல் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள். பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாள் (எண் 29:7-11) 26 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 27 அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். 28 அந்த நாளில் எத்தகைய வேலையும் செய்யலாகாது. ஏனெனில், அது கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் உங்களுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாள். 29 அந்த நாளில் தம்மைத் தாழ்த்திக்கொள்ளாத எந்த மனிதரும் தம் இனத்தில் இராதபடி அழிக்கப்படுவார். 30 அந்த நாளில் யாராவது ஏதாவது வேலை செய்தால், அவரை அவர் இனத்திலிருந்து அழித்துவிடுவேன். 31 நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. இது உங்கள் தலைமுறைதோறும் நீங்கள் வாழுமிடங்கள் எல்லாம் பின்பற்ற வேண்டிய என்றுமுள நியமம் ஆகும். 32 அன்று உங்களுக்கு முழுமையான ஓய்வு நாள்; அன்று உங்களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். அந்த மாதத்தின் ஒன்பதாம் நாளினை மாலைமுதல் மறுநாள் மாலை வரை, ஓய்வுநாளாகக் கடைப்பிடிக்க வேண்டும். கூடாரப் பெருவிழா (எண் 29:12-40) 33 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 34 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியது; ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப்பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும். 35 முதல்நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்யவேண்டாம். 36 ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். அது நிறைவுநாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது. 37 ஓய்வுநாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர, 38 அந்தந்த நாள்களுக்கு ஏற்ப, எரிபலி, உணவுப்படையல், இரத்தப்பலி, நீர்மப்படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள். 39 நிலத்தின் பலனைச் சேகரிக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்விழா; அது ஏழு நாளளவு கொண்டாடப்பட வேண்டும். முதல் நாளும், எட்டாம் நாளும் ஓய்வு நாள்கள். 40 முதல் நாள், கவர்ச்சிகரமான மரங்களின் பழங்களையும், பேரீச்ச ஓலை, மற்றும் கொழுமையான தளிர்களையும், அலரி இலைகளையும் கொண்டு வந்து, ஆண்டவர் திருமுன் மகிழ்ந்திருங்கள். 41 ஆண்டுதோறும் ஏழு நாளளவு இப்பெருவிழா கொண்டாடப்படவேண்டும். ஏழாம் மாதத்தில் அது கொண்டாடப்படவேண்டும். இது நீங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும். 42 ஏழு நாள் கூடாரங்களில் குடியிருங்கள்; இஸ்ரயேலில் பிறந்த யாவரும் அவ்வாறே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும். 43 இஸ்ரயேலரை எகிப்திலிருந்து நான் கொண்டுவந்தபோது, அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் உன் வழிமரபினர் அறிந்துகொள்வர். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 44 இவ்வாறு, மோசே ஆண்டவரின் விழாக்களின் வரலாற்றை இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைத்தார். 23:3 விப 20:8-10; 23:12; 31:15; 34:21; 35:2; இச 5:12-14. 23:5 விப 12:1-13; இச 16:1-2. 23:6-8 விப 12:14-20; 23:15; 34:18; இச 16:3-8. 23:15-21 விப 23:16; 34:22; இச 16:9-12. 23:22 லேவி 19:9-10; இச 24:19-22. 23:26-32 லேவி 16:29-34. 23:33-36 இச 16:13-15. 23:13 ‘ஓர் ஏப்பா’ என்பது எபிரேய பாடம்.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-23
113
லேவியர்
லேவியர் அதிகாரம் – 24 – திருவிவிலியம்
விளக்குகளைப் பேணுதல் (விப 27:20-21) 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 எப்போதும் குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்க, தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டு வர இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு. 3 சந்திப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைத் திரைக்கு வெளியே, மாலைமுதல் காலைவரை எப்போதும் அது ஆண்டவருக்கு முன் எரிந்துகொண்டிருக்க வேண்டும். இது உங்கள் வழிமரபினருக்கு என்றுமுள நியமம் ஆகும். 4 ஆண்டவர் திருமுன் இருக்கும் பசும்பொன் குத்துவிளக்குத் தண்டின் மேலிருக்கிற கிளைவிளக்குகளை எப்போதும் எரியவிட வேண்டும். கடவுளுக்கான அப்பப் படையல் 5 இருபதுபடி அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கு மிருதுவான மாவில் செய்யப்பட்ட பன்னிரண்டு அப்பங்களைச் சுட்டு, 6 அவற்றை நீ ஆண்டவர் திருமுன் பசும்பொன் மேசையில் அடுக்குக்கு ஆறு வீதம் இரண்டு அடுக்காக வைக்க வேண்டும். 7 அவற்றின்மேல் வாசனைப்பொடி தூவ வேண்டும்; அது அப்பத்திற்கு மாற்றான நெருப்புப்பலி. 8 இது என்றுமுள உடன்படிக்கை; இதை இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெற்று, ஓய்வு நாள்தோறும் ஆண்டவரின் திருமுன் அடுக்கி வைக்க வேண்டும். 9 அது ஆரோனுக்கும் அவன் மைந்தர்க்கும் உரியது. அதைத் தூயகத்திலேயே உண்ண வேண்டும். ஏனெனில், அது தூயதின் தூயது. ஆண்டவரின் நெருப்புப்பலிகளில் அது அவர்களுக்குச் சேர வேண்டிய உரிமை ஆகும். நேர்மையான தண்டனைக்கு எடுத்துக்காட்டு 10 இஸ்ரயேல் இனத்துப் பெண்ணுக்கும் எகிப்திய ஆணுக்கும் மகனாகப் பிறந்த ஒருவன் இஸ்ரயேல் மக்களோடு வந்திருந்தான். அவனுக்கும் இஸ்ரயேல் ஆண் ஒருவனுக்கும் பாளையத்தில் சண்டை ஏற்பட்டது. 11 இஸ்ரயேல் பெண்ணின் மகன் ஆண்டவரின் திருப்பெயரை இகழ்ந்தான்; எனவே, அவனை மோசேயிடம் கொண்டுவந்தனர். அவன் தாயின் பெயர் செலோமித்து; அவள் தாண்குலத்தைச் சார்ந்த திப்ரியின் மகள். 12 ஆண்டவரின் திருவுளம் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்வரை அவனைக் காவலில் வைத்தனர். 13 அப்போது ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 14 “இகழ்ந்தவனைக் குடியிருப்பு எல்லைக்கு வெளியே கொண்டுசென்று அவனது பழிப்புரையைக் கேட்டவர்களெல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கட்டும். பின்னர், சபை அனைத்தும் அவனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். 15 எவராவது கடவுளை இகழ்ந்தால், அவர் தம் பாவத்தைச் சுமப்பார் என்று இஸ்ரயேல் மக்களிடம் சொல். 16 ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார்; சபையார் கல்லாலெறிவர். அந்நியரோ, நாட்டினரோ, யார் எனினும் திருப்பெயரை இகழ்கிறவர் கொல்லப்படுவார். 17 மனிதரைக் கொல்பவர் கொலை செய்யப்படுவார். 18 விலங்குகளைக் கொல்பவர் விலங்குக்கு விலங்கு திரும்பக் கொடுக்க வேண்டும். 19 தமக்கு அடுத்திருப்பவருக்குக் காயம் விளைவித்தால், அவருக்கும் அப்படியே செய்யப்படும். 20 முறிப்புக்கு முறிப்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; இதுபோன்றே காயம் விளைவித்தவருக்கும் செய்யப்படும். 21 விலங்கைக் கொன்றால் பதிலாகக் கொடுக்க வேண்டும்; மனிதரைக் கொன்றால் கொலை செய்யப்பட வேண்டும். 22 அயலாருக்கும், நாட்டினருக்கும், ஒரேவிதமான நியாயம் வழங்கவேண்டும். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!” 23 அப்படியே இறைவனை இகழ்ந்தோனைக் குடியிருப்பு எல்லைக்கு வெளியே கொண்டு போய் அவனைக் கல்லாலெறியுமாறு மோசே கட்டளையிட்டார். ஆண்டவர் மோசேயிடம் கூறியபடி அவர்கள் செய்தார்கள். 24:5-6 விப 25:30. 24:9 மத் 12:4; மாற் 2:26; லூக் 6:4. 24:17 விப 21:12. 24:20 விப 21:23-25; இச 19:21; மத் 5:38. 24:22 எண் 15:16.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-24
114
லேவியர்
லேவியர் அதிகாரம் – 25 – திருவிவிலியம்
ஏழாம் ஆண்டு-ஓய்வின் ஆண்டு (இச 15:1-11) 1 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது: 2 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; நான் உங்களுக்கு வழங்கும் நாட்டில் நீங்கள் வந்து சேரும்போது, நாடு ஆண்டவருக்கென்று ஓய்வு நாளைக் கொண்டாட வேண்டும். 3 ஆறு ஆண்டுகள் வயலைப் பயிரிட்டுத் திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்கி அவற்றின் பலனைச் சேர்ப்பாய். 4 ஏழாம் ஆண்டு ஆண்டவருக்காக ஓய்ந்திருக்கும் ஆண்டு, நிலத்துக்கும் ஓய்வு வேண்டும். வயலைப் பயிரிடாமலும், திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்காமலும் இருங்கள். 5 தானாய் விளைந்த பயிரை அறுக்காமலும், கிளை நறுக்காத திராட்சைச் செடிகளிலிருந்து பழங்களைச் சேர்க்காமலும் இருக்க வேண்டும். அது நிலத்துக்கு ஓய்வு ஆண்டு. 6 உனக்கும் உன் பணியாளனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலியாளுக்கும், உன்னிடையே தங்கியிருக்கும் அந்நியனுக்கும் ஓய்வு நிலப் பயிர்விளைச்சல் உணவாயிருக்கட்டும். 7 வீட்டு விலங்குகளுக்கும் உன் நாட்டிலுள்ள காட்டு விலங்குகளுக்கும் அவையே உணவு. யூபிலி மீட்பின் ஆண்டு 8 தொடர்ந்து வரும் ஏழு ஓய்வு ஆண்டுகளை ஏழேழு ஆண்டுகளாக ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். 9 ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச்செய்யுங்கள். 10 ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப்பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும். 11 ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம்; கிளைநறுக்காத திராட்சைச் செடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம். 12 ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள். 13 அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்லவேண்டும். 14 உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள். 15 யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும். 16 பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான். 17 உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 18 கட்டளைப்படி நடங்கள்; என் நியமங்களைக் கடைப்பிடிப்பதில் கவனமாயிருங்கள், அப்போது நாட்டில் நலமாய்க் குடியிருப்பீர்கள். 19 நிலமும் பலனைத் தருவதனால் வயிறார உண்டு பாதுகாப்புடன் நாட்டில் வாழ்வீர்கள். 20 விதைக்காமலும் அறுவடை செய்யாமலும் இருந்தால் ஏழாம் ஆண்டு எதனை உண்போம்?” என்று கேட்பீர்களானால், 21 ஆறாம் ஆண்டு, நிலம் மூன்றாண்டுக்குரிய விளைச்சலைக் கொடுக்குமாறு என் ஆசியை அனுப்புவேன். 22 எட்டாம் ஆண்டு விதை விதைத்து, ஒன்பதாம் ஆண்டு விளைச்சல் கிடைக்கும்வரை பழைய விளைச்சலையே உண்பீர்கள். சொத்துகள் மீட்கப்படல் 23 நிலத்தை அறுதியாய் விற்றுவிட வேண்டாம். ஏனெனில், நிலம் என்னுடையது. நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அந்நியரும் இரவற்குடிகளுமே. 24 நீங்கள் காணியாட்சியாய்க் கொண்டுள்ள நாடு எங்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும். 25 உன் சகோதரருள் ஒருவன் ஏழ்மைக்கு உட்பட்டு, அவனுடைய சொத்தில் எதையேனும் விற்றால், அவனுடைய முறைஉறவினனான மீட்பன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கட்டும். 26 மீட்க மீட்பன் இல்லாதவனுக்கு பின்னர் மீட்க வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டால் கீழ்க்கண்டவாறு அவன் மீட்பானாக; 27 விற்ற ஆண்டிலிருந்து கணக்கிட்டு, அதற்கான தொகையைத் தள்ளி, வாங்கினவனுக்கு மீதித் தொகையைக் கொடுத்து, மீண்டும் தன் நிலத்திற்குத் திரும்பி வருவான். 28 திரும்பக் கொடுக்க வாய்ப்பில்லாமற்போனால், யூபிலி ஆண்டு மட்டும், அது வாங்கினவனிடமே இருக்கும். யூபிலி ஆண்டிலோ அவன் தன் நிலபுலங்களுக்குத் திரும்பிவர அவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 29 அரண்சூழ் நகரில் குடியிருக்கத்தக்க வீட்டைவிற்றால், விற்றபிறகு மீட்பதற்கான கெடு ஓராண்டு; அதற்குள் மீட்டுக் கொள்ள வேண்டும். 30 ஓராண்டிற்குள் மீட்கப்படவில்லையெனில், அரண்சூழ் நகரில் உள்ள அந்த வீடு, வாங்கியவனுக்கும் அவன் வழிமரபினருக்கும் என்றென்றும் உரிமை ஆகிவிடும். யூபிலி ஆண்டில் அதைத் திருப்ப முடியாது. 31 அரணற்ற கிராமத்து வீடுகளோ நாட்டின் வயல் வெளிக்கு ஒப்பானவை. மீட்டெடுக்கலாம்; அல்லது யூபிலி ஆண்டில் விற்றவனுக்கே திரும்பக் கிடைக்கும். 32 லேவியரின் உடைமையான நகர வீடுகளை மீட்க என்றைக்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. 33 இஸ்ரயேல் மக்கள் நடுவில் இருக்கும் லேவியரின் நகர இல்லங்கள் அவர்களின் உரிமை; அந்த உடைமைகள் மீட்கப்படத்தக்கன. அவர்களுக்குச் சொந்தமான விற்கப்பட்ட எந்த வீடும் யூபிலி ஆண்டில் திருப்பித் தரப்படும். 34 நகர்களின் பொதுநிலமான வயல்வெளிகளை விற்கலாகாது. ஏனெனில், அது அவர்களுக்கு நிலையான உடைமையாகும். ஏழைகளுக்குக் கடன் 35 உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப்போனால், அவர்களுக்கு உதவு. அவர்கள் அந்நியர்போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும். 36 அவர்களிடமிருந்து வட்டியோ இலாபமோ பெறவேண்டாம். உன் கடவுளுக்கு அஞ்சி நட; உன் சகோதரர்கள் உன்னோடு வாழட்டும். 37 அவர்களுக்கு உன் பணத்தை வட்டிக்குக் கொடாதே; உணவை அதிக விலைக்கு விற்காதே. 38 உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்து, உங்கள் கடவுளாய் இருக்கும்படி கானான் நாட்டைக் கொடுத்த நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! அடிமைகளின் மீட்பு 39 உன் சகோதரர் ஏழ்மைப்பட்டு உனக்கு விலையாகிப் போனால் அவர்களை அடிமைபோல் நடத்த வேண்டாம். 40 அவர் கூலியாள்போலும் விருந்தினர்போலும், உன்னோடு தங்கி யூபிலி ஆண்டுவரை உன்னிடத்தில் பணியாற்றட்டும். 41 பின்னர், அவரும் அவர்தம் பிள்ளைகளும் விடுதலையாகித் தங்கள் இனத்திற்கும் மூதாதையரின் நிலபுலங்களிடத்திற்கும் திரும்பிச் செல்லட்டும். 42 எகிப்திலிருந்து அழைத்துவந்த இஸ்ரயேலராகிய அவர்கள் என் வேலைக்காரர்கள்; அவர்கள் அடிமையாக விற்கப்படலாகாது. 43 உன் சகோதரரைக் கொடுமையாய் நடத்தாதே; உன் கடவுளுக்கு அஞ்சி நட. 44 உன் அடிமைகள், ஆணும் பெண்ணும், உன்னைச் சுற்றிலும் உள்ள வேற்றினத்தவராய் இருக்கட்டும்; வேற்றினத்தாரிடமிருந்து நீ அடிமைகளை விலைக்கு வாங்கலாம். 45 உங்களிடம் தற்காலிகமாய்த் தங்குகிற அந்நியரின் பிள்ளைகளிலும், உங்கள் நாட்டில் உங்களிடையே பிறந்திருக்கிற அவர்களுடைய இனத்தவரிலும் உங்களுக்கு அடிமைகளை வாங்கி, உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளலாம். 46 அவ்வடிமைகளை, உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கும் பிறப்புரிமையாக்கி, என்றும் உரிமை கொண்டாடலாம். ஆனால், இஸ்ரயேல் மக்களாகிய உங்கள் சகோதரரைப் பொறுத்தமட்டில் எவரும் மற்றவரைக் கொடுமையாய் நடத்த வேண்டாம். 47 அந்நியரோ உன்னிடம் தற்காலிகமாகத் தங்கியிருப்பவரோ, வசதியாக வாழும்போது, அவர்களிடம் உள்ள உன் சகோதரர்கள் ஏழையாகி, அவர்களுக்கோ அவர்களின் இனத்திற்கோ விலையாகிப் போனால், 48 விலையாகிப்போன அவர்கள் மீட்கப்பட வேண்டும்; அவர்கள் உறவினருள் ஒருவர் அவர்களை மீட்கட்டும். 49 அவர்களுடைய தந்தையின் சகோதரனோ, அவரின் மகனோ, அவர்களின் முறை உறவினனோ அவர்களை மீட்கட்டும்; அல்லது வசதி ஏற்படும்போது அவர்கள் தம்மைத் தாமே மீட்டுக் கொள்ளட்டும். 50 அவர்களது பணிக்காலத்தை அவர்களும் அவர்களை வாங்கினவர்களும் அவர்கள் விலைப்பட்டுப்போன ஆண்டிலிருந்து யூபிலி ஆண்டுவரை கணக்கிட வேண்டும். அவர்கள் விடுதலை ஆவதற்கான விலை, கூலிக்காரன் ஒருவனுக்கு அந்த ஆண்டுகளில் கொடுக்கப்படும் கூலியைப் போலக் கணக்கிடப்படவேண்டும். 51 ஆண்டுகள் மிகுதியாய் இருந்தால், மிகுதியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். 52 யூபிலிக்கு சில ஆண்டுகள் இருந்தால், அவற்றைக் கணக்கிட்டு அவற்றிற்கு ஏற்பச் செலுத்த வேண்டும். 53 ஆண்டுதோறும் கூலிக்கு அமர்த்தப்பட்டவனைப் போல அவர்களைக் கருத வேண்டும். விலைக்கு வாங்கினவர்கள் அவர்களைக் கொடுமையாய் நடத்த இடம் கொடாதே. 54 இவ்விதமாய் அவர்கள் மீட்கப்படாமல் போனால், யூபிலி ஆண்டில் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் விடுதலை பெறுவர். 55 ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் என் வேலைக்காரர்கள்; எகிப்திலிருந்து நான் அழைத்து வந்த என் வேலைக்காரர்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 25:1-7 விப 23:10-11. 25:35 இச 15:7-8. 25:37 விப 22:25; இச 23:19-20. 25:39-46 விப 21:2-6; இச 15:12-18.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-25
115
லேவியர்
லேவியர் அதிகாரம் – 26 – திருவிவிலியம்
கீழ்ப்படிதலுக்கான பலன் (இச 7:12-24; 28:1-14) 1 நீங்கள் உங்களுக்கு எனச் சிலைகளையும் படிமங்களையும் கல்தூண்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். வணங்குவதற்கெனச் கற்சிலைகளை நாட்டில் நாட்ட வேண்டாம். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 2 ஓய்வுநாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்திற்கு அஞ்சி வாழ்வீர்களாக! நானே ஆண்டவர்! 3 நீங்கள் என் நியமங்களைக் கவனமாய்க் கைக்கொண்டு, கட்டளைகளை நிறைவேற்றி அவற்றிற்கேற்ப நடந்தால், 4 ஏற்ற காலத்தில் மழையை நான் பெய்யச் செய்வேன். வயல் தன் பலன்களைத் தரும்; நிலத்தின் மரங்கள் தங்கள் கனிகளைத் தரும். 5 கதிர் அறுப்பு திராட்சைப்பழ அறுவடைவரை இருக்கும். பழ அறுவடை பயிர் விதைப்புவரை வரும்; நீங்கள் விரும்புவனவற்றை உண்டு நாட்டில் நலமாய் வாழ்வீர்கள். 6 நாட்டிற்கு அமைதி அருள்வேன். அச்சுறுத்துவாரின்றிப் படுத்துக்கொள்வீர்கள். நாட்டில் இராதபடி கொடிய விலங்குகளை ஒழிப்பேன். வாள் உங்கள் நாட்டில் உலவுவதில்லை. 7 உங்கள் எதிரிகளைத் துரத்தியடிப்பீர்கள்; அவர்கள் உங்கள் வாளால் வெட்டுண்டு வீழ்வர். 8 உங்களில் ஐந்து பேர் நூறுபேரையும், நூறுபேர் பதினாயிரம் பேரையும் துரத்துவீர்கள்; உங்கள் எதிரிகள் உங்கள் முன்வாளால் வெட்டுண்டு அழிவர். 9 நான் உங்களுக்குக் கருணைக்கண் காட்டி, உங்களைப் பலுகவும் பெருகவும் செய்து, உங்களிடமிருந்தும் என் உடன்படிக்கையை நிலைப்படுத்துவேன். 10 சென்ற ஆண்டின் பழைய தானியத்தை உண்பீர்கள்; புதிய தானியத்தின் வருகையால் பழையது விலக்கப்படும். 11 என் உறைவிடத்தை உங்கள் நடுவில் நிறுவுவேன். நான் உங்களை வெறுப்பதில்லை. 12 உங்கள் நடுவே நான் உலவுவேன். நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள்! 13 நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாய் இராதபடிக்கு நான் உங்களை அவர்கள் நாட்டிலிருந்து புறப்படச்செய்தேன். உங்கள் நுகத்தடிகளை முறித்து உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே! கீழ்ப்படியாமைக்கான தண்டனை (இச 28:15-68) 14 நீங்கள் என் சொல்லைக் கேளாமல், கட்டளைக்கு ஏற்ப நடக்காமல், 15 நியமங்களைத் தள்ளிவிட்டு, நீங்கள் என் கட்டளைகளை வெறுத்து, சட்டங்களை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை முறித்துவிட்டால், 16 திகிலையும் என்புருக்கி நோயையும் காய்ச்சலையும் வரப்பண்ணுவேன். அவை உங்கள் கண்களைப் பூக்கச்செய்து உயிரை உறிஞ்சும். நீங்கள் பயனில்லாமல் விதைவிதைப்பீர்கள்; எதிரிகள் பலனைத் தின்பார்கள். 17 உங்கள் எதிரிகள் முன்னிலையில் முறியடிக்கப்படுமாறு எனது முகத்தை உங்களுக்கு எதிராகத் திருப்புவேன். உங்கள் பகைவர் உங்களை ஆள்வர். யாரும் துரத்தாமலே நீங்கள் ஓடுவீர்கள். 18 இதன் பின்னரும் நீங்கள் என் சொல்லைக் கேட்கவில்லையெனில், நான் உங்கள் பாவங்களுக்கு ஏற்ப ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 19 உங்கள் முரட்டுப் பெருமையை அழித்து வானத்தை இரும்பைப் போன்றும் நிலத்தை வெண்கலத்தைப்போன்றும் இறுகச் செய்வேன். 20 உங்கள் ஆற்றல் வீணாகச் செலவழியும்; நாடு தன்பலனையும், நிலத்தின் மரங்கள் கனிகளையும் கொடா. 21 நீங்கள் என் சொல்லைக் கேட்க மனமற்று, எனக்கு எதிராகச் செயல்பட்டால் உங்கள் தவறுகளுக்குத் தக்க, ஏழு மடங்கு துன்பத்தை உங்கள் மீது வரச்செய்வேன். 22 உங்களுக்குள் காட்டு விலங்குகளை வரவிடுவேன். அவை உங்கள் பிள்ளைகளை அழிக்கும். உங்கள் ஆடுமாடுகளை அழித்து, உங்களைக் குறைந்துபோகச் செய்யும். உங்கள் பாதைகள் பயன்படுத்துவோரில்லாமல் பாழாகும். 23 அப்படியும், இந்தத் தண்டனையால் திருந்தாமல், எனக்கு எதிராக நீங்கள் நடந்தால், 24 நான் உங்களுக்கு எதிராக நின்று, உங்கள் பாவங்களுக்கு ஏற்ப ஏழு மடங்கு தண்டனை வரச்செய்வேன். 25 உடன்படிக்கையின் நீதியை நிலைநாட்டி, பழிக்குப் பழிவாங்கும் வாளை வரச்செய்வேன். உங்கள் நகர்களுக்குள் நீங்கள் வந்த பின்னர் உங்களுக்குள் கொள்ளை நோயை வரச்செய்வேன்; எதிரிகளிடம் உங்களைக் கையளிப்பேன். 26 உணவு என்னும் ஆதரவை உங்களிடமிருந்து அகற்றிவிடுவேன். பத்துப்பெண்கள் ஒரே அடுப்பில் அப்பம் சுட்டு அதைச் சமநிறையாகப் பங்கிட்டுப் கொடுப்பர். நீங்கள் உண்டும் நிறைவடையமாட்டீர்கள். 27 இதற்குப்பின்னும், நீங்கள் என் சொல்லுக்குக் கீழ்ப்படியவில்லை எனில், 28 நான் பெரும் கோபம் கொண்டு உங்களை எதிர்த்து உங்கள் குற்றங்களுக்காக ஏழுமடங்கு தண்டிப்பேன். 29 உங்கள் புதல்வர்களின் சதையையும் புதல்வியரின் சதையையும் தின்பீர்கள். 30 நான் தொழுகை மேடுகளையும் தூபபீடங்களையும் தகர்த்து, உங்கள் சடலங்களை உயிரற்ற தெய்வச் சிலைகள்மீது விழச் செய்வேன். என் உள்ளம் உங்களை வெறுக்கும். 31 உங்கள் நகர்கள் பாலை நிலமும், உங்கள் புனித இடங்கள் பாழ்நிலமும் ஆகும். உங்கள் பலிகளின் நறுமணம் எனக்கு உவப்பாய் இராது. 32 உங்கள் எதிரிகளே அதிர்ச்சி அடையும் வகையில் அவர்கள் குடியிருக்கும் உங்கள் நாட்டைப் பாழாக்குவேன். 33 உங்களை உலக மக்களுக்குள்ளே சிதறடித்து, உங்களை உருவின வாளால் துரத்துவேன். உங்கள் நாடு பாழ்நிலமும் உங்கள் நகர் பாலை நிலமும் ஆகும். 34 நாடு பாழாய்க் கிடக்கும். அப்போது அது தன் ஓய்வாண்டுகளை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும். அது ஓய்வடைந்து தன் ஓய்வை அனுபவித்து முடிக்கும். அப்போது நீங்கள் எதிரிகளின் நாட்டில் இருப்பீர்கள். 35 நீங்கள் குடியிருந்தபோது அது ஓய்வாண்டுகளிலே ஓய்வற்று இருந்தபடியால், அது பாழாய்க் கிடக்கும் காலங்களில் ஓய்வாயிருக்கும். 36 உங்கள் எதிரிகளின் நாட்டில் உங்களுள் எஞ்சியிருப்போரின் உள்ளத்தில் நான் சோர்வை ஏற்படுத்துவேன். காற்றில் பறக்கும் இலையின் ஓசைகூட அவர்களை அச்சுறுத்தும். வாளுக்குத் தப்பியோடுவதுபோல ஓடி, யாரும் துரத்தாமலேயே விழுவார்கள். 37 வாளால் துரத்தப்படுவதுபோல யாரும் துரத்தாமலேயே ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள். உங்கள் எதிரிகளுக்கு முன் உங்களால் நிற்கவும் இயலாது. 38 வேற்றினத்தாரிடையே அழிந்து போவீர்கள். உங்கள் எதிரிகளின் நாடு உங்களை விழுங்கும். 39 உங்களுள் எஞ்சியிருப்போர் எதிரிகளின் நாடுகளில் தங்கள் குற்றங்களாலும் தங்கள் மூதாதையரின் குற்றங்களாலும் சோர்வுற்று 40 எனக்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களும், அவர்கள் மூதாதையர் செய்த குற்றங்களும், 41 நான் அவர்களுக்கு எதிராகமாறி அவர்களை அவர்களின் எதிரிகளின் நாட்டிற்கு அனுப்பச்செய்தன. அதனை அவர்கள் அறிக்கையிட்டு, அப்போது அவர்கள் விருத்தசேதனம் அற்ற இதயத்தைத் தாழ்த்தி, குற்றத்திற்குக் கழுவாய் தேடினால், 42 நான் யாக்கோபுடன் செய்த உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்த உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையையும் நினைவு கூர்வேன்; நாட்டையும் நினைவுகூர்வேன். 43 அவர்களின் செயலால் வெறுமையாய் விடப்பட்டு, பாழாய்ப்போன நிலம் தனது ஓய்வாண்டுகளை நிறைவாய் அனுபவிக்கும்; என் கட்டளைகளை ஏற்காததாலும் நியமங்களை வெறுத்ததாலும் தங்கள் தங்கள் குற்றங்களுக்கு அவர்கள் கழுவாய் தேடுவர். 44 ஆயினும், அவர்கள் தங்கள் எதிரிகளின் நாட்டில் இருக்கும்பொழுது, என் உடன்படிக்கை பொருளற்றதாகி விடுமாறு நான் அவர்களை முற்றிலும் அழிக்கவோ புறக்கணிக்கவோ மாட்டேன். ஏனெனில், நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்! 45 நான் அவர்களுடைய கடவுளாகிய வேற்றினத்தார் கண்முன்னே எகிப்திலிருந்து அவர்களின் மூதாதையரை அழைத்து வந்து அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்களுக்காக நினைவுகூர்வேன், நானே ஆண்டவர்”. 46 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயின் மூலம் அவருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட நியமங்களும் நெறிமுறைச் சட்டங்களும் இவையே! 26:1 விப 20:4; லேவி 19:4; இச 5:8; 16:21-22; 27:1. 26:3-5 இச 11:13-15; 28:1-14. 26:12 2 கொரி 6:16. 26:42 தொநூ 17:7-8; 26:3-4; 28:13-14.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-26
116
லேவியர்
லேவியர் அதிகாரம் – 27 – திருவிவிலியம்
ஆண்டவருக்குரிய நேர்ச்சையும் வரியும் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: ஒருவர் யாரையேனும் பொருத்தனையாகச் செலுத்தத் திட்டமிட்டிருந்தால் அவர்கள் உன் மதிப்பின்படி ஆண்டவருக்கு உரியவர். 3 இருபது வயதிலிருந்து அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்மகனுக்குத் திருக்கோவில் அளவையின்படி அறுநூறு கிராம்* வெள்ளி; 4 பெண்ணாய் இருந்தால் முன்னூற்றைம்பது கிராம். 5 ஐந்து வயது முதல் இருபது வயது வரையுள்ள ஆண்பிள்ளைக்கு இருநூற்று முப்பது கிராம்* பெண் பிள்ளைக்கு நூற்றுப் பதினைந்து கிராம்.** 6 ஒரு மாதம் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளைக்கு அறுபது கிராம் வெள்ளி; பெண்பிள்ளைக்கு முப்பத்தைந்து கிராம் வெள்ளி, 7 அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவரை நூற்று எழுபது கிராம் வெள்ளியாகவும் மூதாட்டியை நூற்றுப் பதினைந்து கிராம் வெள்ளியாகவும் மதிப்பிட வேண்டும். 8 தம் மதிப்பைச் செலுத்த வாய்ப்பற்ற ஏழை எனில், குரு முன்னிலையில் அவர் வந்து நிற்க, பொருத்தனை செய்தவரின் நிதி நிலைக்கு ஏற்பக் குரு அவரை மதிப்பிடவேண்டும். 9 ஆண்டவருக்குக் காணிக்கையாக பொருத்தனை செய்தது விலங்கு எனில், அது ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டது ஆகும். 10 அது மாற்றத் தகுந்தது அன்று. நல்லதுக்குப் பதில் கெட்டதையும் கெட்டதுக்குப் பதில் நல்லதையும் கொடுக்கலாகாது. ஒரு விலங்குக்குப் பதிலாக வேறொரு விலங்கைக் கொடுக்க விரும்பினால், அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டவை ஆகும். 11 அது பலியிடத் தகுதியற்ற தீட்டான விலங்கு எனில், அதைக் குருமுன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும். 12 குரு அதன் தரத்தின் உயர்வு, தாழ்வை மதிப்பிடுவான். அவன் மதிப்பிடுவதே அதன் மதிப்பு ஆகும். 13 அதனை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒரு பங்கை மிகுதியாகச் செலுத்தவேண்டும். 14 ஒருவர் நேர்ச்சையாகத் தன் இல்லத்தை ஆண்டவருக்கு நேர்ந்து கொண்டால், குரு அதன் தரத்தின் உயர்வு, தாழ்வை மதிப்பிடுவான். அவன் மதிப்பீடே அதன் மதிப்பு ஆகும். 15 அதன் உடைமையாளர் அந்த வீட்டை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒருபங்கை மிகுதியாகச் செலுத்த வேண்டும். அது மீண்டும் அவருடையது ஆகும். 16 ஒருவர் தன் குடும்ப நிலத்தின் பகுதியை நேர்ந்துகொண்டால், அதன் மதிப்பு விதைப்பாட்டிற்கேற்ப இருக்க வேண்டும். ஒரு கலம் பார்லி விதைப்பாடுள்ள வயல் அறுநூறு கிராம் வெள்ளி ஆகும். 17 யூபிலி ஆண்டில் தம் வயலை நேர்ச்சை செய்தால், நீ மதிக்கிறபடியே அதன் மதிப்பு இருக்கும். 18 யூபிலி ஆண்டுக்குப் பின்னர் அதை நேர்ந்துகொண்டால், அடுத்த யூபிலி ஆண்டுவரை எஞ்சியுள்ள ஆண்டுகளுக்கு ஏற்ப, அதன் மதிப்பு குருவினால் கணக்கிடப்பட்டு, அதன் உண்மை மதிப்பிலிருந்து குறைக்கப்படும். 19 வயலை நேர்ச்சையாகச் செலுத்தினவர் அதை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க அது அவருடையது ஆகும். 20 வயலை மீட்காமல், அதை வேறொருவருக்கு விற்றால், அதனை மீட்க இயலாது. 21 அது யூபிலி ஆண்டில் விடுவிக்கப்படும்போது, ஆண்டவருக்கென நேர்ந்துகொள்ளப்பட்ட நிலமாகக் கருதப்படும்; அது குருவின் உடைமை ஆகும். 22 ஒருவர், தன் குடும்பச் சொத்து அல்லாத ஒரு வயலை வாங்கி அதை ஆண்டவருக்கென நேர்ச்சையாகச் செலுத்தினால், 23 யூபிலி ஆண்டு மட்டும் அதற்குண்டான மதிப்பிற்கேற்ப, அதன் விலை குருவினால் கணக்கிடப்படும். அந்த மதிப்பு அன்றே ஆண்டவருக்கு நேர்ச்சையாகச் செலுத்தப்படும். 24 எவரிடமிருந்து அந்த வயலை வாங்கினாரோ, அவருக்கு யூபிலி ஆண்டில் அது திருப்பிக் கொடுக்கப்படும். 25 மதிப்பீடுகள் அனைத்தும் தூயகத்துச் செக்கேலின்படி கணக்கிட வேண்டும். ஒரு செக்கேல் என்பது பதினொன்றரை கிராம்.* 26 தலையீற்று ஆண்டவருடையது. அதனை நேர்ச்சையாக்க வேண்டாம்; ஏனெனில், அது மாடோ ஆடோ, ஆண்டவருக்கு உரியதே. 27 தீட்டான கால்நடையின் முதற்பிறப்பு எனில், அதன் மதிப்பினால் அதனை மீட்டு, அதனுடன் மீண்டும் ஐந்திலொரு பங்கைக் கூட்டிக்கொடுக்க வேண்டும். மீட்கப்படாவிடில் அதன் மதிப்பிற்கேற்ப அதனை விற்றுவிடலாம். 28 ஒருவர் காணிக்கையாகச் செலுத்திய தனக்குரிய மனிதரையும், விலங்கையும், குடும்ப நிலத்தையும் ஆண்டவருக்கென நேர்ந்துவிட்டால், அவற்றுள் எதையும் விற்கவோ, மீட்டுக் கொள்ளவோ வேண்டாம். நேர்ச்சை அனைத்தும் ஆண்டவருக்கே முற்றிலுமாகப் பிரித்து வைக்கப்பட்டன. 29 சபிக்கப்பட்ட எவரும் மீட்கப்படலாகாது. அவர் கொல்லப்படவேண்டும். 30 நிலத்தின் தானியங்களிலும், மரங்களின் கனிகளிலும் பத்திலொன்று ஆண்டவருக்குரியது. அது ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டியதே. 31 அவற்றில் எதையேனும் மீட்க விரும்பினால், அதன் மதிப்போடு ஐந்தில் ஒரு பங்கைக் கூடச்செலுத்த வேண்டும். 32 மேய்ச்சலுக்கு உட்பட்ட ஆடு மாடுகளின் பத்திலொன்று ஆண்டவர்க்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டும். 33 எது உயர்ந்தது, எது தாழ்ந்தது எனப் பார்க்க வேண்டாம். அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால் அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டும். அவை மீட்கப்படலாகா. 34 இஸ்ரயேலருக்குக் கூறும்படியாக ஆண்டவர் மோசேக்கு சீனாய் மலையில் வழங்கிய கட்டளைகள் இவையே. 27:28 எண் 18:14. 27:30-33 எண் 18:21; இச 14:22-29. 27:3 * ‘ஐம்பது செக்கேல்’ என்பது எபிரேய பாடம். 27:4 * ‘முப்பது செக்கேல்’ என்பது எபிரேய பாடம். 27:5 * ‘இருபது செக்கேல்’ என்பது எபிரேய பாடம். 27:5 ** ‘பத்து செக்கேல்’ என்பது எபிரேய பாடம். 27:16 * ‘ஒரு கோமர்’ என்பது எபிரேய பாடம். 27:16 ** ‘ஐம்பது செக்கேல்’ என்பது எபிரேய பாடம். 27:25 ‘இருபது கேரா’ என்பது எபிரேய பாடம்.
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-27
117
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 1 – திருவிவிலியம்
இஸ்ரயேலில் முதல் கணக்கெடுப்பு 1 இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல் நாளன்று, சீனாய்ப் பாலைநிலத்தில் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் பேசினார். அவர் கூறியது: 2 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாகக் கணக்கெடுங்கள். 3 இஸ்ரயேலில் இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குச் செல்லத்தக்க அனைவரையும் அணி அணியாக நீயும், ஆரோனும் எண்ணுங்கள். 4 ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவன் உங்களோடிருப்பான்; அவன் தன் மூதாதையரின் வீட்டுத் தலைவனாக இருக்க வேண்டும். 5 உங்களுக்குத் துணை நிற்க வேண்டியவர்களின் பெயர்களாவன; ரூபன் குலத்திலிருந்து எலிட்சூர்; இவன் செதேயூர் மகன்; 6 சிமியோன் குலத்திலிருந்து செலுமியேல்; இவன் சுரிசத்தாய் மகன்; 7 யூதா குலத்திலிருந்து நகுசோன்; இவன் அம்மினதாபின் மகன்; 8 இசக்கார் குலத்திலிருந்து நெத்தனியேல்; இவன் சூவார் மகன்; 9 செபுலோன் குலத்திலிருந்து எலியாபு; இவன் கேலோன் மகன்; 10 யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் குலத்திலிருந்து எலிசாமா; இவன் அம்மிகூதின் மகன்; மனாசே குலத்திலிருந்து கமாலியேல்; இவன் பெதாசூரின் மகன்; 11 பென்யமின் குலத்திலிருந்து அபிதான்; இவன் கிதயோனின் மகன்; 12 தாண் குலத்திலிருந்து அகியசேர்; இவன் அம்மிசத்தாயின் மகன்; 13 ஆசேர் குலத்திலிருந்து பகியேல்; இவன் ஒக்ரானின் மகன்; 14 காத்து குலத்திலிருந்து எல்யாசாபு; இவன் தெகுவேலின் மகன்; 15 நப்தலி குலத்திலிருந்து அகிரா; இவன் ஏனானின் மகன்; 16 மக்கள் கூட்டமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே. இவர்கள் தங்கள் மூதாதையர் குலங்களின் முதல்வர்களும் இஸ்ரயேலில் ஆயிரவர் தலைவர்களும் ஆவர். 17 பெயர் குறிக்கப்பட்ட இவர்களை மோசேயும் ஆரோனும் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர். 18 இரண்டாம் மாதம் முதல் நாளன்று அவர்கள் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுகூட்டினர். அவர்கள் தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக இருபதோ அதற்குமேலோ வயதுடையவர்களைப் பதிவு செய்தனர். 19 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தும் இதுவே; அவ்வாறே அவர் சீனாய்ப் பாலைநிலத்தில் அவர்களை எண்ணினார். 20 இஸ்ரயேலின் தலைப்பேறான ரூபன் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக, இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்; 21 ரூபன் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர். 22 சிமியோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாக இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்; 23 சிமியோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு பேர். 24 காத்து மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 25 காத்து குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர். 26 யூதா மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 27 யூதா குலத்தில் எண்ணப்பட்டோர் எழுபத்து நாலாயிரத்து அறுநூறு பேர். 28 இசக்கார் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 29 இசக்கார் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து நாலாயிரத்து நானூறு பேர். 30 செபுலோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 31 செபுலோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர். 32 யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 33 எப்ராயிம் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பதாயிரத்து ஐந்நூறுபேர். 34 மனாசே மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 35 மனாசே குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர். 36 பென்யமின் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 37 பென்யமின் குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தையாயிரத்து நானூறு பேர். 38 தாண் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 39 தாண் குலத்தில் எண்ணப்பட்டோர் அறுபத்தீராயிரத்து எழுநூறு பேர். 40 ஆசேர் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 41 ஆசேர் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு பேர். 42 நப்தலி மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; 43 நப்தலி குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர். 44 மூதாதையர் ஒவ்வொருவரின் வீட்டு முதல்வர்களான தலைவர் பன்னிருவரின் துணையுடன் மோசேயாலும் ஆரோனாலும் எண்ணப்பட்டவர்கள் இவர்களே. 45 ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை; 46 மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர். 47 ஆனால், இவர்களோடு லேவியர் தங்கள் மூதாதையர் குலப்படி எண்ணப்படவில்லை. 48 ஏனெனில், ஆண்டவர் மோசேயிடம் சொன்னது: 49 “லேவி குலத்தை மட்டும் நீ எண்ணவேண்டாம்; இஸ்ரயேல் மக்களுக்குள் அவர்களை நீ கணக்கெடுப்புச் செய்ய வேண்டாம்; 50 லேவியரை உடன்படிக்கைக் கூடாரம், அதன் பணிப்பொருள்கள், அதற்குச் சொந்தமான அனைத்துப் பொருள்கள் ஆகியவற்றின் பொறுப்பாளராக ஏற்படுத்து; அவர்கள் கூடாரத்தையும் அதன் பணிப் பொருள்களையும் சுமந்து செல்ல வேண்டியவர்கள்; அவர்கள் கூடாரத்தைச் சுற்றித் தங்கியிருந்து அதைப் பேணி வருவார்கள். 51 புறப்பட வேண்டிய நேரத்தில் லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பர்; கூடாரம் இடிக்கும்போது லேவியரே அதனை எழுப்பி நிறுத்துவர். வேறு எவனும் அதன் அருகில் வந்தால் அவன் கொல்லப்படுவான். 52 இஸ்ரயேல் மக்கள் அணி அணியாகச் சென்று ஒவ்வொருவரும் தம் பாளையம், கொடி இவற்றுக்கேற்பத் தங்கியிருப்பர். 53 லேவியரோ இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் மேல் சினம் வராதபடி உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றிப் பாளையமிறங்குவர்; உடன்படிக்கைக் கூடாரத்தைக் காவல் செய்ய வேண்டியவரும் லேவியரே. 54 இஸ்ரயேல் மக்கள் இவ்வாறே செய்தனர்; ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர்கள் செய்தனர். 1:1-46 எண் 26:1-51.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-1
118
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 2 – திருவிவிலியம்
பாளையத்தில் குலங்களின் ஒழுங்கமைப்பு 1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: 2 இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் கொடி, மூதாதையர் வீட்டுச் சின்னங்கள் இவற்றின்படி பாளையமிறங்குவர்; எல்லாப் பக்கத்திலிருந்தும் சந்திப்புக் கூடாரத்தை நோக்கியவாறு அவர்கள் பாளையமிறங்குவர். 3 கிழக்கே கதிரவன் உதயத்தை நோக்கிப் பாளையமிறங்க வேண்டியவர் யூதாவின் கொடியையுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர். யூதா மக்களின் தலைவன் நக்சோன்; இவன் அம்மினதாபின் மகன். 4 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை எழுபத்து நாலாயிரத்து அறுநூறு. 5 அவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் இசக்கார் குலத்தார்; இசக்கார் மக்களின் தலைவன் நெத்தனியேல்; இவன் சூவாரின் மகன்; 6 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்து நாலாயிரத்து நானூறு. 7 அடுத்து வருவது செபுலோன் குலம்; செபுலோன் மக்களின் தலைவன் எலியாபு; இவன் கேலோனின் மகன்; 8 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்தேழாயிரத்து நானூறு. 9 இவ்வாறாக, யூதா அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத்தொகை ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானூறு; இவர்கள் முதலாவதாக அணிவகுத்துச் செல்வர். 10 தெற்கே பாளையமிறங்க வேண்டியவர் ரூபனின் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்; ரூபன் மக்களின் தலைவன் எலிட்சூர், இவன் செதேயூரின் மகன்; 11 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு. 12 இவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் சிமியோன் குலத்தார்; சிமியோன் மக்களின் தலைவன் செலுமியேல், இவன் சுரிசத்தாயின் மகன்; 13 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு. 14 அடுத்து வருவது காத்து குலம்; காத்து மக்களின் தலைவன் எல்யாசாபு, இவன் இரகுவேலின் மகன்; 15 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது. 16 இவ்வாறாக, ரூபன் அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத் தொகை ஒரு இலட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது; இவர்கள் இரண்டாவதாக அணிவகுத்துச் செல்வர். 17 அதன் பின், சந்திப்புக்கூடாரம் லேவியர் அணியினரோடு ஏனைய அணியினர் நடுவே செல்லும். அவர்கள் பாளையமிறங்கும்போது செய்வது போன்றே தம் தம் வரிசையில் தம் தம் கொடியேந்தி அணிவகுத்துச் செல்வர். 18 மேற்கே பாளையமிறங்க வேண்டியவர் எப்ராயிம் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்; எபிராயிம் மக்களின் தலைவன் எலிசாமா; இவன் அம்மிகூதின் மகன். 19 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பதாயிரத்து ஐந்நூறு. 20 அவனையடுத்திருப்போர் மனாசே குலத்தார்; மனாசே மக்களின் தலைவன் கமாலியேல், இவன் பெதாசூரின் மகன்; 21 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தீராயிரத்து இருநூறு. 22 அடுத்து வருவது பென்யமின் குலம்; பென்யமின் மக்களின் தலைவன் அபிதான்; இவன் கிதயோனியின் மகன்; 23 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தையாயிரத்து நானூறு. 24 இவ்வாறாக, எப்ராயிம் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை ஒரு இலட்சத்து எண்ணாயிரத்து நூறு. அவர்கள் மூன்றாவதாக அணிவகுத்துச் செல்வர். 25 வடக்கே பாளையமிறங்க வேண்டியவர் தாண் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்; தாண் மக்களின் தலைவன் அகியேசர்; இவன் அம்மி சத்தாயின் மகன்; 26 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை அறுபத்தீராயிரத்து எழுநூறு. 27 அவனை அடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் ஆசேர் குலத்தார்; ஆசேர் மக்களின் தலைவன் பகியேல், இவன் ஒக்ரானின் மகன்; 28 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு. 29 அடுத்து வருவது நப்தலிக் குலம்;நப்தலி மக்களின் தலைவன் அகிரா; இவன் ஏனானின் மகன்; 30 எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்து மூவாயிரத்து நானூறு. 31 இவ்வாறாக, தாண் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை ஒரு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறு. இவர்கள் அணிவகுப்பில் இறுதியாகச் செல்வர். 32 தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்கள் இவர்களே; அனைத்துப் பாளையங்களிலும் தங்களைச் சார்ந்த அணியினரோடு எண்ணப்பட்டோரின் தொகை ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது. 33 ஆனால், ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி லேவியர் இஸ்ரயேல் மக்களுள் எண்ணப்படவில்லை. 34 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரயேல் மக்கள் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கொடிகளைச் சுற்றிப் பாளையமிறங்கி தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின்படி அணிவகுத்துச் சென்றனர்.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-2
119
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 3 – திருவிவிலியம்
ஆரோனின் புதல்வர் 1 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயுடன் பேசிய காலத்தில் ஆரோன், மோசே ஆகியோரின் வழிமரபினர் இவர்களே; 2 ஆரோனின் புதல்வர் பெயர்கள் இவையே; தலைமகன் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர். 3 இவை குருத்துவப் பணிக்கென அருள்பொழிவு பெற்றுத் திருநிலைப்படுத்தப்பட்ட குரு ஆரோனின் புதல்வர் பெயர்கள்; 4 ஆனால், நாதாபும் அபிகூவும் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் திருமுன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்ததால் ஆண்டவர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டனர்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே, எலயாசரும் இத்தாமரும் தங்கள் தந்தை ஆரோன் முன்னிலையில் குருக்களாகப் பணியாற்றினர். குருவுக்குப் பணிவிடை செய்ய லேவியர் ஏற்படுத்தப்படல் 5 மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 6 லேவிக் குலத்தை அழைத்து வந்து குரு ஆரோன் முன் அவர்களை நிறுத்து; அவர்கள் அவனுக்குப் பணிவிடை செய்யட்டும். 7 திருஉறைவிடத்தில் அவர்கள் பணிசெய்யும்போது, சந்திப்புக் கூடாரத்தின் முன் அவனுக்காகவும் அனைத்து மக்கள் கூட்டமைப்புக்காகவும் தங்களுக்குரிய பொறுப்பை நிறைவேற்றுவர். 8 சந்திப்புக் கூடாரத்தின் அனைத்துப் பணிப் பொருட்களுக்கும் பொறுப்பு அவர்களே; திருஉறைவிடத்தில் அவர்கள் பணி செய்கையில் இஸ்ரயேல் மக்களுக்கானத் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவர். 9 லேவியரை ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் ஒப்படைத்துவிடு; இஸ்ரயேல் மக்களுள் அவர்கள் முற்றிலும் அவனுக்குக் கொடுக்கப்பட்டடிருக்கிறார்கள். 10 நீ ஆரோனையும் அவன் புதல்வரையும் அவர்கள் குருத்துவப் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு நியமனம் செய். ஆனால், வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான். 11 மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 12 இதோ! நான் இஸ்ரயேல் மக்களிலிருந்து லேவியரைப் பிரித்தெடுத்துள்ளேன்; இஸ்ரயேல் மக்களில் கருப்பையைத் திறக்கும் தலைப்பேறனைத்திற்கும் இவர்கள் ஈடாக இருப்பார்கள். லேவியர் எனக்கே உரியவர். 13 ஏனெனில், எல்லாத் தலைப்பேறும் என்னுடையது. எகிப்து நாட்டில் தலைப் பேறனைத்தையும் நான் சாகடித்த நாளில் இஸ்ரயேலின் தலைப்பேறனைத்தையும் மனிதரையும் விலங்கையும், எனக்கெனப் புனிதப்படுத்தினேன்; அவர்கள் எனக்கே உரியவர்கள்; நானே ஆண்டவர். லேவியரைக் கணக்கெடுத்தல் 14 பின்னர், சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 15 மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக லேவியின் புதல்வரைக் கணக்கெடு; ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஒவ்வோர் ஆண்பிள்ளையையும் நீ எண்ண வேண்டும். 16 ஆண்டவர் கட்டளையிட்டுக் கூறிய அவர் வார்த்தையின்படி மோசே அவர்களை எண்ணினார். 17 பெயர் வாரியாக லேவியின் புதல்வர் இவர்களே; கேர்சோன், கோகாத்து, மொராரி ஆகியோர். 18 குடும்ப வாரியாகக் கேர்சேன் புதல்வர் பெயர்களாவன; லிப்னி, சிமயி. 19 குடும்ப வாரியாக கோகாத்தின் புதல்வர்; அம்ராம், இட்சகார், எபிரோன், உசியேல் ஆகியோர். 20 குடும்ப வாரியாக மெராரியின் புதல்வர்; மக்லி, மூசி ஆகியோர். மூதாதையர் வீடு வாரியாக லேவியர் குடும்பங்கள் இவைகளே. 21 கேர்சோனிலிருந்து லிப்னியர், சிமயியர் ஆகிய குடும்பங்கள் தோன்றின; இவை கேர்சோனியக் குடும்பங்கள். 22 எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஏழாயிரத்து ஐந்நூறு. 23 திருஉறைவிடத்துக்குப் பின்னால் மேற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கேர்சோனியக் குடும்பங்கள். 24 இவர்களோடிருக்கும் எல்யாசாபு கேர்சோனிய மூதாதையர் வீட்டுக் குடும்பங்களின் தலைவன், இவன் இலாவேலின் மகன். 25 சந்திப்புக் கூடாரத்தில் கேர்சோன் புதல்வரின் பொறுப்பில் உள்ளவை; திருஉறைவிடம், கூடாரத்துடன் அதன் அடைப்பு, சந்திப்புக் கூடாரத்தின் வாயில் திரை, 26 தளத்திலுள்ள தொங்கு திரைகள், திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள வாயில்திரை, அதன் கயிறுகள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே. 27 கோகாத்திலிருந்து தோன்றியவை அம்ராமியர் குடும்பம், எபிரோனியர் குடும்பம், உசியேலியர் குடும்பம் ஆகியவை. இவை கோகாத்தியர் குடும்பங்கள். 28 எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் எண்ணாயிரத்து அறுநூறு பேர்; இவர்கள் தூயகத்திற்குரிய பொறுப்புகளை நிறைவேற்றி வந்தனர். 29 திருஉறைவிடத்துக்குத் தெற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கோகாத்துப் புதல்வர் குடும்பங்கள். 30 இவர்களோடிருக்கும் எலிட்சாபான் கோகாத்தியக் குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன்; இவன் உசியேலின் மகன். 31 அவர்களின் பொறுப்பில் உள்ளவை பேழை, மேசை, விளக்குத் தண்டு, பலிபீடங்கள், குரு தூயகப் பணிகளுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள், திரை ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே. 32 மேலும், குரு ஆரோன் புதல்வன் எலயாசர் லேவியர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்; தூயகத்துக்குப் பொறுப்பானவர்களை மேற்பார்வை செய்ய வேண்டியவன் இவனே. 33 மெராரியிடமிருந்து தோன்றியவை மக்லியர் குடும்பமும் மூசியர் குடும்பமுமாகும். இவை மெராரியின் குடும்பங்கள். 34 எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஆறாயிரத்து இருநூறு. 35 மொராரி குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன் சூரியேல்; இவன் அபிகயிலின் மகன்; இவர்கள் திருஉறைவிடத்துக்கு வடக்கே பாளையமிறங்க வேண்டியவர்கள். 36 மெராரி புதல்வரின் பொறுப்பில் ஒப்புவிக்கப்பட்டவை; திருஉறைவிடத்தின் சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள், அனைத்துத் துணைக்கலன்கள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே. 37 சுற்றுத்தளத் தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள் ஆகியவையும் அவர்கள் பொறுப்பே. 38 திருஉறைவிடத்தின் கிழக்கே சந்திப்புக் கூடாரத்தின் முன் கதிரவன் உதிக்கும் திசையில் பாளையமிறங்க வேண்டியோர் மோசே, ஆரோன், அவன் புதல்வர், திருஉறைவிடத்தில் இஸ்ரயேல் மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்திற்கும் பொறுப்பும் உரிமையும் இவர்களுக்கே உண்டு. வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான். 39 ஆண்டவர் வார்த்தைப்படி மோசேயும் ஆரோனும் லேவியரைக் குடும்பங்கள் வாரியாக எண்ணியபோது அவர்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்பிள்ளைகள் அனைவரின் தொகை இருபத்தீராயிரம். தலைப்புதல்வரின் இடத்தை லேவியர் எடுத்துக்கொள்ளல் 40 மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான தலைப்பேறான ஆண்கள் அனைவரையும் அவர்கள் பெயர்கள் வாரியாகக் கணக்கெடு. 41 இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறான ஆண்கள் அனைவருக்கும் பதிலாக லேவியரையும் இஸ்ரயேல் மக்களுடைய கால்நடைகளின் தலையீற்றுகள் அனைத்துக்கும் பதிலாக லேவியரின் கால்நடைகளையும் எனக்கென்று பிரித்தெடு; நானே ஆண்டவர். 42 ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே இஸ்ரயேல் மக்களில் தலைப்பேறுகள் அனைத்தையும் எண்ணினார். 43 பெயர்களின் எண்ணப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான தலைப்பேறான ஆண்கள் அனைவரின் தொகை இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று. 44 பின் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 45 இஸ்ரயேல் மக்களுள் எல்லாத் தலைப்பேறுகளுக்கும் பதிலாக லேவியரையும் அவர்கள் கால்நடைகளுக்குப் பதிலாக லேவியரின் கால்நடைகளையும் பிரித்தெடு; லேவியர் எனக்கே உரியவர்; நானே ஆண்டவர். 46 இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகளில் எண்ணிக்கைக்கு மேலாக, மீட்கப்பட வேண்டியவர் இருநூற்று எழுபத்து மூன்றுபேர். 47 இருபது கேரா மதிப்புடைய தூயகத்து செக்கேலில் தலைக்கு ஐந்து செக்கேல் வீதம் வாங்கிக்கொள். 48 எண்ணிக்கைக்கு மேலாக இருப்போர் மீட்கப்படுவதற்காக வரும் இப்பணத்தை நீ ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுக்க வேண்டும். 49 லேவியரால் மீட்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாயிருந்தோரிடமிருந்து வந்த மீட்புப் பணத்தை மோசே எடுத்துக் கொண்டார். 50 இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறாயிருந்தோரிடமிருந்து அவர் எடுத்த பணம் தூயகத்து செக்கேல் கணக்குப்படி ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து செக்கேல். 51 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டுக் கூறியபடியே மோசே மீட்புப் பணத்தை ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் கொடுத்தார். 3:2 எண் 26:60. 3:4 லேவி 10:1-2; எண் 26:61. 3:13 விப 13:2.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-3
120
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 4 – திருவிவிலியம்
கோகாத்து என்னும் லேவியர் குலமரபினரின் கடமைகள் 1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: 2 லேவியின் புதல்வர்களிலிருந்து கோகாத்தின் புதல்வரை அவர்கள் மூதாதையர், வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு. 3 சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு. 4 சந்திப்புக் கூடாரத்தில் கோகாத்துப் புதல்வரின் மிகப் புனிதமான பணி இதுவே; 5 பாளையத்தினர் பறப்பட்டுச் செல்லும்போது ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று மூடுதிரையை இறக்கி அதனைக் கொண்டு உடன்படிக்கைப் பேழையை மூடுவர். 6 பின் வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடி கருநீலமான ஒரு துணியை அதன் மேல் விரித்து நிலைக்கால்களில் வைப்பர். 7 திருமுன் அப்பத்து மேசையின் மேல் அவர்கள் ஒரு நீலத்துணியை விரிப்பர்; அதன் மேல் தட்டுகள், பூக்கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றை வைப்பர்; அப்பம் அதன் மேல் எப்போதும் இருக்கும்; 8 பின் அவர்கள் அவற்றின்மேல் ஒரு கருஞ்சிவப்புத் துணியை விரித்து, அவற்றை வெள்ளாட்டுத் தோலால் மூடி, நிலைக்கால்களில் வைப்பர். 9 பின்னர், அவர்கள் ஒரு நீலத்துணியை எடுத்து அதை விளக்குத்தண்டு, அதன் விளக்குகள், அதன் திரிகள், அதன் சாம்பல் தட்டுகள் ஆகியவற்றின் மேலும் எண்ணெய்க்காகப் பயன்படுத்தும் பாத்திரங்கள் அனைத்தின் மேலும் விரிப்பர். 10 அவர்கள் அதனை அதன் துணைக்கலன்களோடு ஒரு வெள்ளாட்டுத் தோலால் மூடி அதனைச் சுமக்கும் சட்டத்தின் மேல் வைப்பர். 11 பின் பொற்பீடத்தின் மேல் ஒரு நீலத்துணியை அவர்கள் விரித்து, வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடிநிலைக்கால்களில் வைப்பர். 12 தூயகப்பணியில் பயன்படுத்தும் அனைத்துப் பாத்திரங்களையும் அவர்கள் எடுத்து, அவற்றை ஒரு நீலத் துணியில் வைத்து வெள்ளாட்டுத் தோலால் அவற்றை மூடிச் சுமக்கும் சட்டத்தின்மேல் வைப்பர். 13 அவர்கள் பலிபீடத்திலிருந்து சாம்பலை வெளியே எடுத்து அதன் மேல் ஊதா துணியொன்றை விரிப்பர். 14 திருப்பணியில் பயன்படுத்தும் துணைக்கலன்களான தீச்சட்டிகள், முள்குறடுகள், சாம்பற் கரண்டிகள், கலங்கள் ஆகிய பலிபீடத்துத் துணைக்கலன்கள் அனைத்தையும் அவர்கள் அதன்மேல் வைப்பர்; வெள்ளாட்டுத்தோலை அதன் மேல் பரப்பி மூடி, அதன் நிலைக்கால்களில் வைப்பர். 15 ஆரோனும் அவன் புதல்வரும் திருஉறைவிடத்தையும் திருஉறைவிடத்துப் பணிக்கலன்கள் அனைத்தையும் மூடியதும் பாளையத்தினர் புறப்பட்டுச் செல்வர். உடனே கோகாத்தின் புதல்வர் இவற்றைத் தூக்கிச் செல்ல வருவர்; ஆனால், சாகாதபடிக்குத் தூய பொருள்களை அவர்கள் தொடக்கூடாது. மீறினால் அவர்கள் சாவுக்கு உள்ளாவர்; கோகாத்தின் புதல்வர் எடுத்துச் செல்ல வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவையே. 16 விளக்கிற்கான எண்ணெய், வாசனைத் தூபம், அன்றாட உணவுப் படையல், திருப்பொழிவு எண்ணெய் ஆகியவற்றின் பொறுப்பு குரு ஆரோன் புதல்வன் எலயாசருடையது; திருஉறைவிடம் முழுவதையும், அதிலிருக்கும் அனைத்தையும், தூயகத்தையும் அதிலிருக்கும் பாத்திரங்களையும் அவனே மேற்பார்வை செய்ய வேண்டும். 17 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: 18 “லேவியருள் கோகாத்து மரபைச் சார்ந்த குடும்பங்கள் அழிந்துபடாதிருக்கட்டும். 19 எனவே, புனிதமிகு பொருள்களை அவர்கள் நெருங்கி வருகையில் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டியது; ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று அவர்களில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டியது பற்றியும் தூக்கிச் செல்ல வேண்டியது பற்றியும் பணிப்பர். 20 ஆயினும், புனிதப் பொருள்கள் மூடப்படும்போது கோகாத்தியர் உள்ளே சென்று பார்க்கக் கூடாது. மீறினால் அவர்கள் சாவுக்குள்ளாவர்.” கேர்சோன் என்னும் லேவியர் குல மரபினரின் கடமைகள் 21 பின்னர், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 22 கேர்சோன் புதல்வர்களையும் அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு. 23 சந்திப்புக் கூடாரவேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரையுள்ள அனைவரையும் கணக்கெடு. 24 பணி செய்ய வேண்டியோரும் சுமைகள் தூக்க வேண்டியோருமான கேர்சோனியர் குடும்பங்களின் பணி இதுவே; 25 அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை; திருஉறைவிடத்தின் திரைகள், மூடுதிரையோடு சேர்ந்து சந்திப்புக் கூடாரம், அதன் மேலே உள்ள வெள்ளாட்டுத் தோல், மூடுதிரை, சந்திப்புக் கூடாரத்தின் வாயில்திரை, 26 சுற்றுமுற்றத் தொங்கு திரைகள். திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியிருக்கும் முற்றத்தின் வாயில்திரை, அவற்றின் கயிறுகள், அவர்களின் வேலைக்கான அனைத்துக் கருவிகள் ஆகியவை. அவை தொடர்பான அனைத்துப் பணிகளையும் அவர்கள் செய்வார்கள். 27 ஆரோன், அவன் புதல்வர் கட்டளையிட்டபடியே கேர்சோனியர் புதல்வர் செய்யவேண்டிய எல்லா வேலைகளும், அதாவது அவர்கள் செய்ய வேண்டியவை. சுமக்க வேண்டியவை அனைத்தும் இருக்கும்; தூக்கிச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்தையும் நீங்கள் அவர்களிடம் விட்டுவிடுங்கள்; 28 இதுவே சந்திப்புக் கூடாரத்தில் கேர்சோனியர் குடும்பங்கள் செய்ய வேண்டிய பணி; அவர்களின் பணி குருவாகிய ஆரோன் மகன் இத்தாமரின் மேற்பார்வையின் கீழ் இருக்கும். மெராரி என்னும் லேவியர் குலமரபினரின் கடமைகள் 29 மெராரி புதல்வரை அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு. 30 சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு. 31 சந்திப்புக் கூடாரத்தின் மொத்த வேலையில் அவர்கள் தூக்கிச் செல்ல வேண்டியவற்றிற்கான ஏற்பாடு இதுவே; திருஉறைவிடச் சட்டங்கள், அதன் குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள். 32 சுற்றுமுற்றத்தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான எல்லாக் கருவிகள் அவை தொடர்பான அனைத்துப் பணிகளே. அவர்கள் தூக்கிச்செல்ல வேண்டிய பொருள்களைப் பெயர் குறித்து அவர்களிடம் ஒப்புவி. 33 இதுவே சந்திப்புக் கூடாரத்தில் மெராரியர் குடும்பங்கள் செய்யவேண்டிய மொத்தப்பணி; அவர்கள் குரு ஆரோனின் மகன் இத்தாமரின் கீழ் இருப்பர். லேவியரைக் கணக்கெடுத்தல் 34 மோசேயும் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களும் சேர்ந்து கோகாத்தியர் புதல்வரை அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடுத்தனர். 35 சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரையும் கணக்கெடுத்தனர். 36 குடும்பங்கள் வாரியாக, எண்ணப்பட்டவர்களின் தொகை இரண்டாயிரத்து எழுநூற்றைம்பது; 37 மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே மோசேயும் ஆரோனும் எண்ணியதில் கோகாத்தியர் குடும்பங்களில் சந்திப்புக் கூடாரப்பணி செய்தோரின் மொத்தத்தொகை இதுவே. 38 தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக கேர்சோன் புதல்வருள் எண்ணப்பட்டோர்: 39 சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரிலும், 40 தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பது பேர். 41 ஆண்டவர் வார்த்தையின்படி மோசேயும் ஆரோனும் எண்ணியதில் கேர்சோனியர் குடும்பங்களில் சந்திப்புக் கூடாரப் பணி செய்தோரின் மொத்தத் தொகை இதுவே. 42 தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக மெராரியர் குடும்பங்களில் எண்ணப்பட்டோர்; 43 சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரிலும், 44 குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் மூவாயிரத்து இருநூறு பேர். 45 மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே மோசேயும் ஆரோனும் எண்ணியதில் மெராரியர் குடும்பங்களில் எண்ணப்பட்டோர் இவர்களே. 46 மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் தலைவர்களும் எண்ணியதில் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் எல்லோரும்; 47 சந்திப்புக் கூடார வேலையில் சுமை தூக்கும் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்தவர்கள், 48 அவர்களில் எண்ணப்பட்டோர் எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பது பேர். 49 மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே அவர்களில் ஒவ்வொருவரும் பணி செய்யவும், சுமை சுமக்கவும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு, ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர் அவர்களைக் கணக்கெடுத்தார்.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-4
121
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 5 – திருவிவிலியம்
தூய்மையற்ற மக்கள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 தொழுநோயர், வெட்டையுள்ளோர், பிணத்தால் தீட்டுப்பட்டோர் அனைவரையும் பாளையத்துக்குப் புறம்பாக்குமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு. 3 மக்களிடையே நான் தங்கியிருக்கும் பாளையத்தை அவர்கள் தீட்டுப்படுத்தி விடாதபடி ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பாக்கிவிடுங்கள். 4 இஸ்ரயேல் மக்கள் அவ்வாறே அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பே துரத்திவிட்டனர். ஆண்டவர் மோசேயிடம் சொன்னபடியே இஸ்ரயேலர் செய்தனர். தவறுகளுக்கான அபராதம் 5 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 6 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: மனிதர் ஆண்டவரை மீறிச் செய்யும் பாவங்களில் எதையும் ஓர் ஆணோ, பெண்ணோ செய்து குற்றவாளியானால், 7 அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும்; தீங்கிழைக்கப்பட்டவனுக்கு ஈடுகட்டி, அத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க வேண்டும். 8 குற்ற ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முறை உறவினன் இல்லையெனில் அந்தக் குற்ற ஈட்டுத் தொகை ஆண்டவருக்கு, அதாவது குருவிடம் சேரும்; இது அவன் குற்ற நீக்கத்துக்காகச் செலுத்தும் ஈட்டுப்பலி; ஆட்டைத் தவிரச் சேர வேண்டியது, 9 இஸ்ரயேல் மக்கள் குருவிடம் கொண்டு வரும் புனிதப் பொருள்கள் அனைத்திலும் உயர்த்திப் படைப்பவை அவனையே சேரும். 10 ஒவ்வொரு மனிதனின் புனிதப் பொருள்களும் அவனுக்குரியவை; ஆனால், அவன் குருவுக்குக் கொடுப்பது குருவையே சேரும். மனைவியரை ஐயுறும் கணவர்களின் வழக்குகள் 11 மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 12 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஒருவனின் மனைவி நெறி தவறி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால், 13 வேறொருவன் அவளோடு படுத்து உடலுறவு கொள்ள, அது அவள் கணவனின் கண்களுக்கு மறைக்கப்பட்டு அவள் கறைப்பட்டிருந்தும் கண்டு பிடிக்கப்படாதிருந்து, அவள் தவறு செய்த நிலையிலேயே பிடிக்கப்படாமலிருந்தால், 14 வெஞ்சினத்தின் ஆவி, கணவனை ஆட்கொண்டு தன்னையே கறைப்படுத்திவிட்ட மனைவியின் மேல் அவன் வெகுண்டழுந்தால் அல்லது வெஞ்சினத்தின் ஆவி அவனை ஆட்கொண்டு தன் மனைவி தன்னையே கறைபடுத்தாதிருந்தும் அவன் வெகுண்டெழுந்தால், 15 அவன் தன் மனைவியை குருவின் முன் கொண்டு வரவேண்டும். அவளை முன்னிட்டுத் தேவைப்படும் பத்தில் ஒரு ஏப்பா வாற்கோதுமை உணவைப் படைக்க வேண்டும்; அவன் அதன் மேல் எண்ணெய் ஊற்றவோ தூபப்பொருள்கள் தூவவோ கூடாது. ஏனெனில், அது நினைவுபடுத்தும் உணவுப்படையல், அதாவது குற்றத்தை நினைவூட்டக்கூடிய சினத்தின் உணவுப்படையல். 16 பின் குரு அவளைக் கூட்டிக் கொண்டு வந்து ஆண்டவர் முன் நிறுத்துவார்; 17 குரு ஒரு மண் பாத்திரத்தில் புனித நீர் எடுத்து, திருக்கூடாரத்தின் தரையில் இருந்து கொஞ்சம் துகள் எடுத்து நீரில் போடுவார். 18 குரு அப்பெண்ணின் தலைமுடியைக் கலைத்துவிட்டு, வெஞ்சினத்தின் உணவுப் படையலாகிய நினைவுபடுத்தும் உணவுப்படையலை அவள் கைகளில் வைப்பார்; சாபத்தைக் கொண்டு வரும் கசப்பு நீரையும் குரு தன் கையில் வைத்திருப்பார். 19 அதன் பின்னர் குரு அவளை ஆணையிடச் சொல்லிக் கூற வேண்டியது: “நீ உன் கணவனின் அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கும்போது வேறு எந்த மனிதனும் உன்னோடு படுக்காமலும், நீ ஒழுக்கக்கேட்டுக்கு உடன்படாமலுமிருந்தால் சாபங்களைக் கொண்டு வரும் இக்கசப்பு நீர் உன்னை ஒன்றுஞ் செய்யாது: 20 ஆனால், நீ உன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறி தவறி, உன்னையே கறைப்படுத்தி, உன் கணவன் தவிர வேறொருவன் உன்னோடு படுத்திருக்க உடன்பட்டால் 21 குரு அப்பெண்ணைச் சாப ஆணை இடச் சொல்லி அவளிடம், “ஆண்டவர் உன் தொடைகள் அழுகி விழவும் உன் வயிறு வீங்கவும் செய்து உன் மக்களிடையே உன்னை ஒரு சாபமாகவும், ஆணைக்கூற்றாகவும் ஆக்குவார்; 22 சாபத்தைக் கொண்டு வரும் இந்த நீர் உன் குடல்களில் இறங்கி உன் வயிற்றை வீங்கச் செய்து உன் தொடைகளை அழுகி விழச் செய்யட்டும்” என்பார். அதற்கு அப்பெண் “ஆமென், ஆமென்” என்பாள். 23 பின்னர், குரு இச்சாபங்களை ஓர் ஏட்டில் எழுதிக் கசப்பு நீரால் அவற்றை அழித்து விடுவார்; 24 சாபத்தைக் கொண்டுவரும் அக் கசப்பு நீரை அப்பெண் குடிக்கச் செய்வார்; சாபத்தைக் கொண்டு வரும் அந்நீர் அவளுக்குள் சென்று கொடிய வேதனையை உண்டாக்கும். 25 குரு வெஞ்சினத்தின் உணவுப்படையலைப் பெண்ணின் கையிலிருந்து வாங்கி அதை ஆண்டவர் முன்னிலையில் ஆரத்தியாகக் காட்டிப் பலிபீடத்துக்குக் கொண்டு வருவார். 26 குரு அந்த உணவுப் படையிலிலிருந்து அதன் நினைவுப் பகுதியாக ஒரு கைப்பிடி எடுத்து அதனைப் பீடத்தின் மேல் எரித்து விடுவார்; இறுதியாக அப்பெண், அந்நீரைக் குடிக்கச் செய்வான். 27 அவன் அவளை நீர் குடிக்கச் செய்யும்போது அவள் உண்மையிலேயே தன்னைக் கறைப்படுத்தித் தன் கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தால் சாபத்தைக் கொண்டுவரும் நீர் அவளுக்குள் போய் கொடிய வேதனையை உண்டாக்கும்; அவள் வயிறு வீங்கி, தொடைகள் அழுகிவிடும்; அவள் தன் மக்களிடையே ஒரு சாபமாக இருப்பாள். 28 ஆனால், அப்பெண் கறைபடாது தூயவளாயிருந்தால் அவளுக்கு ஒரு கேடும் வராது; அவள் குழந்தையைக் கருத்தரிப்பாள். 29 வெஞ்சினத்தின் வேளைகளில் இதுவே சட்டம்; அதாவது ஒரு மனைவி தன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறிதவறித் தன்னையே கறைபடுத்தியிருந்தால், 30 அல்லது வெஞ்சினத்தின் ஆவி ஒரு மனிதன் மேல் வந்து அவன் தன் மனைவி மேல் வெகுண்டெழுந்தால் அவன் அவளை ஆண்டவர் திருமுன் நிறுத்துவான்; குரு இச்சட்டத்தையெல்லாம் அவளிடம் செயல்படுத்துவார். 31 ஆடவன் தன் குற்றப்பழி அற்றவனாவான்; பெண்ணோ தன் குற்றப்பழியைச் சுமப்பாள். 5:5-8 லேவி 6:1-7.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-5
122
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 6 – திருவிவிலியம்
நாசீர் விதிகள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர்* பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தால், 3 திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்; திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்சைப்பழச் சாற்றைக் குடிக்கக் கூடாது. திராட்சைப் பழங்களையோ, வற்றலையோ உண்ணவும் கூடாது. 4 பொருத்தனைக் காலம் முழுதும் திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும், விதைகள், தோல்களைக் கூட, அவன் உண்ணக்கூடாது. 5 அர்ப்பணம் செய்துகொண்ட பொருத்தனைக் காலம் முழுதும் சவரக்கத்தி அவன் தலையில் படக்கூடாது; ஆண்டவருக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முடியுமட்டும் அவன் தூய்மையுடன் இருப்பான்; அவன் தன் தலை முடியை நீளமாக வளர விடுவான். 6 ஆண்டவருக்கென்று தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முழுதும் பிணத்தருகே அவன் போகக்கூடாது. 7 தன் தந்தை, தாய், சகோதரன், சகோதரி இறந்தால் கூட அவர்களுக்காகத் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது; ஏனெனில், கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதின் அடையாளம் அவன். தலையில் இருக்கிறது. 8 அர்ப்பண காலம் முழுதும் அவன் ஆண்டவருக்குத் தூய்மையாக இருப்பான். 9 எவரேனும் திடீரென அவன் அருகே இறந்து, புனிதப்படுத்தப்பட்ட அவன் தலையைத் தீட்டுப்படுத்தினால் தூய்மைப்படுத்தும் நாளில் அவன் தன் தலையைச் சிரைத்துக் கொள்ள வேண்டும். ஏழாம் நாளில் அவன் அதைச் சிரைத்துக்கொள்வான்; 10 எட்டாம் நாளில் அவன் இரு காட்டுப் புறாக்களையோ, இரு மாடப்புறாக்குஞ்சுகளையோ சந்திப்புக் கூடாரநுழை வாயிலுக்கு குருவிடம் கொண்டு வர வேண்டும். 11 குரு ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் ஒப்புக் கொடுப்பார்; பிணத்தை முன்னிட்டு அவன் பாவம்செய்துள்ளதால், அவனுக்காகக் கறைநீக்கம் செய்வார்; அதே நாளில் அவன் தலையையும் புனிதப்படுத்துவார். 12 அவன் பொருத்தனை செய்த காலத்திற்காக மீண்டும் தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பான்; குற்றநீக்கப்பலிக்காக ஓராண்டு ஆட்டுக்கிடாய் ஒன்றைக் கொண்டு வருவான்; அவன் அர்ப்பண நிலை தீட்டுப்பட்டதால் கடந்துவிட்ட காலம் கணக்கில் வராது. 13 அர்ப்பண காலம் நிறைவுறும் போது நாசீருக்கான சட்டம் இதுவே; சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அவன் கொண்டு வரப்படுவான்; 14 ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப் பொருள்; பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, பாவ நீக்கப் பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு ஆட்டுக்குட்டி ஒன்று, நல்லுறவுப் பலிக்காகப் பழுதற்ற ஆட்டுக்கிடாய் ஒன்று. 15 புளிப்பற்ற அப்பம் ஒரு கூடை, எண்ணெயில் மெல்லிய மாவைப் பிசைந்து செய்த நெய்யப்பங்கள், எண்ணெய் தடவிப் புளிப்பற்ற மாவால் செய்த அடைகள், அவற்றின் உணவுப் படையல், நீர்மப்படையல் ஆகியவை. குருத்துவ ஆசிமொழிகள் 16 குரு அவற்றை ஆண்டவர்முன் கொண்டு வந்து அவனுக்காகப் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நிறைவேற்றுவார். 17 கூடையிலுள்ள புளிப்பற்ற அப்பத்தோடு ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்கு நல்லுறவுப் பலியாக ஒப்புக்கொடுப்பார்; மேலும், அவனுக்காக குரு உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் படைப்பார்; 18 நாசீர் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் மழித்து, புனிதப்படுத்தப்பட்ட தன் தலைமுடியை எடுத்து நல்லுறவுப் பலியின் அடியில் இருக்கும் நெருப்பில் போடுவான். 19 அவன் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையை மழித்த பின்னர் குரு வெந்துகொண்டிருக்கும் ஆட்டுக்கிடாயின் முன் சந்தை எடுத்து, கூடையிலிருந்து நெய்யப்பம் ஒன்றையும் புளிப்பற்ற அடை ஒன்றையும் எடுத்து நாசீர் கைகளில் வைப்பார். 20 அவற்றை ஆரத்திப் படையலாகக் குரு ஆண்டவர் திருமுன் காட்டுவார். ஆரத்தியாகக் காட்டப்பட்ட மார்புப்பகுதியும் உயர்த்திப் படைக்கப்பட்ட தொடையும் புனிதப் பங்காகக் குருவைச் சேரும்; அதன் பின்னரே, நாசீர் திராட்சை இரசம் குடிக்கலாம். 21 நாசீர்ப் பொருத்தனை செய்பவனுக்கான சட்டம் இதுவே; ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப்படையல், அவனது நாசீர்ப் பொருத்தனைக்கேற்ப இருக்க வேண்டும்; இது மற்றப்படி அவன் தர இயன்றதற்கு நீங்கலானது; அவனது பொருத்தனைக்கேற்பத் தன் நாசீர் அர்ப்பணத்துக்குரிய சட்டத்தின்படி அவன் செய்ய வேண்டும். 22 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 23 நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: 24 “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! 25 ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! 26 ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” 27 இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன். 6:3 லூக் 1:15. 6:13-21 திப 21:23-34. 6:2 எபிரேயத்தில், ‘பிரித்தெடுக்கப்பட்டவர்’ என்பது பொருள்.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-6
123
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 7 – திருவிவிலியம்
தலைவர்களின் படையல்கள் 1 மோசே திருஉறைவிடத்தை எழுப்பிமுடித்து, அதனை அதன் அனைத்துப் பொருள்களோடும் திருப்பொழிவு செய்து அர்ப்பணித்து. பீடத்தையும், அதன் துணைக்கலன்களோடு திருப்பொழிவு செய்து அர்ப்பணித்த நாளில், 2 கணக்கிடப்பட்டோர்க்கு மேற்பார்வையாளராயிருந்த இஸ்ரயேல் தலைவர்கள், அவர்கள் மூதாதையர் வீட்டுத்தலைவர்கள், குலத் தலைவர்கள் ஆகியோர் காணிக்கைகள் கொணர்ந்தனர். 3 அவர்கள் ஆண்டவர் திருமுன் இரு தலைவர்களுக்கு ஒரு வண்டியும், ஒவ்வொருவருக்கும் ஒரு மாடுமாக ஆறுகூண்டு வண்டிகளையும், பன்னிரண்டு மாடுகளையும் திருஉறைவிடத்திற்குத் தங்கள் காணிக்கைகளாகக் கொண்டு வந்தனர். 4 பின் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 5 “சந்திப்புக் கூடாரப் பணியைச் செய்வதற்குப் பயன்படும்படி இவற்றைப் பெற்றுக்கொள்; ஒவ்வொருவரின் பணிக்கும் ஏற்ப இவற்றை லேவியரிடம் ஒப்படைப்பாய்”. 6 அவ்வாறே மோசே வண்டிகளையும் மாடுகளையும் பெற்று லேவியரிடம் ஒப்படைத்தார். 7 கேர்சோன் புதல்வருக்கு அவரவர் பணிக்கேற்ப இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கொடுத்தார். 8 அவர் மெராரிப் புதல்வருக்கு அவர்கள் பணிக்கேற்ப நான்கு வண்டிகளையும், எட்டு மாடுகளையும் கொடுத்தார்; இவர்கள் பணி குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமரின் மேற்பார்வையில் இருந்தது. 9 ஆனால், கோகாத்தின் புதல்வருக்கு அவர் ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனெனில், அவர்கள் தோளில் வைத்துச் சுமக்க வேண்டிய புனிதப் பொருள்களைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தனர். 10 மேலும், பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் அதன் அர்ப்பணத்துக்காகவும் தலைவர்கள் காணிக்கைகள் கொண்டு வந்து பலிபீடத்தின் முன்வைத்தனர். 11 ஆண்டவர் மோசேயிடம் “நாளுக்கு ஒருவராகத் தலைவர்கள் தங்கள் காணிக்கைகளைப் பலிபீட அர்ப்பணத்திற்காகக் கொண்டு வரட்டும்” என்றார். 12 முதல் நாளில் தம் காணிக்கையைக் கொண்டு வந்தவர் நகசோன், இவர் யூதா குலத்து அம்மினதாபின் மகன். 13 அவரது காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம்* நிறையையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம்** நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று; உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது; 14 நூற்றுப் பதினைந்து கிராம்* நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று – அது நிறையத் தூபம் இருந்தது; 15 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று – இவை எரிபலிக்குரியவை. 16 பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று. 17 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக்கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து – அம்மினதாபின் மகன் நகசோனின் காணிக்கை இதுவே. 18 இரண்டாம் நாளில் காணிக்கை கொண்டு வந்தவர் இசக்கார் தலைவரான சூவாரின் மகன் நெத்தனியேல். 19 அவர் கொண்டு வந்த காணிக்கை; தூயகச்செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது. 20 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று – அது நிறையத் தூபம் இருந்தது. 21 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரிபலிக்குரியவை. 22 பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று; 23 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக்கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து – சூவாரின் மகன் நெத்தனியேலின் காணிக்கை இதுவே. 24 மூன்றாம் நாள்; செபுலோன் மக்கள் தலைவரான கேலோனின் மகன் எலியாபு. 25 அவரது காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று- உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு இருந்தது. 26 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று – அது நிறையத் தூபம் இருந்தது. 27 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று. ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை -எரிபலிக்குரியவை. 28 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று; 29 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து – கேலோனின் மகன் எலியாபின் காணிக்கை இதுவே. 30 நான்காம் நாள்; ரூபன் மக்களின் தலைவர் எலிட்சூர்; இவர் செதேயூரின் மகன். 31 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று – உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது. 32 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று – அது நிறைய தூபம் இருந்தது. 33 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை. 34 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று, 35 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக் கிடாய்கள் ஐந்து – செதேயூரின் புதல்வன் எலிட்சூரின் காணிக்கை இதுவே. 36 ஐந்தாம் நாள்; சிமியோன் மக்களின் தலைவர் செலுமியேல்; இவர் கரிசத்தாயின் மகன். 37 அவர் காணிக்கை; தூயகச்செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது. 38 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று – அது நிறையத் தூபம் இருந்தது. 39 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரிபலிக்குரியவை. 40 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று; 41 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து – ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து – சுரிசத்தாயின் புதல்வன் செலுமியேலின் காணிக்கை இதுவே. 42 ஆறாம் நாள்; காத்து மக்களின் தலைவர் எல்யாசாபு; இவர் தெகுவேலின் மகன். 43 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரைக் கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று – உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது. 44 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது. 45 இளங்காளை ஒன்று; ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரி பலிக்குரியவை. 46 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று; 47 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து – தெகுவேலின் புதல்வன் எல்யாசாபின் காணிக்கை இதுவே. 48 ஏழாம் நாள்; எப்ராயிம் மக்களின் தலைவர் எலிசாமா; இவர் அம்மிகூதின் மகன். 49 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று – உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது. 50 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது. 51 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று – இவை எரிபலிக்குரியவை. 52 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று, 53 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக் கிடாய்கள் ஐந்து -அம்மிகூதின் புதல்வன் எலிசாமாவின் காணிக்கை இதுவே. 54 எட்டாம் நாள்: மனாசே மக்களின் தலைவர் கமாலியேல், இவர் பெதாசூரின் மகன். 55 அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித் தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று – உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது. 56 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறைய தூபம் இருந்தது. 57 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை. 58 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று, 59 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து – பெதாசூரின் புதல்வன் காமாலியேலின் காணிக்கை இதுவே. 60 ஒன்பதாம் நாள்; பென்யமின் மக்களின் தலைவர் அபிதான்; இவர்கிதயோனியின் மகன். 61 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது. 62 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறைய தூபம் இருந்தது. 63 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரிபலிக்குரியவை. 64 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று, 65 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து – கிதயோனியின் புதல்வன் அபிதானியின் காணிக்கை இதுவே. 66 பத்தாம் நாள்; தாண் மக்களின் தலைவர் அகியேசர், இவர் அம்மிசத்தாயின் மகன். 67 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது. 68 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது. 69 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை. 70 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று, 71 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து – அம்மிசத்தாயின் புதல்வன் அகியேசரின் காணிக்கை இதுவே. 72 பதினோராம் நாள்; ஆசேர் மக்களின் தலைவர் பகியேல், இவர் ஒக்ரானின் மகன். 73 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று -உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது. 74 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது. 75 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரிபலிக்குரியவை. 76 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று. 77 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து – ஒக்ரானின் மகன் பகியேலின் காணிக்கை இதுவே. 78 பன்னிரண்டாம் நாள்; நப்தலி மக்களின் தலைவர் அகிரா, இவர் ஏனானின் மகன்; 79 அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று – உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது. 80 நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது. 81 இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக் கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை. 82 பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று, 83 நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து – ஏனானின் புதல்வன் அகிராவின் காணிக்கை இதுவே. 84 பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் இஸ்ரயேல் தலைவர்களிடமிருந்து வந்த அதற்கான அர்ப்பணக்காணிக்கை இதுவே; வெள்ளித்தட்டுகள் பன்னிரண்டு, வெள்ளிக் கலங்கள் பன்னிரண்டு, பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு; 85 தூயகச் செக்கேலின்படி வெள்ளித்தட்டின் நிறை ஒன்றரை கிலோ கிராம், வெள்ளிக்கலத்தின் நிறை எண்ணூறு கிராம். ஆக, தூயகச் செக்கேலின்படி அனைத்து வெள்ளிப்பாத்திரங்களின் நிறை இருபத்தியேழு கிலோ அறுநூறு கிராம். 86 தூபம் நிறைந்திருந்த பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு; தூயகச் செக்கேலின்படி ஒவ்வொன்றின் நிறை நூற்றுப் பதினைந்து கிராம். ஆக, பொன் பாத்திரங்கள் அனைத்தின் நிறை ஒரு கிலோ முந்நூற்றி எண்பது கிராம். 87 எரிபலிக்கான மொத்த கால்நடைகள்; காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் பன்னிரண்டு; இவற்றின் உணவுப் படையலும், இவற்றுடன் சேரும்; பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு; 88 நல்லுறவுப் பலி செலுத்துவதற்கான மொத்தக் கால்நடைகள்; காளைகள் இருபத்துநான்கு, ஆட்டுக்கிடாய்கள் அறுபது, வெள்ளாட்டுக் கிடாய்கள் அறுபது, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் அறுபது, பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்டபின் அதன் அர்ப்பண காணிக்கை இதுவே. 89 ஆண்டவருடன் பேசும்படி மோசே சந்திப்புக் கூடாரத்தினுள் சென்றார். இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையிலிருந்து பேசிய குரலை அவர் கேட்டார்; ஆண்டவர் அவருடன் பேசினார். 7:13 * ‘நூற்று முப்பது செக்கேல்’ என்பது எபிரேய பாடம். 7:13 ** ‘எழுபது செக்கேல்’ என்பது எபிரேய பாடம். 7:14 * ‘பத்து செக்கேல்’ என்பது எபிரேய பாடம்.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-7
124
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 8 – திருவிவிலியம்
விளக்குகள் வைத்தல் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “ஆரோனிடம் சொல்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு அகல்களும் விளக்குத் தண்டுக்கு முன்பக்கம் ஒளிதர வேண்டும்”. 3 ஆரோன் அப்படியே செய்தார்; ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி விளக்குத்தண்டுக்கு முன்பக்கம் ஒளி தரும்படி அதன் அகல்களை ஏற்றினார். 4 விளக்குத் தண்டின் வேலைப்பாடு; அது பொன் அடிப்பு வேலையால் செய்யப்பட்டிருந்தது; அதன் பாதம் முதல் மலர்கள் வரை அடிப்பு வேலையால் செய்யப்பட்டது; ஆண்டவர் மோசேக்குக் காட்டிய வடிவமைப்பின்படியே அவர் விளக்குத் தண்டைச் செய்தார். லேவியரின் தூய்மையாக்கமும் அர்ப்பணமும் 5 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 6 “இஸ்ரயேல்மக்களிடமிருந்து லேவியரைப் பிரித்தெடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்து; 7 அவர்களைத் தூய்மைப்படுத்த நீ செய்யவேண்டியது; பாவம் போக்கும் பலியின் நீரை அவர்கள் மேல் தெளிப்பாய்; அவர்கள் உடல் முழுவதையும் சிரைத்து, தங்கள் துணிகளைத் துவைத்துத் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளட்டும். 8 அதன் பின் அவர்கள் இளங்காளை ஒன்றையும் எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவான அதன் உணவுப்படையலையும் எடுத்துக் கொள்ளட்டும்; நீயோ பாவம் போக்கும் பலிக்கென வேறோர் இளங்காளையை எடுத்துக்கொள். 9 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்று திரட்டு; சந்திப்புக் கூடாரத்தின் முன் லேவியரை அழைத்து வந்து நிறுத்து. 10 நீ லேவியரை ஆண்டவர் திருமுன் நிறுத்தும்போது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கைகளை லேவியர் மேல் வைப்பார்கள்; 11 பின் ஆரோன் லேவியரை இஸ்ரயேல் மக்களிடமிருந்து வரும் ஆரத்திபலியாக ஆண்டவர் திருமுன் அர்ப்பணிப்பான்; அதனால் ஆண்டவர் பணியைச் செய்ய மக்கள் சார்பில் இவர்கள் இருப்பார்கள். 12 அதன்பின், லேவியர் தங்கள் கைகளைக் காளைகளின் தலைகள்மேல் வைப்பர்; லேவியருக்குக் கறைநீக்கம் செய்யும்படி நீ ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை ஆண்டவருக்கு எரி பலியாகவும் செலுத்துவாய். 13 மேலும், நீ லேவியரை ஆரோன், அவன் புதல்வர் முன் நிற்கச் செய்து, ஆரத்திபலியாக அவர்களை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய். 14 இவ்வாறு, இஸ்ரயேல் மக்களிடமிருந்து லேவியரைப் பிரித்தெடுக்க வேண்டும். லேவியர் எனக்கே உரியவர். 15 நீ அவர்களைத் தூய்மைப்படுத்தி, ஆரத்திபலியாக அர்ப்பணித்த சந்திப்புக் கூடாரத்தில் பணி செய்ய அவர்கள் உள்ளே போவார்கள். 16 இஸ்ரயேல் மக்களிடமிருந்து அவர்கள் முற்றிலும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரயேல் மக்களில் கருப்பையைத் திறந்து பிறக்கும் தலைப்பேறு அனைத்திற்கும் ஈடாக அவர்களை நான் எனக்கென உரிமையாக்கிக் கொண்டேன். 17 ஏனெனில், இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் தலைப்பேறனைத்தும் என்னுடையவை; எகிப்து நாட்டில் நான் தலைப்பேறனைத்தையும் சாகடித்த நாளில் அவர்களை நான் எனக்கென அர்ப்பணித்துக் கொண்டேன். 18 இஸ்ரயேல் மக்களில் தலைப்பேறு அனைத்துக்கும் ஈடாக லேவியரை நான் உரிமையாக்கிக் கொண்டேன். 19 இஸ்ரயேல் மக்களுள் லேவியரை நான் ஆரோனிடமும், அவன் புதல்வரிடமும் கொடையாக அளித்துவிட்டேன்; இஸ்ரயேல் மக்களுக்காக அவர்கள் சந்திப்புக் கூடாரத்தில் பணி செய்வார்கள்; இஸ்ரயேல் மக்களுக்காகக் கறை நீக்கப் பலியையும் செலுத்துவார்கள்; இதனால், இஸ்ரயேல் மக்கள் தூயகத்தை அடுத்து வரவேண்டியிருந்தாலும், இஸ்ரயேல் மக்களுக்குத் தீங்கு ஏதும் நேரிடாது.” 20 மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் லேவியருக்கு இவ்வாறே செய்தனர்; லேவியரைப் பற்றி ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் இஸ்ரயேல் மக்கள் அவர்களுக்குச் செய்தனர். 21 லேவியர் பாவத்திலிருந்து தங்களை தூய்மைப்படுத்திக் கொண்டார்; தங்கள் துணிகளைத் துவைத்தனர். ஆரோன் அவர்களை ஆரத்திப்பலியாக ஆண்டவர் திருமுன் அர்ப்பணித்தார்; அவர்களைத் தூய்மைப்படுத்தும்படி ஆரோன் அவர்களுக்காகக் கறை நீக்கப் பலியாகச் செலுத்தினார். 22 அதன்பின், ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் முன்பாகச் சந்திப்புக் கூடாரத்தில் தங்களுக்குரிய பணி செய்யும்படி லேவியர் உள்ளே சென்றனர். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் லேவியருக்குச் செய்தனர். 23 மேலும், ஆண்டவர் மோசேயிடம், 24 லேவியர் பற்றிக் கூறியது: “இருபத்தைந்து வயதும், அதற்கு மேலுமானோர் சந்திப்புக் கூடார வேலையின் பணிகளைச் செய்யச் செல்வர். 25 ஐம்பது வயதுக்கும் மேலானோர் வேலையின் பணிகளிலிருந்து விலகிக் கொள்வார்; அதன் பின் பணிகள் ஏதும் கிடையாது. 26 ஆனால், சந்திப்புக் கூடாரத்தில் தங்கள் சகோதரரின் பணிக்குத் துணை நிற்பர்; தாங்களாக ஏதும் செய்யலாகாது; லேவியர் பணிகளை நீ இவ்வாறு ஒழுங்குபடுத்துவாய்”. 8:1-4 விப 25:31-40; 37:17-24. 8:17 விப 13:2.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-8
125
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 9 – திருவிவிலியம்
இரண்டாம் பாஸ்கா 1 எகிப்து நாட்டிலிருந்து அவர்கள் வெளியேறி வந்த இரண்டாம் ஆண்டு முதல் மாதம் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் மோசேயோடு பேசினார். அவர் கூறியதாவது: 2 இஸ்ரயேல் மக்கள் குறிக்கப்பட்ட காலத்தில் பாஸ்காவைக் கொண்டாடட்டும். 3 இம்மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப்பொழுதில் குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் அதைக் கொண்டாடுவீர்கள்; அதன் எல்லா விதிமுறைகளின்படியும் எல்லா ஒழுங்குகளின்படியும் நீங்கள் அதைக் கொண்டாட வேண்டும். 4 அவ்வாறே, பாஸ்காவைக் கொண்டாடும்படி மோசே இஸ்ரயேல் மக்களிடம் கூறினார். 5 அவர்கள் முதல் மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப் பொழுதில் சீனாய்ப் பாலைநிலத்தில் பாஸ்காவைக் கொண்டாடினார்கள். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் இஸ்ரயேல் மக்கள் செய்தனர். 6 ஒருவனின் பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டதை முன்னிட்டுச் சிலர் அந்நாளில் பாஸ்காவைக் கொண்டாட முடியவில்லை; அவர்கள் அந்நாளில் மோசேயிடமும் ஆரோனிடமும் வந்தனர். 7 அந்த ஆள்கள் மோசேயிடம், “ஒருவனின் பிணத்தைத் தொட்டதால் நாங்கள் தீட்டுப்பட்டிருக்கிறோம்; ஆண்டவருக்கான காணிக்கையைக் குறித்த காலத்தில் செலுத்த இஸ்ரயேல் மக்களிடையே நாங்கள் மட்டும் ஏன் விலக்கப்படவேண்டும்?” என்று கேட்டனர். 8 அவர் அவர்களிடம், “உங்களைப் பற்றி ஆண்டவர் இடும்கட்டளை என்னவென்று நான் கேட்டறியும்வரை பொறுத்திருங்கள்” என்றார். 9 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 10 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: உங்களிலும் உங்களுக்குப் பின் வரும் தலைமுறைகளிலும் எவனாவது ஒரு பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டிருந்தால் அல்லது நெடும் பயணத்தில் ஈடுபட்டிருந்தால் அவனும் ஆண்டவருக்குப் பாஸ்காவைக் கொண்டாடவேண்டும். 11 இரண்டாம் மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப் பொழுதிலேயே அவர்கள் கொண்டாட வேண்டும்; அவர்கள் புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்பான கீரைகளோடும் அதை உண்பார்கள். 12 அவர்கள் காலை வரை எதையும் மீதி வைக்கவோ அதன் எலும்பு எதையும் முறிக்கவோ கூடாது; எல்லா விதிமுறைகளின்படியும் அவர்கள் பாஸ்காவைக் கொண்டாடுவார்கள். 13 ஆனால், ஒருவன் தீட்டுப்படாதிருந்தும் பயணத்தில் ஈடுபடாதிருந்தும் பாஸ்காவைக் கொண்டாடாது ஒதுங்கியிருந்தால், அவன் தன் மக்களிலிருந்து விலக்கப்படுவான்; ஏனெனில், அவன் ஆண்டவருக்கு உரிய காணிக்கையைக் குறித்த காலத்தில் செலுத்தவில்லை; அந்த ஆள் தன் பாவப்பழியைச் சுமப்பான். 14 உங்களோடு தங்கியிருக்கும் வேற்றினத்தவன் ஒருவன், ஆண்டவருக்குப் பாஸ்காவைக் கொண்டாட விரும்பினால், பாஸ்காவின் விதிமுறைகள், ஒழுங்குகளுக்கேற்ப அவன் செய்யவேண்டும்; வேற்று நாட்டவனுக்கும், சொந்த நாட்டவனுக்கும் இருக்க வேண்டியது ஒரே விதிமுறையே. நெருப்பு மேகம் (விப 40:34-38) 15 திரு உறைவிடம் எழுப்பப்பட்ட நாளில் மேகம் “திரு உறைவிடத்தை, அதாவது உடன்படிக்கை திருஉறைவிடத்தை மூடியது; அது திரு உறைவிடத்தின் மேல் மாலைமுதல் காலைவரை நெருப்பு மயமாய் இருந்தது. 16 இது தொடர்ந்து நிகழ்ந்தது; மேகம் மூடியது; இரவில் நெருப்பு மயமாய் இருந்தது. 17 கூடாரத்தின் மேலேயிருந்து மேகம் எழும்பிச் சென்றபோது இஸ்ரயேல் மக்கள் புறப்படுவர்; மேகம் தங்கி இருந்த இடத்தில் இஸ்ரயேல் மக்கள் பாளையம் இறங்குவர். 18 ஆண்டவர் கட்டளைப்படியே இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டனர்; ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் பாளையம் இறங்கினர்; மேகம் திருஉறைவிடத்தின்மேல் தங்கி இருந்த நாளெல்லாம் அவர்களும் பாளையத்தில் தங்கியிருந்தனர். 19 மேகம் திருஉறைவிடத்தின்மேல் பல நாள்கள் தொடர்ந்திருந்தபோது கூட இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் வார்த்தையைக் கடைப்பிடித்தனர்; அவர்கள் புறப்படவில்லை. 20 சில வேளைகளில் மேகம் திருஉறைவிடத்தின்மேல் சில நாள்களே இருந்தது; ஆண்டவர் கட்டளைப்படி அவர்கள் பாளையத்தில் தங்கியிருந்தனர்; பின் ஆண்டவர் கட்டளைப்படி அவர்கள் புறப்பட்டனர். 21 சில நேரங்களில் மேகம் மாலைமுதல் காலைவரை தங்கியிருந்தது; காலையில் மேகம் எழும்பிச் சென்றதும் அவர்கள் புறப்பட்டனர். 22 இரண்டு நாள்கள் மட்டுமோ, ஒரு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட நாள்களோ மேகம் திருஉறைவிடத்தின்மேல் தொடர்ந்து தங்கியிருந்தால் இஸ்ரயேல் மக்களும் பாளையத்திலேயே தங்கியிருந்தனர்; அவர்கள் புறப்படவில்லை. 23 ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் பாளையமிறங்கி, ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டபடி அவர்கள் ஆண்டவர் வார்த்தையைக் கடைப்பிடித்தனர். 9:1-5 விப 12:1-13. 9:12 விப 12:46; யோவா 19:36.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-9
126
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 10 – திருவிவிலியம்
வெள்ளி எக்காளங்கள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்துகொள்; அடிப்பு வேலையாக அவற்றைச் செய்ய வேண்டும். மக்கள் கூட்டமைப்பை ஒன்று கூட்டவும், பாளையத்தைப் பெயர்க்கவும் நீ அவற்றைப் பயன்படுத்துவாய். 3 அவை இரண்டும் ஊதப்படும்போது மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சந்திப்புக்கூடார வாயிலில் உன்முன்னே ஒன்றுகூட வேண்டும். 4 ஆனால், ஒன்றை மட்டும் ஊதினால், இஸ்ரயேலின் ஆயிரத்தவர் தலைவர்களாகிய முதல்வர்கள் உன்னிடத்தில் கூடிவருவார்கள். 5 நீ பெருந்தொனியாய் ஊதுகையில், கீழ்ப்புறப் பாளையங்கள் புறப்படும். 6 அத்துடன் இரண்டாம் முறை நீ பெருந்தொனியாய் ஊதுகையில் தென்புறப் பாளையங்கள் புறப்படும்; அவர்கள் புறப்படும் போதெல்லாம் பெருந்தொனியாய் ஊத வேண்டும். 7 சபையை ஒன்றுகூட்ட நீ ஊதும்போது பெருந்தொனி எழுப்பக்கூடாது. 8 ஆரோனின் புதல்வரான குருக்கள் எக்காளங்களை ஊதவேண்டும். எக்காளங்கள் உங்கள் தலைமுறைதோறும் நிலையான நியமமாக இருக்கும். 9 உங்கள் நாட்டில் உங்களை ஒடுக்குகிற பகைவருக்கெதிராகப் போருக்குச் செல்கையில் எக்காளங்களால் பெருந்தொனி எழுப்புங்கள்; அப்போது கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நீங்கள் நினைவுகூரப்பட்டு, பகைவரிடமிருந்து விடுவிக்கப்படுவீர்கள். 10 மகிழ்ச்சியின் நாள், குறிக்கப்பட்ட திருநாள்கள், மாதப் பிறப்புகள், ஆகியவற்றில் நீங்கள் எரிபலியையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தும் போது எக்காளங்களை ஊதுவீர்கள். அவை கடவுள் திருமுன் உங்களுக்கு நினைவூட்டுதலாகப் பயன்படும். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர். இஸ்ரயேலரின் புறப்பாடு 11 இரண்டாம் ஆண்டு இரண்டாம் மாதம் இருபதாம் நாள் உடன்படிக்கைத் திரு உறைவிடத்தின் மேலிருந்து மேகம் எழும்பியது. 12 இஸ்ரயேல் மக்கள் சீனாய்ப் பாலை நிலத்திலிருந்து பகுதி பகுதியாகக் கடந்து சென்றனர். பாரான் பாலை நிலத்தில் மேகம் தங்கிற்று. 13 மோசே வழிவந்த கடவுளின் கட்டளைப்படி இப்பொழுது முதன்முறையாக அவர்கள் புறப்பட்டனர். 14 யூதா மக்களது பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்தவரோடு முதலில் புறப்பட்டது; அவர்கள் படைத்தலைவன் அம்மினதாபின் மகன் நகசோன்; 15 இசக்கார் மக்கள் குலத்தின் படைத்தலைவன் சூவாரின் மகன் நெத்தனியேல்; 16 செபுலோன் மக்கள் குலத்தின் படைத்தலைவன் கேலோனின் மகன் எலியாபு; 17 மேலும், திருவுறைவிடம் இறக்கி வைக்கப்பட்டதும் கேர்சோனின் புதல்வரும், மெராரியின் புதல்வரும் அதைச் சுமந்து கொண்டு புறப்பட்டனர். 18 அடுத்து, ரூபன் பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்தவரோடு புறப்பட்டது; அவர்கள் படைத்தலைவன் செதேர் மகன் எலிட்சூர். 19 சிமியோன் மக்கள் குலத்தின் படைத்தலைவன் சுரிசத்தாயின் மகன் செலுமியேல்; 20 காத்து மக்கள் குலத்தின் படைத்தலைவன் தெகுவேலின் மகன் எல்யாசாபு. 21 பின்னர், கோகாத்தியர் தூயபொருள்களைச் சுமந்துகொண்டு புறப்பட்டனர். அவர்கள் போய்ச் சேருமுன் திருவுறைவிடம் எழுப்பப்பட்டிருந்தது. 22 அடுத்து, எப்ராயிம் மக்களது பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்திவரோடு புறப்பட்டது; அவர்களின் படைத்தலைவன் அம்மிகூதின் மகன் எலிசாமா; 23 மனாசே மக்கள் குலத்தின் படைத்தலைவன் பெதாசூரின் மகன் கமாலியேல்; 24 பென்யமீன் மக்கள் குலத்தின் படைத்தலைவன் கிதயோனியின் மகன் அபீதான்; 25 அனைத்துப் பாளையங்களுக்கும் பின்காவலாகத் தாண் மக்களது பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்தவரோடு புறப்பட்டது. அவர்களின் படைத்தலைவன் அம்மிசத்தாயின் மகன் அகியேசர்; 26 ஆசேர் மக்கள் குலத்தின் படைத்தலைவன் ஒக்ரானின் மகன் பகியேல்; 27 நப்தலி மக்கள் குலத்தின் படைத்தலைவன் ஏனானின் மகன் அகிரா; 28 இஸ்ரயேல் மக்கள் புறப்படுகையில் அவர்கள் படைகளின் அணி வரிசை இதுவே. 29 பின்னர், மோசே மீதியானியனும் தன் மாமனுமாகிய இரகுவேலின் மகன் கோபாபிடம் கூறியது: ‘உங்களுக்குத் தருவேன்’ என்று ஆண்டவர் கூறிய இடத்திற்கு நாங்கள் போய்க் கொண்டு இருக்கிறோம்; நீ எங்களோடு வா, நாங்கள் உனக்கு நல்லது செய்வோம்; ஆண்டவர் இஸ்ரயேலுக்கு நல்லதையே வாக்களித்துள்ளார். 30 அவனோ அவரிடம், “நான் வரமாட்டேன், நான் என் சொந்த நாட்டுக்கு என் இனத்தவரிடம் போவேன்” என்றான். 31 அதற்கு அவர்; “எங்களை விட்டுப் போகாதிருக்கும்படி உன்னை வேண்டிக்கொள்கிறேன்; பாலை நிலத்தில் எப்படிப் பாளையமிறங்க வேண்டும் என்று உனக்குத் தெரியும்; எங்களுக்கு நீ கண்களாயிருப்பாய்; 32 நீ எங்களோடு வந்தால், ஆண்டவர் எங்களுக்கு என்னென்ன நன்மை செய்வாரோ, அதை உனக்கும் நாங்கள் செய்வோம்” என்றார். 33 ஆண்டவர் மலையைவிட்டு இஸ்ரயேலர் மூன்று நாள் பயணம் செய்தனர்; அவர்கள் அடுத்துத் தங்குமிடத்தைக் காட்டும்படி ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை மூன்று நாள் பயணத்திலும் அவர்கள்முன் சென்றது. 34 அவர்கள் பாளையத்திலிருந்து புறப்பட்டபோதெல்லாம் ஆண்டவரின் மேகம் பகலில் அவர்கள்மேல் இருந்தது. 35 பேழை புறப்படும்போதெல்லாம் மோசே, “ஆண்டவரே எழுந்தருளும். உம் பகைவர் சிதறுண்டு போகட்டும்; உம்மை வெறுப்போர் உம் முன்னின்று ஓடியொளியட்டும்” என்று கூறுவார். 36 அது தங்கும்போதோ அவர், “ஆண்டவரே! பல்லாயிரவரான இஸ்ரயேலிடம் திரும்பும்” என்பார். 10:35 திபா 68:1.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-10
127
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 11 – திருவிவிலியம்
தபேரா பலி 1 பின்னர், ஆண்டவரின் செவிகளில் படுமாறு தங்கள் கடினப்பாடுகளைப் பற்றி மக்கள் முறையிட்டனர்; ஆண்டவர் அதைக் கேட்டபோது அவருக்குச் சினம் மூண்டது; ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே பற்றி எரிந்தது; பாளையத்தின் கடைக்கோடிப் பகுதிகள் சிலவற்றை அது எரித்துவிட்டது. 2 அப்போது மக்கள் மோசேயிடம் அழுதனர்; மோசே ஆண்டவரிடம் மன்றாடவே நெருப்பு அணைந்தது. 3 எனவே, அந்த இடத்துக்குத் தபேரா* என்று பெயராயிற்று; ஏனெனில், ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே எரிந்தது. மோசே எழுபது தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல் 4 மேலும், அவர்களிடையே இருந்த பல இன மக்கள் உணவில் பெரு விருப்புக் கொண்டனர்; இஸ்ரயேல் மக்களும் மீண்டும் அழுது கூறியது: “நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? 5 நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது. 6 ஆனால், இப்பொழுதோ நம்வலிமை குன்றிப் போயிற்று; மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே!” 7 மன்னா கொத்துமல்லி விதைபோன்றும் அதன் தோற்றம் முத்துப்போன்றும் இருந்தது. 8 மக்கள் வெளியில் சென்று அதைச் சேகரித்தனர்; அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது உரலில் போட்டு இடித்தனர்; பானைகளில் அதை வேக வைத்து அதில் அப்பங்கள் செய்தனர்; அதன் சுவை எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது. 9 இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது. 10 எல்லா வீடுகளிலுமிருந்த மக்களும் தம்தம் கூடார வாயிலில் இருந்து அழும் குரலை மோசே கேட்டார்; ஆண்டவரின் சினம் கொழுந்துவிட்டெரிந்தது; மோசேக்கும் அது பிடிக்கவில்லை. 11 மோசே ஆண்டவரிடம் கூறியது: “உம் அடியானுக்கு ஏன் இந்தக்கேடு? நீர் எனக்குக் கருணை கட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? 12 இம்மக்களையெல்லாம் நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்? ‘பாலுண்ணும் குழந்தையை ஏந்திச் செல்பவள் போன்று இவர்களை மார்போடு ஏந்தி, அவர்கள் மூதாதையருக்கு நான் வாக்களித்திருந்த நாட்டுக்குக் கொண்டு செல்’ என்று நீர் சொல்வானேன்? 13 இம்மக்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய இறைச்சிக்கு நான் எங்குபோவேன்? அவர்கள் எனக்கு முன் அழுது, ‘உண்ண எங்களுக்கு இறைச்சி தாரும்’ என்றும் கேட்கிறார்களே! 14 நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது; இது எனக்கு மிகப்பெரும் பளு. 15 இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்; உம் பார்வையில் எனக்குத் தயை கிடைத்தால் இந்தக் கொடுமையை நான் காணாதிருக்கட்டும்.” 16 ஆண்டவர் மோசேயிடம் சொன்னது; இஸ்ரயேல் மூப்பரில் எழுபதுபேரை என்னிடம் கூட்டிவா; அவர்கள் மக்களுள் உனக்குத் தெரிந்தவர்களாகவும், பெரியோர்களாகவும், அதிகாரிகளாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்; அவர்களைச் சந்திப்புக் கூடாரத்துக்கு அழைத்து வா; அவர்கள் அங்கே உன்னோடு நிற்கட்டும். 17 நான் இறங்கி வந்து அங்கே உன்னோடு பேசுவேன்; உன்னிலிருக்கும் ஆவியில் கொஞ்சம் எடுத்து நான் அவர்களுக்கு அளிப்பேன்; நீ மட்டும் சுமக்காதபடி மக்களின் பளுவை அவர்களும் உன்னோடு சேர்ந்து தாங்குவார்கள். 18 மக்களிடம் சொல்: நாளை உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்; நீங்கள் இறைச்சி உண்பீர்கள்; ஆண்டவரின் செவிகளில்பட, ‘நமக்கு உண்ணஇறைச்சி யார் தருவார்? எகிப்தில் எங்களுக்கு எவ்வளவோ நன்றாக இருந்தது!’ என்று அழுதிருக்கிறீர்கள்; எனவே, ஆண்டவர் உங்களுக்கு இறைச்சி தருவார், நீங்கள் உண்பீர்கள். 19 ஒரு நாள், இரண்டு நாள், ஐந்து நாள், பத்து நாள், இருபது நாள் அல்ல, 20 அது உங்கள் மூக்கில் வெளி வந்து உங்களுக்குத் திகட்டிப்போகும்வரை ஒரு மாதம் முழுதும் உண்பீர்கள்; ஏனெனில், உங்களிடையே இருக்கும் ஆண்டவரை நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள்; ‘ஏன் நாங்கள் எகிப்திலிருந்து வந்தோம்?’ என்று கூறி அவர்முன் நீங்கள் அழுதிருக்கிறீர்கள். 21 ஆனால், மோசே கூறியது: என்னோடிருக்கும் காலாட்படையினர் எண்ணிக்கையோ ஆறு இலட்சம்; ‘அவர்கள் ஒரு மாதம் முழுதும் உண்ண அவர்களுக்கு இறைச்சி தருவேன்’ என்று நீர் சொல்லியிருக்கிறீர். 22 அவர்களுக்குப் போதுமானதாய் இருக்கும்படி ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும் அடிக்கப்படுமோ? அல்லது அவர்களுக்குப் போதுமான அளவில் கடலின் மீன்கள் எல்லாம் அவர்களுக்காகப் பிடித்துச் சேர்க்கப்படுமோ? 23 ஆண்டவர் மோசேயிடம், “ஆண்டவரின் கை குறுகிவிட்டதா? இப்போது எனது வார்த்தையின்படியே உங்களுக்கு நடக்குமா, இல்லையா என்று பார்” என்றார். 24 அவ்வாறே, மோசே வெளியே சென்று மக்களிடம் ஆண்டவரின் வார்த்தைகளைக் கூறினார்; மக்களின் மூப்பரில் எழுபது பேரை அழைத்துக் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தி வைத்தார். 25 பின்னர், ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து அவரோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. 26 இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கிவிட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள் மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால், அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை; ஆகவே, அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்குரைத்தனர்; 27 ஓர் இளைஞன் ஓடிவந்து மோசேயிடம், “எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்குரைக்கின்றனர்” என்று சொன்னான். 28 உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, “மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்” என்றார். 29 ஆனால், மோசே அவரிடம், “என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச்சிறப்பு!” என்றார். 30 பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர். ஆண்டவர் காடைகளை அனுப்புதல் 31 மேலும், ஆண்டவரிடமிருந்து ஒரு காற்றுப் புறப்பட்டுச் சென்றது; அது கடலிலிருந்து காடைகளை அடித்துக் கொண்டு வந்தது; பாளையத்தின் அருகில் ஒருபுறம் ஒருநாள் பயணத்தொலையிலும்* மறுபுறம் ஒருநாள் பயணத் தொலையிலும் பாளையத்தைச் சுற்றித் தரைக்கு மேல் இரண்டு முழ அளவு உயரத்தில் விழும்படி செய்தது. 32 மக்கள் எழுந்து அந்தப் பகல்முழுதும் இரவு முழுதும், மறுநாள் பகல் முழுதும் காடைகளைச் சேர்த்தார்கள். மிகக் குறைவாகச் சேர்த்தவன் பத்து கலம்* அளவு சேர்த்திருந்தான்; அதை அவர்கள் பாளையத்தைச் சுற்றி வெளியே முழுதும் தங்களுக்காகப் பரப்பி வைத்தார்கள். 33 அவர்கள் விழுங்கு முன் பற்களிடையில் இறைச்சி இருக்கையிலேயே ஆண்டவரின் சினம் மக்களுக்கு எதிராக மூண்டது; ஆண்டவர் மாபெரும் வாதையால் மக்களைச் சாகடித்தார். 34 ஆகவே, அந்த இடத்துக்கு கிப்ரோத்து அத்தாவா* என்ற பெயர் வழங்கியது. ஏனெனில், பெருவிருப்புக் கொண்டிருந்த மக்களை அவர்கள் அங்கேயே புதைத்து விட்டனர். 35 கிப்ரோத்து அத்தாவிலிருந்து மக்கள் பயணமாகி அசரோத்துக்கு வந்து, அங்கே தங்கினர். 11:7-8 விப 16:31. 11:9 விப 16:13-15. 11:3 எபிரேயத்தில், ‘எரிந்துகொண்டிருப்பது’ என்பது பொருள். 11:31 ‘யோம் தெரக்கு’ என்பது எபிரேய பாடம். 11:32 ‘பத்து கோமர்’ என்பது எபிரேய பாடம். 11:34 எபிரேயத்தில், ‘பெருவிரும்பிகளின் கல்லறைகள்’ என்பது பொருள்.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-11
128
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 12 – திருவிவிலியம்
மிரியாம் தண்டிக்கப்படல் 1 மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர். 2 அவர்கள், “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?” என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார். 3 பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார். 4 உடனே ஆண்டவர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், “நீங்கள் மூவரும் சந்திப்புக் கூடாரத்தருகே வாருங்கள்” என்றார். அவர்கள் மூவரும் வந்தனர். 5 மேகத்தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து கூடார வாயிலருகே நின்று ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்; அவர்கள் இருவரும் முன் வந்தனர். 6 அவர் கூறியது: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள் இறைவாக்கினன் ஒருவன் இருந்தால் ஆண்டவராகிய நான் ஒரு காட்சியின் வழியாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். கனவில் அவனோடு பேசுவேன். 7 ஆனால், என்அடியான் மோசேயோடு அப்படியல்ல; என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்; 8 நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல, நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான். பின்னர், ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை? 9 மேலும், ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது; அவர் அகன்று சென்றார். 10 கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனிபோன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது; ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாயிருக்கக் கண்டார். 11 ஆரோன் மோசேயிடம், “என் தலைவரே! அறிவீனமாக நாங்கள் செய்த பாவத்தை எங்கள்மேல் சுமத்த வேண்டாம்; 12 தாயின் வயிற்றிலிருந்து செத்துப் பிறந்த அரைகுறைக்குழந்தை போன்று இவள் ஆகாதிருக்கட்டும்” என்றார். 13 மோசே ஆண்டவரிடம் முறையிட்டு, “கடவுளே, இவளைக் குணமாக்க வேண்டுகிறேன்” என்றார். 14 ஆனால், ஆண்டவர் மோசேயிடம், “அவள் தந்தை அவள் முகத்தில் காறித் துப்பியிருந்தால், ஏழுநாள்கள் அவள் வெட்கப்பட வேண்டாமோ? பாளையத்துக்குப் புறம்பே அவள் ஏழுநாள்கள் விலக்கப்பட்டிருக்கட்டும்; அதன் பின், மீண்டும் அவள் உள்ளே கொண்டுவரப்படலாம்” என்றார். 15 அவ்வாறே மிரியாம் ஏழு நாள்கள் பாளையத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் மறுபடியும் உள்ளே கொண்டு வரப்படும்வரை மக்கள் தங்கள் பயணத்தைத் தொடரவில்லை. 16 அதன்பின் மக்கள் அசரோத்திலிருந்து புறப்பட்டுப் பாரான் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர். 12:7 எபி 3:2. 12:14 எண் 5:2-3.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-12
129
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 13 – திருவிவிலியம்
உளவாளிகள் (இச 1:19-33) 1 ஆண்டவர் மோசேயிடம், 2 “இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்” என்றார். 3 ஆண்டவர் கட்டளைப்படியே மோசே அவர்களைப் பாரான் பாலைநிலத்திலிருந்து அனுப்பினார்; அந்த ஆள்கள் அனைவரும் இஸ்ரயேல் மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள். 4 அவர்களின் பெயர்கள்; ரூபன் குலத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா; 5 சிமியோன் குலத்திலிருந்து ஓரியின் மகன் சாபாற்று; 6 யூதாக் குலத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேபு; 7 இசக்கார் குலத்திலிருந்து யோசேப்பின் மகன் இகால்; 8 எப்ராயிம் குலத்திலிருந்து நூனின் மகன் ஓசெயா; 9 பென்யமின் குலத்திலிருந்து இராபின் மகன் பல்தி; 10 செபுலோன் குலத்திலிருந்து சோதியின் மகன் காதியேல்; 11 யோசேப்பு குலத்திலுள்ள மனாசே குலத்திலிருந்து சூசியின் மகன் காத்தி; 12 தாண் குலத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மீயேல்; 13 ஆசேர் குலத்திலிருந்து மிக்கேலின் மகன் செதூர்; 14 நப்தலி குலத்திலிருந்து ஓப்சியின் மகன் நக்பி; 15 காத்து குலத்திலிருந்து மாக்கியின் மகன் கெயுவேல்; 16 நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பிய ஆள்களின் பெயர்கள் இவைகளே. மோசே நூனின் மகன் ஓசேயாவை ‘யோசுவா’* என்று பெயரிட்டு அழைத்தார். 17 கானான் நாட்டை உளவு பார்க்கும்படி மோசே அவர்களை அனுப்பினார்; அவர் அவர்களிடம், “நீங்கள் நெகேபுக்குச் சென்று அதற்கு அப்பால் மலைநாட்டுக்குப் போங்கள்; 18 அந்த நாடு எப்படியிருக்கிறது, அங்கு வாழும் மக்கள் வலிமையுள்ளவரா வலிமையுற்றவரா, அவர்கள் பலரா சிலரா, 19 அவர்கள் குடியிருக்கும் நாடு வளமையானதா வளமையற்றதா, அவர்கள் தங்கியிருக்கும் நகர்கள் பாளையங்களா கோட்டைகளா, 20 அந்த நாடு செல்வம் மிக்கதா ஏழ்மையானதா, மரங்கள் அங்கு உண்டா இல்லையா என்று பார்த்து வாருங்கள்; துணிவுடன் இருங்கள்; அந்நாட்டின் கனிகள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அது திராட்சையின் முதற்கனிப் பருவம். 21 அவ்வாறே அவர்கள் போய் சின் பாலைநிலத்திலிருந்து ஆமாத்து நுழைவாயிலருகில் இருந்த இரகோபு வரையிலும் நாட்டை உளவு பார்த்தனர். 22 அவர்கள் நெகேபினுள் சென்று, பின் எபிரோனுக்கு வந்தனர். அங்கு ஆனாக்கின் வழிமரபினரான அகிமான், சேசாய், தல்மாய் ஆகியோர் இருந்தனர்; எகிப்திலுள்ள சோவானுக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே எபிரோன் கட்டப்பட்டிருந்தது. 23 பின்னர், அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்; அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்; அதை ஒரு தடியில் கட்டி, இருவர் சுமந்து வந்தனர்; அத்துடன் அவர்கள் மாதுளம் பழங்கள், அத்திப் பழங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தனர். 24 இந்த இடம் இஸ்ரயேல் ஆள்கள் இங்கிருந்து வெட்டிய திராட்சைக் குலையை முன்னிட்டு ‘எசுக்கோல்’** பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. 25 நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர். 26 அவர்கள் பாரான் பாலை நிலத்தில் காதேசில் இருந்த மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் வந்தனர்; அவர்களுக்கும் முழு மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர்; நாட்டின் கனியையும் அவர்களுக்குக் காட்டினர். 27 அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்; அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது; இதுவே அதன் கனி. 28 ஆயினும், அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்; நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை; அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்; 29 அமலேக்கியர் நெகேபு நாட்டில் வாழ்கின்றனர்; இத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலை நாட்டில் வாழ்கின்றனர்; கானானியர் கடலருகிலும் யோர்தானை ஒட்டியும் வாழ்கின்றனர். 30 காலேபு மோசேமுன் மக்களை உடனே அமைதிப்படுத்தி, “நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக் கொள்வோம்; ஏனெனில், நாம் அதை எளிதில் வென்றுவிடமுடியும்” என்றார். 31 ஆனால், அவருடன் சென்றிருந்த ஆள்கள், “நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது; ஏனெனில், அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்” என்றனர். 32 இவ்வாறு, அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்; அவர்கள் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது; அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்; 33 அத்துடன் நெப்பிலிமிலிருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்; எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்; அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம். 13:33 தொநூ 6:4. 13:16 எபிரேயத்தில், ‘விடுதலையளிப்பவர்’ என்பது பொருள். 13:24 எபிரேயத்தில், ‘குலை’ என்பது பொருள்.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-13
130
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 14 – திருவிவிலியம்
மக்களின் முறையீடு 1 உடனே மக்கள் கூட்டமைப்பு முழுதும் உரத்தக் குரலில் புலம்பிற்று; மக்கள் அன்றிரவு அழுது கொண்டே இருந்தனர். 2 இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்; மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவர்களிடம், “எகிப்து நாட்டில் நாங்கள் இறந்திருந்தால் எவ்வளவோ நலம்! இந்தப் பாலை நிலத்தில் மடிந்தால் அதுவும் நலமே! 3 வாளுக்கு இரையாகும்படியா ஆண்டவர் எங்களை இந்த நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்? எங்கள் மனைவியரும் குழந்தைகளும் மடியப்போகிறார்கள்! நாம் எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் செல்வது நலமன்றோ?” என்றனர். 4 மேலும், அவர்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, “நாம் ஒரு தலைவனை நியமித்துக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிச் செல்வோம்” என்றனர். 5 உடனே மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் முழுவதற்கும் முன்பாக முகங்குப்புற விழுந்தனர். 6 மேலும், நாட்டை உளவு பார்த்து வந்தவர்களிடையே இருந்த நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு, 7 இஸ்ரயேலர் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் கடந்து சென்ற நாடு மிகச் சிறந்த நாடு. 8 ஆண்டவருக்கு நம்மேல் நல்விருப்பு ஏற்பட்டால் பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டினுள் அவர் நம்மை அழைத்துச் சென்று அதை நமக்குத் தருவார். 9 எனவே,ஆண்டவருக்கெதிராக மட்டும் கிளர்ந்தெழாதீர்; நாட்டின் மக்களுக்கு அஞ்சாதீர்; அவர்கள் நமக்கு இரையாவர்; அவர்களின் பாதுகாவல் அகன்று போயிற்று; ஆண்டவரோ நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்கு அஞ்சவேண்டாம். 10 ஆனால்,மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அவர்களைக் கல்லால் எறியும்படி கூறினர்; உடனே ஆண்டவரின் மாட்சி சந்திப்புக் கூடாரத்தில் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தோன்றியது. மோசே மக்களுக்காக வேண்டுதல் செய்தல் 11 ஆண்டவர் மோசேயிடம், “எதுவரை இம்மக்கள் என்னை இழிவுபடுத்துவார்கள், நான் அவர்களுக்கு அடையாளங்கள் தந்தும் எதுவரை இவர்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாதிருப்பார்கள்? 12 நான் அவர்களைக் கொள்ளை நோயால் வதைத்து அவர்களைப் புறக்கணித்து விடுவேன்; உன்னையோ அவர்களைவிடப் பெரியதும் வலியதுமான இனமாக்குவேன்” என்றார். 13 ஆனால், மோசே ஆண்டவரிடம் கூறியது: அப்போது எகிப்தியர் இதைப்பற்றிக் கேள்விப்படுவார்களே! நீர் அவர்களிடமிருந்துதானே இம்மக்களை உம் ஆற்றலால் கொண்டு வந்தீர்! 14 அதோடு இந்த நாட்டுக் குடிகளிடமும் அவர்கள் சொல்லி வைப்பார்கள். ஆண்டவரே, நீர் இம்மக்களிடையே இருக்கிறீர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் ஆண்டவரே, நீர் நேர் முகமாய்க் காணப்படுகிறீர்; உமது மேகம் அவர்கள்மேல் நிற்கிறது; பகலில் மேகத் தூணிலும் இரவில் நெருப்புத் தூணிலும் நீர் அவர்களுக்கு முன்னே போகிறீர். 15 நீர் இப்போது இம்மக்களை ஓர் ஆள் எனக் கொன்றுவிட்டால், உம் புகழைக் கேள்விப்பட்டிருந்த இனத்தவரெல்லாம், 16 “ஆண்டவர் இம்மக்களுக்கு வாக்களித்த நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுவர இயலாததால் பாலைநிலத்தில் அவர்களைக் கொன்று போட்டார்” என்று சொல்வார்களே! 17 இப்போதும் உம்மை மன்றாடிக் கேட்கிறேன்; நீர் வாக்களித்தபடி ஆண்டவர் ஆற்றல் சிறப்புறுவதாக. 18 “ஆண்டவர் சினங்கொள்ளத் தாமதிப்பவர்; அருளிரக்கம் காட்டுவதில் அளவு கடந்தவர்; குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பவர்; எவ்விதத்திலும் நம்பிக்கைத் துரோகம் செய்வோரை விட்டு விடாதவர்; மூதாதையர் குற்றங்களுக்காக அவர்கள் பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறை வரை தண்டிப்பவர்” என்றும் சொல்லியிருக்கிறீரே! 19 உம்மை மன்றாடிக் கேட்கிறேன், இம்மக்களின் குற்றங்களை மன்னியும்; உன் அருளிரக்கத்தின் பேரளவின்படியும் எகிப்திலிருந்து இதுகாறும் இம்மக்களை நீர் மன்னித்து வந்தது போன்றும் செய்யும்”. 20 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: உன் வாக்கின்படி நான் மன்னித்துவிட்டேன்; 21 ஆயினும், உண்மையாகவே என் உயிர்மேல் ஆணை! பூவுலகனைத்தும் நிறைந்துள்ள ஆண்டவரின் மாட்சியின் மேல் ஆணை! 22 எகிப்திலும் இப்பாலை நிலத்திலும் என் மாட்சியையும் நான் செய்த அருஞ்செயல்களையும் கண்டிருந்தும், இப் பத்துத் தடவையும் இம்மனிதர்கள் என்னைச் சோதித்து என் குரலுக்குச் செவிகொடுக்காததால், 23 இவர்களில் ஒருவன்கூட இவர்கள் மூதாதையருக்குத் தருவதாக நான் வாக்களித்திருந்த நாட்டினைக் காண மாட்டான்; என்னை இழிவுபடுத்திய எவனுமே அதைப் பார்க்கமாட்டான். 24 ஆனால், என் அடியான் காலேபு வேறுபட்ட மனநிலை கொண்டு என்னை முழமையாகப் பின்பற்றினான்; ஆகவே, அவன் சென்று வந்த நாட்டுக்குள் அவனைக் கொண்டு வருவேன்; அவன் தலைமுறையினர் அதனை உடைமையாக்கிக்கொள்வர். 25 இப்போது அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர். எனவே, நாளைக்கு நீங்கள் செங்கடலுக்குப் போகும் வழியே பாலைநிலத்துக்குத் திரும்பிச் செல்லுங்கள். முறையிட்ட மக்களை ஆண்டவர் தண்டித்தல் 26 மேலும், ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: 27 இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பினர் எதுவரை எனக்கெதிராக முறுமுறுப்பர்? எனக்கெதிராக முறுமுறுக்கும் இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புகளை நான் கேட்டேன். 28 நீங்கள் அவர்களிடம் சொல்லவேண்டியது, “ஆண்டவர் கூறுவதாவது; என் உயிர் மேல் ஆணை! என் செவிகளில்படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்; 29 எனக்கெதிராக முறுமுறுத்த, இருபது வயதும் அதற்கு மேலும் எண்ணப்பட்ட மொத்தத் தொகையினரான நீங்கள் இப்பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள். 30 நீங்கள் குடியிருக்கும்படி நான் வாக்களித்த நாட்டிற்குள் எப்புன்னே மகன் காலேபையும் நூன் மகன் யோசுவாவையும் தவிர ஒருவருமே வரமாட்டீர்கள். 31 ஆனால், இரையாகிவிடப்போவதாக நீங்கள் கருதிய உங்கள் குழந்தைகளை நான் கொண்டு போய்ச் சேர்ப்பேன்; நீங்கள் இழிவாய் எண்ணின நாட்டை அவர்கள் கண்டறிவார்கள். 32 உங்களைப் பொறுத்தமட்டில் நீங்கள் இப் பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள். 33 நாற்பது ஆண்டுகள் உங்கள் பிள்ளைகள் இப் பாலைநிலத்தில் அலைந்து திரிவர்; உங்கள் நம்பிக்கைத் துரோகத்திற்காக இப் பாலைநிலத்தில் உங்களுள் கடைசி ஆள்பிணமாக விழும்வரை அவர்கள் துன்புறுவர். 34 நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப்பழியைச் சுமப்பீர்கள்; என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள். 35 ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்; எனக்கெதிராக ஒன்று கூடிய இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் இதை நான் கட்டாயம் செய்துமுடிப்பேன்; இப்பாலைநிலத்தில் அவர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து அங்கேயே மடிவார்கள்.” 36 நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பி, பின் திரும்பி வந்து நாட்டைப் பற்றித் தவறான அறிக்கையைக் கொண்டுவந்து மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவருக்கு எதிராக முறுமுறுக்கச் செய்த ஆள்கள், 37 அதாவது, நாட்டைப்பற்றித் தவறான அறிக்கை கொண்டு வந்த ஆள்கள் ஆண்டவர் முன்னிலையில் வாதையால் மாண்டனர். 38 ஆயினும், நாட்டை உளவு பார்க்கச் சென்றவர்களில் நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் உயிர் தப்பி வாழ்ந்தனர். நாட்டைக் கைப்பற்றும் முதல் முயற்சி (இச 1:41-46) 39 மோசே இவ்வார்த்தைகளை இஸ்ரயேல் மக்கள் எல்லாரிடமும் கூறினார்; மக்கள் மிகவும் அழுது புலம்பினர். 40 அவர்கள் காலையில் எழுந்து, “இதோ நாம் இங்கிருந்து ஆண்டவர் வாக்களித்த இடத்திற்கு ஏறிச் செல்வோம்; நாம் பாவம் செய்து விட்டோம்” என்று சொல்லி மலையுச்சிகளை நோக்கிச் சென்றனர். 41 அப்போது மோசே சொன்னது: ஏன் இப்போது ஆண்டவர் கட்டளையை மீறுகிறீர்கள்? அது நடக்கப் போவதில்லை. 42 உங்கள் எதிரிகளால் முறியடிக்கப்படாதபடி நீங்கள் ஏறிச் செல்ல வேண்டாம்; ஆண்டவர்தாம் உங்களிடையே இல்லையே! 43 அங்கே அமலேக்கியரும் கானானியரும் உங்களை எதிர்க்க இருக்கிறார்கள்; நீங்கள் வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள், ஏனெனில், ஆண்டவரைப் பின்பற்றுவதினின்று நீங்கள் விலகிவிட்டீர்கள்; ஆண்டவர் உங்களோடிருக்கமாட்டார். 44 ஆனாலும், அவர்கள் மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்லத் துணிந்தனர்; ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ, மோசேயோ பாளையத்தை விட்டுப் புறப்படவேயில்லை. 45 அப்போது அம் மலை நாட்டில் தங்கியிருந்த அமலேக்கியரும் கானானியரும் இறங்கி வந்து அவர்களை முறியடித்து ஓர்மா மட்டும் அவர்களைத் துரத்திச் சென்றனர். 14:9 எபி 3:16. 14:13-19 விப 32:11-14. 14:18 விப 20:5-6; 34:6-7; இச 5:9-10; 7:9-10. 14:21-23 எபி 3:18. 14:24 யோசு 14:9-12. 14:29 எபி 3:17. 14:33 திப 7:36.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-14
131
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 15 – திருவிவிலியம்
பலி பற்றிய சட்டங்கள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “நீ இஸ்ரயேல் மக்களிடம் இவ்வாறு சொல்; நீங்கள் குடியிருக்க நான் உங்களுக்குத் தரும் நாட்டினுள் வரும்போது மாட்டுமந்தையிலிருந்து அல்லது ஆட்டு மந்தையிலிருந்து நெருப்புப் பலியொன்றை ஆண்டவருக்குப் படைப்பாய்; 3 அது எரிபலியாகவோ வேறு பலியாகவோ இருக்கும்; அது பொருத்தனையை நிறைவேற்றுவதாகவோ, தன்னார்வப் படையலாகவோ, குறிக்கப்பட்ட திருநாளில் செய்வதாகவோ இருக்கும்; அது ஆண்டவர் விரும்பத்தக்க நறுமணத்தை ஏற்படுத்தும். 4 அப்போது ஆண்டவருக்குப் படையல் கொண்டு வருபவன் உணவுப் படையலாகப் பத்திலொரு மரக்கால் மெல்லிய மாவைக் கால்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும். 5 எரிபலியோ வேறு பலியோ செலுத்துகையில் ஆட்டுக்குட்டி ஒவ்வொன்றுக்கும் கால்படி திராட்சைரசம் என நீர்மப்படையல் ஆயத்தப்படுத்தி வைக்க வேண்டும். 6 ஆட்டுக் கிடாயாக இருந்தால், உணவுப் படையலாகப் பத்தில் இரண்டு பங்கு மரக்கால் மிருதுவான மாவை மூன்றிலொருபடி எண்ணெயில் பிசைந்து ஆயத்தப்படுத்துவீர்கள். 7 நீர்மப்படையலாக நீங்கள் மூன்றிலொருபடி திராட்சை ரசம் படைப்பீர்கள்; இது ஆண்டவர் விரும்பும் நறுமணமாயிருக்கும். 8 ஒரு பொருத்தனையை நிறைவேற்ற அல்லது ஆண்டவருக்கு நல்லுறவுப் பலியாக ஒரு காளையை எரிபலியாகவோ வேறுபலியாகவோ நீங்கள் ஆயத்தப்படுத்தும்போது, 9 அந்தக் காளையுடன் உணவுப் படையலாக பத்தில் மூன்று பங்கு மரக்கால் மெல்லிய மாவை அரைப்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும். 10 நீர்மப் படையலாக அரைப்படித் திராட்சை ரசத்தைக் கொண்டுவர வேண்டும். அது நெருப்புப் பலியாகி ஆண்டவர் விரும்பும் நறுமணமாக விளங்கும். 11 காளை, ஆட்டுக்கிடாய், செம்மறிக் குட்டி அல்லது வெள்ளாட்டுக்குட்டி ஒவ்வொன்றுக்கும் இவ்வாறே செய்யவேண்டும். 12 நீங்கள் ஆயத்தம் செய்யும் எண்ணிக்கைப்படி அவற்றின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொன்றிற்கும் நீங்கள் இப்படியே செய்வீர்கள். 13 உள்நாட்டவர் அனைவரும் ஆண்டவர் விரும்பும் நறுமணமான நெருப்புப் பலியாக இவற்றை இம்முறையில் செலுத்த வேண்டும். 14 உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவரோ தலைமுறைதோறும் உங்களோடிருப்பவரோ ஆண்டவர் விரும்பும் நறுமணமாக நெருப்புப் பலி செலுத்த விரும்பினால் அவரும் நீங்கள் செய்கிறபடியே செய்ய வேண்டும். 15 சபையில், உங்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவருக்கும் ஒரே விதிமுறையே; உங்கள் தலைமுறைதோறும் என்றுமுள்ள விதிமுறை இதுவே; உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவர் ஆண்டவர் திருமுன் உங்களைப் போன்றே இருப்பார். 16 உங்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவருக்கும் ஒரே சட்டம், ஒரே நீதித் தீர்ப்பு.” 17 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 18 நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது: “நான் உங்களை அழைத்துச் செல்லும் நாட்டுக்குள் நீங்கள் வந்து, 19 அந்நாட்டின் உணவை நீங்கள் உண்ணும்போது ஆண்டவருக்கென உயர்த்திப் படைக்கும் படையலொன்றை அர்ப்பணிப்பீர்கள். 20 முதல் மாவிலிருந்து பிசைந்து செய்த ஓர் அடையை நீங்கள் உயர்த்திப் படைக்கும் படையலாக அர்ப்பணிக்க வேண்டும்; போரடிக்கும் களத்திலிருந்து வரும் படையல் போன்றே அதை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். 21 முதல் மாவிலிருந்து பிசைந்து செய்ததை ஆண்டவருக்கு ஒர் உயர்த்திப் படைக்கும் படையலாக உங்கள் தலைமுறை தோறும் கொடுப்பீர்கள். 22 ஆயினும், நீங்கள் ஆண்டவர் மோசேக்கு இட்ட இந்தக் கட்டளைகளை மீறினால், 23 ஆண்டவர் கட்டளை கொடுத்தநாள் முதல் தலைமுறைதோறும் மோசே வழியாக அவர் கட்டளையிட்ட எல்லாவற்றிலும் 24 மக்கள் கூட்டமைப்புக்கு அறியாப் பிழையேதும் செய்தால், முறைப்படி மக்கள் கூட்டமைப்பு முழுவதும் ஆண்டவர் விரும்பும் நறுமணமாக, அதன் உணவுப் படையலோடும் நீர்மப் படையலோடும் சேர்த்து ஓர் இளங்காளையை எரிபலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகவும் செலுத்த வேண்டும். 25 குரு இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதுக்குமாக பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்; அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்; ஏனெனில், அது ஓர் அறியாப்பிழை; அவர்கள் தங்கள் படையலை ஆண்டவருக்கு ஒரு நெருப்புப் பலியாகவும் தங்கள் அறியாப் பிழைக்காக ஆண்டவர் முன் பாவம்போக்கும் பலியாகவும் கொண்டுவந்து விட்டார்கள். 26 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும், அவர்களிடையே தங்கியிருக்கும் அயல் நாட்டவரும் மன்னிக்கப்படுவார்கள்; ஏனெனில், மக்கள் அனைவருமே இந்த அறியாப் பிழையில் பங்கு கொண்டவர்கள். 27 அறியாமல் ஓர் ஆள் பாவம் செய்தால் அவன் பாவ நீக்கப்பலியாக ஒரு வயது வெள்ளாடு ஒன்றைப் படைக்க வேண்டும். 28 ஒருவன் அறியாப்பிழை செய்தால் அவனுக்காகக் குரு ஆண்டவர்முன் கறைநீக்கம் செய்வார்; அவனது அறியாப் பிழைக்காக அவனுக்குக் கறை நீக்கம் செய்யப்படும்; அவன் மன்னிக்கப்படுவான். 29 ஒருவன் அறியாமல் செய்யும் எதற்கும், அவன் இஸ்ரயேல் மக்களைச் சார்ந்த உள்நாட்டவனாயினும் அவர்களிடையே தங்கியிருக்கும் அயல் நாட்டவனாயினும் உங்களிடம் இருக்க வேண்டியது ஒரே சட்டமே. 30 ஆனால், ஒருவன் வேண்டுமென்றே எதையும் துணிந்து செய்தால் அவன் உள்நாட்டவனாயினும் உங்களிடையே இருக்கும் அயல்நாட்டவனாயினும் அவன் ஆண்டவரை ஏளனம் செய்கிறான்; அந்த ஆள் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்படவேண்டும். 31 ஏனெனில், அவன் ஆண்டவரின் வாக்கை இகழ்ந்துவிட்டான், அவர்தம் கட்டளையை மீறிவிட்டான்; அந்த ஆள் முற்றிலும் விலக்கிவைக்கப்படவேண்டும்; அவன் குற்றம் அவன் மேலேயே இருக்கும்.” ஓய்வுநாளை மீறிய மனிதன் 32 இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் இருக்கையில் ஓய்வுநாளில் ஒரு மனிதன் விறகு பொறுக்கிக் கொண்டிருந்ததைக் கண்டனர். 33 அவன் விறகு பொறுக்கியதைக் கண்டவர்கள் அவனை மோசேயிடமும் ஆரோனிடமும் மக்கள் கூட்டமைப்பு அனைத்திடமும் கூட்டி வந்தனர். 34 அவர்கள் அவனைக் காவலில் வைத்தனர்; ஏனெனில், அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்பது தெளிவாக இல்லை. 35 ஆண்டவர் மோசேயிடம், “இந்த மனிதன் கொல்லப்படவேண்டும்; மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் பாளையத்துக்கு வெளியே அவனைக் கல்லால் எறிய வேண்டும்” என்றார். 36 மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவனைப் பாளையத்துக்கு வெளியே கொண்டுவந்து ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவனைக் கல்லால் எறிந்தனர்; அவனும் செத்தான். தொங்கல்கள் பற்றிய விதிகள் 37 மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 38 இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; அவர்கள் தலைமுறைதோறும் தங்கள் உடைகளின் முனைகளில் குஞ்சங்கள் செய்து ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு நீல நாடாவைக் கட்டச் செய்; 39 நீங்கள் ஒழுக்கம் கெட்டு நடப்பதற்கு ஏதுவாய் உங்கள் இதயங்களும் உங்கள் கண்களும் விரும்புவதைப் பின்பற்றாமல் நீங்கள் அவற்றைப் பார்த்து ஆண்டவர் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் நினைவு கூர்ந்து அவற்றைச் செய்திடவே இக்குஞ்சம். 40 அதனால் நீங்கள் என் கட்டளைகளையெல்லாம் நினைவில் கொண்டு அவற்றை நிறைவேற்றுவீர்கள், உங்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாயிருப்பீர்கள். 41 உங்களுக்குக் கடவுளாயிருக்கும்படி உங்களை எகிப்து நாட்டிலிருந்து கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர். 15:16 லேவி 24:22. 15:27-28 லேவி 4:27-31. 15:38 இச 22:12.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-15
132
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 16 – திருவிவிலியம்
கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் புரட்சி 1 லேவியின் மகன் கோகாத்துக்குப் பிறந்த இட்சகாரின் புதல்வன் கோராகும், ரூபன் வழிவந்த எலியாபு புதல்வர்கள் தாத்தான், அபிராமும், பெலேத்தின் மகன் ஓனும், 2 இஸ்ரயேல் மக்களில் சிலரைச் சேர்த்துக்கொண்டு மோசேக்கு எதிராக எழும்பினர். இவர்கள் மக்கள் கூட்டமைப்பிலிருந்து சபையில் தெரிந்தெடுக்கப்பட்ட பேர்பெற்ற இருநூற்றைம்பது தலைவர்கள் ஆவர். 3 அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்து அவர்களிடம், “நீங்கள் மிதமிஞ்சிப் போய்வீட்டீர்கள்; மக்கள் கூட்டமைப்பு முழுவதிலுமுள்ள ஒவ்வொருவரும் தூயவர்தாம்; ஆண்டவரும் அவர்களோடு இருக்கிறார்; அப்படியிருக்க ஏன் ஆண்டவரின் சபைக்கு மேலாக உங்களை உயர்த்திக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டனர். 4 மோசே இதைக் கேட்டு முகங்குப்புற விழுந்தார். 5 அவர் கோராகிடமும் அவன் கூட்டத்தவரிடமும் கூறியது: காலையில் ஆண்டவர் தம்முடையவன் யார், தூய்மையானவன் யார் என்று காட்டி அவனைத் தம்மருகே வரச் செய்வார்; தாம் தெரிந்துகொண்டவனையே அவர் தம்மருகே வரச் செய்வார்; 6 செய்யவேண்டியது இதுவே; கோராகே! அவன் கூட்டத்தவரே! தூபக் கலசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்; 7 நாளை ஆண்டவர் திருமுன் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போடுங்கள்; ஆண்டவர் தெரிந்து கொள்ளுகிற மனிதனே தூயவனாயிருப்பான்; லேவியின் புதல்வரே! நீங்கள்தாம் மிதமிஞ்சிப் போய் விட்டீர்கள். 8 மேலும், மோசே கோராகிடம் கூறியது: லேவியின் புதல்வரே! இப்போதும் கேளுங்கள்; 9 இஸ்ரயேலின் கடவுள் உங்களைத் தம்மருகில் வரச்செய்து, ஆண்டவரின் திருவுறைவிடத்தல் நீங்கள் பணி செய்யவும் மக்கள் கூட்டமைப்பின்முன் நின்று அவர்களுக்குச் சேவை செய்யவும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்தது அற்பமான காரியமா? 10 அவர் உன்னையும் லேவியின் புதல்வரின் உன் சகோதரர் அனைவரையும் தம்மருகில் வரச் செய்தாரே! இதனோடு குருத்துவத்தையும் நாடுவீர்களோ? 11 ஆதலால், நீயும் உன் கூட்டத்தவரும் ஆண்டவருக்கு எதிராகவே இருக்கிறீர்கள்; ஆரோனுக்கு எதிராக நீங்கள் முறுமுறுப்பதற்கு அவர் யார்? 12 பின் மோசே ஆளனுப்பி எலியாபின் புதல்வர் தாத்தானையும் அபிராமையும் அழைத்தார். அவர்களோ, “நாங்கள் வர மாட்டோம்; 13 இப்பாலை நிலத்தில் எங்களைக் கொல்லும்படி, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிலிருந்து எங்களைக் கொண்டு வந்து, இப்போது எங்கள்மேல் நீர் உம்மை அதிகாரியாக்கிக் கொள்வது அற்பமான காரியமா? 14 மேலும், பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிற்கு நீர் எங்களைக் கொண்டு வரவுமில்லை; திராட்சைத் தோட்டங்களை எங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவுமில்லை; இம்மனிதர்களின் கண்களைப் பிடுங்கி விடுவீரோ? நாங்கள் வரவே மாட்டோம்” என்றனர். 15 மோசே கடுஞ்சினம் கொண்டார். அவர் ஆண்டவரிடம், “இவர்கள் படையலை ஏற்க வேண்டாம்; இவர்களிடமிருந்து ஒரு கழுதையைக் கூட நான் வாங்கியதில்லை; இவர்களில் ஒருவனுக்கும் நான் தீங்கிழைத்ததில்லை” என்றார். 16 பின் மோசே கோராகிடம், “நீயும் உன் கூட்டத்தார் எல்லாரும் — நீயும் அவர்களும் ஆரோனும் — நாளை ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்; 17 உங்களுள் ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்து, அதில் தூபமிட்டு, ஆளுக்கு ஒன்றாக மொத்தம் இருநூற்றைம்பது தூப கலசங்களை, ஆண்டவர் திருமுன் கொண்டு வரட்டும். நீயும் ஆரோனும் உங்கள் தூப கலசங்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். 18 அவ்வாறே, ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்துக்கொண்டான்; அவர்கள் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போட்டார்கள்; அவர்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் மோசேயுடனும் ஆரோனுடனும் நின்றார்கள். 19 பின் கோராகு மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவர்களுக்கெதிரே சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் ஒன்று கூட்டினான். ஆண்டவரின் மாட்சி மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் தோன்றியது. 20 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும், 21 “ஒரு நொடியில் நான் இவர்களை எரித்து விடும்படி இந்த மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றார். 22 அவர்களோ முகங்குப்புறவிழுந்து, “கடவுளே! உடல் பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே! ஒரேயொருவன் பாவம் செய்திருக்க மக்கள் கூட்டமைப்பு முழுவதன் மீதும் நீர் சினங்கொள்வது ஏன்?” என்றனர். 23 உடனே ஆண்டவர் மோசேயிடம், 24 “கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அகன்று போகும்படி மக்கள் கூட்டமைப்பிடம் சொல்” என்றார். 25 மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார்; இஸ்ரயேல் மூப்பர் அவருக்குப் பின்னால் சென்றனர். 26 அவர் மக்கள் கூட்டமைப்பிடம், “இந்தப் பொல்லாத மனிதரின் பாவங்களோடு சேர்ந்து நீங்கள் அழிக்கப்படாதபடி அவர்கள் கூடாரங்களை விட்டு அகன்று போகும்படி உங்களை வேண்டுகிறேன்; அவர்களுக்குரிய எதையும் தொட வேண்டாம்” என்றார். 27 அவ்வாறே, கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அவர்கள் அகன்றனர்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவியர், புதல்வர், குழந்தைகளோடு தங்கள் கூடாரங்களின் வாயிலருகில் நின்றனர். 28 மோசே கூறியது: இப்பணிகளையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கிறார், இது என் சொந்த விருப்பம் அல்ல என்பதை இதன்மூலம் அறிந்து கொள்வீர்கள். 29 எல்லா மனிதரும் சாவதுபோல் இம்மனிதரும் செத்தால் அல்லது எல்லா மனிதருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை அடைந்தால் ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கவில்லை என்பது பொருள். 30 ஆனால், ஆண்டவர் புதுமையான ஒன்றைச் செய்தால்- நிலம் தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்களுக்குரிய அனைத்தையும் விழுங்கிவிட, அவர்கள் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினால்- அப்போது, இம்மனிதர் ஆண்டவரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதை நீங்களும் அறிந்துகொள்வீர்கள். 31 இவ்வார்த்தைகளையெல்லாம் அவர் பேசி முடிந்ததும் அவர்கள் அடியிலிருந்த தரை பிளந்தது; 32 தரை தன் வாயைத் திறந்து, அவர்களை அவர்கள் வீட்டாரோடும் கோராகைச் சேர்ந்த மனிதர்களோடும் அவர்கள் உடைமைகளோடும் விழுங்கிவிட்டது. 33 இவ்வாறு, அவர்களும் அவர்களைச் சேர்ந்த அனைவரும் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினர்; தரை தன் வாயை மூடிக்கொண்டது; சபையிலிருந்து அவர்கள் அழிந்து போயினர். 34 அவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரயேலர் அனைவரும், “நம்மையும் தரை விழுங்கி விடக்கூடாதே” என்று அஞ்சியோடினர். 35 பின்பு, ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபம் காட்டிய இரு நூற்றைம்பது மனிதரையும் விழுங்கிவிட்டது. தூபகலசங்கள் 36 பின்னர், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 37 எரிநெருப்பிலிருந்து தூப கலசங்களை எடுத்து நெருப்பை அப்பால் கொட்டிவிடும்படி குருவாகிய ஆரோன் மகன் எலயாசரிடம் சொல். 38 ஏனெனில், அவை புனிதமானவை; பாவம் செய்த இந்த மனிதர்களின் தூபகலசங்கள், அவர்களது உயிர் பறிக்கப்பட்டுவிட்டதால், தூய்மையாக்கப்பட்டுவிட்டன; அவை பீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பு வேலையால் செய்யப்படட்டும்; அவற்றை அவர்கள் ஆண்டவர் திருமுன் கொண்டு வந்தார்கள்; ஆகவேதான் அவை புனிதமானவை; இங்ஙனம் அவை இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் அடையாளமாக இருக்கும். 39 அதன்படியே குரு எலயாசர் எரிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்தார்; பீடத்தை மூடுவதற்கு அவை அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டன. 40 இது இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னம்; இதனால் ஆரோன் வழித் தோன்றியிராத எவனும் கோராகையும் அவன் கூட்டத்தவரையும் போன்று ஆகிவிடாதபடி ஆண்டவர் திருமுன் தூபங்காட்டுவதற்கு நெருங்கி வரத் துணியான்; மோசே மூலம் ஆண்டவர் எலயாசருக்குச் சொன்னதும் அதுவே. ஆரோன் மக்களை மீட்டல் 41 ஆயினும், மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுதும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்து, “ஆண்டவரின் மக்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்” என்றனர். 42 மக்கள் கூட்டமைப்பு மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்தபோது அவர்கள் சந்திப்புக் கூடாரத்தை நோக்கித் திரும்பினர்; உடனே மேகம் அதை மூடியது, ஆண்டவரின் மாட்சி தோன்றியது. 43 மோசேயும் ஆரோனும் சந்திப்புக்கூடாரத்தின் முன் பக்கத்திற்கு வந்தார்கள். 44 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது: 45 நான் இந்த மக்கள் கூட்டமைப்பை ஒரு நொடியில் எரித்து விடும்படி அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்.” மோசேயும் ஆரோனும் முகங்குப்புற விழுந்தனர். 46 மோசே ஆரோனிடம், “உன் தூபகலசத்தைப் பலிபீடத்திலிருந்து எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் போட்டு விரைவாக அதனை மக்கள் கூட்டமைப்பினரிடம் கொண்டு போய் அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்; ஆண்டவரிடமிருந்து கடுஞ்சினம் புறப்பட்டுவிட்டது கொள்ளைநோய் தொடங்கிவிட்டது” என்றார். 47 மோசே சொன்னபடியே ஆரோன் தூபகலசத்தை எடுத்துக் கொண்டு சபை நடுவே ஓடினார்; அந்தோ, மக்களிடையே கொள்ளை நோய் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அவர் தூபம் போட்டு மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தார். 48 அவர் இறந்தோர்க்கும் வாழ்ந்தோர்க்கும் இடையே நின்றார்; கொள்ளைநோய் நின்றது. 49 அப்போது கோராகின் செயல்முன்னிட்டு இறந்தோர் தவிர அக்கொள்ளைநோயால் இறந்தோர் பதினாலாயிரத்து எழுநூறு பேர். 50 கொள்ளைநோய் நின்றதும் ஆரோன் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலருகில் மோசேயிடம் திரும்பி வந்தார். 16:1 யூதா 11.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-16
133
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 17 – திருவிவிலியம்
ஆரோனின் கோல் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோல் வீதம் அவர்கள் தலைவர்களிடம் தங்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரண்டு கோல்களைப் பெற்றுக் கொள்; ஒவ்வொருவன் பெயரையும் அவன் கோலின் மேல் எழுது; 3 ஆரோன் பெயரை லேவியின் கோலின் மேல் எழுது; இவ்வாறு ஒவ்வொரு மூதாதையர் குலத் தலைவனுக்கும் ஒரு கோல் இருக்கும். 4 பின் அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தில் நான் உன்னைச் சந்திக்கும் உடன்படிக்கைப்பேழை முன் வைப்பாய். 5 நான் தெரிந்து கொள்பவரின் கோல் துளிர்க்கும். இங்ஙனம், உங்களுக்கெதிராக முறுமுறுக்கிற இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புக்களை என் முன்னின்று ஒழித்து விடுவேன். 6 மோசே இஸ்ரயேல் மக்களிடம் பேசினார்; ஒரு தலைவனுக்கு ஒன்று வீதம் அவர்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரு கோல்களை அவர்கள் தலைவர்கள் அவரிடம் கொடுத்தனர்; அவர்கள் கோல்களுள் ஆரோன் கோலும் இருந்தது. 7 மோசே அந்தக் கோல்களை உடன்படிக்கைக் கூடாரத்தினுள் ஆண்டவர் திருமுன் வைத்தார். 8 மறுநாள் மோசே உடன்படிக்கைக் கூடாரத்தினுள் சென்றார்; லேவிகுலத்துக்காக இருந்த ஆரோனின் கோல் துளிர் விட்டிருந்தது; அது துளிர்த்துப் பூத்து வாதுமைப் பழங்களைத் தாங்கியிருந்தது. 9 பின்னர், மோசே ஆண்டவர் முன்னின்று எல்லாக் கோல்களையும் எடுத்து வெளியே இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கொண்டு வந்தார்; அவர்கள் பார்த்தார்கள்; ஒவ்வொரு தலைவனும் தன் கோலை எடுத்துக் கொண்டான். 10 ஆண்டவர் மோசேயிடம், “ஆரோன் கோலைத் திரும்ப எடுத்து உடன்படிக்கைப் பேழை முன் வை; எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோர் சாகாதபடி அவர்கள் முறுமுறுப்புகளை என் முன்னின்று நீ ஒழித்துவிட்டதற்கு ஓர் அடையாளமாக அது வைக்கப்படட்டும்” என்றார். 11 அப்படியே மோசே செய்தார்; ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடியே செய்தார். 12 இஸ்ரயேல் மக்கள் மோசேயிடம், “இதோ நாங்கள் மடிந்தோம், நாங்கள் அழிந்தோம், அனைவரும் அழிந்தே போனோம்; 13 நெருங்கி வருகிற எவனும், அதாவது ஆண்டவரின் திருஉறைவிடத்தை நெருங்கி வருகிற எவனும் செத்தே போவான்; நாங்கள் அனைவரும் சாகத்தான் வேண்டுமா?” என்றனர். 17:8-10 எபி 9:4.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-17
134
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 18 – திருவிவிலியம்
குருக்கள், லேவியர் கடமைகள் 1 பின்னர், ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: நீயும் உன் புதல்வரும் உன்னோடிருக்கும் உன் மூதாதையர் வீட்டாரும் திருஉறைவிடம் தொடர்பான குற்றத்தைச் சுமப்பீர்கள்; உங்கள் குருத்துவம் தொடர்பான குற்றத்தையோ நீயும் உன்னோடிருக்கும் உன் புதல்வரும் சுமப்பீர்கள். 2 மூதாதையர் குலமான லேவிக் குலத்திலுள்ள உன் சகோதரரையும் உன்னுடன் கூட்டிக்கொண்டு வர வேண்டும்; அவர்கள் உங்களோடு சேர்ந்து, நீயும் உன்னோடிருக்கும் உன் புதல்வரும் உடன்படிக்கைக்கூடாரத்தின் முன்நிற்கும்போது உங்களுக்கு உதவி செய்யட்டும். 3 அவர்கள் உங்களுக்கு உதவி செய்து, கூடாரத்தின் அனைத்துக் கடமைகளையும் கவனித்துக் கொள்வார்கள்; ஆனால்,நீங்களும் அவர்களோடு சாகாதபடி, திருஉறைவிடத்தின் பாத்திரங்களையோ பலிபீடத்தையோ அவர்கள் நெருங்குமாறு அனுமதிக்க வேண்டாம். 4 அவர்கள் உங்களோடு சேர்ந்து சந்திப்புக்கூடாரத்தையும் கூடாரத்தின் அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொள்வார்கள்; வேறு எவரும் உங்களருகில் வரலாகாது. 5 இஸ்ரயேல் மக்கள் மேல் இனி என்றுமே சினம் இராதபடி திருஉறைவிடத்தின் கடமைகளையும் பலிபீடத்தின் கடமைகளையும் நீங்களே கவனித்துக்கொள்ள வேண்டும். 6 இதோ! உங்கள் சகோதரராகிய லேவியரை இஸ்ரயேல் மக்களிலிருந்து நான் தெரிந்தெடுத்தேன்; சந்திப்புக்கூடார வேலை செய்ய அவர்கள் உங்களுக்கென ஆண்டவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட கொடை ஆவர். 7 நீயும் உங்களோடிருக்கும் உன் புதல்வரும் உங்கள் குருத்துவத்திற்கு உரியதை, அதாவது பலிபீடம் தொடர்பான அனைத்தையும் தொங்கு திரைக்குள் இருப்பதையும் கவனித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பணிபுரியும்படி உங்கள் குருத்துவத்தையும் ஒரு கொடையாகவே தருகிறேன்; அவற்றை நெருங்குகிற வேறு எவனும் கொல்லப்படுவான். குருக்களின் பங்கு 8 மேலும், ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: இதோ எனக்கென உயர்த்திப் படைக்கப்படும் படையல்களில் உன் பொறுப்பில் காக்கப்படும் எதையும், அதாவது இஸ்ரயேல் மக்களின் அர்ப்பணிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் உங்களுக்குத் தந்து விட்டேன்; இது உனக்கும் உன்புதல்வருக்கும் என்றுமுள்ள நியமமாக விளங்கும். 9 நெருப்புக்குட்படாத மிகப் புனிதமான பொருள்களில் உனக்குரியது இதுவே: அவர்கள் எனக்கு அர்ப்பணிக்கிற அவர்களின் படையல், உணவுப் படையல், பாவம் போக்கும் படையல், குற்ற நீக்கப்படையல் ஒவ்வொன்றும் உனக்கும் உன் புதல்வருக்கும் மிகவும் புனிதமானவை. 10 மிகவும் தூய்மையான தலத்தில் நீ அதனை உண்பாய்; ஆண்மகன் ஒவ்வொருவனும் அதனின்று உண்ணலாம்; அது உனக்குப் புனிதமானது. 11 இஸ்ரயேல் மக்கள் உயர்த்திப் படைக்கும் படையல்களும் அவர்களின் அனைத்து ஆரத்திப் படையல்களும் உன்னுடையவையே; இது உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாக விளங்கும். உன் வீட்டில் தீட்டுப்படாத ஒவ்வொருவரும் அதிலிருந்து உண்ணலாம். 12 உயர்தர எண்ணெய், உயர்தரத் திராட்சை இரசம், உயர்தரத் தானியம் அனைத்தையும் அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தும் முதற்பலன்களையும் நான் உனக்குத் தருகிறேன். 13 அவர்களது நிலத்தின் முதற்கனிகளாக அவர்கள் ஆண்டவரிடம் கொண்டு வரும் அனைத்தும் உன்னுடையதே; உன் வீட்டில் தீட்டுப்படாத ஒவ்வொருவரும் அதிலிருந்து உண்ணலாம். 14 இஸ்ரயேலில் அர்ப்பணிக்கப்பட்ட பொருள் ஒவ்வொன்றும் உன்னுடையதாக இருக்கும். 15 மனிதராயினும் விலங்காயினும் முதலில் கருப்பை திறக்கும் அனைத்திலும் அவர்கள் ஆண்டவருக்குப் படைக்கின்ற ஒவ்வொன்றும் உன்னுடையது; ஆயினும், மனிதரில் தலைப்பேறானவனை நீ மீட்டுக்கொள்வாய்; தீட்டான விலங்கின் தலையீற்றையும் நீ மீட்க வேண்டும். 16 ஒரு மாத காலத்தில் நீ அவற்றை மீட்கும்போது அவற்றின் மீட்புத்தொகை தூயகச் செக்கேல் நிறைப்படி ஐந்து வெள்ளிக் காசுகள் என்று விலை குறிப்பாய்; அது பன்னிரண்டு கிராம் ஆகும். 17 ஆனால், மாடு, ஆடு, வெள்ளாடு இவற்றின் தலையீற்றை நீ மீட்க வேண்டாம்; அவை புனிதமானவை. அவற்றின் இரத்தத்தை நீ பலிபீடத்தின்மேல் தெளிப்பாய்; அவற்றின் கொழுப்பை நெருப்புப் பலியாக்குவாய்; அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக விளங்கும். 18 ஆரத்திப் படையலாக அளிக்கப்படும் இறைச்சியான அவற்றின் மார்பகமும் முன்னந்தொடையும் உன்னைச் சேரும். 19 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாகத் தருகிறேன்; இது உனக்கும் உன்னோடிருக்கும் உன்வழி மரபுக்கும் ஆண்டவர் திருமுன் என்றுமுள “உப்பு உடன்படிக்கை” ஆகும். 20 மேலும், ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: அவர்கள் நாட்டில் உனக்கு உரிமைச் சொத்து ஏதுமில்லை, அவர்களிடையே உனக்குப் பங்கும் இல்லை; இஸ்ரயேல் மக்களிடையே உனக்குப் பங்கும் உரிமைச் சொத்தும் நானே. 21 இஸ்ரயேலின் பத்திலொன்று அனைத்தையும் லேவியருக்கு உரிமைச் சொத்தாகத் தந்திருக்கிறேன்; சந்திப்புக் கூடாரப் பணியில் அவர்கள் ஏற்கும் பங்கிற்கு இதுவே கைம்மாறு, 22 இது முதல் இஸ்ரயேல் மக்கள் சந்திப்புக் கூடாரத்தருகில் வர வேண்டாம்; வந்தால் அவர்கள் பாவம் சுமந்து மாள்வர். 23 ஆனால், லேவியர் சந்திப்புக்கூடாரத்தில் பணி செய்வர்; அவர்கள் குற்றம் அவர்கள் மேலேயே இருக்கும்; உங்கள் தலைமுறைதோறும் இது என்றுமுள நியமமாக விளங்கும்; இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு உரிமைச் சொத்தாக ஏதுமில்லை. 24 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலின் பத்தில் ஒன்றை நான் லேவியருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்தேன்; எனவே, இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு உரிமைச் சொத்து ஏதுமில்லை என்று அவர்களைக் குறித்துக் கூறினேன். லேவியர்க்குரிய பத்திலொரு பங்கு 25 பின்னர், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 26 நீ லேவியரிடம் சொல்ல வேண்டியது: “நான் இஸ்ரயேல் மக்களிடமிருந்து உங்களுக்கு உரிமைச் சொத்தாகத் தந்த பத்திலொன்றை அவர்களிடமிருந்து நீங்கள் எடுக்கும்போது, நீங்களும் அதிலிருந்து ஒரு படையலை, அதாவது, பத்திலொன்றிலிருந்து பத்திலொன்றை ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்க வேண்டும். 27 அவ்வாறளிக்கும் உங்கள் படையல் போரடிக்கும் களத்தின் தானியமாகவும் திராட்சைப் பழ ஆலையின் இரசமாகவும் கருதப்படும். 28 அப்படியே நீங்களும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்ற உங்கள் பத்திலொன்று அனைத்திலுமிருந்து ஒரு படையலை ஆண்டவருக்கு உயர்த்திப் படைப்பீர்கள்; இவ்வாறு வரும் ஆண்டவரின் படையலை குரு ஆரோனுக்குக் கொடுப்பீர்கள். 29 உங்களுக்கு வரும் கொடைகள் அனைத்திலும் மிகச் சிறந்ததும் தூய்மையானதுமானவற்றை ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலாக அளிக்க வேண்டும். 30 எனவே, நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது, “அதிலிருந்து மிகச் சிறப்பானதை நீங்கள் படைத்தபின் மீதியானது லேவியருக்குப் போரடிக்கும் களத்தினின்றும் திராட்சைப் பழ ஆலையினின்றும் வர வேண்டியவையாகக் கருதப்படும்; 31 அதனை எவ்விடத்திலும் நீங்களும் உங்கள் வீட்டாரும் உண்ணலாம்; அது சந்திப்புக்கூடாரத்தில் நீங்கள் செய்யும் பணிக்காக வரும் கைம்மாறு ஆகும். 32 நீங்கள் அதில் மிகச் சிறப்பானதை படைப்பதால் இந்தக் காரியத்தில் உங்கள்மேல் பாவம் இராது; நீங்கள் இஸ்ரயேல் மக்களின் புனிதப் பொருள்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள், இல்லையேல் சாவீர்கள். 18:14 லேவி 27:28. 18:21 லேவி 27:32-33; இச 14:22-29.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-18
135
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 19 – திருவிவிலியம்
செங்கிடாரியின் சாம்பல் 1 பின்னும், ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: 2 ஆண்டவர் கட்டளையிட்ட சட்டவிதிமுறை இதுவே: பழுதற்ற செங்கிடாரி ஒன்றை உன்னிடம் கொண்டு வரும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்; அது குறையற்றதும் ஒருபோதும் நுகம் சுமக்காததுமாய் இருக்கட்டும். 3 அதை நீ குரு எலயாசரிடம் கொடுப்பாய்; அது பாளையத்துக்கு வெளியே எடுத்துச்செல்லப்பட்டு அவன் முன்னிலையில் அடிக்கப்படும்; 4 எலயாசர் தன் விரலினால் அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து சந்திப்புக்கூடாரத்திற்கு முன்புறம் ஏழு முறை தெளிப்பான். 5 அந்தக் கிடாரி அவன் முன்னிலையில் சுட்டெரிக்கப்படும்; அதன் தோல், தசை, இரத்தம் ஆகியவையும் சாணியுடன் சுட்டெரிக்கப்படும்; 6 அப்போது குரு கேதுருக்கட்டை, ஈசோப்பு, கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றை எடுத்து எரிக்கப்படும் கிடாரி மேல் போடுவான். 7 பின் குரு தன் உடைகளைத் துவைத்துத் தண்ணீரில் குளிப்பான்; அதன் பின்னர்தான் அவன் பாளையத்தினுள் வர வேண்டும்; அந்த மாலைவரை குரு தீட்டுப்பட்டவனாயிருப்பான். 8 கிடாரியைச் சுட்டெரிக்கிறவனும் தன் உடைகளைத் துவைத்துத் தண்ணீரில் குளிப்பான்; அவனும் மாலைவரை தீட்டுப்பட்டவனாயிருப்பான். 9 தீட்டுப்படாத ஒருவன் கிடாரியின் சாம்பலைக் கூட்டி அதைப் பாளையத்துக்கு வெளியே ஒரு தூய்மையான இடத்தில் கொட்டி வைப்பான்; அது இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்புக்கென்று தீட்டகற்றும் தண்ணீருக்காக வைக்கப்படும்; அது பாவ நீக்கத்திற்காகப் பயன்படும். 10 கிடாரியின் சாம்பலை அள்ளிக் கூட்டுகிறவன் தன் உடைகளைத் துவைப்பான்; அவன் மாலைவரை தீட்டுப்பட்டவனாயிருப்பான். இது இஸ்ரயேல் மக்களுக்கும் அவர்களிடையே தங்கும் அயல்நாட்டவருக்கும் என்றுமுள நியமமாக விளங்கும். பிணத் தொடர்பு 11 மனிதப் பிணத்தைத் தொடுபவன் எவனும் ஏழு நாள்களுக்குத் தீட்டுப்பட்டிருப்பான். 12 மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அவன் தன்னைத் தண்ணீரால் தூய்மையாக்கிக் கொள்வான்; இங்ஙனம் அவன் தூய்மையாயிருப்பான்; ஆனால், மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அவன் தன்னைத் தூய்மைப்படுத்தவில்லையெனில் அவன் தூய்மையடையான். 13 பிணத்தை, அதாவது இறந்துபட்ட எந்த ஒரு மனிதனின் உடலைத் தொட்டபின், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாதவன் எவனோ அவன் ஆண்டவரின் திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆள் இஸ்ரயேலிடமிருந்து விலக்கப்பட வேண்டும்; ஏனெனில்,தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன் மேல் ஊற்றப்படவில்லை, அவன் தீட்டுப்பட்டவனாகவே இருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன் மேலிருக்கிறது. 14 கூடாரத்தில் ஒரு மனிதன் இறக்கும் போது இதுவே சட்டம். அதனுள் வரும் ஒவ்வொருவனும் அதில் இருக்கும் ஒவ்வொருவனும் ஏழு நாள்கள் தீட்டுப்பட்டவனாகவே இருப்பான். 15 அத்துடன் இறுக மூடப்படாமல் திறந்திருக்கும் பாத்திரம் எதுவும் தீட்டுப்பட்டதாகும். 16 திறந்த வெளியில் ஒருவன் வாளால் கொல்லப்பட்டவனையோ, தானாகச் செத்தவனையோ, மனித எலும்பையோ, கல்லறையையோ தொட்டால் அவன் ஏழு நாள்கள் தீட்டுப்பட்டவனாயிருப்பான். 17 தீட்டுப்பட்டிருப்போருக்காக நெருப்பாலான பாவம் போக்கும் பலியின் சாம்பலில் அவர்கள் கொஞ்சம் எடுப்பர்; ஒரு பாத்திரத்தில் ஊற்று நீரை முகந்து அதில் சாம்பலை இடுவர்; 18 தூய்மையாயிருக்கும் ஒருவன் ஈசோப்பை எடுத்து அதைத் தண்ணீரில் தோய்த்துக் கூடாரம், அதன் பாத்திரங்கள் மேலும் அங்கிருக்கும் ஆள்கள் மேலும் எலும்பையோ, கொலையுண்டவனையோ, தானாகச் செத்தவனையோ, கல்லறையையோ தொட்டவன் மேலும் தெளிக்க வேண்டும்; 19 தூய்மையாயிருப்பவன் தீட்டுப்பட்டவன் மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிப்பான்; இங்ஙனம், ஏழாம் நாள் இவன் அவனைத் தூய்மைப்படுத்துவான்; தூய்மைப்படுத்தியவன் தன் உடைகளைத் துவைத்துத் தண்ணீரில் குளிப்பான்; மாலையில் அவன் தூய்மையாகிவிடுவான். 20 ஆனால், தீட்டுப்பட்டிருந்தும் தன்னைத் தூய்மைப்படுத்தாதவன் ஆண்டவரின் திருஉறைவிடத்தைக் கறைப்படுத்திவிட்டபடியால் சபையிலிருந்து விலக்கப்படுவான்; ஏனெனில், தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன் மேல் ஊற்றப்படவில்லை, அவன் தீட்டுப்பட்டவனாகவே இருக்கிறான். 21 இது அவர்களுக்கு என்றுமுள நியமமாக விளங்கும்; தீட்டுக் கழிக்கும் தண்ணீரைத் தெளிப்பவன் தன் உடைகளைத் துவைக்க வேண்டும்; தீட்டுக் கழிக்கும் தண்ணீரைத் தொடுபவன் மாலை வரை தீட்டுப்பட்டவனாயிருப்பான். 22 தீட்டுப்பட்டவன் தொடுவதெல்லாம் தீட்டுப்பட்டதாகவே இருக்கும்; அதனைத் தொடுபவன் எவனும் மாலைவரை தீட்டுப்பட்டவனாயிருப்பான். 19:9 எபி 9:13.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-19
136
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 20 – திருவிவிலியம்
காதேசு நிகழ்ச்சிகள் (விப 17:1-7) 1 முதல் மாதத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சீன் பாலைநிலத்துக்கு வந்தது; மக்கள் காதேசில் தங்கினர். மிரியாம் அங்கே இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள். 2 அப்போது மக்கள் கூட்டமைப்புக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ஒன்று கூடினர். 3 மக்கள் மோசேயுடன் வாதாடிக் கூறியது: “ஆண்டவர் திருமுன் எங்கள் சகோதரர்கள் மாண்டபோது நாங்களும் மாண்டிருந்தால் நலமாயிருந்திருக்குமே! 4 ஆண்டவரின் சபையை இந்தப் பாலைநிலத்துக்கு நீங்கள் கொண்டு வந்தது ஏன்? நாங்களும் எங்கள் கால்நடைகளும் இங்குச் சாகவேண்டுமென்றா? 5 இந்தக் கொடிய இடத்துக்கு அழைத்துவர எங்களை எகிப்திலிருந்து வெளியேறப் பண்ணினது ஏன்? தானிய நிலம், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையுமே இங்கு இல்லை; குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லையே!” 6 பின், மோசேயும் ஆரோனும் சபைக்கு முன்னின்று சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலுக்குச் சென்று முகங்குப்புற விழுந்தனர். ஆண்டவரின் மாட்சி அவர்களுக்குத் தோன்றியது. 7 ஆண்டவர் மோசேயிடம், 8 “கோலை எடுத்துக் கொள்; நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பைக் கூடிவரச் செய்யுங்கள்; அவர்கள் பார்வையில் பாறைத் தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்; இவ்வாறு, அவர்களுக்காகப் பாறையிடமிருந்து நீங்கள் தண்ணீர் பெறுவீர்கள்; மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் கால்நடைகளுக்கும் குடிக்கக் கொடுப்பீர்கள்” என்றார். 9 அவர் கட்டளைப்படியே மோசே ஆண்டவர் திருமுன்னின்று கோலை எடுத்தார். 10 மோசேயும் ஆரோனும் பாறைக்கு முன்பாகச் சபையை ஒன்று கூட்டினர். மோசே அவர்களிடம், “கலகக்காரரே, இப்போது கேளுங்கள், இப்பாறையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைக்க எங்களால் கூடுமா?” என்று கேட்டார். 11 பின் மோசே தம் கையை ஓங்கித் தம் கோலால் பாறையை இருமுறை அடித்தார்; தண்ணீர் தாராளமாக வந்தது, மக்கள் கூட்டமைப்பினரும் அவர்கள் கால்நடைகளும் குடித்தனர். 12 ஆண்டவரோ மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரயேல் மக்கள் பார்வையில் நான் தூயவராக விளங்கும்படி நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக்கொடுக்கவிருக்கும் நாட்டில் கொண்டு சேர்க்க மாட்டீர்கள்” என்றார். 13 இது மெரிபாவின்* தண்ணீர்; இங்குத்தான் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் வாதாடினர், அவர் அவர்களிடையே தம்மைத் தூயவராகக் காண்பித்தார். ஏதோம் மன்னன் இஸ்ரயேலைத் தடுத்தல் 14 காதேசிலிருந்து மோசே ஏதோம் மன்னனிடம் தூதரை அனுப்பிக் கூறியது: உன் சகோதரன் இஸ்ரயேல் கூறுவது இதுவே; எங்களுக்கு நேர்ந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் நீர் அறிவீர்; 15 எங்கள் மூதாதையர் எகிப்துக்குச் சென்றனர்; நாங்கள் எகிப்திலே நெடுங்காலம் தங்கியிருந்தோம்; எகிப்தியர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் மிகவும் கொடுமையாக நடத்தினார்கள்; 16 நாங்கள் ஆண்டவரை நோக்கி அழுதபோது அவர் எங்கள் குரலைக் கேட்டு எங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர ஒரு தூதனை அனுப்பினார்; நாங்கள் இங்கு உமது எல்லையின் ஓரத்திலுள்ள காதேசு நகரில் இருக்கிறோம். 17 இப்போதும் உம் நாடு வழியே எங்களைப் போக விடும்; நாங்கள் வயலின் ஊடேயோ திராட்சைத் தோட்டத்தின் ஊடேயோ கடந்து செல்ல மாட்டோம்; எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கமாட்டோம்; நாங்கள் அரச நெடுஞ்சாலை வழியே செல்வோம்; உம் எல்லையைத் தாண்டும்வரை நாங்கள் வலப்புறமோ இடப்புறமோ திரும்ப மாட்டோம். 18 ஆனால் ஏதோம், “நீங்கள் கடந்து செல்லக்கூடாது, மீறினால் நான் உங்களுக்கெதிராக வாளெடுத்து வரவேண்டியிருக்கும் “என்று அவருக்குக் கூறியனுப்பினான். 19 இஸ்ரயேல் மக்கள் அவனிடம், “நாங்கள் நெடுஞ்சாலை வழியே செல்வோம்; நாங்களோ, எங்கள் கால்நடைகளோ, உம் தண்ணீரைக் குடித்தால், அதற்கான விலையைத் தருவோம்; கால்நடையாகக் கடந்து செல்லமட்டும் எங்களுக்கு அனுமதி தாரும், வேறெதுவும் வேண்டாம்” என்றனர். 20 ஆனால் அவனோ, “நீங்கள் கடந்து செல்லவே கூடாது” என்று கூறிவிட்டான். ஏதோம் திரண்ட வலிமை மிகுந்த படையோடு அவர்களுக்கெதிராக வந்தான். 21 இவ்வாறு, ஏதோம் தன் எல்லைக்குள் இஸ்ரயேலுக்கு வழி தர மறுத்தான்; எனவே, இஸ்ரயேலர் அவனை விட்டு விலகிப் போயினர். ஆரோன் இறத்தல் 22 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் காதேசிலிருந்து பயணம்செய்து, ‘ஓர்’ என்ற மலைக்கு வந்தனர். 23 ஆண்டவர் ஏதோம் நாட்டின் எல்லையில் ஓர் என்ற மலையில் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: 24 ஆரோன் தன் மக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுவான்; நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டுக்குள் அவன் நுழைய மாட்டான்; ஏனெனில், ‘மெரிபாவின் தண்ணீர்’ அருகில் நீங்கள் என் கட்டளையை மீறினீர்கள். 25 ஆரோனையும் அவனுடைய மகன் எலயாசரையும் ஓர் என்ற மலைக்குக் கூட்டிக் கொண்டு வா; 26 ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவனுடைய மகன் எலயாசருக்கு உடுத்து; ஆரோன் தன் மக்களோடு சேர்த்துக் கொள்ளப்படுவான், அங்கேயே இறப்பான்”. 27 ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்; மக்கள் கூட்டமைப்பு முழுவதின் பார்வையிலும் அவர்கள் ஓர் என்ற மலைக்கு ஏறிப் போனார்கள். 28 மோசே ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவர் மகன் எலயாசருக்கு உடுத்தினார்; ஆரோன் அங்கேயே மலையுச்சியில் இறந்தார். பின் மோசேயும் எலயாசரும் மலையைவிட்டுக் கீழிறங்கி வந்தனர். 29 ஆரோன் இறந்ததை மக்கள் கூட்டமைப்பு அறிந்தது; இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரோனுக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். 20:28 விப 29:29; எண் 33:38; இச 10:6. 20:13 எபிரேயத்தில், ‘வாதிடுதல்’ என்பது பொருள்.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-20
137
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 21 – திருவிவிலியம்
கானானியர்மேல் வெற்றி 1 இஸ்ரயேல் அத்தாரிம் வழியாக வருவதை நெகேபில் வாழ்ந்த கானானியனாகிய அராது மன்னன் கேள்வியுற்றான்; அப்போது அவன் இஸ்ரயேலோடு போரிட்டு அவர்களில் சிலரைச் சிறைபிடித்தான். 2 உடனே ஆண்டவரிடம் இஸ்ரயேல் பொருத்தனை செய்து, “நீர் உண்மையில் இம்மக்களை என்கையில் ஒப்படைத்தால் அவர்கள் நகர்களை நான் அழித்துவிடுவேன்” என்று கூறியது. 3 அவ்வாறே, ஆண்டவர் இஸ்ரயேலின் குரலைக் கேட்டுக் கானானியரை ஒப்படைத்தார்; அவர்கள் அவர்களையும் அவர்கள் நகர்களையும் அழித்தனர்; எனவே, அந்த இடத்தின் பெயர் ‘ஓர்மா’* என்று வழங்கியது. வெண்கலப் பாம்பு 4 ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் “செங்கடல் சாலை” வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர். 5 மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்; “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர். 6 உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை* மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். 7 அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்” நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர். அவ்வாறே, மோசே மக்களுக்காக மன்றாடினார். 8 அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். 9 அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான். கோர் மலை முதல் மோவாபியர் பள்ளத்தாக்குவரை 10 பின், இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு ஓபோத்தில் பாளையம் இறங்கினர். 11 அடுத்து ஓபோத்திலிருந்து பயணமாகிக் கதிரவன் உதயம் நோக்கி மோவாபுக்கு எதிரேயுள்ள பாலை நிலத்தில் இய்யா அபாரிமில் பாளையம் இறங்கினர். 12 அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் செரத் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர். 13 அங்கிருந்து அவர்கள் பயணமாகி அர்னோனுக்கு அப்பால் பாளையம் இறங்கினர்; அது எமோரியர் எல்லையிலிருந்து தொடங்கும் பாலைநிலத்தில் உள்ளது; அர்னோன் மோவாபுக்கும் எமோரிய நாட்டுக்குமிடையேயான மோவாபிய எல்லையாகும். 14 “ஆண்டவரின் போர்கள்” என்ற நூல் இவ்வாறு கூறுகிறது; “சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோன் சிற்றாறுகளும், 15 ஆர் என்னும் பகுதியை நோக்கி விரிவதும் மோவாபு எல்லை மேல் சாய்வதுமான பள்ளத்தாக்குகளின் சரிவு”. 16 அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பெயேருக்குச் சென்றனர். “மக்களை ஒன்றுகூட்டு; நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று ஆண்டவர் மோசேக்குக் கூறிய கிணறு இதுவே. 17 பின், இஸ்ரயேல் பாடிய பாடல்; ‘ஊறிப் பெருகிடு கிணறே! அதைப் புகழ்ந்து பாடுங்கள்; 18 ‘இளவரசர்கள் செங்கோலால் அகழ்ந்த கிணறு இதுவே; மேன்மக்கள் கோல்கொண்டு குடைந்த கிணறும் இதுவே’ பின், பாலை நிலத்திலிருந்து அவர்கள் மத்தானாவுக்குச் சென்றனர். 19 மத்தானாவிலிருந்து நகலியேலுக்குச் சென்றனர்; நகலியேலிலிருந்து பாமோத்துக்குச் சென்றனர். 20 பாமோத்திலிருந்து பாலை நிலத்தை நோக்கி நிற்கும் பிஸ்காவின் கொடுமுடிக்கருகில் மோவாபு பகுதியில் இருந்த பள்ளத்தாக்குக்குச் சென்றனர். சீகோன், ஓகு மன்னர்களை வெல்லுதல் (இச 2:26-3:11) 21 இஸ்ரயேல் எமோரியர் மன்னன் சீகோனிடம் தூதர்களை அனுப்பிக் கூறியது: 22 “உம் நாடு வழியே நான் செல்ல அனுமதியும்; நாங்கள் வயல் பக்கமோ திராட்சைத் தோட்டப் பக்கமோ திரும்ப மாட்டோம்; நாங்கள் யாதொரு கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கவுமாட்டோம்; நாங்கள் உம் எல்லையைத் தாண்டும் வரை அரச நெடுஞ்சாலை வழியாகவே செல்வோம்.” 23 ஆனால், தன் எல்லை வழியே இஸ்ரயேல் கடந்து செல்ல சீகோன் இடந்தரவில்லை. அவன் தன் ஆள்கள் எல்லாரையும் சேர்த்துக் கொண்டு இஸ்ரயேலுக்கு எதிராகப் பாலை நிலத்துக்குச் சென்றான்; யாகாசுக்கு வந்து இஸ்ரயேலை எதிர்த்துப் போரிட்டான். 24 இஸ்ரயேல் வாள் முனையில் அவனைக் கொன்று அர்னோன் தொடங்கி அம்மோனியர் வரையுள்ள யாப்போகு மட்டும் அவன் நாட்டைக் கைப்பற்றியது; அம்மோனியர் எல்லை அரணாய் அமைந்திருந்தது. 25 இஸ்ரயேல் இந்த நகர்கள் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டது; இஸ்ரயேல் எமோரியரின் அனைத்து நகர்களிலும் எஸ்போனிலும் அதன் எல்லாக் கிராமங்களிலும் குடியிருந்தது. 26 “எஸ்போன் என்பது எமோரிய மன்னன் சீகோனின் நகர்; அவன் மோவாபின் முன்னைய மன்னனோடு போரிட்டு அவன் கையிலிருந்து அர்னோன் வரை இருந்த நாடு முழுவதையும் கைப்பற்றி இருந்தான். 27 எனவேதான் கவிஞர் பாடுகின்றனர்: “எஸ்போனுக்கு வாருங்கள்; அது கட்டப்படட்டும்; சீகோன் நகர் நிறுவப்படட்டும். 28 நெருப்பு, எஸ்போனிலிருந்தும் நெருப்புத் தழல் சீகோன் நகரிலிருந்தும் சென்றது; அது மோவாபிலுள்ள அர் நகரையும் அர்னோன் மேடுகளிலுள்ள தலைவர்களையும் விழுங்கிவிட்டது. 29 மோவாபு! உனக்கு ஐயோ கேடு; கெமொசின் மக்களே, உங்களுக்கு முடிவு வந்துவிட்டது; எமோரிய அரசன் சீகோனுக்கு கெமோசின் காரணமாய் அவன் புதல்வர் புறங்காட்டி ஓடினர்; அவன் புதல்வியர் சிறைக் கைதிகளாயினர்; 30 எனவே எஸ்போன் முதல் தீபோன் வரை அழிந்தது; மேதபா வரையுள்ள நோபுபாக்குப் பகுதியைப் பாழாக்கினோம்.” 31 இவ்வாறு, இஸ்ரயேல் எமோரியர் நாட்டில் தங்கிற்று. 32 பின்னர், யாசேரை உளவு பார்க்கும்படி மோசே ஆளனுப்பினார்; அவர்கள் அதன் கிராமங்களைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்தி விட்டனர். 33 அதன் பிறகு அவர்கள் திரும்பிப் பாசான் நெடுஞ்சாலை வழியாகப் போனார்கள்; பாசான் மன்னன் ஓகு என்பவனும் அவன் மக்கள் அனைவரும், எதிரேயி என்னுமிடத்தில் போர் புரியும்படி அவர்களுக்கு எதிராக வந்தனர். 34 ஆனால், ஆண்டவர் மோசேயிடம், “அவனுக்கு அஞ்ச வேண்டாம், நான் அவனையும் அவன் மக்கள் அனைவரையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைத்து விட்டேன்; நீ எஸ்போனில் வாழ்ந்த எமோரியர் மன்னன் சீகோனுக்குச் செய்தது போல இவனுக்கும் செய்வாய்” என்றார். 35 அங்ஙனமே, அவர்கள் அவனையும் அவன் புதல்வரையும் அவன் மக்கள் அனைவரையும் ஒருவர் கூட எஞ்சியிராதபடி கொன்றொழித்தனர்; அவன் நாட்டையும் அவர்கள் கைப்பற்றினர். 21:1 எண் 33:40. 21:4 இச 2:1. 21:5-6 1 கொரி 10:9. 21:9 2 அர 18:4; யோவா 3:14. 21:28-29 எரே 48:45-46. 21:3 எபிரேயத்தில், ‘அழிவு’ என்பது பொருள். 21:6 எபிரேயத்தில், ‘சேராபின்கள்’ எனவும் பொருள்படும்.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-21
138
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 22 – திருவிவிலியம்
பிலயாமுக்காக மோவாபு மன்னன் ஆளனுப்புதல் 1 அதன் பின்னர், இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு யோர்தானுக்கு அக்கரையில் எரிகோவுக்கு அருகிலுள்ள மோவாபிய சமவெளிகளில் பாளையமிறங்கினார்கள். 2 சிப்போர் மகன் பாலாக்கு இஸ்ரயேல் எமோரியருக்குச் செய்திருந்த அனைத்தையும் கண்டான். 3 இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை முன்னிட்டு மோவாபு பெரிதும் கலங்கிற்று; அம்மக்களைப் பற்றிய அச்சம் மோவாபை மேற்கொண்டது. 4 மோவாபு மிதியானின் மூப்பர்களிடம், “மாடு வயல்வெளியில் புல்லை வேரற மேய்வது போல் இக்கும்பலும் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மேய்ந்துவிடும்” என்று கூறிற்று. அச்சமயம் மோவாபிய மன்னன், சிப்போர் மகன் பாலாக்கு. 5 அவன் பெத்தோரைச் சார்ந்த பெகோரின் மகன் பிலயாமை அழைத்துவரத் தூதரை அனுப்பினான்; அந்த இடம் ஆமாபு நாட்டின் ஆற்றருகே இருந்தது. அவன் கூறியது:“ இதோ ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது; அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் எனக்கு எதிரில் குடியேறியிருக்கிறார்கள். 6 இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக இம்மக்களைச் சபித்துவிடும்; அவர்கள் என்னிலும் மிகவும் வலிமை மிக்கவராய் இருக்கின்றனர்; ஒரு வேளை நான் அவர்களை முறியடித்து நாட்டிலிருந்து துரத்தக்கூடும்; ஏனெனில், நீர் எவனுக்கு ஆசி வழங்குவீரோ அவன் ஆசிபெறுவான், நீர் எவனைச் சபிப்பீரோ அவன் சாபம் அடைவான் என்று நான் அறிவேன்.” 7 அங்ஙனமே, மோவாபு மூப்பரும் மிதியான் மூப்பரும் குறிசொல்வதற்கான கட்டணத்தையும் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போயினர். அவர்கள் பிலயாமிடம் வந்து பாலாக்கு அனுப்பிய செய்தியைச் சொன்னார்கள். 8 அவர் அவர்களிடம், “இந்த இரவில் இங்குத் தங்கியிருங்கள்; ஆண்டவர் என்னோடு பேசுகிறபடி நான் உங்களுக்கு வார்த்தை தருவேன்” என்றார். அவ்வாறே மோவாபின் தலைவர்கள் பிலயாமுடன் தங்கினார்கள். 9 கடவுள் பிலயாமிடம் வந்து, “உன்னோடிருக்கிற இந்த ஆள்கள் யார்?” என்று கேட்டார். 10 பிலயாம் கடவுளிடம், “மோவாபின் மன்னனான சிப்போர் மகன் பாலாக்கு என்னிடம் அனுப்பியுள்ளான்; 11 ‘இதோ! ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது; அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்; இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக அவர்களைச் சபித்துவிடும்; ஒரு வேளை நான் அவர்களுடன் போரிட்டு அவர்களை நாட்டிலிருந்து துரத்திவிடக்கூடும்’ என்று கூறியனுப்பியுள்ளான்” என்றார். 12 கடவுள் பிலயாமிடம், “நீ அவர்களோடு போக வேண்டாம்; அம்மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; ஏனெனில், அவர்கள் ஆசி பெற்றோர்” என்று கூறினார். 13 அப்படியே பிலயாம் காலையில் எழுந்து பாலாக்கு அனுப்பிய தலைவர்களிடம், “உங்கள் சொந்த நாட்டுக்குப் போங்கள்; நான் உங்களோடு வருவதற்கு ஆண்டவர் அனுமதி மறுத்துவிட்டார்” என்று சொன்னார். 14 அதன்படி மோவாபின் தலைவர்கள் எழுந்து பாலாக்கிடம் போய், “பிலயாம் எங்களுடன் வர மறுக்கிறார்” என்றார்கள். 15 மீண்டும் பாலாக்கு அவர்களைவிட மதிப்பில் உயர்ந்த இன்னும் பல தலைவர்களை அனுப்பினான். 16 அவர்கள் பிலயாமிடம் வந்து, “சிப்போர் மகன் பாலாக்கு கூறுவது, “என்னிடம் நீர் வருவதைத் தடுக்க எதற்கும் இடம் கொடாதேயும்; 17 உறுதியாக நான் உமக்கு மிகுந்த மரியாதை செய்வேன்; நீர் எனக்குச் சொல்லுவதையெல்லாம் நான் செய்வேன்; வாரும், இந்த மக்களை எனக்காகச் சபியும்’” என்றனர். 18 ஆனால், பிலயாம் பாலாக்கின் அலுவலர்களிடம் பதில் மொழியாகக் கூறியது: பாலாக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் எனக்குத் தந்தாலும் என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையைக் குறைவாகவோ கூடுதலாகவோ என்னால் மீற முடியாது; 19 இன்றிரவு நீங்கள் தங்கிச் செல்லுங்கள்; ஆண்டவர் கூடுதலாக எனக்கு அறிவிக்கலாம். 20 கடவுள் இரவில் பிலயாமிடம் வந்து அவரிடம், “இந்த ஆள்கள் உன்னை அழைக்க வந்தால் நீ எழுந்து அவர்களுடன் போ; ஆயினும் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்” என்றார். 21 அங்ஙனமே, பிலயாம் காலையில் எழுந்து தம் கழுதைக்குச் சேணங்கட்டி மோவாபின் தலைவர்களோடு போனார். பிலயாமும் அவர் கழுதையும் 22 ஆயினும், அவர் போனதை முன்னிட்டுக் கடவுளின் சினம் மூண்டது; ஆண்டவரின் தூதர் வழியிலே அவருக்கு எதிரியாக நின்றார். அப்போது அவர் தம் கழுதைமேல் ஏறித் தம் பணியாளர் இருவருடன் சென்று கொண்டிருந்தார். 23 ஆண்டவரின் தூதர் கையில் உருவிய வாளுடன் பாதையில் நின்றுகொண்டிருப்பதைக் கழுதை கண்டது; எனவே, கழுதை பாதையை விட்டு விலகி வயலுக்குள் சென்றது; பாதைக்கு அது திரும்பும்படி பிலயாம் கழுதையை அடித்தார். 24 அடுத்து, ஆண்டவரின் தூதர் திராட்சைத் தோட்டங்களிடையே இருபுறமும் சுவர்களுள்ள ஒரு குறுகிய பாதையில் நின்றார். 25 ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை சுவரில் முட்டிப் பிலயாம் காலைச் சுவரோடு நெருக்கியது; ஆதலால், அதை அவர் மறுபடியும் அடித்தார். 26 பின் ஆண்டவரின் தூதர் முன்னதாகவே சென்று வலப்புறமோ இடப்புறமோ திரும்ப முடியாத ஒரு குறுகிய இடத்தில் நின்றார். 27 ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை பிலயாமுக்கு அடியில் படுத்துக்கொண்டது; பிலயாம் சினம் கொண்டு தம் கோலால் கழுதையை அடித்தார். 28 உடனே ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது அவரிடம், “நீர் மூன்று முறை இவ்வாறு என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்?” என்றது. 29 பிலயாம் கழுதையிடம், “நீதான் என்னை ஏளனம் செய்து கொண்டிருக்கிறாய்; என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்தால் உன்னை இந்நேரம் கொன்றிருப்பேன்” என்றார். 30 கழுதை பிலயாமிடம், “நான் உம் கழுதையன்றோ? இன்றுவரை உம் வாழ்நாளெல்லாம் என் மீது ஏறி வந்துள்ளீரே! எப்போதாவது நான் இப்படிச் செய்து பழக்கமுண்டா?” என்றது, அதற்கு அவர், “இல்லை” என்றார். 31 ஆண்டவர் பிலயாமின் கண்களைத் திறந்தார், கையில் உருவிய வாளுடன் ஆண்டவரின் தூதர் பாதையில் நின்றுகொண்டிருப்பதை அவர் கண்டார்; அவர் தலை வணங்கி முகங்குப்புற விழுந்தார். 32 ஆண்டவரின் தூதர் அவரிடம் கூறியது: “ஏன் மூன்று முறை இவ்வாறு கழுதையை அடித்தாய்? இதோ நான் உனக்கு எதிரியாக வந்திருக்கிறேன்; ஏனெனில், என் பார்வையில் உன் வழி தவறானது. 33 இந்தக் கழுதை என்னைக் கண்டு இந்த மூன்று முறையும் என் முன்னின்று திரும்பி விலகியது. அது என் முன்னின்று திரும்பி விலகாதிருந்தால் உறுதியாக இப்போதே உன்னை நான் கொன்று, அதை வாழ விட்டிருப்பேன்.” 34 பிலயாம் ஆண்டவரின் தூதரிடம், “நான் பாவம் செய்துவிட்டேன்; நீர் பாதையிலே எனக்கு எதிராக நின்றதை நான் அறிந்து கொள்ளவில்லை; எனவே, இப்போதும் இது உம் பார்வையில் தீயதாக இருப்பின் நான் திரும்பிப் போய்விடுகிறேன்” என்றார். 35 ஆண்டவரின் தூதர் பிலயாமிடம், “இந்த ஆள்களுடன் நீ போ; ஆயினும், நான் சொல்லும் வார்த்தையை மட்டுமே நீ பேச வேண்டும்” என்றார். அவ்வாறே, பிலயாம் பாலாக்கு அனுப்பிய தலைவர்களுடன் போனார். பாலாக்கு பிலயாமை வரவேற்றல் 36 பிலயாம் வந்திருப்பதைப் பாலாக்கு கேட்டதும் அவரைச் சந்திக்கும்படி அவன் மோவாபு நகருக்குப் புறப்பட்டுப்போனான்; அது அர்னோன் எல்லையின் இறுதியில் இருந்தது. 37 பாலாக்கு பிலயாமிடம், “நான் உம்மை அழைத்து வர ஆளனுப்பவில்லையா? பின்னர் ஏன் நீர் வரவில்லை? உமக்கு மரியாதை செய்ய நான் இயலாதவனோ?” என்று கேட்டான். 38 பிலயாம் பாலாக்கிடம், “இதோ நான் உம்மிடம் வந்துள்ளேன்; நானாக எதையும் பேச இப்போது என்னால் இயலாதே! கடவுள் என் வாயில் வைக்கும் வார்த்தையாலேயே நான் பேச வேண்டும்” என்றார். 39 அதன்பின், பிலயாம் பாலாக்குடன் போனார்; அவர்கள் கிர்யத்து குசோத்துக்கு வந்தனர். 40 பாலாக்கு ஆடு மாடுகளைப் பலியிட்டு அவற்றிலிருந்து பிலயாமுக்கும் அவரோடிருந்த தன் அலுவலர்க்கும் கொடுத்தடுப்பினான். பிலயாமின் முதல் உரை 41 மறுநாள் பாலாக்கு பிலயாமை பாமோத்து பாகாலுக்குக் கூட்டிக் கொண்டு வந்தார்; அங்கிருந்து அவன் இஸ்ரயேல் மக்களில் மிகவும் அண்மையிலிருந்தோரைப் பார்த்தான். 22:5 எண் 31:8; 2 பேது 2:15-16; யூதா 11.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-22
139
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 23 – திருவிவிலியம்
1 பிலயாம் பாலாக்கிடம், “எனக்காக இங்கு ஏழு பலி பீடங்களை எழுப்பும்; எனக்காக இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் தாரும்” என்றார். 2 பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்தான்; பிலயாமும் பாலாக்கும் ஒவ்வொரு பலி பீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டனர். 3 பிலயாம், பாலாக்கைப் பார்த்து, “உம் எரிபலியருகே நின்று கொள்ளும்; நான் போகிறேன்; அவர் எதையெல்லாம் எனக்குக் காண்பிக்கிறாரோ அதை உமக்கு அறிவிப்பேன்” என்றார். பின் அவர் மொட்டை மேடு நோக்கிப் போனார். 4 கடவுள் பிலயாமைச் சந்தித்தார். பிலயாம் அவரிடம், “நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் செய்து ஒவ்வொரு பலிபீடத்தின் மேலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டுள்ளேன்” என்றார். 5 ஆண்டவர் ஒரு வார்த்தையை பிலயாமின் வாயில் வைத்து அவரிடம், “பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு” என்றார். 6 அவர் அவனிடம் திரும்பிப் போகையில் அவன் மோவாபின் எல்லாத் தலைவர்களோடும் தன் எரிபலியருகில் நின்று கொண்டிருந்தான். 7 பிலயாம் திருஉரையாகக் கூறியது: “ஆராமிலிருந்து பாலாக்கு, கீழை மலைகளிலிருந்து மோவாபின் மன்னன், என்னைக் கொண்டு வந்துள்ளான். ‘வா, எனக்காக யாக்கோபைச் சபி! வா, இஸ்ரயேலைப் பழித்துரை!’ என்கிறான். 8 கடவுள் சபிக்காதவனை நான் எப்படிச் சபிப்பேன்? கடவுள் பழித்துரைக்காதவனை நான் எப்படிப் பழித்துரைப்பேன்? 9 மலைகளின் உச்சியிலிருந்து நான் அவனை நோக்குகிறேன்; குன்றுகளிலிருந்து நான் அவனைப் பார்க்கிறேன்; இதோ! தனியாக வாழ்கின்றதொரு மக்கள் கூட்டம். இது வேற்றினத்தாரோடு தன்னையும் ஓர் இனமாய்க் கொள்ளவில்லை; 10 யாக்கோபின் தூசியை எண்ணிக்கையிடவோ இஸ்ரயேலின் கால் பங்கைக் கணக்கெடுக்கவோ யாரால் இயலும்? நான் நேர்மையாளர் இறப்பை அடைவேனாக! என் முடிவும் அவர் போன்று இருப்பதாக!” 11 பின்னர், பாலாக்கு பிலயாமிடம், “நீர் என்ன எனக்கு இப்படிச் செய்துவிட்டீர்! என் எதிரிகளைச் சபிக்கும்படி நான் உம்மைக் கொண்டுவந்தேன்; ஆனால் இதோ! நீர் அவர்களுக்கு ஆசிமேல் ஆசி வழங்குகிறீர்!” என்றான். 12 அதற்கு மறுமொழியாக அவர், “ஆண்டவர் என் வாயில் வைத்ததைப் பேசுவது என் கடமையன்றோ?” என்றார். பிலயாமின் இரண்டாம் உரை 13 பாலாக்கு அவரிடம், “வேறோர் இடத்திற்கு என்னோடு வாரும்; அங்கிருந்து நீர் அவர்களில் எல்லாரையும் பார்க்காமல், அண்மையிலிருப்போரையே பார்ப்பீர்; பின்பு, எனக்காக அவர்களை அங்கிருந்து சபியும்” என்றான்; 14 அவ்வாறே, பாலாக்கு அவரைப் பிஸ்காவின் கொடுமுடிவில் சோபிம் வயல்வெளிக்குக் கொண்டு போனான்; அங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான். 15 பிலயாம் பாலாக்கிடம், “நான் அப்பால் ஆண்டவரைச் சந்திக்கையில் நீர் உம் எரிபலியருகில் நின்றுகொள்ளும்” என்றார். 16 ஆண்டவர் பிலயாமைச் சந்தித்தார்; அவர் அவரது வாயில் ஒரு வார்த்தையை வைத்து, “பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு” என்று சொன்னார். 17 அவர் அவனிடம் வந்தபொழுது, அவன் தன் எரிபலியருகில் நின்றுகொண்டிருந்தான்; மோவாபின் தலைவர்களும் அவனோடிருந்தார்கள். பாலாக்கு அவரிடம், “ஆண்டவர் என்ன உரைத்துள்ளார்?” என்று கேட்டான். 18 பிலயாம் திருஉரையாகக் கூறியது: “பாலாக்கு, எழுந்து கேள்; சிப்போர் மகனே, எனக்குச் செவிகொடு. 19 பொய் சொல்வதற்குக் கடவுள் மனிதன் அல்லர்; மனத்தை மாற்றிக்கொள்ள ஒரு மனிதப் பிறவியும் அல்லர். அவர் சொல்லியதைச் செய்யாமலிருப்பாரா? அல்லது உரைத்ததை நிறைவேற்றிமலிருப்பாரா? 20 இதோ, நான் ஆசி கூறவே ஒரு கட்டளை பெற்றேன்; அவர் ஆசி பொழிந்துள்ளார்; அதை என்னால் மாற்றியமைக்க இயலாது. 21 யாக்கோபில் தீங்கினை அவர் கண்டதில்லை! இஸ்ரயேலில் துயரத்தை அவர் பார்த்ததுமில்லை! ஆண்டவராம் கடவுள் அவர்களோடிருக்கிறார்? ஓர் அரசனின் பெருமுழக்கம் அவர்களிடையே உண்டு. 22 எகிப்திலிருந்து இறைவன் அவர்களை வெளிக்கொணர்கின்றார்; காண்டாமிருகத்தின் கொம்புகள் அவர்களுக்கு உண்டு. 23 யாக்கோபுக்கு எதிரான மந்திர மாயம் ஏதுமில்லை. இஸ்ரயேலுக்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை; யாக்கோபையும் இஸ்ரயேலையும் பற்றி இப்போது சொல்லப்படுவது; “எத்துணை அரியன ஆற்றியுள்ளார் கடவுள்! 24 இதோ, ஒரு மக்களினம்; அது ஒரு பெண் சிங்கம் போன்று எழும்புகிறது; ஒரு சிங்கம் போன்று அது தன்னை உயர்த்துகிறது. இரையை விழுங்கி, கொலையுண்டதின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் அது படுப்பதில்லை.” 25 பாலாக்கு பிலாயாமிடம், “ஒருபோதும் நீர் அவர்களைச் சபிக்க வேண்டாம். ஒருபோதும் அவர்களுக்கு ஆசி கூறவும் வேண்டாம்” என்றான். 26 ஆனால், பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாக, “ஆண்டவர் சொல்கிறபடியெல்லாம் செய்வேனென்று நான் உம்மிடம் சொல்லவில்லையோ?” என்றார். பிலயாமின் மூன்றாம் உரை 27 பின்னர், பாலாக்கு பிலயாமிடம், “மீண்டும் வாரும், நான் உம்மை வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்வேன். ஒருவேளை நீர் எனக்காக அங்கிருந்து அவர்களைச் சபிப்பது கடவுளுக்கு உகந்ததாயிருக்கும்” என்றான். 28 அங்ஙனமே, பாலாக்கு பிலயாமைப் பெகோரின் கொடுமுடிக்குக் கொண்டு போனான்; அது பாலை நிலத்தை நோக்கியவாறு அமைந்திருந்தது. 29 பிலயாம் பாலாக்கிடம், “எனக்காக இங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டும்; எனக்கு இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் ஏற்பாடு செய்யும்” என்றார். 30 பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்து ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான்.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-23
140
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 24 – திருவிவிலியம்
1 இஸ்ரயேலுக்கு ஆசி கூறுவதே ஆண்டவருக்கு விருப்பம் என்று பிலயாம் கண்டபோது, முன்பு செய்தது போன்று அவர் சகுனம் பார்க்கச் செல்லாமல், தம் முகத்தைப் பாலைநிலத்துக்கு நேரே திருப்பினார். 2 பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது. 3 அவர் திருஉரையாகக் கூறியது: “பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! 4 கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி! 5 யாக்கோபே! உன் கூடாரங்களும் இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை! 6 அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை; ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை; நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை. 7 அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்; அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்; அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்; அவனது அரசு உயர்த்தப்படும். 8 கடவுள் அவனை எகிப்திலிருந்து கொண்டு வருகிறார்; காண்டா மிருகத்தின் கொம்புகள் அவனுக்குண்டு; அவன் தன் எதிரிகளாகிய வேற்று இனத்தவரை விழுங்கிவிடுவான்; அவர்கள் எலும்புகளைத் தூள் தூளாக நொறுக்குவான்; அவர்களைத் தன் அம்புகளால் ஊடுருவக் குத்துவான்; 9 அவன் துயில் கொண்டான்; சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்; அவனை எழுப்பி விடுவோன் யார்? உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்; எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்!” 10 எனவே,பிலயாம் மீது பாலாக்கு கடும் சினம் கொண்டு தன் கைகளைத் தட்டி பிலயாமிடம், “என் எதிரிகளைச் சபிக்கவே நான் உம்மை அழைத்தேன்; ஆனால், நீர் இம்மூன்று முறையும் அவர்களுக்கு ஆசி கூறியுள்ளீர்; 11 எனவே, உடனே உம் இடத்துக்கு ஓடிவிடும்; “உமக்கு உறுதியாக மரியாதை செய்வேன்” என்று சொல்லியிருந்தேன்; ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார்” என்றான். 12 பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாகக் கூறியது: “நீர் என்னிடம் அனுப்பிய உம் தூதரிடம் நான் சொல்லவில்லையா? 13 பாலாக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் ஆண்டவரின் வார்த்தையை மீறிச் சென்று என் விருப்பப்படி நன்மையோ தீமையோ செய்ய இயலாது; ஆண்டவர் பேசுவதையே நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா?” 14 இப்போது நான் என் மக்களிடம் போகிறேன்; வாரும், பிற்காலத்தில் இம்மக்கள் உம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று உமக்குத் தெரிவிப்பேன்” என்றார். பிலயாமின் இறுதி உரைகள் 15 அவர் திரு உரையாகக் கூறியது: “பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! 16 கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றலுடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி! 17 நான் அவரைக் காண்பேன்; ஆனால், இப்போதன்று; நான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று; யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்! அது மோவாபின் நெற்றிப் பிறையை நசுக்கும்; சேத்தின் புதல்வர் அனைவரையும் அழித்துவிடும். 18 அவன் எதிரியான ஏதோம் பாழாகி விடும்; சேயிரும் கைப்பற்றப்படும்; இஸ்ரயேலோ வலிமையுடன் செயல்படும். 19 யாக்கோபு ஆளுகை செய்வான்; நகர்களில் எஞ்சியிருப்போர் அழிக்கப்படுவர்.” 20 பின் அவர் அமலேக்கைப் பார்த்துத் திருவுரையாகக் கூறியது: “வேற்றினங்களில் முதன்மை யானவன் அமலேக்கு; இறுதியில் அவன் அழிந்துபோவான்.” 21 அடுத்துக் கேனியனை நோக்கித் திருவுரையாக் கூறியது: “உன் வாழ்விடம் உறுதியானது; உன் கூடு பாறையில் அமைந்துள்ளது; 22 ஆயினும், கேனியன் பாழாய்ப் போவான்; அசீரியர் உன்னைச் சிறைப் பிடித்துச் செல்ல எவ்வளவு காலந்தான் ஆகும்?” 23 பின்னும் அவர் திருவுரையாகக் கூறியது: அந்தோ, கடவுள் இதனைச் செய்யும்போது எவன்தான் பிழைப்பான்? 24 கித்திம் தன் கப்பல்களால் அசீரியாவையும் ஏபேரையும் துன்புறுத்துவான்” 25 பின்பு, பிலயாம் எழுந்து தம் இடத்துக்குத் திரும்பினார்; பாலாக்கும் தன்வழியே சென்றான்! 24:9 தொநூ 12:3; 49:9.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-24
141
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 25 – திருவிவிலியம்
பெகோரில் இஸ்ரயேல் மக்கள் 1 இஸ்ரயேல் சித்திமில் தங்கியிருந்தபோது மக்கள் மோவாபின் புதல்வியரோடு முறைகேடாக நடக்கத் தொடங்கினர். 2 அவர்கள் தங்கள் தெய்வங்களின் பலிகளில் பங்கேற்க மக்களை அழைத்தனர்; மக்கள் உண்டு அவர்கள் தெய்வங்களைப் பணிந்து வணங்கினர். 3 இங்ஙனம், இஸ்ரயேல் பாகால்பெகோரை அடிபணிந்தது; எனவே, ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது. 4 ஆண்டவர் மோசேயிடம், “மக்களின் தலைவர்கள் அனைவரையும் கொண்டு வந்து பட்டப்பகலில் ஆண்டவர் முன் தூக்கிலிடு. அதனால் ஆண்டவர் கடுஞ்சினம் இஸ்ரயேலை விட்டு நீங்கும்” என்று கூறினார். 5 மோசே இஸ்ரயேலின் தலைவர்களிடம், “உங்கள் ஒவ்வொருவரும் பாகால் பெகோரை அடிபணிந்த தம் ஆள்களைக் கொன்று விடுங்கள்” என்றார். 6 மேலும், இஸ்ரயேல் மக்கள் சந்திப்புக் கூடார வாயிலில் அழுது கொண்டிருந்தபொழுது அவர்களில் ஒருவன் மிதியானியப் பெண்ணொருத்தியைத் தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தான்; இது மோசேயின் பார்வையிலும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவர் பார்வையிலும் நடந்தது. 7 குரு ஆரோன் மகன் எலயாசரின் புதல்வன் பினகாசு இதனைப் பார்த்ததும் அவன் மக்கள் கூட்டமைப்பை விட்டு எழுந்து தன் கையில் ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான். 8 அவன் அந்த இஸ்ரயேல் மனிதனின் பின்னே உள்ளறைக்குச் சென்று அந்த இஸ்ரயேல் மனிதனையும் அந்தப் பெண்ணையும் சேர்த்து அவள் வயிறு வழியே ஊடுருவக் குத்தினான். இதனால், இஸ்ரயேல் மக்களிடையே கொள்ளைநோய் அகன்றது. 9 எனினும், அக்கொள்ளை நோயால் இறந்தோர் இருபத்து நான்காயிரம் பேர். 10 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 11 குரு ஆரோன் மகன் எலயாசரின் புதல்வன் பினகாசு இஸ்ரயேல் மக்களிடமிருந்து என் சினத்தை அகற்றி விட்டான்; நான் அவர்கள் மீது கொண்டிருந்த அன்பின் வெறியை அவனும் காட்டிவிட்டான்; ஆகவே, என் பேரார்வத்தால் இஸ்ரயேல் மக்களை நான் முற்றிலும் அழித்து விடவில்லை. 12 எனவே, நீ சொல்ல வேண்டியது: “இதோ என் நல்லுறவு உடன்படிக்கையை அவனுக்குக் கொடுக்கிறேன்; 13 அது அவனுக்கும் அவனுக்குப் பின் அவன் வழித்தோன்றல்களுக்கும் நிலையான குருத்துவத்தின் உடன்படிக்கையாயிருக்கும்; அவன் தன் கடவுள் மீது பேரார்வம் கொண்டிருந்ததால் இஸ்ரயேல் மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தான்” 14 மிதியானியப் பெண்ணுடன் சேர்த்துக் கொல்லப்பட்ட இஸ்ரயேலன் பெயர் சிம்ரி; இவன் சிமியோன் குலத்தைச் சார்ந்த மூதாதையர் வீட்டுத் தலைவனான சாலூவின் மகன்; 15 கொல்லப்பட்ட அந்த மிதியானியப் பெண்ணின் பெயர் கோசுபி; இவள் மிதியானில் மூதாதையர் வீடொன்றுக்குத் தலைவனான சூரின் மகள். 16 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 17 “மிதியானியரைத் தாக்கி அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்; 18 ஏனெனில், அவர்களும் தங்கள் சூழ்ச்சிகளால் உங்களை ஏமாற்றினார்கள்; இதனால், பெகோரை முன்னிட்டு மிதியான் தலைவனின் மகளாகிய அவர்கள் சகோதரி கோசுபியின் காரியத்திலும் அவர்கள் உங்களைக் கெடுத்து விட்டார்கள். பெகோரை முன்னிட்டு ஏற்பட்ட கொள்ளை நோய்க் காலத்தில் அவள் கொல்லப்பட்டாள்.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-25
142
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 26 – திருவிவிலியம்
இரண்டாம் கணக்கெடுப்பு 1 அந்தக் கொள்ளை நோய்க்குப் பின்பு ஆண்டவர் மோசேயிடமும் குரு ஆரோன் மகன் எலயாசரிடமும், 2 “இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதிலும் இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள போருக்குச் செல்லத்தக்க இஸ்ரயேலின் ஆண் மக்கள் அனைவரையும் அவர்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் கணக்கெடுங்கள்” என்றார். 3 மோசேயும் குரு எலயாசரும் எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபு சமவெளியில் அவர்களிடம், 4 “ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இருபது வயதும் அதற்கு மேலுமுள்ளவர்களைக் கணக்கெடுங்கள்” என்று கூறினர். எகிப்து நாட்டிலிருந்து வெளியேறி வந்த இஸ்ரயேலின் ஆண் மக்கள் பின்வருமாறு; 5 ரூபன் இஸ்ரயேலின் தலைமகன். ரூபன் புதல்வர்; அனோக்கு, அனோக்கு வீட்டார்; பல்லூ, பல்லூ வீட்டார்; 6 எட்சரோன், எட்சரோன் வீட்டார், கர்மி, கர்மி வீட்டார், 7 ரூபன் குடும்பங்கள் இவைகளே. இவற்றில் எண்ணப்பட்டோர் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பது பேர். 8 பல்லூ புதல்வர் எலியாபு. 9 எலியாபு புதல்வர்; நெமுவேல், தாத்தான், அபிராம். கோராகின் கூட்டத்தார் ஆண்டவருடன் வாக்குவாதம் செய்தபோது மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகப் போராடுமாறு மக்கள் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்த தாத்தானும் அபிராமும் இவர்களே. 10 அப்போது நிலம் வாயைத் திறந்து கோராகுடன் சேர்ந்து அவர்களை விழுங்கியது. நெருப்பு இருநூற்றைம்பது பேரைக் கவ்வியது; அக்கூட்டம் மாண்டது; இவ்வாறு, அவர்கள் ஓர் எச்சரிப்பாயினர். 11 ஆனால், கோராகு புதல்வர் மடியவில்லை. 12 தங்கள் குடும்பங்கள் வாரியாகச் சிமியோன் புதல்வர்; நெமுவேல், நெமுவேல் வீட்டார்; யாமீன், யாமீன் வீட்டார்; யாக்கின், யாக்கின் வீட்டார்; 13 செராகு, செராகின் வீட்டார்; சாவூல், சாவூல் வீட்டார்; 14 சிமியோன் குடும்பங்கள் இவையே. இவர்கள் இருபத்து இரண்டாயிரத்து இருநூறு பேர். 15 தங்கள் குடும்பங்கள் வாரியாக காத்துப் புதல்வர்; செப்போன், செப்போன் வீட்டார்; அக்கி, அக்கி வீட்டார்; சூனி, சூனி வீட்டார்; 16 ஒசுனீ, ஒசுனீ வீட்டார்; ஏரி, ஏரி வீட்டார்; 17 அரோது, அரோது வீட்டார்; அரேலி, அரேலி வீட்டார். 18 அவர்கள் எண்ணிக்கைப்படி காத்துப் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் நாற்பதாயிரத்து ஐந்நூறு பேர். 19 யூதாவின் புதல்வர் ஏர், ஓனான் என்போர்; ஏர், ஓனான் ஆகியோர் கானான் நாட்டில் இறந்தனர். 20 தங்கள் குடும்பங்கள் வாரியாக யூதாவின் புதல்வர்; சேலா, சேலா வீட்டார்; பெரேட்சு, பெசேட்சு வீட்டார்; செராகு, செராகு வீட்டார். 21 பெரேட்சின் புதல்வர்; எட்சரோன், எட்சரோன் வீட்டார்; ஆமூல், ஆமூல் வீட்டார்; 22 அவர்கள் எண்ணிக்கைப்படி யூதாவின் குடும்பங்கள் இவையே. அவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறு பேர். 23 தங்கள் குடும்பங்கள் வாரியாக இசக்கார் புதல்வர்; தோலா, தோலா வீட்டார்; பூவா, பூவா வீட்டார்; 24 யாசூபு, யாசூபு வீட்டார்; சிம்ரோன், சிம்ரோன் வீட்டார். 25 அவர்கள் எண்ணிக்கைப்படி இசக்கார் குடும்பங்கள் இவையே. அவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறு பேர். 26 தங்கள் குடும்பங்கள் வாரியாக செபுலோன் புதல்வர்; செரேது, செரேது வீட்டார்; ஏலோன், ஏலோன் வீட்டார்; யாகுலவேல், யாகுலவேல் வீட்டார். 27 அவர்கள் எண்ணிக்கைப்படி செபுலோன் குடும்பங்கள் இவையே. அவர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு பேர். 28 தங்கள் குடும்பங்கள் வாரியாக யோசேப்புப் புதல்வர் மனாசேயும் எப்ராயிமும் ஆவர். 29 மனாசே புதல்வர்; மாக்கிர், மாக்கிர் வீட்டார்; மாக்கிர் கிலயாதின் தந்தை; கிலயாது, கிலயாது வீட்டார். 30 கிலயாது புதல்வர் இவர்களே; இயசேர், இயசேர் வீட்டார்; ஏலேக்கு, ஏலேக்கு வீட்டார்; 31 அசிரியேல், அசிரியேல் வீட்டார்; செக்கேம், செக்கேம் வீட்டார்; 32 செமிதா, செமிதா வீட்டார்; ஏபேர், ஏபேர் வீட்டார். 33 ஏபேர் மகன் செலோபுகாதுக்குப் புதல்வர்கள் இல்லை; ஆனால் புதல்வியர் இருந்தனர்; செலோபுகாதின் புதல்வியர் பெயர்கள்; மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா. 34 மனாசேயின் குடும்பங்கள் இவைகளே. அவர்கள் தொகை ஐம்பத்தீராயிரத்து எழுநூறு. 35 தங்கள் குடும்பங்கள் வாரியாக எப்ராயிம் புதல்வர் இவர்களே; சுத்தேலாகு, சுத்தேலாகு வீட்டார்; பெக்கேர், பெக்கேர் வீட்டார்; தகான், தகான் வீட்டார். 36 சுத்தேலாகின் புதல்வர், ஏரானும் ஏரான் வீட்டாருமே. 37 அவர்கள் எண்ணிக்கைப்படி எப்ராயிம் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் முப்பத்தீராயிரத்து ஐந்நூறு பேர். ஆக மொத்தம் தங்கள் குடும்பங்கள் வாரியாக யோசேப்புப் புதல்வர் இவர்களே. 38 தங்கள் குடும்பங்கள் வாரியாகப் பென்யமின் புதல்வர்; பேலா, பேலா வீட்டார், அசுபேல், அசுபேல் வீட்டார்; அகிராம், அகிராம் வீட்டார்; 39 செபூபாம், செபூபாம் வீட்டார்; கூபாம், கூபாம் வீட்டார்; 40 பேலா புதல்வர் அருது, நாமான் என்போரே; அருது, அருது வீட்டார்; நாமான், நாமான் வீட்டார். 41 தங்கள் குடும்பங்கள் வாரியாகப் பென்யமின் புதல்வர் இவர்களே. அவர்கள் தொகை நாற்பத்தையாயிரத்து அறுநூறு. 42 தங்கள் குடும்பங்கள் வாரியாக தாண் புதல்வர் இவர்களே; சூகாம், சூகாம் வீட்டார். தங்கள் குடும்பங்கள் வாரியாக இவைகளே தாண் குடும்பங்கள். 43 அவர்கள் எண்ணிக்கைப்படி சூகாம் குடும்பத்தினர் அறுபத்து நாலாயிரத்து நானூறு பேர். 44 தங்கள் குடும்பங்கள் வாரியாக ஆசேர் புதல்வர்; இம்னா, இம்னா வீட்டார்; இசுவி, இசுவி வீட்டார்; பெரியா, பெரியா வீட்டார். 45 பெரியா புதல்வர்; எபேர், எபேர் வீட்டார்; மல்கியேல், மல்கியேல் வீட்டார். 46 ஆசேர் புதல்வி பெயர் செராகு. 47 அவர்கள் எண்ணிக்கைப்படி ஆசேர் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர். 48 தங்கள் குடும்பங்கள் வாரியாக நப்தலி புதல்வர்; யாகுட்சேல், யாகுட்சேல் வீட்டார்; கூனி, கூனி வீட்டார்; 49 எட்சேர், எட்சேர் வீட்டார், சில்லேம், சில்லேம் வீட்டார். 50 அவர்கள் எண்ணிக்கைப்படி நப்தலிக் குடும்பங்கள் இவையே. அவர்கள் தொகை நாற்பத்தையாயிரத்து நானூறு. 51 ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது. 52 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 53 பெயர்களின் எண்ணிக்கைக்குத்தக்கவாறு இவர்களுக்கு இந்த நாடு உரிமைச் சொத்தாகப் பங்கிடப்படும். 54 குலங்களுள் பெரியவற்றுக்குக் கூட்டியும், சிறியவற்றுக்குக் குறைத்தும் நீ அதனதன் உரிமைச் சொத்தைக் கொடுப்பாய். ஒவ்வொன்றுக்கும் அதன் தொகைக்கேற்ப உரிமைச் சொத்து வழங்கப்படும். 55 ஆயினும், திருவுளச் சீட்டு முறையிலேயே நாடு பங்கிடப்படும். அவர்கள் தங்கள் மூதாதையர் குலப்பெயர்கள் வாரியாக உரிமைச் சொத்தைப் பெறுவர். 56 பெரியவற்றுக்கும், சிறியவற்றுக்குமிடையே திருவுளச் சீட்டு முறைப்படி அதனதன் உரிமைச் சொத்து பங்கிடப்படும். 57 தங்கள் குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்ட லேவியர் இவர்களே; கேர்சோன், கேர்சோன் வீட்டார்; கெகாது, கெகாது வீட்டார்; மெராரி, மெராரி வீட்டார். 58 லேவி குடும்பங்களாவன; லிப்னி குடும்பம், எபிரோன் குடும்பம், மக்லி குடும்பம், மூசி குடும்பம், கோராகு குடும்பம். கெகாது அம்ராமின் தந்தை. 59 அம்ராம் மனைவி பெயர் யோக்கபெத்து. இவள் லேவி மகள்; லேவிக்கு எகிப்தில் பிறந்தவள். அம்ராமுக்கு இவள் ஆரோன், மோசே, அவர்களின் சகோதரி மிரியாம் ஆகியோரைப் பெற்றெடுத்தாள். 60 ஆரோனுக்குப் பிறந்தவர்கள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோர். 61 ஆனால், நாதாபும் அபிகூவும் ஆண்டவர் முன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்தபோது கொல்லப்பட்டனர். 62 லேவியருள் ஒரு மாதமும் அதற்கு மேலும் வயதுடைய ஆண்களில் எண்ணப்பட்டோர் இருபத்து மூவாயிரத்து பேர். இஸ்ரயேல் மக்களிடையே அவர்கள் பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில், இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு எந்த உரிமைச் சொத்தும் தரப்படவில்லை. 63 மோசேயாலும் குரு எலயாரசராலும் எண்ணப்பட்டோர் இவர்களே. அவர்கள் இஸ்ரயேல் மக்களை எரிகோவுக்கு எதிரே யோர்தானை அடுத்த மோவாபியச் சமவெளியில் எண்ணினார்கள். 64 ஆனால், சீனாய்ப் பாலை நிலத்தில் எண்ணப்பட்டிருந்த இஸ்ரயேல் மக்களில், அதாவது மோசேயாலும் குரு ஆரோனாலும் எண்ணப்பட்டோருள் எவரும் இவர்களிடையே இல்லை. 65 ஏனெனில், “அவர்கள் பாலைநிலத்தில் மடிந்து விடுவர்” என்று ஆண்டவர் சொல்லியிருந்தார். எபுன்னே புதல்வன் காலேபையும் நூன் புதல்வன் யோசுவாவையும் தவிர அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை. 26:52-56 எண் 34:13; யோசு 14:1-2. 26:60 எண் 3:2. 26:61 லேவி 10:1-2; எண் 3:4. 26:65 எண் 14:26-35.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-26
143
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 27 – திருவிவிலியம்
செலொபுகாதின் புதல்வியர் 1 யோசேப்புப் புதல்வரான மனாசே குடும்பங்களைச் சார்ந்தவர் செலொபுகாத்து. இவர் மனாசேயின் மைந்தர் மாக்கிரின் புதல்வர் கிலியாதுக்குப் பிறந்த ஏபேரின் மகன், இவருக்கு மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா என்ற புதல்வியர் இருந்தனர். 2 அவர்கள் வந்து மோசே, குரு எலயாசர், தலைவர்கள், மக்கள் கூட்டமைப்பினர் அனைவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலருகில் நின்று கூறியது: 3 எங்கள் தந்தை பாலை நிலத்தில் இறந்து போனார். கோராகைச் சார்ந்தவர்கள் ஆண்டவருக்கு எதிராகக் கூடிய கூட்டத்தினுள் அவர் இல்லை. அவர்தம் பாவத்துக்காகவே இறந்தார். அவருக்குப் புதல்வர்கள் இல்லை. 4 இப்போதும் தமக்குப் புதல்வர் இல்லாத காரணத்துக்காக எங்கள் தந்தையின் பெயர் அவர் குடும்பத்திலிருந்து ஏன் நீக்கப்பட வேண்டும்? எங்கள் தந்தையின் சகோதரர்களிடையே எங்களுக்கும் பங்கு தாருங்கள்.” 5 மோசே அவர்கள் வழக்கை ஆண்டவரிடம் கொண்டு வந்தார். 6 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 7 செலொபுகாதின் புதல்வியர் கேட்பது சரியே; அவர்கள் தந்தையின் சகோதரரிடையே அவர்களுக்கும் உரிமைச் சொத்தில் பங்கு கொடுத்து, அவர்கள் தந்தையின் உரிமைச் சொத்து அவர்களுக்குக் கிடைக்கச் செய். 8 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறு; மகன் இல்லாமலே ஒருவன் இறந்து விட்டால் அவன் உரிமைச் சொத்து அவன் மகளுக்குச் சேர வேண்டும். 9 அவனுக்கு மகளும் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்க வேண்டும். 10 அவனுக்குச் சகோதரரும் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் தந்தையின் சகோதரருக்குக் கொடுக்க வேண்டும். 11 அவன் தந்தைக்கும் சகோதரர் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் குடும்பத்தில் அவனுக்கடுத்த உறவினனுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் அதை உடைமையாக்கிக் கொள்வான். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இது இஸ்ரயேல் மக்களுக்கு நியமமாகவும், விதிமுறையாகவும் விளங்கும். மோசேக்குப் பதிலாக யோசுவா தேர்ந்தெடுக்கப்படல் (இச 31:1-8) 12 மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “இந்த அபாரிம் மலை மேல் ஏறிச் சென்று நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்துள்ள நாட்டைப் பார். 13 நீ அதைப் பார்த்த பின் உன் சகோதரன் ஆரோன் சேர்த்துக் கொள்ளப்பட்டது போன்று, நீயும் உன் மக்களுடன் சேர்த்துக்கொள்ளப்படுவாய். 14 ஏனெனில், சீன் பாலைநிலத்தில் மக்கள் கூட்டமைப்பு தண்ணீருக்காக வாக்குவாதம் செய்தபொழுது நீங்கள் அவர்கள் பார்வையில் என்னைப் புனிதப்படுத்தாது என் வார்த்தையை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள்” — இவையே சீன் பாலை நிலத்தில் காதேசிலுள்ள மெரிபாவின் நீர்நிலைகள். 15 மோசே ஆண்டவரிடம், 16 “உயிர்க்கு எல்லாம் கடவுளாகிய ஆண்டவர் இந்த மக்கள் கூட்டமைப்புக்கு ஒருவனைப் பொறுப்பாளனாக ஏற்படுத்துவாராக; 17 அவன் அவர்களுக்கு முன்னே போகவும், அவர்களுக்கு முன்னே வரவும் வேண்டும்; அவ்வாறே வெளியே நடத்திச் செல்லவும் உள்ளே அழைத்து வரவும் வேண்டும். இதனால் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பு மேய்ப்பனில்லா ஆடுகளாக இராது” என்றார். 18 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நூன் புதல்வன் யோசுவாவைத் தேர்ந்துகொள்; அவன் ஆவியைத் தன்னுள் கொண்டவன்; நீ அவன் மேல் உன் கையை வை. 19 குரு எலயாசருக்கும் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவருக்கும் முன்பாக அவனை நிற்கச் செய்; அவர்கள் பார்வையில் நீ அவனைப் பொறுப்பாளனாக ஏற்படுத்து. 20 மக்கள் கூட்டமைப்பின் அனைத்து மக்களும் கீழ்ப்படியும்படி உன் அதிகாரத்தை அவனுடன் பகிர்ந்துகொள். 21 அவன் குரு எலயாசருக்கு முன் நிற்க, அவனுக்காக எலயாசர் ஆண்டவர் முன்னிலையில் ஊரிம் வழங்கும் தீர்ப்பை நாடுவான்; அவனும் அவனுடன் இருக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவருமான மக்கள் கூட்டமைப்பு முழுவதும் எலயாசரின் வார்த்தையின்படியே வெளியே செல்லவும், உள்ளே வரவும் வேண்டும். 22 ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார். அவர் யோசுவாவை அழைத்து குரு எலயாசர் மக்கள் அனைவர் முன்னிலையில் அவரை நிற்கச் செய்தார். 23 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே தம் கைகளை அவர் மேல் வைத்து அவரைப் பொறுப்பாளராக நியமித்தார். 27:7 எண் 36:2. 27:12-14 இச 3:23-27; 32:48-52. 27:17 1 அர 22:17; எசே 34:5; மத் 9:36; மாற் 6:34. 27:18 விப 24:13. 27:21 விப 28:30; 1 சாமு 14:41; 28:6. 27:23 இச 31:23.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-27
144
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 28 – திருவிவிலியம்
படையல்களின் ஒழுங்கு முறை (விப 29:38-46) 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்; எனக்குரிய நேர்ச்சையை, நெருப்புப் பலியான உணவை, எனக்கு உகந்த நறுமணத்தைக் குறிக்கப்பட்ட காலத்தில் எனக்குப் படைப்பதில் நீங்கள் கருத்தாயிருக்க வேண்டும். 3 நீ அவர்களிடம் சொல்; நெருப்புப் பலியாக நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியது; அன்றாட எரிபலியாக எந்நாளும் செலுத்த ஒரு வயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகள். 4 இவற்றுள் ஒன்றைக் காலையிலும், மற்றதை மாலையிலும் பலியிட வேண்டும். 5 அத்துடன், உணவுப் படையலாக இருபதுபடி மரக்காலில்* பத்தில் ஒரு அளவு மிருதுவான மாவை அடித்துப் பிழியப்பட்ட கால் கலயம்** எண்ணெயுடன் பிசைய வேண்டும். 6 இது எந்நாளும் செலுத்தும் எரிபலி; இது ஆண்டவருக்குரிய நெருப்புப் பலியாகவும் உகந்த நறுமணமாகவும் சீனாய் மலையில் ஏற்படுத்தப்பட்டது. 7 அத்துடன் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் கால் கலயம் வீதம் நீர்மப் படையல் நீங்கள் செலுத்த வேண்டும்; ஆண்டவருக்கு நீர்மப் படையலாகத் திருஉறைவிடத்தில் மதுபானத்தை ஊற்ற வேண்டும். 8 மற்ற ஆட்டுக் குட்டியை நீங்கள் மாலையில் பலியிட வேண்டும். காலையிலுள்ள உணவுப் படையல் போன்றும், அதன் நீர்மப்படையல் போன்றும் அதை நெருப்புப் பலியாகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமாகவும் நீங்கள் படைக்க வேண்டும். ஓய்வுநாளின் படையல் 9 ஓய்வு நாளில், ஒரு வயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் பத்தில் இரண்டு அளவு மிருதுவான மாவையும், அத்துடன் நீர்மப் படையலையும் செலுத்த வேண்டும். 10 எந்நாளும் செலுத்தும் எரிபலியும் நீர்மப் படையலும் நீங்கலாக இது ஒவ்வோர் ஓய்வு நாளிலும் செலுத்தப்பட வேண்டிய எரிபலி ஆகும். மாதப் பிறப்பின் படையல் 11 மாதத் தொடக்கத்தில் எரிபலியாக நீங்கள் ஆண்டவருக்குச் செலுத்த வேண்டியவை; இளங்காளைகள் இரண்டு; ஆட்டுக் கிடாய் ஒன்று; ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாக இருக்க வேண்டும். 12 அவற்றுடன், உணவுப் படையலுக்காகக் காளை ஒவ்வொன்றுக்கும் எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் பத்தில் மூன்று அளவு மெல்லிய மாவு; உணவுப் படையலுக்காக ஆட்டுக் கிடாய் ஒன்றுக்கு எண்ணெயில் பிசைந்த பத்தில் இருபங்கு மெல்லிய மாவு; 13 உணவுப் படையலுக்காக ஆட்டுக்குட்டி ஒவ்வொன்றுக்கும் எண்ணெயில் பிசைந்த பத்திலொரு பங்கு மெல்லிய மாவு. இவை எரிபலிக்காகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமான நெருப்புப் பலிக்காகவும் இருக்க வேண்டியவை. 14 அவற்றின் நீர்மப் படையல்களுக்கான திராட்சை இரசம் காளை ஒன்றுக்கு அரைக் கலயம், ஆட்டுக்கிடாய் ஒன்றுக்கு மூன்றிலொரு கலயம், ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு கால் கலயம் என்ற அளவில் இருக்க வேண்டும். இது ஆண்டில் எல்லா மாதங்களிலும் ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய எரி பலி. 15 எந்நாளும் செலுத்தப்படும் எரிபலியும், நீர்மப் படையலும் நீங்கலாகப் பாவம் போக்கும் பலியாக ஆண்டவருக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் செலுத்த வேண்டும். புளிப்பற்ற அப்பத் திருநாளின் படையல்கள் (லேவி 23:5-14) 16 முதல் மாதத்தின் பதினான்காம் நாள் ஆண்டவரின் பாஸ்கா. 17 இந்த மாதத்தின் பதினைந்தாம் நாள் திருவிழா. ஏழுநாள்களும் புளிப்பற்ற அப்பமே உண்ண வேண்டும். 18 முதல் நாளில் திருப்பேரவை கூட்டப்படும். கடின வேலை ஏதும் நீங்கள் செய்யக்கூடாது. 19 ஆனால், நெருப்புப் பலியொன்றை, எரிபலியொன்றை ஆண்டவருக்குச் செலுத்த வேண்டும். இதற்கு வேண்டியவை இளங்காளைகள் இரண்டு, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும். 20 அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, காளை ஒன்றுக்கு ஆறு படியும், வெள்ளாட்டுக்கிடாய் ஒன்றுக்கு நான்கு படி அளவு வீதம் நீங்கள் படைக்க வேண்டும். 21 ஏழு ஆட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு படி அளவு வீதம் படைக்க வேண்டும். 22 இத்துடன் உங்களுக்குக் கறைநீக்கம் செய்யப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டிய ஒரு வெள்ளாட்டுக்கிடாய். 23 எந்நாளும் செலுத்தும் எரிபலியாக, காலை தோறும் செலுத்தும் எரிபலி நீங்கலாக, இவற்றை நீங்கள் செலுத்த வேண்டும். 24 நாள்தோறும் இதே முறையில் ஏழு நாள்களுக்கும் நெருப்புப் பலியாகிய உணவை, ஆண்டவருக்கு உகந்த நறுமணத்தை நீங்கள் படைக்க வேண்டும். இது எந்நாளும் செலுத்தும் எரி பலியும் நீர்மப் படையலும் நீங்கலாகப் படைக்க வேண்டியது. 25 ஏழாம் நாள் உங்களுக்குத் திருப்பேரவை நாள். நீங்கள் கடினமான வேலை ஏதும் செய்யக்கூடாது. அறுவடைவிழாப் படையல்கள் (லேவி 23:15-22) 26 வாரங்களின் விழாவில் முதற்பலன்களின் நாளன்று புதுத் தானியத்திலிருந்து நீங்கள் ஆண்டவருக்கு உணவுப் படையல் படைக்கும் போதும் உங்களுக்குத் திருப்பேரவை இருக்கும்; கடினமான வேலை ஏதும் நீங்கள் செய்யக்கூடாது. 27 ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக எரிபலியொன்றைச் செலுத்துவீர்கள். இதற்கு வேண்டியவை; இளங்காளைகள் இரண்டு, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் ஏழு. 28 அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு, காளை ஒன்றுக்கு ஆறுபடியும் ஆட்டுக்கிடாய் ஒன்றுக்கு நான்குபடி அளவில் இருக்கும். 29 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு படி என்ற அளவில் இருக்கும். 30 மேலும், உங்களுக்குக் கறை நீக்கம் செய்ய வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று தேவை. 31 இவையும், இவற்றின் இனப் படையலும், எந்நாளும் செலுத்தும் எரிபலியும், அதன் உணவுப் படையலும் நீங்கலாக, நீங்கள் படைக்க வேண்டும். இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும். 28:16 விப 12:1-13; இச 16:1-2. 28:17-25 விப 12:14-20; 23-15; 34:18; இச 16:3-8. 28:26-31 விப 23:16; 34:22; இச 16:9-12. 28:5 * பத்திலொரு ‘ஏப்பா’. 28:5 ** கால் ‘கீன்’.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-28
145
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 29 – திருவிவிலியம்
புத்தாண்டு விழாப் படையல்கள் (லேவி 23:23-25) 1 ஏழாம் மாதம் முதல் நாளன்று உங்களுக்குத் திருப்பேரவை இருக்கும்; நீங்கள் கடினவேலை ஏதும் செய்யக்கூடாது. உங்களுக்காக எக்காளங்கள் முழங்கும் நாள் அது. 2 ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியை நீங்கள் செலுத்த வேண்டும். அதற்கு வேண்டியவை; இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும். 3 அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, காளைக்காக ஆறு படியும், ஆட்டுக் கிடாய்க்காக நான்கு படி அளவில் இருக்கும். 4 ஏழு ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொன்றுக்கும் இரண்டுபடி அளவாக இருக்கும். 5 மேலும், உங்களுக்குக் கறை நீக்கம் செய்யப் பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று தேவை. 6 இவை தவிர மாதந்தோறும் அளிக்கும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய நீர்மப் படையல் ஆகியவை அவர்கள் முறைமையின்படி ஆண்டவருக்கு உகந்த நறுமணமான நெருப்புப் பலியாக அமையும். பாவம் போக்கும் நாளுக்கான படையல் (லேவி 23:26-32) 7 இந்த ஏழாம் மாதம் பத்தாம் நாளில் உங்கள் திருப்பேரவை கூடும்; அப்போது உங்களை நீங்களே வருத்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருங்கள். 8 ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியொன்றை நீங்கள் அவருக்குச் செலுத்துங்கள். அதற்குத் தேவையானவை; இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்கவேண்டும். 9 அத்துடன் உணவுப்படையலாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு காளைக்காக ஆறுபடியும் ஆட்டுக்கிடாய்க்காக நான்குபடி அளவில் இருக்கும். 10 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டுபடி என்ற அளவில் இருக்கும். 11 மேலும், கறை நீக்கத்திற்கான பாவம் போக்கும் பலி, எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதற்குரிய நீர்மப்படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாய் செலுத்துவாய். கூடாரத் திருநாள் படையல்கள் (லேவி 23:23-44) 12 ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளில் உங்கள் திருப்பேரவை கூடும்; நீங்கள் கடின வேலை ஏதும் செய்யக்கூடாது; ஏழு நாள்கள் நீங்கள் ஆண்டவருக்கு விழா எடுக்க வேண்டும். 13 ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியாகவும், நெருப்புப் பலியாகவும் நீங்கள் செலுத்த வேண்டியவை; இளங்காளைகள் பதின் மூன்று, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும். 14 அத்துடன் உணவுப் படையலான எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுக்கும் ஆறு படி இரண்டு ஆட்டுக்கிடாய்களில் ஒவ்வொன்றுக்கும் நான்குபடி பங்கு. 15 பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு படி அளவில் இருக்கும். 16 மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதற்குரிய நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய் செலுத்துவாய். 17 இரண்டாம் நாள்; இளங்காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும். 18 அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக் கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றிற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள். 19 மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அவற்றுக்குரிய நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய். 20 மூன்றாம் நாள்; காளைகள் பதினொன்று, ஆட்டுக் கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடையனவும் பழுதற்றனவுமான ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும். 21 அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய படையல், நீர்மப் படையல்கள். 22 மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப்படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய். 23 நான்காம் நாள்; காளைகள் பத்து, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும். 24 அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்; 25 மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதன் நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய். 26 ஐந்தாம் நாள்; காளைகள் ஒன்பது, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்; 27 அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய நீர்மப் படையல்கள். 28 மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய். 29 ஆறாம் நாள்; காளைகள் எட்டு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும். 30 அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப்படையல், நீர்மப் படையல்கள், 31 மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய அதன் உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய். 32 ஏழாம் நாள்; காளைகள் ஏழு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும். 33 அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள். 34 மேலும், எந்நாளும் செலுத்தம் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய். 35 எட்டாம் நாளன்று சிறப்புக் கூட்டம் நடைபெறும்; நீங்கள் கடின வேலை ஏதும் செய்யக்கூடாது. 36 ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியாகவும், நெருப்புக் பலியாகவும் நீங்கள் செலுத்த வேண்டுபவை; காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும். 37 அவற்றுடன் முறைமைப்படி காளை, ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப உணவுப் படையல், அவற்றுக்குரிய நீர்மப் படையல்கள்; 38 மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப்படையல் ஆகியவை தவிரப் பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய். 39 நியமிக்கப்பட்ட திருநாள்களில் நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியவை இவையே. உங்கள் பொருத்தனைகள், தன்னார்வப் படையல்கள், எரிபலிகள், உணவுப் படையல்கள், நீர்மப் படையல்கள், நல்லுறவுப் பலிகள் ஆகியவை நீங்கலாகச் செய்ய வேண்டியவை இவையே. 40 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னார். 29:7-11 லேவி 16:29-34.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-29
146
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 30 – திருவிவிலியம்
பொருத்தனை பற்றிய விதிமுறைகள் 1 மோசே இஸ்ரயேல் மக்களின் குலத் தலைவர்களிடம் கூறியது: கடவுள் கட்டளையிட்டிருப்பது இதுவே; 2 ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றை ஒருவன் செய்துகொண்டால் அல்லது ஆணையிட்டுக் கூறிய உறுதிமொழிக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் அவன் தன் வார்த்தையை மீறக்கூடாது. தான் உரைத்தபடியெல்லாம் அவன் செய்ய வேண்டும். 3 ஒரு பெண் இளமையில் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போது ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றைச் செய்து உறுதிமொழிக்குத் தான் கட்டுப்பட்டிருக்க, 4 அவள் தந்தை அவள் செய்து கொண்ட பொருத்தனையையும் அவள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியையும் கேட்டும் எதையும் அவளிடம் சொல்லவில்லையெனில் அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் அனைத்தும் நிலைக்கும்; அவள் எடுத்துக்கொண்ட ஒவ்வோர் உறுதிமொழியும் நிலைக்கும். 5 ஆனால், அவள் தந்தை அதைக் கேட்ட நாளில் அவளுக்கு ஒப்புதல் தராமலிருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனையோ, அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியோ எதுவும் நிலைக்காது. ஆண்டவரும் அவளை மன்னிப்பார். ஏனெனில், அவள் தந்தை அதற்கு ஒப்புதல் தரவில்லை. 6 ஆனால், அவள் பொருத்தனை செய்திருக்கையில் அல்லது கருத்தின்றிக் கூறிய சொற்களால் கட்டுண்டிருக்கையில் ஒருவனுக்கு மணம் முடிக்கப்பட்டிருக்க, 7 தன் கணவன் அதைக் கேட்டு அவன் அதைக் கேட்ட நாளில் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் நிலைக்கும்; அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளும் நிலைக்கும். 8 ஆனால், அவள் கணவன் அதை அறியவரும் நாளில் ஒப்புதல் தராமலிருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனைகளையும் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கருத்தின்றிக் கூறிய சொற்களையும் அவன் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறான். ஆண்டவரும் அவளை மன்னிப்பார். 9 ஒரு விதவை அல்லது மணமுறிவு செய்யப்பட்டவள் செய்துகொண்ட பொருத்தனைக்கும் அவள் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கூறிய எதற்கும் அவளே பொறுப்பாவாள். 10 மேலும், அவள் கணவன் வீட்டில் பொருத்தனை செய்திருக்க அல்லது தன்னைக் கட்டக்குள்ளாக்கும் அளவில் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்க, 11 அவள் கணவன் அதைக் கேட்டும் அவளிடம் ஒன்றும் சொல்லாமலும் அதற்கு மறுப்புத் தெரிவிக்காமலும் இருந்திருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் அனைத்தும் நிலைக்கும்; அவள் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கூறியது ஒவ்வொன்றும் நிலைக்கும். 12 ஆனால், அவள் கணவன் அவற்றைக் கேட்ட நாளில் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகளோ, அவளைக் கட்டுப்படுத்தும் அளவில் அவள் கூறிய வார்த்தைகளோ எவையும் நிலைக்கா; அவள் கணவன் அவற்றை ஒன்றுமில்லாமலாக்கி விட்டான்; ஆண்டவரும் அவளை மன்னிப்பார். 13 தன்னை வருத்திக்கொள்ளுமாறு அவள் செய்து கொண்ட எந்தப் பொருத்தனையையும் தன்னைக் கட்டுப்படுத்தும் அளவில் அவள் எடுத்துக்கொண்ட எந்த உறுதி மொழியையும் அவள் கணவன் நிலைப்படுத்தலாம்; அல்லது ஒன்றுமில்லாமல் ஆக்கலாம். 14 ஆயினும், அவள் கணவன் ஒருநாளும் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால் அவள் செய்துகொண்ட எல்லாப் பொருத்தனைகளையும் அல்லது அவளைக் கட்டுக்குள்ளாக்கும் அவளின் உறுதிமொழிகள் அனைத்தையும் அவன் நிலைப்படுத்துகிறான். அவன் அவற்றைக் கேட்ட அவளிடம் ஒன்றும் சொல்லாதபடியால் அவன் அவற்றை நிலைப்படுத்தி விட்டான். 15 ஆனால், அவற்றைப் பற்றிக் கேட்டபின் அவன் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால் அவளின் குற்றத்திற்கு அவனே பொறுப்பு. 16 ஒரு கணவனுக்கும் அவன் மனைவிக்குமிடையிலும், ஒரு தந்தைக்கும் அவர் வீட்டில் இளமையாயிருக்கும் ஒரு மகளுக்குமிடையிலும் இருக்குமாறு ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிமுறைகள் இவையே. 30:2 இச 23:21-13; மத் 5:33.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-30
147
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 31 – திருவிவிலியம்
மிதியானுக்கு எதிரான புனிதப் போர் 1 ஆண்டவர் மோசேயிடம், 2 “இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு மிதியானியரைப் பழி வாங்கு; அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்” என்றார். 3 மோசே மக்களிடம் கூறியது: ஆண்டவருக்காக மிதியானியரைப் பழிவாங்குமாறு அவர்களுக்கு எதிராகச் செல்லும்படி உங்களிலிருந்து ஆள்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள். 4 இஸ்ரயேல் குலங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆயிரம் பேரைப் போருக்கு அனுப்ப வேண்டும். 5 அப்படியே, இஸ்ரயேலின் பல்லாயிரத்தவர்களிலிருந்து குலம் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் பன்னீராயிரம் பேர் போரிடுவதற்குத் தயார் நிலையில் அனுப்பப்பட்டனர். 6 மோசே ஒவ்வொரு குலத்திலிருந்தும் வந்த ஆயிரம் பேரை, குரு எலயாசர் மகன் பினகாசுடன் போருக்கு அனுப்பினார். அவர் திருத்தலத் துணைக்கலன்களையும் போர் எக்காளங்களையும் கையோடு எடுத்துச் சென்றார். 7 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மிதியானுக்கெதிராகப் போரிட்டு ஆண்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினர். 8 இவ்வாறு, வெட்டி வீழ்த்தப்பட்டவர்களைத் தவிர மிதியான் மன்னர்களையும் அவர்கள் கொன்றனர்; மிதியானின் ஐந்து அரசர்கள் ஏலி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியோர்; அத்துடன் பெகோரின் மகன் பிலயாமையும் அவர்கள் வாளால் வெட்டி வீழ்த்தினர். 9 இஸ்ரயேல் மக்கள் மிதியானின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் சிறைப்பிடித்தனர்; அவர்களுடன் அவர்களின் கால்நடைகள், மந்தைகள் அனைத்தையும் அவர்களின் உடைமைகள் அனைத்தையும் கொள்ளைப் பொருளாகக் கவர்ந்து கொண்டனர். 10 அவர்கள் குடியிருந்த இடங்களின் அனைத்து நகர்களையும் அவர்களின் அரண்கள் அனைத்தையும் தீக்கிரையாக்கினர். 11 ஆள்களும் கால்நடைகளும் உட்பட அவர்கள் கொள்ளையடித்தவை, சூறையாடியவை அனைத்தையும் கொண்டு சென்றனர். 12 பின்பு, அவர்கள் சிறைப்பிடித்தோர், கொள்ளையடித்தவை, சூறையாடியவை ஆகியவற்றை எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையத்திலிருந்த மோசே, குரு எலயாசர், இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆகியோரிடம் கொண்டு சென்றனர். படை திரும்பி வருதல் 13 மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவர்களைச் சந்திக்கும்படி பாளையத்துக்கு வெளியே வந்தனர். 14 ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களாகிய படைத்தளபதிகள், போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த போது அவர்கள் மேல் மோசே சினங்கொண்டார். 15 மோசே அவர்களிடம் கூறியது: பெண்கள் எல்லாரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா? 16 பிலயாமின் சொல் கேட்டு இஸ்ரயேல் மக்கள் பெகோர் காரியத்தில் ஆண்டவருக்கு எதிராக இழிவாக நடக்கக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே! அதனால்தான் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பினுள் கொள்ளைநோய் வந்தது. 17 எனவே, ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்றுவிடுங்கள்; ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள். 18 ஆனால், ஆணுறவு கொள்ளாத இளம்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள். 19 உங்களுள் ஆளைவெட்டி வீழ்த்திய ஒவ்வொருவனும் தீட்டுப்பட்டதைத் தொட்டவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் பாளையத்துக்கு வெளியே தங்கியிருங்கள். உங்களையும், நீங்கள் சிறைப்பிடித்தவர்களையும் மூன்றாம் நாளிலும், ஏழாம் நாளிலும் தூய்மைப்படுத்துங்கள். 20 உடைகள், தோல் பொருள்கள், வெள்ளாட்டு உரோம வேலைப்பாடுகள், மரப்பொருட்கள் அனைத்தையும் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும். 21 பின்னர், குரு எலயாசர் போர்க் களத்திலிருந்து திரும்பி வந்த வீரர்களைப் பார்த்துக் கூறியது: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டருளிய திருச்சட்ட நியமம் இதுவே; 22 பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய, 23 நெருப்பைத் தாங்கக் கூடிய அனைத்தையும் நீங்கள் நெருப்பிலே போட்டு எடுக்க வேண்டும். அப்பொழுது அவற்றின் தீட்டு அகலும். மேலும், அவை தண்ணீராலும் தூய்மையாக்கப்பட வேண்டும்; நெருப்பைத் தாங்கக் கூடாதது எதுவோ அதைத் தண்ணீரில் தோய்த்தெடுத்த வேண்டும். 24 ஏழாம் நாளில் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ள வேண்டும்; அப்பொழுது உங்கள் தீட்டு அகலும்; நீங்கள் பாளையத்துக்குள் வரலாம். கொள்ளைப் பொருளைப் பங்கிடுதல் 25 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 26 ஆள்களிலும், கால்நடைகளிலும் கொள்ளையடிக்கப்பட்டவற்றை நீயும் குரு எலயாசரும் மக்கள் கூட்டமைப்பின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களும் கணக்கெடுங்கள். 27 போருக்குச் சென்றிருந்த படைவீரருக்கும் மக்கள் கூட்டமைப்பினர் அனைவருக்குமிடையில் கொள்ளைப் பொருளைப் பங்கிடுங்கள். 28 போருக்குச் சென்றிருந்த படை வீரரிடமிருந்த ஆள்கள், மாடுகள், கழுதைகள், மந்தைகள், ஆகியவற்றில் ஐந்நூற்றில் ஒன்றை ஆண்டவருக்குரிய பங்காகக் கொடுங்கள். 29 அவர்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து அதை எடுத்து ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலாகக் குரு எலயாசரிடம் கொடுக்க வேண்டும். 30 இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கான ஆள்கள், காளைகள், கழுதைகள், மந்தைகள் ஆகியவற்றிலிருந்து ஐம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து ஆண்டவரின் திருவுறைவிடத்துக்குப் பொறுப்பாயிருக்கும் லேவியரிடம் கொடுக்க வேண்டும். 31 மோசேயும் குரு எலயாசரும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர். 32 படைவீரர் சூறையாடிய கொள்ளைப் பொருளில் மீந்திருந்தவை; ஆறு லட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகள், 33 எழுபத்தீராயிரம் மாடுகள், 34 அறுபத்தோராயிரம் கழுதைகள், 35 ஆள்கள் மொத்தம் முப்பத்தீராயிரம் பேர்; அவர்கள் ஆணுறவு கொண்டிராத பெண்கள். 36 போருக்குச் சென்றவர்களுக்குரிய பாதிப் பங்கிலுள்ள ஆடுகளின் தொகை மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு. 37 ஆண்டவர் பங்கில் இருந்த ஆடுகள் அறுநூற்று எழுபத்தைந்து. 38 காளைகளின் தொகை முப்பத்தாறாயிரம்; அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று. 39 கழுதைகளின் தொகை முப்பத்தாயிரத்து ஐந்நூறு; அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று. 40 ஆள்கள் தொகை பதினாறாயிரம்; அவர்களிலிருந்து ஆண்டவருக்குரிய பங்காகத் தரப்பெற்றவர்கள் முப்பத்திரண்டு பேர். 41 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆண்டவருக்குரிய பங்காகிய உயர்த்திப் படைக்கும் படையலை மோசே குரு எலயாசரிடம் கொடுத்தார். 42 போருக்குச் சென்றிருந்த ஆள்களுக்குரியது போக மோசே இஸ்ரயேல் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தப் பாதிப் பங்கு; 43 மக்கள் கூட்டமைப்புக்குரிய பாதிப் பங்கில் ஆடுகள் மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு. 44 காளைகள் முப்பத்தாறாயிரம். 45 கழுதைகள் முப்பத்தாறாயிரத்து ஐந்நூறு. 46 ஆள்கள் பதினாறாயிரம் பேர். 47 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து ஆள்களிலும் கால்நடைகளிலும் ஐம்பத்துக்கு ஒன்று வீதம் எடுத்து அவற்றை ஆண்டவரின் திருவுறைவிடத்திற்குப் பொறுப்பாயிருந்த லேவியரிடம் மோசே கொடுத்தார். 48 பின்பு, பல்லாயிரத்தவர் படைத்தளபதிகள்- ஆயிரத்தவர் தலைவர்களும், நூற்றுவர் தலைவர்களும்- மோசேயை அணுகினர். 49 அவர்கள் மோசேயிடம், “உமது அடியார்களாகிய நாங்கள் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட போர்வீரரை எண்ணியபோது ஒருவரும் குறையவில்லை. 50 அத்துடன் ஆண்டவர் முன்னிலையில் எங்களுக்குக் கறை நீக்கம் செய்வதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் தேடி எடுத்த பொன்னணிகளான காப்பு வகைகள், கடகங்கள், முத்திரை மோதிரங்கள், காது வளையங்கள், குமிழ் மணிகள் ஆகியவற்றை ஆண்டவருக்கு நேர்ச்சையாகக் கொண்டு வந்துள்ளோம்” என்றனர். 51 மோசேயும் குரு எலயாசரும் அவர்களிடமிருந்த கைவினைப் பொருள்களான எல்லாப் பொன் அணிகளையும் பெற்றுக் கொண்டனர். 52 ஆயிரத்தவர் தலைவர்களும் நூற்றுவர் தலைவர்களும் ஆண்டவருக்கு உயர்த்திப் படைத்த பொன்னின் நிறை மொத்தம் ஏறக்குறைய இருநூறு கிலோ கிராம். 53 ஒவ்வொரு படைவீரனும் கொள்ளைப் பொருளைக் கவர்ந்து கொண்டான். 54 மோசேயும் குரு எலயாசரும் ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர்; அதை ஆண்டவர் திருமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னமாகச் சந்திப்புக் கூடாரத்தினுள் கொண்டு வந்தனர். 31:16 எண் 25:1-9.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-31
148
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 32 – திருவிவிலியம்
யோர்தானுக்குக் கிழக்கிலிருந்த குலங்கள் (இச 3:12-22) 1 ரூபன் புதல்வருக்கும் காத்துப் புதல்வருக்கும் ஆடு, மாடுகள் பெருந்திரளாயிருந்தன; அவர்கள் யாசேர் நாட்டையும், கிலயாது நாட்டையும் கண்டனர்; அந்த இடம் ஆடு, மாடுகளுக்கேற்றதாக இருந்தது. 2 எனவே, அவர்கள் மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகியோரிடம் வந்து, 3 “அற்றரோத்து, தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலயாலே, செபாம், நெபோ, பெயோன் ஆகிய பகுதிகள் 4 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் பார்வையில் ஆண்டவர் அடக்கிய நிலப் பகுதிகள் ஆடு, மாடுகளுக்கு ஏற்றவை; உம் அடியார்களுக்கு ஆடு மாடுகள் உண்டு” என்றனர். 5 மேலும், அவர்கள், உங்கள் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைத்தால் இந்த நாடு உம் அடியார்களுக்கு உடைமையாகத் தரப்படட்டும்; எங்களை யோர்தானுக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டாம்” என்றனர். 6 ஆனால், மோசே காத்துப் புதல்வரிடமும் ரூபன் புதல்வரிடமும் கூறியது: “நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க உங்கள் சகோதரர் மட்டும் போருக்குப் போக வேண்டுமா? 7 ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி ஏன் இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்கிறீர்கள்? 8 அவர்கள் நாட்டைப் பார்ப்பதற்குக் காதேசுபர்னேயாவிலிருந்து நான் உங்கள் மூதாதையரை அனுப்பியபோது அவர்களும் இவ்வாறே செய்தனர். 9 அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்கினுள் சென்று நாட்டைக் கண்டபோது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்தனர். 10 அந்நாளில் ஆண்டவருக்குச் சினம் மூண்டது; அவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறியது: 11 எகிப்திலிருந்து வெளிவந்தவர்களில் இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய ஒருவரும் நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியநாட்டினைக் காணமாட்டார்கள்; ஏனெனில், அவர்கள் என்னை முழுமையாகப் பின்பற்றவில்லை. 12 எபுன்னேயின் புதல்வன் காலேபும், நூனின் புதல்வன் யோசுவாவும் இதற்கு விதிவிலக்கு; ஏனெனில், அவர்கள் ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியுள்ளனர். 13 அத்துடன் ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது; அவர் இப்பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அவர்களை அலையச் செய்தார்; ஆண்டவர் பார்வையில் தீயன செய்த தலைமுறை அனைத்தும் அழியுமட்டும் இது நடந்தது. 14 இப்போதும் நீங்கள் உங்கள் மூதாதையருக்குப் பதிலாகப் பாவ மனிதராக எழும்பிவிட்டீர்கள். இஸ்ரயேலுக்கு எதிராக உள்ள ஆண்டவரின் கோபக் கனலை இன்னும் கடுமையாக்கி விடுகிறீர்களே! 15 அவரைப் பின்பற்றுவதைவிட்டு நீங்கள் விலகினால் அவரும் அவர்களைப் பாலைநிலத்தில் விட்டு விடுவார்; இம்மக்கள் அனைவரையும் நீங்கள் அழியப் பண்ணுவீர்கள்.” 16 பின்னும், அவர்கள் அவரிடம் நெருங்கி வந்து, “நாங்கள் இங்கே எங்கள் மந்தைகளுக்குப் பட்டிகளையும், தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் கட்டுவோம்; 17 ஆயினும், நாங்கள் இஸ்ரயேல் மக்களை அவர்கள் இடத்திற்குக் கொண்டு சேர்க்குமளவும் அவர்கள் முன்பாகப் போர்க்கலம் தாங்கிச் செல்ல ஆயத்தமாயிருப்போம்; எங்கள் பிள்ளைகள் இந்நாட்டுக் குடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அரண் சூழ் நகர்களில் வாழ்வார்கள்; 18 இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளும்வரை நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டோம். 19 நாங்கள் யோர்தானுக்கு அக்கரையிலும் அதற்கப்பாலும் அவர்களுடன் எதையும் உடைமையாக்கிக் கொள்வோம். ஏனெனில், எங்கள் உரிமைச் சொத்து கிழக்கே யோர்தானுக்கு இக்கரையில் கிடைத்துள்ளது” என்றார்கள். 20 மோசே அவர்களிடம் கூறியது: நீங்கள் இதைச் செய்தால் ஆண்டவர் முன் போர்க்கலம் தாங்கிச் சென்றால், 21 உங்களில் போர்க்கலந்தாங்கியோர் ஒவ்வொரு வரும் ஆண்டவர்முன், அவர் தமக்கு முன் எதிரிகளை விரட்டி அடிக்கும் மட்டும், யோர்தானைக் கடந்து சென்றால் 22 நாடு ஆண்டவர் முன்னிலையில் பணிந்தடங்கும்; அதன் பின்பு நீங்கள் திரும்பி வருவீர்கள்; ஆண்டவருக்கும் இஸ்ரயேலுக்குமுரிய கடமையை நிறைவேற்றியவராவீர்கள்; இந்த நாடும் ஆண்டவர் முன்னிலையில் உங்கள் உடைமையாகிவிடும். 23 ஆனால், நீங்கள் இதைச் செய்யாவிட்டால் நீங்கள் ஆண்டவருக்கெதிராகப் பாவம் செய்திருக்கிறீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிப்பது திண்ணம். 24 உங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் உங்கள் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டுங்கள்; நீங்கள் வாக்களித்ததையே இப்பொழுது செய்யுங்கள். 25 காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மோசேயிடம், “எம் தலைவர் கட்டளைப்படியே உம் அடியார்கள் செய்வோம்; 26 எங்கள் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் மந்தைகள், கால்நடைகள் அனைத்தோடும் கிலயாதின் நகர்களில் தங்கியிருப்பர்; 27 ஆனால்,எம் தலைவர் ஆணைப்படியே உம் அடியார் ஒவ்வொருவரும் போர்க்கலந் தாங்கியவராய் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்காகத் தொடர்ந்து செல்வோம்” என்றனர். 28 இதுபற்றி மோசே, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் மக்களின் குலங்களில் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள் ஆகியோருக்குக் கட்டளை கொடுத்தார். 29 மோசே அவர்களிடம், “காத்துப் புதல்வரிலும் ரூபன் புதல்வரிலும் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்குப் போர்க்கலந் தாங்கிய ஒவ்வொருவரும் உங்களோடு யோர்தானைக் கடந்து செல்வர்; நாடு உங்களுக்கு முன் பணிந்தடங்கும்; பின் நீங்கள் கிலயாது நாட்டை அவர்களுக்கு உடைமையாகக் கொடுக்க வேண்டும்; 30 ஆனால், அவர்கள் போர்க்கலந்தாங்கி உங்களோடு கடந்து செல்லாவிட்டால் கானான் நாட்டில் உங்களுக்கிடையே அவர்களும் உடைமைகள் பெறுவர்” என்றார். 31 காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மறுமொழியாக, “ஆண்டவர் உம் அடியார்களுக்குச் சொன்னபடியே நாங்கள் செய்வோம்; 32 நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் போர்க் கலந்தாங்கிக் கானான் நாட்டுக்குள் தொடர்ந்து செல்வோம்; எங்கள் உரிமைச் சொத்தான உடைமை யோர்தானுக்கு அப்பால் எங்களுடனேயே இருக்கும்” என்றனர். 33 மோசே, காத்துப் புதல்வர், ரூபன் புதல்வர், யோசேப்பு மகன் மனாசேயின் பாதிக் குலத்தவர் ஆகியோருக்கு எமோரிய மன்னன் சீகோனின் அரசையும் பாசான் மன்னன் ஓகின் அரசையும், நிலப்பகுதி நாடு முழுவதையும், அதன் நகர்களையும், அதைச் சுற்றியுள்ள எல்லைப்புற நகர்களையும் கொடுத்தார். 34 காத்துப் புதல்வர் தீபோன், அற்றரோத்து, அரோயேர், 35 அற்றரோத்து சோபான், யாசேர், யோக்பகா, 36 பெத்நிம்ரா, பெத்காரான் ஆகிய அரண்சூழ் நகர்களையும் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டினர். 37 ரூபன் புதல்வர் எஸ்போன், எலயாலே, கிரியத்தாயிம், 38 நெபோ, பாகால்மெகோன், (இந்தப் பெயர்கள் மாற்றப்பட்டன) சிப்மா ஆகியவற்றைக் கட்டினார்கள்; அவர்கள் கட்டிய நகர்களுக்குப் பெயர் சூட்டினர். 39 மனாசே மகன் மாக்கிர் புதல்வர் கிலயாதுக்குச் சென்று அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்திவிட்டனர். 40 மோசே கிலயாதை மனாசே மகன் மாக்கீருக்குக் கொடுத்தார்; அவர் அதில் வாழ்ந்தார். 41 மனாசே மகன் யாயிர் புறப்பட்டுச் சென்று அவற்றின் சிற்றூர்களைக் கைப்பற்றிக் கொண்டார்; அவற்றை அவர் அவ்வோத்துயாயிர் என்று அழைத்தார். 42 நோபாகு என்பவர் புறப்பட்டுச் சென்று கெனாத்தையும், அதன் சிற்றூர்களையும் கைப்பற்றிக்கொண்டார்; அவர் அதைத் தம் பெயராலேயே ‘நோபாகு’ என்று அழைத்தார். 32:8-9 எண் 13:17-33. 32:10-13 எண் 14:26-35. 32:28-32 யோசு 1:12-15.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-32
149
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 33 – திருவிவிலியம்
விடுதலைப் பயணத்தின் தொகுப்பு 1 மோசே, ஆரோன் ஆகியோர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டைவிட்டுப் படைத்திரளாக வெளியேறிச் சென்றபோது அவர்கள் பயணம் செய்த பகுதிகள் இவையே; 2 அவர்கள் புறப்பட்ட இடங்களை மோசே ஆண்டவர் கட்டளைப்படி படிப்படியாக எழுதி வைத்தார்; அவர்கள் படிப்படியாகத் தங்கிப் புறப்பட்ட இடங்கள் இவையே; 3 முதல் மாதம் பதினைந்தாம் நாள் அவர்கள் இராம்சேசிலிருந்து புறப்பட்டனர்; பாஸ்காவின் மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் எகிப்தியர் அனைவரின் பார்வையிலும் வெற்றிக்கை ஓங்கியவராய் வெளியேறினர். 4 ஆண்டவர் அவர்களுக்குச் சாகடித்த தங்கள் எல்லாத் தலைப்பேறுகளையும் அவர்கள் புதைத்துக் கொண்டிருந்தபோது இது நடந்தது; அவர்கள் தெய்வங்கள் மேலும் ஆண்டவர் நீதித் தீர்ப்பு வழங்கினார். 5 இவ்வாறு, இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து புறப்பட்டுச் சுக்கோத்தில் பாளையமிறங்கினர். 6 அவர்கள் சுக்கோத்திலிருந்து புறப்பட்டு, பாலை நிலத்தின் ஓரத்திலுள்ள ஏத்தாமில் பாளையமிறங்கினர். 7 பின் அவர்கள் ஏத்தாமிலிருந்து பயணமாகிப் பாகால் செபோனுக்குக் கிழக்கே பிசுகிரோத்துக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன் பாளையமிறங்கினர். 8 அகிரோத்தின் முன்னிருந்து கிளம்பி அவர்கள் கடல் நடுவே பாலைநிலத்துக்குள் கடந்து சென்றனர்; அவர்கள் ஏத்தாம் பாலை நிலத்தில் மூன்றுநாள் பயணம் செய்து மாராவில் பாளையம் இறங்கினர். 9 பின்பு, மாராவிலிருந்து புறப்பட்டு அவர்கள் ஏலிமுக்கு வந்தனர். ஏலிமில் பன்னிரு நிரூற்றுகளும், எழுபது பேரீச்சை மரங்களும் இருந்தன. அவர்கள் அங்கே பாளையமிறங்கினர். 10 அவர்கள் ஏலிமிலிருந்து பயணமாகிச் செங்கடல் அருகில் பாளையம் இறங்கினர். 11 பின்பு, செங்கடலிலிருந்து கிளம்பி அவர்கள் சீன் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர். 12 அவர்கள் சீன் பாலை நிலத்திலிருந்து புறப்பட்டுத் தொப்காவில் பாளையம் இறங்கினர். 13 அவர்கள் தொப்காவிலிருந்து பயணமாகி ஆலுசில் பாளையம் இறங்கினர். 14 அவர்கள் ஆலுசிலிருந்து கிளம்பி, இரபிதிமில் பாளையம் இறங்கினர். அங்கு மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை. 15 பின், அவர்கள் இரபிதிமிலிருந்து புறப்பட்டு, சீனாய்ப் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர். 16 சீனாய்ப் பாலை நிலத்திலிருந்து பயணமாகி, அவர்கள் கிப்ரோத்து அத்தாவில் பாளையம் இறங்கினர். 17 கிப்ரோத்து அத்தாவிலிருந்து கிளம்பி, அவர்கள் அட்சரோத்தில் பாளையம் இறங்கினர். 18 அவர்கள் அட்சத்ரோத்திலிருந்து புறப்பட்டு, ரித்மாவில் பாளையம் இறங்கினர். 19 பின், அவர்கள் ரித்மாவிலிருந்து பயணமாகி, ரிம்மோன் பாரேசில் பாளையம் இறங்கினர். 20 ரிம்மோன் பாரேசிலிருந்து கிளம்பி, அவர்கள் லிப்னாவில் பாளையம் இறங்கினர். 21 லிப்னாவிலிருந்து புறப்பட்டு, அவர்கள் இரிசாவில் பாளையம் இறங்கினர். 22 பின்னர், இரிசாவிலிருந்து அவர்கள் பயணமாகிக் கெகேலாதாவில் பாளையம் இறங்கினர். 23 கெகேலாதாவிலிருந்து கிளம்பி, அவர்கள் செபேர் மலையில் பாளையம் இறங்கினர். 24 பின்பு, அவர்கள் செபேர் மலையிலிருந்து புறப்பட்டு, அராதாவில் பாளையம் இறங்கினர். 25 அராதாவிலிருந்து அவர்கள் பயணமாகி, மக்கலோத்தில் பாளையம் இறங்கினர். 26 மக்கலோத்திலிருந்து கிளம்பி, அவர்கள் தாகாத்தில் பாளையம் இறங்கினர். 27 அவர்கள் தாகாத்திலிருந்து புறப்பட்டு, தெராகில் பாளையம் இறங்கினர். 28 தெராகிலிருந்து பயணமாகி, அவர்கள் மித்காவில் பாளையம் இறங்கினர். 29 மித்காவிலிருந்து கிளம்பி, அவர்கள் அசுமோனாவில் பாளையம் இறங்கினர். 30 பின்பு, அசுமோனாவிலிருந்து புறப்பட்டு மோசரோத்தில் பாளையம் இறங்கினர். 31 மோசரோத்திலிருந்து அவர்கள் பயணமாகிப் பெனயாக்கானில் பாளையம் இறங்கினர். 32 பெனயாக்கானிலிருந்து கிளம்பி, அவர்கள் ஓரகித்துகாதில் பாளையம் இறங்கினர். 33 ஓரகித்துகாதிலிருந்து புறப்பட்டு, அவர்கள் யோற்றுபாவில் பாளையம் இறங்கினர். 34 பின்பு யோற்றுபாவிலிருந்து பயணமாகி, அப்ரோனாவில் பாளையம் இறங்கினர். 35 அப்ரோனாவிலிருந்து கிளம்பி, அவர்கள் எட்சியோன்கெபேரில் பாளையம் இறங்கினர். 36 எட்சியோன்கெபேரிலிருந்து அவர்கள் புறப்பட்டு, காதேசு என்னும் சீன் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர். 37 அவர்கள் காதேசிலிருந்து பயணமாகி, ஏதோம் நாட்டின் ஓரத்திலிருந்த ஓர் மலையில் பாளையம் இறங்கினர். 38 பின்பு, குரு ஆரோன் ஆண்டவர் கட்டளைப்படி ஓர் மலைக்கு ஏறிச் சென்றார்; அவர் அங்கேயே இறந்தார்; இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாற்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் முதலாம் நாளில் இது நடந்தது. 39 ஓர் மலையில் ஆரோன் இறந்தபோது அவருக்கு வயது நூற்று இருபத்து மூன்று. 40 கானான் நாட்டிலுள்ள நெகேபில் வாழ்ந்த கானானியனான அராது மன்னன் இஸ்ரயேல் மக்கள் வருவதைக் கேள்விப்பட்டான். 41 பின்னர், ‘ஓர்’ மலையிலிருந்து அவர்கள் புறப்பட்டு, சல்மோனாவில் பாளையம் இறங்கினர். 42 சல்மோனாவிலிருந்து பயணமாகி, அவர்கள் பூனோனில் பாளையம் இறங்கினர். 43 பூனோனிலிருந்து கிளம்பி, அவர்கள் ஒபோத்தில் பாளையம் இறங்கினர். 44 அவர்கள் ஒபோத்திலிருந்து புறப்பட்டு, மோவாபின் எல்லையிலுள்ள இய்யாபரிமில் பாளையம் இறங்கினர். 45 இய்யாபரிமிலிருந்து அவர்கள் பயணமாகி, தீபோன்காதில் பாளையம் இறங்கினர். 46 தீபோன் காதிலிருந்து கிளம்பி, அவர்கள் அல்மோன் திப்லாத்தாயிமில் பாளையம் இறங்கினர். 47 அல்மோன் திப்லாத்தாயிமிலிருந்து புறப்பட்டு, அவர்கள் நெபோவுக்கு முன் அபாரிம் மலைகளில் பாளையம் இறங்கினர். 48 அபாரிம் மலைகளிலிருந்து அவர்கள் பயணமாகி, எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையம் இறங்கினர். 49 அவர்கள் யோர்தானை அடுத்த மோவாபுச் சமவெளியில் பெத்தசிமோத்திலிருந்து ஆபெல் சித்திம்வரை இருந்த பகுதியில் பாளையம் இறங்கினர். யோர்தானைக் கடக்குமுன் தரப்பட்ட அறிவுரைகள் 50 எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 51 நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்; யோர்தானைக் கடந்து நீங்கள் கானான் நாட்டுக்குள் செல்லுகையில், 52 உங்கள் முன்னிலிருந்து நாட்டின் குடிகள் அனைவரையும் துரத்திவிடுங்கள்; அவர்களின் செதுக்கிய சிலைகள் அனைத்தையும் அழித்துவிடுங்கள்; அவர்களின் வார்ப்புப் படிமங்கள் அனைத்தையும் உடைத்து விடுங்கள். 53 நீங்கள் நாட்டை உடைமையாக்கி அதில் குடியிருப்பீர்கள்; நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி அதை உங்களுக்குத் தந்துள்ளேன். 54 உங்கள் குடும்பங்கள் வாரியாகத் திருவுளச் சீட்டுப் போட்டு நீங்கள் நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுங்கள். குலங்களுள் பெரியவற்றுக்குக் கூட்டியும், சிறியவற்றுக்குக் குறைத்தும் உரிமைச் சொத்து வழங்க வேண்டும். எவ்விடத்திற்காக ஒருவனுக்குச் சீட்டு விழுகிறதோ, அது அவனுக்குரியது. உங்கள் மூதாதையரின் குலங்களின்படியே நீங்கள் உரிமைச் சொத்து பெறுவீர்கள். 55 நாட்டின் குடிகளை உங்கள் முன்னின்று நீங்கள் துரத்தவில்லையெனில் நீங்கள் தங்கியிருக்க அனுமதிப்போர் உங்கள் கண்களைக் குத்தும் கூராணிகளாகவும் உங்கள் விலாவைக் கீறும் முட்களாகவும் இருந்து நீங்கள் குடியிருக்கும் நாட்டில் உங்களைத் துன்புறுத்துவார்கள். 56 நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்கே செய்வேன். 33:38 எண் 20:22-28; இச 10:6; 32:50. 33:40 21:01. 33:54 எண் 26:54-56.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-33
150
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 34 – திருவிவிலியம்
நாட்டின் எல்லைகள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்; கானான் நாட்டின் முழுப்பரப்பும் உங்களுக்கு உரிமைச் சொத்தாக வந்து சேரும். கானான் நாட்டில் நீங்கள் நுழையும் போது, 3 உங்கள் தெற்குப் பகுதி சீன்பாலை நிலத்திலிருந்து ஏதோமின் ஓரமாகச் செல்லும். அதன் எல்லை கிழக்கில் உப்புக் கடலின் முடிவிலிருந்து துவங்கும் பகுதியாகும். 4 அந்த எல்லை அக்கிரபிம் மேட்டுக்குத் தெற்கே சுற்றிச் சீனைத் தாண்டிக் காதேசு பர்னேயாவுக்குத் தென்புறத்தை அடையும்; பின், அது அட்சராதாருக்குச் சென்று அட்சமோன் ஓரமாகக் கடந்து செல்லும். 5 அந்த எல்லை அட்சமோனிலிருந்து எகிப்தின் சிற்றாறு வரைக்கும் சுற்றிப் போய்ப் பெருங்கடலில் முடிவுறும். 6 உங்கள் மேற்கு எல்லை பெருங்கடலும், அதன் கரையோரமும்; இதுவே உங்கள் மேற்கு எல்லை. 7 உங்கள் வட எல்லையாகப் பெருங்கடலிலிருந்து ஓர் மலை வரை நீங்கள் எல்லையை வரையறுத்துக் கொள்ளுங்கள். 8 ஓர் மலையிலிருந்து காமாத்தின் நுழைவாயில் வரை அதனைக் குறிப்பீர்கள்; எல்லையின் முடிவு செதாதில் இருக்கும். 9 அந்த எல்லை சிப்ரோன் வரை தொடர்ந்து சென்று அட்சரேனோனில் முடிவுறும்; இதுவே உங்கள் வடஎல்லை. 10 உங்கள் கிழக்கு எல்லையாக அட்சரேனோனிலிருந்து செபாம் வரைக்குமுள்ள பகுதியைக் குறித்துக் கொள்ளுங்கள். 11 அந்த எல்லை அயினுக்குக் கிழக்கே செபாம் முதல் ரிப்லா வரைக்கும் செல்லும்; அந்த எல்லை கிழக்கு நோக்கிச் சென்று கினரேத்துக் கடலின் சரிவை வந்தடையும்; 12 அந்த எல்லை யோர்தானுக்குச் சென்று பின் உப்புக் கடலில் முடிவுறும். 13 மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: திருவுளச் சீட்டு மூலம் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப் போகும் நாடு இதுவே: இதனை ஒன்பது குலங்களுக்கும் பாதிக் குலத்துக்கும் கொடுக்க ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார்; 14 மூதாதையர் வீடுகள் வாரியாக ரூபன் புதல்வர் குலமும், தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் காத்து புதல்வர் குலமும் மனாசேயின் பாதிக் குலமும் தங்கள் உரிமைச் சொத்தினைப் பெற்றுவிட்டனர். 15 இரண்டு குலங்களும் பாதிக் குலமும் யோர்தானுக்கு அப்பால் எரிகோவின் கிழக்கே கதிரவன் உதயம் நோக்கித் தங்கள் உரிமைச் சொத்தைப் பெற்றுள்ளார்கள். 16 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 17 உரிமைச் சொத்துக்காக உங்களுக்கு நாட்டைப் பங்கிட்டுத் தருவோரின் பெயர்களாவன; குரு எலயாசர்; நூனின் மகன் யோசுவா. 18 இவர்களைத் தவிர உரிமைச் சொத்துக்காக நாட்டைப் பங்கிடும்படி ஒவ்வொரு குலத்திலிருந்தும் தலைவன் ஒருவனை நீங்கள் தேர்ந்து கொள்ள வேண்டும். 19 அவர்களின் பெயர்கள்: யூதாக் குலத்திலிருந்து எபுன்னேயின் மகன் காலேபு; 20 சிமியோன் மக்களின் குலத்திலிருந்து அம்மிகூதின் மகன் செமுவேல். 21 பென்யமீன் குலத்திலிருந்து கிஸ்லோனின் மகன் எலிதாது; 22 தாண் மக்களின் குலத்திலிருந்து வரும் தலைவன், யோக்லியின் மகன் புக்கி. 23 யோசோப்பின் மக்களில் மனாசே புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன் எப்போத்தின் மகன் கன்னியேல்; 24 எப்ராயிம் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், சிப்தானின் மகன் கெமுவேல்; 25 செபுலோன் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், பர்னாக்கின் மகன் எலிசாபான்; 26 இசக்கார் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், அசானின் மகன் பல்தியேல்; 27 ஆசேர் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், செலோமியின் மகன் அகிகூத்து; 28 நப்தலி புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், அம்மிகூத்தின் மகன் பெதாவேல்; 29 கானான் நாட்டில் இஸ்ரயேல் மக்களுக்கு உரிமைச் சொத்தைப் பங்கிடும்படி ஆண்டவரால் பணிக்கப்பட்டவர்கள் இவர்களே. 34:13-15 யோசு 14:1-5.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-34
151
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 35 – திருவிவிலியம்
லேவியருக்கு வழங்கப்பட்ட நகர்கள் 1 எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 தாங்கள் உடைமையாக்கிக் கொண்ட உரிமைச் சொத்திலிருந்து லேவியர் குடியிருப்பதற்காக நகர்களைக் கொடுக்கும்படி இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு; அவற்றுடன் நகர்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் லேவியருக்குக் கொடுக்க வேண்டும். 3 இந்நகரில் அவர்கள் தங்கியிருப்பர்; இவற்றின் மேய்ச்சல் நிலங்கள் அவர்கள் கால்நடைகளுக்கும், மந்தைகளுக்கும், வீட்டு விலங்குகள் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். 4 நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் மேய்ச்சல் நிலங்கள் நகரின் சுவரைச் சுற்றிலும் ஆயிரம் முழம் அகலமாய் இருக்கும். 5 நகருக்கு வெளியில் கிழக்கே இரண்டாயிரம் முழமும், தெற்கே இரண்டாயிரம் முழமும், மேற்கே இரண்டாயிரம் முழமும், வடக்கே இரண்டாயிரம் முழமும் நீங்கள் அளக்க வேண்டும். இதுநடுவே இருக்கும் நகர்களுக்கு இது மேய்ச்சல் நிலமாகும். 6 நீங்கள் லேவியருக்குக் கொடுக்க வேண்டிய நகர்களாவன; கொலையாளி தப்பியோடித் தஞ்சம் புகும் அடைக்கல நகர்கள் ஆறு; இவை தவிர நாற்பத்திரண்டு நகர்கள். 7 மேய்ச்சல் நிலங்கள் உட்பட நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் மொத்த நகர்கள் நாற்பத்தெட்டு. 8 இஸ்ரயேல் மக்களின் உடைமையிலிருந்து நீங்கள் கொடுக்கும் நகர்களைப் பொறுத்த வரை குலங்களில் பெரியவற்றிலிருந்து மிகுதியாகவும், சிறியவற்றிலிருந்து குறைவாகவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குலமும் உடைமையாக்கியுள்ள உரிமைச் சொத்தின் விகிதப்படி அதன் நகர்களை லேவியருக்குக் கொடுக்க வேண்டும். அடைக்கல நகர்கள் (இச 19:1-13; யோசு 20:1-9) 9 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 10 “இஸ்ரயேல் மக்களிடம் சொல்: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாட்டுக்குள் நுழையும் போது, 11 உங்களுக்காக அடைக்கல நகர்களைத் தேர்ந்து கொள்ளுங்கள்; தற்செயலாய் ஓர் ஆளைக் கொல்பவன் எவனும் அங்கே ஓடிச் சென்று புகலிடம் பெறுவான். 12 இந்த நகர்கள் பழிவாங்குவோனிடமிருந்து உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும்; இதனால் கொலை செய்தவன் நீதித் தீர்ப்புக்காக மக்கள் கூட்டமைப்புக்கு முன் நிற்கும் முன்னரே அவன் சாகவேண்டியதில்லை. 13 நீங்கள் கொடுக்கும் நகர்கள் ஆறும் அடைக்கல நகர்களாயிருக்கும். 14 யோர்தானுக்கு அப்பால் மூன்று நகர்களும் கானான் நாட்டுக்குள் மூன்று நகர்களும் நீங்கள் அடைக்கல நகர்களாகக் கொடுக்க வேண்டும். 15 இந்த ஆறு நகர்களும் இஸ்ரயேல் மக்களுக்கும்,அன்னியருக்கும் அவர்களிடையே தற்காலிகமாகத் தங்கியிருப்போருக்கும் அடைக்கல நகர்களாயிருக்கும்; தற்செயலாய் ஓர் ஆளைக் கொல்பவன் எவனும் அங்கே ஓடிச் சென்று புகலிடம் பெறலாம். 16 ஆனால், அவன் ஓர் இரும்புக் கருவியினால் ஒருவனை அடிக்க அவன் இறந்தால் அவன் ஒரு கொலைகாரன்; அந்தக் கொலைகாரன் கொல்லப்பட வேண்டும். 17 ஒரு மனிதன் சாகும்படி கையில் ஒரு கல்லை வைத்து அடித்து அவன் இறந்தாலும் அவன் ஒரு கொலைகாரனே; அந்தக் கொலைகாரனும் கொல்லப்பட வேண்டும். 18 அல்லது ஒரு மனிதன் சாகும்படி கையில் மர ஆயதம் ஒன்றை வைத்து அவனை அடித்து அவன் இறந்தாலும் அவன் ஒரு கொலைகாரனே; அந்தக் கொலைகாரனும் கொல்லப்பட வேண்டும். 19 இரத்தப் பழி வாங்குவோன்தான் கொலைகாரனைக் கொல்ல வேண்டும்; அவனைச் சந்திக்கும்போது அவன் அவனைக் கொல்ல வேண்டும். 20 மேலும், பகை முன்னிட்டு அவன் அவனை விழத்தள்ளினால் அல்லது பதுங்கியிருந்து எறிந்து அவன் மடிந்தால், 21 அவன் பகை முன்னிட்டு அவன் அவனைக் கையினால் அடித்து அவன் மடிந்தால், அடித்தவன் கொல்லப்பட வேண்டும்; அவன் ஒரு கொலைகாரன்; இரத்தப்பழி வாங்குவோன் கொலைகாரனைச் சந்திக்கும் போதே அவனைக் கொன்று விடவேண்டும். 22 ஆயினும், பகை ஏதுமின்றித் திடீரென்று அவனைக் கீழே விழத்தள்ளி, அல்லது பதுங்கியிராமலேயே எதையாவது அவன் மேல் எறிந்து, 23 கொலைகாரனுக்கும் இரத்தப்பழி வாங்குவோனுக்குமிடையில் இந்த நீதித் தீர்ப்புகளைக் கொண்டு மக்கள் கூட்டமைப்பு தீர்ப்பு வழங்க வேண்டும். 24 மக்கள் கூட்டமைப்பினர் இரத்தப் பழி வாங்குவோன் கையிலிருந்து கொலைகாரனைக் காப்பாற்ற வேண்டும்; அவன் ஓடித் தஞ்சம் புகுந்த அடைக்கல நகருக்கு மக்கள் கூட்டமைப்பினர் அவனைத் திரும்பக் கொண்டு வர வேண்டும்; 25 தூய தைலத்தால் திருநிலைப்படுத்தப்பட்ட தலைமைக் குரு இறக்குமட்டும் அவன் அதில் தங்குவான். 26 ஆனால், அவன் ஓடித் தஞ்சம் புகுந்திருந்த அடைக்கல நகரின் எல்லைக்கு அப்பால் எப்போதாவது போயிருந்து, 27 அவனை இரத்தப்பழி வாங்குவோன் அடைக்கல நகரின் எல்லைகளுக்கு வெளியே கண்டு அவனை வெட்டினால் இரத்தப்பழி வாங்குவோன் மேல் பழி இராது. 28 ஏனெனில், அவன் தன் தலைமைக் குரு இறக்கும்வரை தன் அடைக்கல நகரில்தான் தங்கியிருக்க வேண்டும்; தலைமைக் குரு இறந்த பின்னர்தான் அந்தக் கொலைகாரன் தனக்குரிய நாட்டுக்குத் திரும்பிச் செல்லலாம். 29 என்றும் எங்கும் உங்களுக்கு இதுவே நீதி நியமம். 30 எவனாவது இன்னொருவனைக் கொன்றால் சாட்சிகளின் வாக்குமூலம் முன்னிட்டுக் கொலைகாரன் கொல்லப்பட வேண்டும்; ஆனால், ஒரே சாட்சியின் கூற்றை வைத்து ஒருவனும் கொல்லப்படக் கூடாது. 31 மேலும், மரண தண்டனைக்குரிய கொலைக்காரன் ஒருவனின் உயிருக்காக ஈட்டுத்தொகை எதுவும் நீங்கள் வாங்க வேண்டாம். அவன் கொல்லப்படத்தான் வேண்டும். 32 அடைக்கல நகருக்குள் ஓடித் தஞ்சம் புகுந்து விட்டு, தலைமைக் குரு இறக்கும் முன் தனக்குரிய நாட்டில் குடியிருக்கும்படி ஒருவன் திரும்பிச் சென்றால் அவனிடமிருந்து ஈட்டுத் தொகை எதுவும் நீங்கள் வாங்க வேண்டாம். 33 நீங்கள் வாழும் நாட்டைத் தீட்டுப்படுத்தாதீர்கள். இரத்தம் நாட்டைத் தீட்டுப்படுத்தும், நாட்டுக்காக, அதில் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக அதனைச் சிந்தினவனின் இரத்தமே ஈடு செய்ய முடியும். 34 நீங்கள் வாழும் நாட்டை நீங்கள் கறைப்படுத்தவே கூடாது. நான் அதன் நடுவில் வாழ்கிறேன்; நானே இஸ்ரயேல் மக்கள் நடுவில் வாழும் ஆண்டவர். 35:1-8 யோசு 21:1-42. 35:30 இச 17:6; 19:15.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-35
152
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 36 – திருவிவிலியம்
மணம் முடித்த பெண்களின் உரிமைச் சொத்து 1 யோசேப்பு புதல்வரைச் சார்ந்த குடும்பங்களில் மனாசே மகனான மாக்கிரின் புதல்வனான கிலயாதின் மைந்தரது குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர் வீடுகளின் தலைவர்கள், மோசேயிடமும், இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகிய பெரியோர்களிடமும் சென்றனர். 2 அவர்கள் கூறியது: “இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்துக்காக நாட்டைத் திருவுளச்சீட்டு முறையில் கொடுக்கும்படி ஆண்டவர் எம் தலைவராகிய உமக்குக் கட்டளையிட்டார். எம் சகோதரன் செலோபுகாதின் உரிமைச் சொத்தை அவர் புதல்வியருக்குக் கொடுக்கும்படியும் ஆண்டவரால் உமக்குக் கட்டளையிடப்பட்டது. 3 ஆனால், இஸ்ரயேல் மக்களின் வேறு குலங்களின் புதல்வர்களை அவர்கள் மணம் புரிந்தால் அவர்களின் உரிமைச் சொத்து எங்கள் மூதாதையர் உரிமைச் சொத்திலிருந்து எடுக்கப்பட்டு அவர்களுக்குச் சொந்தமான குலத்தின் உரிமைச் சொத்துடன் சேர்க்கப்பட்டுவிடும்; இவ்வாறு, திருவுளச் சீட்டால் எங்களுக்குக் கிடைத்த உரிமைச் சொத்து குறைய நேரிடும். 4 அத்துடன் இஸ்ரயேல் மக்களுக்கு மீட்பின் ஆண்டு வரும்போது அவர்கள் உரிமைச் சொத்து அவர்களுக்குரிய குலத்தின் உரிமைச் சொத்துடன் சேர்க்கப்படும்; இவ்வாறு, அவர்களின் உரிமைச் சொத்து எங்கள் மூதாதையரின் உரிமைச் சொத்திலிருந்து குறைய நேரிடும்.” 5 மோசே ஆண்டவரின் வார்த்தைப்படியே மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: யோசேப்புப் புதல்வரின் குலம் கூறுவது சரியே; 6 செலொபுகாதின் புதல்வியரைக் குறித்து ஆண்டவர் கட்டளையிடுவது இதுவே. “தாங்கள் விரும்பியோரை அவர்கள் மணம் முடிக்கட்டும்; ஆனால், தங்கள் தந்தையின் குலக் குடும்பத்திற்குள் மட்டுமே அவர்கள் மணம் முடிக்க வேண்டும். 7 இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்து ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றப்படக்கூடாது; இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் குல உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும். 8 இஸ்ரயேல் மக்களில் எந்த ஒரு குலத்திலும் உரிமைச் சொத்தில் உடைமை கொண்ட ஒவ்வொரு பெண்ணும் தன் தந்தையின் குலத்திலுள்ள குடும்பம் ஒன்றிலேயே மனைவி ஆவாள். இதனால், இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் உரிமைச் சொத்தில் உடைமை கொண்டிருப்பர். 9 எனவே, ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு எந்த உரிமைச் சொத்தும் மாற்றப்படக் கூடாது; இஸ்ரயேல் மக்களின் குலங்கள் ஒவ்வொன்றும் தன் உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.” 10 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலோபுகாதின் புதல்வியர் செய்தனர். 11 செலோபு காதின் புதல்வியரான மக்லா, திர்சா, ஒக்லா, மில்கா, நோவா ஆகியோர் தங்கள் தந்தையாரின் சகோதரர் புதல்வரையே மணந்தனர். 12 அவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் புதல்வர் குடும்பங்களில் மணம் புரிந்தனர். எனவே, அவர்களின் உரிமைச் சொத்து அவர்கள் தந்தையர் குலக்குடும்பத்திற்கே சொந்தமாயிருந்தது. 13 எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்துள்ள மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே வழியாக ஆண்டவர் விதித்த கட்டளைகளும் நீதிச் சட்டங்களும் இவையே. 36:2 எண் 27:7.
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-36
153
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 1 – திருவிவிலியம்
தோற்றுவாய் 1 யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அனைவருக்கும் மோசே உரைத்த வார்த்தைகள் இவையே. 2 காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது. 3 இஸ்ரயேல் மக்களுக்கென ஆண்டவர் கட்டளையிட்ட யாவற்றையும் நாற்பதாவது ஆண்டின் பதினொன்றாம் திங்கள் முதல் நாளன்று மோசே அவர்களுக்கு உரைத்தார். 4 எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் சீகோனையும், எதிரேயி அருகே அசித்தரோத்தில் வாழ்ந்த பாசானின் அரசன் ஓகையும் முறியடித்த பின்னர், 5 யோர்தானுக்கு அப்பால் மோவாபு நாட்டில், பின்வரும் இந்தச் சட்டங்களை மோசே எடுத்துரைத்தார். அவர் கூறியது: 6 “ஆண்டவராகிய நம் கடவுள் ஓரேபில் நமக்கு உரைத்தது; ‘இந்த மலைப்பகுதியில் நீங்கள் நெடுநாள் தங்கிவிட்டீர்கள். 7 புறப்படுங்கள், எமோரியரின் மலைப்பகுதி நோக்கிப் பயணமாகுங்கள். சமவெளியிலும், குன்றுகளிலும், பள்ளத்தாக்கிலும், நெகேபிலும், கடற்கரையோரங்களிலும் வாழும் எல்லா மக்களிடமும் செல்லுங்கள். கானானிய நாட்டுக்கும், லெபனோனுக்கும், யூப்பிரத்தீசு பேராறு வரைக்கும் செல்லுங்கள். 8 இதோ! அந்த நாட்டை உங்கள்முன் வைத்துள்ளேன். ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய, ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் வழி மரபினருக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியபடி நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.’ மோசே தலைவர்களை நியமித்தல் (விப 18:13-27) 9 அப்பொழுது நான் உங்களுக்குக் கூறியது: ‘என்னால் தனியாளாக உங்களைத் தாங்க முடியாது. 10 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைப் பலுகச் செய்துள்ளார். இதோ, இப்பொழுது நீங்கள் விண்மீன்களைப் போல் பெருந்திரளாய் உள்ளீர்கள். 11 உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட ஆயிரம் மடங்கு உங்களைப் பெருகச் செய்வாராக! வாக்களித்தது போல உங்களுக்கு ஆசி வழங்குவாராக! 12 உங்கள் பளுவையும் துன்பத்தையும் வழக்குகளையும் என்னால் தனியாளாகத் தாங்கமுடியுமா? 13 உங்கள் ஒவ்வொரு குலத்திலும் ஞானமும், அறிவாற்றலும், நற்பெயரும் கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன்’. 14 நீங்களும் எனக்கு மறுமொழியாக, ‘செய்ய வேண்டியது குறித்து நீர் சொன்னது நன்று!’ என்றீர்கள். 15 எனவே, ஞானமும் நற்பெயரும் கொண்ட உங்கள் குலத் தலைவர்களை நான் தேர்ந்தெடுத்தேன்; அவர்களை ஆயிரவர் தலைவராக, நூற்றுவர் தலைவராக, ஐம்பதின்மர் தலைவராக, பதின்மர் தலைவராக, மற்றும் உங்கள் ஒவ்வொரு குலத்தின் அலுவலர்களாக ஏற்படுத்தினேன். 16 மேலும், உங்கள் நீதித்தலைவர்களுக்கு நான் கட்டளையிட்டு, ‘உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேளுங்கள், ஒருவனுக்கும் அவன் சகோதரனுக்குமிடையே அல்லது அவனோடு தங்கும் அந்நியனுக்குமிடையே நீதியின்படி தீர்ப்பிடுங்கள். 17 விருப்பு வெறுப்பின்றித் தீர்ப்பிடுங்கள்; உயர்ந்தோனுக்கும் தாழ்ந்தோனுக்கும் ஒன்றுபோல் செவிகொடுங்கள்; எந்த மனிதனுக்கும் அஞ்ச வேண்டாம், ஏனெனில், நீதித்தீர்ப்பு கடவுளுக்கே உரியது. உங்களால் தீர்க்க இயலாததை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் வழக்கைக் கேட்பேன்’ என்றேன். 18 இவ்வாறு, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் அந்நேரத்தில் நான் உங்களுக்குக் கட்டளையாகக் கூறினேன். ஒற்றர்களை அனுப்புதல் (எண் 13:1-33) 19 பின்னர், நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்தபடி, நாம் ஓரேபை விட்டுப் புறப்பட்டு, நீங்களே கண்டு அஞ்சிய பெரும் பாலை நிலம் முழுவதும், எமோரியரின் மலைப்பாதை வழி நடந்து, காதேசுபர்னேயாவுக்கு வந்து சேர்ந்தோம். 20 அங்கு, நான் உங்களை நோக்கி, ‘நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கும் எமோரியரின் மலை நாட்டுக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள்; 21 இதோ, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குத் தந்துள்ள நாட்டைப் பாருங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் மூதாதையருக்கு அளித்த வாக்கிற்கிணங்க நீங்கள் போய் அதை உரிமையாக்கிக் கொள்ளுங்கள். அஞ்சவேண்டாம். கலக்கமுற வேண்டாம்’ என்றேன். 22 அப்பொழுது, நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, ‘நமக்கு முன் ஆள்களை அனுப்புவோம், அவர்கள் நமக்காக அந்த நாட்டை ஆய்ந்து பார்ப்பார்கள், நாம் அதனுள் செல்லவேண்டிய பாதையைப் பற்றியும் நாம் செல்ல வேண்டிய நகர்களைக் குறித்தும் அவர்கள் செய்தியுடன் நம்மிடம் திரும்புவார்கள்’ என்றீர்கள். 23 அது நல்லதாக எனக்குத் தோன்றியது. உங்களிலிருந்து குலத்துக்கு ஒருவராகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தேன். 24 அவர்கள் புறப்பட்டு, மலையில் ஏறி, எசுக்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று, அதை உளவு பார்த்தனர். 25 மேலும், அவர்கள் அந்த நாட்டின் கனிகளில் சிலவற்றைப் பறித்து நம்மிடம் கொணர்ந்து, ‘நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருப்பது நல்ல நாடு’ என்று நமக்குச் செய்தி சொன்னார்கள். 26 ஆயினும், நீங்கள் முன்னேறிச் செல்ல மறுத்தீர்கள். மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்கள். 27 உங்கள் கூடாரங்களில் நீங்கள் முறுமுறுத்து, ‘ஆண்டவர் நம்மை வெறுத்ததால், நம்மை அழிக்கும்படி, எமோரியரிடம் கையளிப்பதற்காக, எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வரச் செய்துள்ளார். 28 நாம் எங்கே போவது? நம்மைவிட வலிமையிலும் உயரத்திலும் மிகுந்த மக்களையும், அவர்களுடைய வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையும், மற்றும் ஏனாக்கின் புதல்வர்களையும் அங்கு கண்டோம் என்று சொல்லி நம் சகோதரர்கள் நம் உள்ளங்களைக் கலங்கடித்தார்களே’ என்று கூறினீர்கள். 29 ஆனால், நான் உங்களுக்குச் சொன்னேன்: ‘நீங்கள் கலக்கமுற வேண்டாம், அவர்களுக்கு அஞ்சவும் வேண்டாம். 30 உங்களுக்கு முன்னே செல்கின்ற உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் காண எகிப்தில் எல்லாவற்றிலும் அவர் செய்தது போலவே, இப்பொழுதும் உங்களுக்காகப் போர் புரிவார். 31 பாலை நிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே! 32 ஆயினும், இவற்றுக்குப் பின்னும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் உறுதியுடன் பற்றிக் கொள்ளவில்லை. 33 பாளையமிறங்கத் தக்க இடத்தை உங்களுக்காகத் தேடவும், நீங்கள் செல்ல வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், இரவில் நெருப்பிலும் பகலில் மேகத்திலும் உங்கள் முன் அவர் நடந்து சென்றாரே!’ ஆண்டவர் இஸ்ரயேலைத் தண்டித்தல் (எண் 14:20-45) 34 ஆகையால், உங்கள் முறையீட்டுக் குரலைக் கேட்டுக் கடுஞ்சினமுற்று ஆண்டவர் ஆணையிட்டுக் கூறியதாவது: 35 ‘உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட தலைமுறையின் மனிதருள் எவனும் காணப் போவதில்லை. 36 எப்புன்னேயின் மகனாகிய காலேபு மட்டும் அதைக் காண்பான். அவன் நடந்து வந்த நாட்டை அவனுக்கும் அவன் புதல்வருக்கும் நான் கொடுப்பேன். ஏனெனில், அவன் ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினான். 37 அன்றியும், உங்கள் பொருட்டு ஆண்டவர் என்மீதும் சினம் கொண்டு, நீயும் அங்குப் போகமாட்டாய். 38 நூனின் மகனும் உன் ஊழியனுமாகிய யோசுவா அங்குச் செல்வான். நீ அவனை உறுதிப்படுத்து. ஏனெனில், அவன் இஸ்ரயேல் அதை உரிமையாக்கிக் கொள்ளுமாறுசெய்வான். 39 இவர்கள் கடத்திச் செல்லப்படுவர் என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறுவரும், இன்றுவரை நன்மை தீமை பற்றிய அறிவற்ற உங்கள் புதல்வரும் அதனுள் செல்வர். அவர்களுக்கே அதை நான் கொடுப்பேன். அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள். 40 நீங்களோ புறப்பட்டு, செங்கடல் நெடுஞ்சாலை வழியே பாலை நிலத்துக்குப் பயணமாகுங்கள்’ என்றார். 41 உடனே நீங்கள் எனக்கு மறுமொழியாக, ‘நாங்கள் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாங்கள் போய்ப் போர் புரிவோம்’ என்றீர்கள். பிறகு, நீங்கள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டீர்கள். மலைமீது ஏறிப்போவது எளிது என்றும் எண்ணினீர்கள். 42 அப்பொழுது ஆண்டவர் என்னிடம், ‘நீங்கள் போக வேண்டாம்; போர்புரியவும் வேண்டாம்; உங்கள் பகைவர் உங்களை முறியடிப்பார்; ஏனெனில், நான் உங்கள் நடுவே இருக்கமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல்’ என்றார். 43 நானும் உங்களுக்கு அதையே சொன்னேன். நீங்களோ கேட்கவில்லை. மாறாக, நீங்கள் செருக்குற்று ஆண்டவரின் வாக்கை மீறி மலைமீது ஏறினீர்கள். 44 அந்த மலைப் பகுதிவாழ் எமோரியர் உங்களுக்கு எதிராகப் புறப்பட்டு, தேனீக்கள் போல் உங்களைத் துரத்தியடித்தனர். சேயிர் தொடங்கி ஓர்மாவரையிலும் உங்களை முறியடித்தனர். 45 அப்பொழுது, நீங்கள் திரும்பி வந்து ஆண்டவர்முன் அழுதீர்கள். ஆனால், ஆண்டவர் உங்கள் குரலைக் கேட்கவில்லை, உங்களுக்காகச் செவி சாய்க்கவும் இல்லை. 46 இவ்வாறு, நீங்கள் வெகு நாள்கள் காதேசில் தங்க நேர்ந்தது. 1:4 எண் 2:21-35. 1:26 இச 9:23; எபி 3:16. 1:31 திப 13:8. 1:32 எபி 3:19. 1:34-35 எபி 3:18.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-1
154
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 2 – திருவிவிலியம்
பாலைநிலத்தில் கழிந்த ஆண்டுகள் 1 பின்னர், ஆண்டவர் எனக்குச் சொல்லியபடி, நாங்கள் புறப்பட்டுச் செங்கடல் நெடுஞ்சாலை வழியாகப் பாலைநிலத்தில் பயணம் செய்து, பல நாள்கள் சேயிர் மலைநாட்டைச் சுற்றித் திரிந்தோம். 2 அப்பொழுது ஆண்டவர் என்னிடம் உரைத்தது; 3 நீங்கள் நெடுங்காலமாக இந்த மலைப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளீர்கள்; இப்போது வடக்கு நோக்கிச் செல்லுங்கள். 4 மேலும், மக்களுக்கு நீ கட்டளையிட வேண்டியது; சேயிர் வாழ் ஏசாவின் புதல்வராகிய உங்கள் சகோதரர்களுடைய எல்லையைக் கடக்கப் போகின்றீர்கள். அவர்கள் உங்களுக்கு அஞ்சுவார்கள். எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். 5 அவர்களோடு தகராறு செய்ய வேண்டாம். ஏனெனில், அவர்களுடைய நாட்டில் ஓரடி நிலம்கூட உங்களுக்குக் கொடுக்கமாட்டேன். ஏனெனில், ஏசாவுக்கு சேயிர் மலை நாட்டை உடைமையாகக் கொடுத்துள்ளேன். 6 நீங்கள் அவர்களிடமிருந்து விலைக்கு உணவு வாங்கி உண்பீர்கள். அவ்வாறே, நீங்கள் அவர்களிடமிருந்து விலைக்குத் தண்ணீர் வாங்கிக் குடிப்பீர்கள். 7 ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் செய்த அனைத்திலும் உங்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். இப் பெரும் பாலைநிலம் வழியாக நீங்கள் நடந்து வந்திருப்பதை அவர் அறிவார். இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருந்துள்ளார். உங்களுக்கு எதுவுமே குறைவுபடவில்லை. 8 அதன்பிறகு, நாம் சேயிர்வாழ் நம் சகோதரராகிய ஏசாவின் மக்களிடமிருந்து புறப்பட்டு, அராபா வழியாய் ஏலாத்துக்கும், எட்சியோன்கெபேருக்கும் சென்றோம். மீண்டும் புறப்பட்டு மோவாபுப் பாலைநிலம் வழியாகச் சென்றோம். 9 அப்பொழுது, ஆண்டவர் என்னிடம், ‘நீ மோவாபைத் துன்புறுத்தாமலும் அவர்களோடு போரிட்டுத் தகராறு செய்யாமலும் இரு. ஏனெனில், அவர்களது நாட்டை உனக்கு உடைமையாகக் கொடுக்க மாட்டேன். மாறாக, ஆர்பகுதிகளை லோத்தின் புதல்வருக்கு உடைமையாகக் கொடுத்துள்ளேன். 10 முற்காலத்தில் ஏமியர் அங்குக் குடியிருந்தனர். அம்மக்கள் ஏனாக்கியர் போன்று வலிமைமிக்கவர்கள், நெடியதாய் வளர்ந்தவர்கள், எண்ணிக்கையில் மிகுதி உடையவர்கள். 11 அவர்கள் ஏனாக்கியர்போல் அரக்கர்கள் எனக் கருதப்பட்டனர். மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று அழைக்கின்றனர். 12 முற்காலத்தில் ஓரியர் சேயிரில் குடியிருந்தனர். ஆண்டவர் தங்களுக்கு உடைமையாகக் கொடுத்த நாட்டில் இஸ்ரயேல் செய்ததுபோல், ஏசாவின் மக்களும் ஓரியரைத் தங்கள் முன்னின்று வெளியேற்றி அழித்து அவர்கள் இடத்தில் குடியேறினர்.- 13 இப்பொழுது, எழுந்து, செரேது ஓடையைக் கடந்து செல்லுங்கள்’ என்றார். நாமும் செரேது ஓடையைக் கடந்து சென்றோம். 14 நாம் காதேசு – பர்னேயாவினின்று புறப்பட்டு செரேது ஓடையைக் கடப்பதற்கு ஆன காலம் முப்பத்தெட்டு ஆண்டுகள். அதற்குள் அந்தத் தலைமுறையின் போர்வீரர் அனைவரும், ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியபடியே, பாளையத்தினின்று அடியோடு அழிந்தொழிந்தனர். 15 உண்மையாகவே, அவர்கள் அனைவரும் அடியோடு அழிந்தொழியும்வரை ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராய் இருந்தது. 16 மக்களுள் போர்வீரராய் இருந்த எல்லோரும் முற்றிலும் இறந்தனர். 17 பின்னர், ஆண்டவர் என்னிடம் கூறியது: 18 ‘இன்று நீ ஆர் நகரைத் தாண்டி மோவாபின் எல்லையைக் கடந்து செல்வாய். 19 அப்பொழுது அம்மோனின் புதல்வரை நெருங்கி வருவாய். நீ அவர்களைத் துன்புறுத்தாமலும், அவர்களோடு போரிட்டுத் தகராறு செய்யாமலும் இரு. ஏனெனில், அம்மோனியரின் நாட்டை உனக்கு உடமையாகக் கொடுக்கமாட்டேன். மாறாக, அதை லோத்தின் புதல்வருக்கு உடைமையாகக் கொடுத்துள்ளேன்’.- 20 ஏனெனில், அதுவும் அரக்கர்களின் நிலம் எனக் கருதப்பட்டது. முற்காலத்தில் அங்கு அரக்கர்கள் குடியிருந்தனர். அம்மோனியர் அவர்களை ‘சம்சுமியர்’ என்று அழைக்கின்றனர். 21 அம்மக்கள் ஏனாக்கியர் போன்று வலிமைமிக்கவர்கள், நெடியதாய் வளர்ந்தவர்கள், எண்ணிக்கையில் மிகுந்தவர்கள். ஆனால், ஆண்டவர் அவர்களை அம்மோனியர் முன்னிலையில் அழித்தார். அம்மோனியரும் அவர்களை வெளியேற்றித் தங்கள் முன்னின்று அழித்து அவர்களது இடத்தில் குடியேறினர். 22 இது ஆண்டவர் சேயிர்வாழ் ஏசாவின் மக்களுக்குச் செய்ததற்கு ஒப்பாகும். ஆண்டவர் ஓரியரை அழித்தார். ஏசாவின் மக்கள் ஓரியரை வெளியேற்றிவிட்டு அவர்கள் இடத்தில் இன்றுவரை வாழ்கின்றனர். 23 அதுபோல் கட்சேரிம் தொடங்கி ஆசா வரை வாழ்ந்த அவ்வியரை கப்தோரிலிருந்து வந்த கப்தோரியர் அழித்து, அவர்கள் இடத்தில் குடியேறினர்.- 24 ‘இப்பொழுது, எழுந்து பயணமாகுங்கள். அர்னோன் ஓடையைக் கடந்து செல்லுங்கள். இதோ, எமோரியனும் எஸ்போனின் அரசனுமாகிய சீகோனையும் அவனது நாட்டையும் உங்களிடம் கையளித்துள்ளேன். அதை உடைமையாக்கிக் கொள்ளுமாறு, அவனோடு போரிடுங்கள். 25 உன்னைப்பற்றிய திகிலும் அச்சமும் வானத்தின் கீழுள்ள எல்லா மக்களினங்கள் மீதும் உண்டாகுமாறு இன்று செய்வேன். அவர்கள் உன்னைப் பற்றிக் கேள்வியுற்று நடுங்கி, உன் பொருட்டுப் பதைபதைப்பர்’. மன்னன் சீகோனை இஸ்ரயேல் தோற்கடித்தல் (எண் 21:21-30) 26 அப்பொழுது நான் கெதமோத்துப் பாலைநிலத்திலிருந்து எஸ்போனின் மன்னனாகிய சீகோனிடம் தூதரை அனுப்பி நல்லுறவுச் செய்தியுடன் சொன்னது: 27 ‘நாங்கள் உமது நாட்டின் நெடுஞ்சாலை வழியே கடந்து செல்ல அனுமதி கொடும். வலமோ இடமோ திரும்பாமல், நெடுஞ்சாலையில் மட்டும் நாங்கள் செல்வோம். 28 நீர் எமக்கு உணவை விலைக்குத் தாரும். நாங்கள் உண்போம். எமக்கு நீரை விலைக்குத் தாரும், நாங்கள் பருகுவோம். நாங்கள் கால்நடையாய்க் கடந்து போக மட்டும் அனுமதி கொடும். 29 சேயிர் வாழ் ஏசாவின் மக்களும், ஆர் நகர் வாழ் மோவாபியரும் எமக்கு அனுமதி கொடுத்தது போல், யோர்தானைக் கடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்குக் கொடுக்க இருக்கிற நாட்டில் சேர்வதற்கு அனுமதி கொடும்.’ 30 ஆனால், எஸ்போனின் மன்னன் சீகோன் தன் நாட்டின் வழியே கடந்து செல்ல நமக்கு அனுமதியளிக்கவில்லை. இன்றும் இருப்பதுபோல் அவனை உங்கள் கையில் ஒப்படைக்கும் பொருட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவன் மனத்தைக் கடினப்படுத்தியிருந்தார்; அவன் இதயத்தையும் கல்லாக்கியிருந்தார். 31 அப்பொழுது ஆண்டவர் என்னிடம், ‘இதோ, சீகோனையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன். அவனது நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுமாறு அதைக் கைப்பற்றத் தொடங்கு’ என்றார். 32 சீகான் தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு யாகசுவில் போரிடப் புறப்பட்டு வந்தான். 33 நம் கடவுளாகிய ஆண்டவர் அவனை நம் கையில் ஒப்படைத்தார். நாம் அவனையும் அவன் புதல்வரையும் அவன் குடிமக்கள் அனைவரையும் முறியடித்தோம். 34 அச்சமயம் அவன் நகர்கள் அனைத்தையும் கைப்பற்றி அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், எவரையுமே தப்பவிடாமல் அழித்தொழித்தோம். 35 கால்நடைகளையும், நாம் பிடித்த நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம். 36 அர்னோன் ஓடையின் ஓரத்தில் உள்ள அரோயேரும், ஓடையை ஒட்டியுள்ள நகர் தொடங்கி, கிலயாது வரைக்கும் நம்மை எதிர்க்கக் கூடிய அரண்சூழ் நகர் எதுவுமே இருந்ததில்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் எல்லாவற்றையும் நம் கையில் ஒப்படைத்தார். 37 ஆனால், நம் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட இடங்கள் அனைத்தையும், அம்மோனியரின் நாட்டையும், யாபோக்கு ஓடைக் கரையிலுள்ள ஊர்களையும் மலை நாட்டு நகர்களையும் நீங்கள் அணுகவில்லை. 2:1 எண் 21:4. 2:4 தொநூ 36:8. 2:9 தொநூ 19:37. 2:14 எண் 14:28-35. 2:19 தொநூ 19:38.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-2
155
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 3 – திருவிவிலியம்
மன்னன் ஓகின்மீது இஸ்ரயேல் வெற்றிகொள்ளல் (எண் 21:31-35) 1 பின்பு, நாம் திரும்பி பாசானுக்குப் போகும் வழியில் சென்றோம். பாசானின் மன்னன் ஓகு, தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு எதிரேயியில் போரிடப் புறப்பட்டு வந்தான். 2 அப்பொழுது ஆண்டவர், என்னை நோக்கிக் கூறியது, ‘அவனுக்கு நீ அஞ்சாதே. ஏனெனில், அவனையும், அவன் மக்கள் அனைவரையும், அவன் நாட்டையும் உன்னிடம் ஒப்படைத்துள்ளேன். எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் சீகோனுக்கு நீ செய்தது போலவே, அவனுக்கும் செய்’ என்றார். 3 அவ்வாறே, நம் கடவுளாகிய ஆண்டவர் பாசானின் மன்னனாகிய ஓகையும் அவன் மக்கள் அனைவரையும் நம்மிடம் ஒப்படைத்தார். அவனுக்குச் சொந்தமான எவனும் எஞ்சியிராதபடி அவர்களைத்தாக்கினோம். 4 அச்சமயம் அவன் நகர்கள் அனைத்தையும் கைப்பற்றினோம். அப்பகுதியில் நாம் கைப்பற்றாத நகர் எதுவுமே இல்லை. அர்கோபின் எல்லா பகுதிகளிலும், பாசானிலிருந்த ஓகின் நாட்டிலும் மொத்தம் அறுபது நகர்களைக் கைப்பற்றினோம். 5 அந்த நகர்களெல்லாம் மிக உயர்ந்த மதில்களாலும், இரட்டைக் கதவுகளாலும், தாழ்ப்பாள்களாலும் அரண் செய்யப்பட்டிருந்தன. அவை தவிர மதில்கள் இல்லாத நகர்களும் எண்ணிறந்தவை. 6 அவற்றை அழித்தொழித்தோம். எஸ்போனின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோலவே எல்லா நகர்களையும், ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அழித்தொழித்தோம். 7 எல்லாக் கால்நடைகளையும் நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம். 8 அவ்வேளையில் எமோரியரின் இரண்டு மன்னர்களிடமிருந்ததும், யோர்தானுக்கு இக்கரையிலிருக்கும் அர்னோன் ஓடை தொடங்கி எர்மோன் மலை வரையிலும் உள்ள நாட்டைக் கைப்பற்றினோம். 9 சீதோனியர் அந்த எர்மோனை ‘சிரியோன்’ என்றழைக்கின்றனர். எமோரியரோ அதைச் ‘செனீர்’ என்றழைக்கின்றனர்- 10 சமவெளியில் உள்ள எல்லா நகர்களையும், கிலயாது முழுவதையும், பாசான் முழுவதையும், சல்கா, எதிரேயிவரை உள்ள, பாசானிலிருந்த ஓகின் அரச நகர்களையும் கைப்பற்றினோம். 11 அரக்கர்களில் பாசானின் மன்னனாகிய ஓகு மட்டுமே எஞ்சியிருந்தான். அவனது கட்டில் இரும்பினால் ஆனது. அதுமனிதரின் கைமுழத்தின்படி, ஒன்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் கொண்டது. அது அம்மோனியரின் இரப்பா நகரில் உள்ளதன்றோ! யோர்தானுக்குக் கிழக்கே குடியேறிய குலங்கள் (எண் 32:1-42) 12 அக்காலத்தில் நாம் உடைமையாக்கிக் கொண்ட இந்த நாட்டில், அர்னோன் ஓடைக் கரையிலுள்ள அரோயேர் முதல் கிலயாது மலை நாட்டின் ஒரு பகுதியையும், அதன் நகர்களையும் ரூபன் குலத்திற்கும் காத்துக் குலத்திற்கும் நான் கொடுத்தேன். 13 கிலயாதின் மறு பகுதியையும், ஓகின் ஆட்சிக்குட்பட்ட பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் குலத்திற்குக் கொடுத்தேன். மேலும், அரக்கர்களின் நாடு எனப்பட்ட பாசானைச் சார்ந்த அர்கோபுப் பகுதி முழுவதையும் கொடுத்தேன்.- 14 மனாசேயின் மகன் யாயிர்* அர்கோபுப் பகுதி முழுவதையும், கெசூரியர், மாகாத்தியர் என்பவர்களது எல்லை வரை உடைமையாக்கிக் கொண்டு, பாசான் என்னும் அப்பகுதியைத் தனது பெயராலேயே, ‘அவ்வோத்து யாயீர்’* என்றழைத்தான். அது இன்றுவரை வழக்கில் உள்ளது. 15 மாக்கிருக்குக் கிலயாதைக் கொடுத்தேன். 16 அர்னோன் ஓடைவரை உள்ள கிலயாதின் பகுதியையும், அர்னோன் நடு ஓடையும் அதன் எல்லைப்புற நாடும் தொடங்கி, அம்மோனியரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுவரைக்கும் ரூபன் குலத்திற்கும் காத்துக் குலத்திற்கும் கொடுத்தேன். 17 மற்றும், கினரேத்து முதல் பிஸ்காவுக்குக் கிழக்கே தாழ்வாக இருக்கும் அராபாவின் உப்புக் கடல் வரை, யோர்தானை எல்லையாகக் கொண்ட சமவெளியையும் அவர்களுக்குக் கொடுத்தேன். 18 அப்பொழுது நான் உங்களை நோக்கிக் கட்டளையிட்டது: ‘உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இந்த நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு தந்துள்ளார், உங்களுள் போர்வீரர் அனைவரும், போர்க்கலன் தாங்கியவராய் உங்கள் சகோதரராகிய இஸ்ரயேல் மக்களுக்கு முன்னே செல்லுங்கள். 19 உங்கள் மனைவியரும், பிள்ளைகளும், மந்தைகளும் மட்டும்- உங்களுக்குத் திரளான மந்தைகள் உண்டென்று நான் அறிவேன். நான் உங்களுக்குத் தந்துள்ள நகர்களில் தங்கட்டும். 20 ஆண்டவர் உங்களுக்கு அமைதி அளித்ததுபோல், உங்கள் சகோதரருக்கும் அமைதி அளிப்பர். உங்கள் கடவுளாகிய ஆண்டவர், யோர்தானுக்கு மேற்கே அவர்களுக்குக் கொடுக்கும் நாட்டை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளும் வரையிலும் நீங்கள் இருங்கள். பின்னர், நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள உரிமைப் பகுதிக்குத் திரும்பலாம்.’ 21 மேலும், நான் யோசுவாவுக்குக் கட்டளையிட்டது: ‘உன் கடவுளாகிய ஆண்டவர், அந்த இரண்டு அரசர்களுக்கும் செய்தவைகளை நீ கண்ணால் கண்டாயே! நீ செல்கின்ற எல்லா நாடுகளுக்கும் ஆண்டவர் அதுபோலவே செய்வார். 22 நீ அவர்களுக்கு அஞ்சாதே. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்காகப் போர் புரிவார்.’ கானான் நாட்டிற்குள் நுழைய மோசேக்குத் தடை 23 அந்நாளில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடிச் சொன்னது: 24 ‘என் தலைவராகிய ஆண்டவரே, நீர் உம் ஊழியனுக்கு உமது கைவன்மையையும் மாண்பையும் காட்டியுள்ளீர். உம் ஆற்றல்மிகு செயல்களுக்கு ஒப்பானவற்றைச் செய்யக்கூடிய கடவுள் எவராவது விண்ணிலோ மண்ணிலோ உண்டா? 25 நான் கடந்து சென்று, யோர்தானுக்கு மேற்கிலுள்ள நல்ல நாட்டையும், அழகிய மலைப்பகுதியையும், லெபனோனையும் கண்டிட எனக்கு அனுமதி அளியும்.’ 26 ஆண்டவரோ, உங்கள் பொருட்டு என்மேல் சினம் கொண்டவராய், எனக்குச் செவி கொடுக்கவில்லை. அவர் என்னை நோக்கிக் கூறியது: ‘போதும்; இது குறித்து இனி நீ என்னிடம் எதுவும் பேச வேண்டாம். 27 பிஸ்கா மலை முகட்டுக்கு ஏறிப்போ; மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் உன் பார்வையைச் செலுத்து. கண்குளிரப் பார்த்துக்கொள். ஏனெனில், நீ இந்த யோர்தானைக் கடந்து செல்லமாட்டாய். 28 நீ யோசுவாவுக்குப் பொறுப்பளித்து, அவனைத் திடப்படுத்தி, உறுதிப்படுத்து. ஏனெனில், அவனே இந்த மக்கள் முன்னால் செல்வான்; நீ காணும் நாட்டை அவர்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்வான்.’ 29 பின்னர், நாங்கள் பெத்பகோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம். 3:18-20 யோசு 1:12-15. 3:23-27 எண் 27:12-14; இச 32:48-52. 3:14 எபிரேயத்தில், ‘யாயீரின் குடியிருப்பு’ என்பது பொருள்.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-3
156
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 4 – திருவிவிலியம்
கீழ்ப்படியுமாறு மோசே இஸ்ரயேலரை ஊக்குவித்தல் 1 இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். 2 நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள். 3 பாகால் பெகோரில் ஆண்டவர் செய்ததை உங்கள் கண்களால் கண்டீர்கள். பெகோரின் தெய்வமாகிய பாகாலைப் பின்பற்றியவர்கள் உங்களிடையே இல்லாதவாறு உங்கள் கடவுளாகிய ஆண்டவரால் அழிக்கப்பட்டார்கள். 4 மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை உறுதியாகப் பற்றிக்கொண்ட நீங்கள் இன்றும் வாழ்கின்றீர்கள். 5 நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும். 6 நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். 7 நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? 8 நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறுபேரினம் ஏதாகிலும் உண்டா? 9 கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்து போகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள். 10 ஓரேபில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீங்கள் நின்ற நாளை மறந்து விட வேண்டாம். அன்று ஆண்டவர் என்னிடம், ‘மக்கள் கூட்டமைப்பை என்முன் கூடிவரச் செய். அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கச் செய்வேன். அதனால், அவர்கள் இத்தரையில் வாழும் நாளெல்லாம் எனக்கு அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வர்; அவ்வாறே பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்பர்’ என்றார். 11 நீங்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றீர்கள். மலையினின்று நெருப்பு எழும்பி, வானம் மட்டும் எட்ட, மலைமுகட்டைக் காரிருளும் மேகமும் சூழ்ந்தன. 12 நெருப்பிலிருந்து ஆண்டவர் உங்களோடு பேசினார். பேச்சு ஒலியை நீங்கள் கேட்டீர்கள்; உருவம் எதையும் காணவில்லை; குரல் மட்டும் கேட்டது. 13 அப்பொழுது, அவர் தம் உடன்படிக்கையை உங்களுக்கு அறிவித்து, பத்துக்கட்டளைகளைத் தந்து, அதைப் பின்பற்றும்படி ஆணையிட்டார். அதை அவர் இரண்டு கற்பலகைகளில் எழுதினார். 14 நீங்கள் சென்று உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் கடைப்பிடிக்கும்படி உங்களுக்கு நியமங்களையும் முறைமைகளையும் கற்பிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார். சிலைவழிபாடு குறித்து எச்சரித்தல் 15 ஓரேபு மலையில், நெருப்பினின்று ஆண்டவர் உங்களோடு பேசிய அந்நாளில், நீங்கள் எந்த உருவத்தையும் காணவில்லை. எனவே, மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள். 16 நீங்கள் அழிவுக்கு உள்ளாகாதபடி சிலைகளைச் செய்யாதீர்கள். 17 ஆண் அல்லது பெண், நிலத்தின் விலங்குகள் அல்லது வானத்துப் பறவைகள், 18 தரையில் ஊர்வன அல்லது தரைக்குக் கீழே நீரில் வாழும் மீன்கள், எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள். 19 மேலும், வான் நோக்கிக் கண்களை உயர்த்தி, கதிரவன், நிலா, விண்மீன்கள், வான்படைகள் ஆகிய நீங்கள் கண்ணால் காணும் பொருள்களுக்குமுன் மண்டியிட்டு வணங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர், வானத்துக்குக் கீழுள்ள எல்லா மக்களினங்களுக்கும் பணிபுரியவே அவற்றை ஏற்படுத்தியுள்ளார். 20 இன்று இருப்பதுபோல், நீங்கள் அவரது உரிமைச் சொத்தான மக்களாகும்படி இரும்புச் சூளையாகிய எகிப்திலிருந்து உங்களைக் கூட்டி வந்தவர் ஆண்டவரே! 21 ஆனால், உங்களின் செயல்களுக்காக ஆண்டவர் என்மேல் சினம் கொண்டார். நான் யோர்தானைக் கடந்து போகமாட்டேன் எனவும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவிருக்கும் அந்த வளமிகு நாட்டுக்குள் நான் நுழையமாட்டேன் எனவும் ஆணையிட்டுக் கூறினார். 22 ஏனெனில், நான் இப்பகுதியிலேயே இறப்பேன். யோர்தானைக் கடந்து செல்ல மாட்டேன். ஆனால், நீங்கள் கடந்து அந்த வளமிகு நாட்டை உடைமையாக்கிக் கொள்வீர்கள். 23 எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையை மறந்துவிடாதீர்கள், மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி எந்தவொரு உருவத்திலும் உங்களுக்கெனச் சிலையைச் செய்யாதபடி கவனமாய் இருங்கள். 24 ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்; அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன். 25 நீங்கள் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் பெற்று, நாட்டில் நெடுநாள் வாழ்ந்தபின், இழிசெயல் புரிந்து ஏதேனும் ஓர் உருவத்தில் சிலையை உருவாக்கி, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தீயதைச் செய்து, அவருக்குச் சினமூட்டுவீர்களாயின், 26 இன்றே விண்ணையும் மண்ணையும் உங்களுக்கு எதிரான சான்றுகளாக ஏற்படுத்துவேன். நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று, உடைமையாக்கிக் கொள்ளப்போகும் அந்த நாட்டிலிருந்து விரைவில் முற்றிலும் அழிந்து போவீர்கள். நீங்கள் அங்கு வெகுநாள் வாழமாட்டீர்கள். மாறாக, வேரோடு சாய்க்கப்படுவீர்கள். 27 ஆண்டவர் உங்களை மக்களினத்தாரிடையே சிதறடிப்பார்; அவர் உங்களைக் கொண்டு சேர்க்கும் வேற்றினத்தாரிடையே உங்களுள் எஞ்சியிருப்போர் எண்ணிக்கை மிகச் சிறியதாக இருக்கும். 28 அங்கு மரத்தாலும் கல்லாலுமான, மனிதரின் கையால் செய்யப்பட்ட தெய்வங்களை வழிபடுவீர்கள். அவற்றால் காணவோ கேட்கவோ உண்ணவோ நுகரவோ முடியாது. 29 மாறாக, அங்கு இருக்கையில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் நாடினால், உங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் தேடினால், அவரைக் கண்டடைவீர்கள். 30 உங்களுக்குப் பெருந்துயர் உண்டாகும் பொழுது, இவ்வார்த்தைகளின் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இறுதி நாள்களில் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி அவரது குரலுக்குச் செவிகொடுப்பீர்கள். 31 ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இரக்கம் மிகு இறைவன். அவர் உங்களைக் கைவிடமாட்டார், அழிக்கவும் மாட்டார். உங்கள் மூதாதையரோடு அவர் ஆணையிட்டுச் செய்த உடன்படிக்கையை மறக்கவும் மாட்டார். 32 உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்துண்டோ? அல்லது இதுபோல் கேள்விப்பட்டதுண்டா? 33 நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்ததுபோல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? 34 அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக்கொள்ள முன்வரும் கடவுள் உண்டா? 35 ‘ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர், என நீங்கள் அறிந்து கொள்ளும் படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப்பட்டன. 36 நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார்.தமது பெரும் நெருப்பை மண்ணுலகில் நீங்கள் காணச் செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள். 37 உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப்பின், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்து கொண்டார். எனவே, அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். 38 உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச் சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார். 39 ‘மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். 40 நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள். யோர்தானுக்குக் கிழக்கே குறிக்கப்பட்ட அடைக்கல நகர்கள் 41 அப்பொழுது மோசே, யோர்தானுக்குக் கிழக்கே மூன்று நகர்களைக் குறித்துக் கொடுத்தார். 42 முன் பகையின்றி, தவறுதலாகத் தன் தோழனைக் கொன்றுவிட்ட எவனும், இந்த நகர்கள் ஒன்றினுள் ஓடிப்புகுந்து அடைக்கலம் பெற்று உயிர் தப்புமாறு அந்நகர்களைக் குறித்தார். 43 ரூபனியர் எல்லையில் பாலை நிலச் சமவெளியில் உள்ள பெட்சேர், காத்தியர் எல்லையில் உள்ள கிலயாதின் இராமோத்து, மனாசே எல்லையில் உள்ள பாசானின் கோலான் ஆகிய நகர்களே அவை. கடவுளின் சட்டத்தைத் தருவதற்கான முன்குறிப்பு 44 இஸ்ரயேல் புதல்வரின் முன்னிலையில் மோசே அளித்த சட்டம் இதுவே: 45 இஸ்ரயேல் புதல்வர் எகிப்திலிருந்து வெளியேறியபோது, மோசே அவர்களுக்கு அளித்த சான்றுகள், நியமங்கள், முறைமைகள் இவையே. 46 யோர்தானுக்குக் கிழக்கே பெத்பகோருக்கு எதிரே உள்ள சமவெளியில் எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசனாகிய சீகோனின் நாட்டில் இது நிகழ்ந்தது. மோசேயும் இஸ்ரயேல் புதல்வரும் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் சீகோனையும் அவன் நாட்டையும் முறியடித்திருந்தனர். 47 அவர்கள் அவனது நாட்டைத் தங்களது உடைமையாக்கியிருந்தனர். மேலும், பாசானின் அரசன் ஓகின் நாட்டையும் யோர்தானுக்குக் கிழக்கே வாழ்ந்த எமோரியரின் இரு அரசர்களையும் முறியடித்திருந்தனர். 48 அர்னோன் ஓடைக்கரையிலுள்ள அரோயேர் முதல் எர்மோன் என்ற சிரியோன் மலைவரையிலும், 49 யோர்தானுக்குக் கிழக்கே அராபா பாலைநிலம் அனைத்தையும்,பிஸ்காவிற்குக் கிழக்கே தாழ்வாக இருக்கும் அரபாக் கடல் வரைக்கும் அவர்கள் கைப்பற்றியிருந்தனர். 4:2 திவெ 22:18-19. 4:11-12 விப 19:16-18; எபி 12:18-19. 4:13 விப 31:18; 34:28; இச 9:10. 4:14 விப 21:1. 4:16 விப 20:4; லேவி 26:1; இச 5:8; 27:15. 4:17-18 உரோ 1:23. 4:20 விப 19:5; இச 7:6; 14:2; 26:18; தீத் 2:14; 1 பேது 2:9. 4:21 எண் 20:12. 4:24 எபி 12:29. 4:27-28 இச 28:36. 4:29 எரே 29:13. 4:35 மாற் 12:32. 4:41-43 யோசு 20:8-9.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-4
157
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 5 – திருவிவிலியம்
பத்துக் கட்டளைகள் (விப 20:1-17) 1 மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியதாவது: “இஸ்ரயேலரே, உங்கள் காதுகள் கேட்க நான் இன்று கூறப்போகும் நியமங்களையும் முறைமைகளையும் கேளுங்கள். அவைகளைக் கற்று, கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். 2 கடவுளாகிய ஆண்டவர் ஓரேபில் நம்மோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். 3 நம் மூதாதையரோடு ஆண்டவர் இது போன்ற உடன்படிக்கையைச் செய்து கொள்ளவில்லை. மாறாக, நம்மோடு, ஆம் இன்று, இங்கு உயிரோடிருக்கும் நம் அனைவரோடும் செய்து கொண்டார். 4 மலையில் நெருப்பின் நடுவிலிருந்து ஆண்டவர் உங்களோடு நேருக்கு நேர் பேசினார். 5 ஆண்டவரின் வாக்கை உங்களுக்கு அறிவிக்க நானே அவ்வேளையில் ஆண்டவருக்கும் உங்களுக்கும் இடையே நின்றேன். ஏனெனில், நீங்கள் நெருப்பைக் கண்டு அஞ்சினீர்கள்; மலைமீதும் ஏறவில்லை. அப்பொழுது அவர் கூறியது: 6 உன் கடவுளாகிய ஆண்டவர் நானே. அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உன்னைப் புறப்படச் செய்தவர் நானே. 7 என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல் ஆகாது. 8 மேலே விண்ணுலகிலும், கீழே மண்ணுலகிலும், மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே. 9 நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில், நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்; என்னை வெறுக்கும் மூதாதையரின் தீச்செயலுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவன். 10 மாறாக, என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவன். 11 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவனை ஆண்டவர் தண்டியாது விடார். 12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் புனிதமாகக் கடைப்பிடி. 13 ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலைகளையும் செய்வாய். 14 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே, அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும், மாடு, கழுதை மற்றெல்லாக் கால்நடைகளும், உன் வாயில்களுக்குள் இருக்கும் அந்நியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பதுபோல் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும். 15 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்தாய் என்பதையும், உன் கடவுளாகிய ஆண்டவரே தம் வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் உன்னை அங்கிருந்து கூட்டி வந்தார் என்பதையும் நினைவில் கொள். ஆதலால், ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டார். 16 உன் தந்தையையும் தாயையும் மதித்து நட இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இடும் கட்டளை இதுவே. 17 கொலை செய்யாதே. 18 விபசாரம் செய்யாதே. 19 களவு செய்யாதே. 20 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. 21 பிறர் மனைவியைக் காமுறாதே! பிறர் வீடு, நிலம், அடிமை, அடிமைப்பெண், மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. 22 இவ்வார்த்தைகளை ஆண்டவர், மலைமேல் நெருப்பு, மேகம், காரிருள் நடுவிலிருந்து, உரத்தக்குரலில் உங்கள் சபையோர் எல்லோரிடமும் பேசினார். மேலும், வேறு எதையும் கூட்டாமல் அவர் அவற்றை இரு கற்பலகைகளில் எழுதி என்னிடம் தந்தார். மக்களின் அச்சம் (விப 20:18-21) 23 மலையில் தீப்பற்றிஎரியும் பொழுதே, இருளின் நடுவிலிருந்து வந்த குரலொலியை நீங்கள் கேட்டதும், நீங்கள் எல்லோரும், உங்கள் குலத்தலைவர்களும் உங்கள் பெரியோர்களும் என்னை அணுகினீர்கள். 24 நீங்கள் என்னிடம் கூறியது: ‘இதோ, நம் கடவுளாகிய ஆண்டவர் அவர்தம் மாட்சியையும் ஆற்றலையும் நமக்குக் காண்பித்துள்ளார். மேலும், நெருப்பின் நடுவிலிருந்து வந்த அவரது குரலையும் நாம் கேட்டோம். கடவுள் மனிதரோடு பேசியதையும், ஆயினும் அம்மனிதன் உயிரோடிருப்பதையும் இன்று கண்டோம். 25 அப்படியானால், இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? ஏனெனில், இப்பெரும் நெருப்பு எங்களை விழுங்குமே! நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலை இனியும் கேட்போமாகில் நாங்கள் மடிவோம். 26 நெருப்பிலிருந்து பேசுகின்ற வாழும் கடவுளின் குரலை நாங்கள் கேட்டும் உயிரோடு இருப்பதுபோல், கடவுளது குரலைக் கேட்டும் உயிரோடு இருக்கின்ற மானிடன் எவனாவது உண்டா? 27 நீரே அருகில் சென்று, நம் கடவுளாகிய ஆண்டவர் கூறப்போவது அனைத்தையும் கேட்டு, அவர் கூறுவது அனைத்தையும் நீரே எமக்குச் சொல்லும், நாங்கள் கேட்டு அதன்படியே செய்வோம்.’ 28 நீங்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகளை ஆண்டவர் கேட்டு, அவர் என்னிடம் கூறியது: ‘இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொல்வது சரியே. 29 அவர்களும், அவர்கள் மக்களும் என்றென்றும் நலமாயிருக்குமாறு எந்நாளும் எனக்கு அஞ்சி நடந்து, என் கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிக்கும் இத்தகைய உள்ளம் அவர்களுக்கு இருந்தால் எவ்வளவோ நல்லது! 30 நீ சென்று ‘உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள்’ என அவர்களுக்குச் சொல். 31 நீயோ இங்கே என்னோடு இரு. எல்லாக் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நான் உனக்குச் சொல்வேன். அவர்களுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாட்டில் அவர்கள் கடைப்பிடிக்குமாறு அவற்றை நீ கற்றுக் கொடு.’ 32 ஆகவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிருங்கள். வலமோ இடமோ விலகி நடக்கவேண்டாம். 33 மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய எல்லா வழிகளிலும் நடங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள், அது உங்களுக்கு நலமாகும். நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலும் நெடுநாள் வாழ்வீர்கள். 5:8-9 லேவி 26:1; இச 4:15-18; 27:15. 5:9-10 விப 34:6-7; எண் 14:18; இச 7:9-10. 5:11 லேவி 19:12. 5:12 விப 16:23-30; 31:12-14. 5:13-14 விப 23:12; 31:15; 34:21; 35:2; லேவி 23:3. 5:16 இச 27:16; மத் 15:4; 19:19; மாற் 7:10; 10:9; லூக் 18:20; எபே 6:23. 5:17 தொநூ 9:6; லேவி 24:17; மத் 5:21; 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9; யாக் 2:11. 5:18 லேவி 20:10; மத் 5:27; 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9; யாக் 2:11. 5:19 லேவி 19:11; மத் 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9. 5:20 விப 23:1; மத் 19:18; மாற் 10:19; லூக் 18:20. 5:21 உரோ 7:7; 13:9. 5:22-27 எபி 12:18-19.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-5
158
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 6 – திருவிவிலியம்
மாபெரும் கட்டளை 1 உங்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறும், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில் கடைப்பிடிக்குமாறும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட கட்டளைகளும், நியமங்களும், முறைமைகளும் இவைகளே. 2 நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ் நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள். 3 இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய். 4 இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். 5 உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! 6 இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். 7 நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. 8 உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப்பட்டமாக அவை இருக்கட்டும். 9 உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது. கீழ்ப்படியாமை குறித்து எச்சரித்தல் 10 மேலும், ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், 11 நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவுகொள்ளும் போதும், 12 அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு. 13 உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு! 14 உங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் தெய்வங்களாகிய வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில், உங்களிடையே உள்ள உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள். 15 இல்லையெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சினம் உங்கள்மேல் மூண்டு, உலகினின்றே உங்களை அழித்து விடலாம். 16 மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள். 18 ஆண்டவருக்கு முன்னால் நேரியதையும் நல்லதையுமே செய்யுங்கள். அப்பொழுது, எல்லாம் உங்களுக்கு நலமாகும். உங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நல்ல நாட்டில் நீங்கள் புகுந்து அதை உடைமையாக்கிக் கொள்வீர்கள். 19 மேலும், ஆண்டவர் உரைத்தபடி உங்கள் பகைவர் அனைவரையும் உங்கள் முன்பாகவே அழித்தொழிப்பார். 20 வருங்காலத்தில், உன் பிள்ளை உன்னை நோக்கி, ‘நம் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்ட கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றின் உட்பொருள் என்ன?’ என்று கேட்கும் போது, 21 நீ உன் பிள்ளைக்கு இவ்வாறு சொல்: ‘நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆனால், ஆண்டவர் தம் வலிய கரத்தால் எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார். 22 எங்கள் கண்கள் காண எகிப்து நாட்டின் மீதும், பார்வோன் மீதும், ஆண்டவர் மாபெரும் அடையாளங்களையும் அச்சுறுத்தும் அருஞ்செயல்களையும் செய்தார். 23 நம் மூதாதையருக்குக் கொடுப்பதாக அவர் ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்கு எங்களை அழைத்து வந்தார்; அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அங்கிருந்து வெளியே கொணர்ந்தார். 24 நமக்கு இன்று இருப்பதுபோல் என்றும் நலமாகும்பொருட்டும், நமது வாழ்வை அவர் பாதுகாக்கும் பொருட்டும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்படி இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற நம் ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டார். 25 நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டது போல அவரது திருமுன் இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற முனைந்தால் அதுவே நேரிய வாழ்வாகும்.’ 6:4 மாற் 12:29. 6:5 மத் 22:37; மாற் 12:30; லூக் 10:27. 6:6-9 இச 11:18-20. 6:10 தொநூ 12:7; 26:3; 28:13. 6:13 மத் 4:10; லூக் 4:8. 6:16 விப 17:1-7; மத் 4:7; லூக் 4:12.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-6
159
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 7 – திருவிவிலியம்
ஆண்டவரின் சொந்த மக்கள் (விப 34:11-16) 1 நீ உரிமையாக்கிக் கொள்ளைப்போகும் நாட்டில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து, உன்னைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுந்த மக்களாகிய இத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் எனும் ஏழு மக்களினங்களையும் உன் கண்முன்னே விரட்டியடித்து, 2 உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன்னிடம் கையளிக்கும்போது, நீ அவர்களை முறியடித்து முற்றிலும் அழிப்பாய். அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளவோ அவர்களுக்கு இரங்கவோ வேண்டாம். 3 நீ அவர்களோடு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே. 4 ஏனெனில், என்னைப் பின்பற்றுவதிலிருந்து உன் பிள்ளைகளை அவர்கள் விலக்கி, வேற்றுத் தெய்வங்களை வணங்கும்படி செய்வார்கள். அதனால், ஆண்டவரின் சினம் உனக்கெதிராய் மூண்டு உன்னை விரைவில் அழிக்கும். 5 மாறாக, நீ அவர்களுக்கு இவ்வாறு செய்; அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத் தூண்களை உடைத்து, அவர்களின் அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்துவிடு. 6 ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார். 7 எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள் என்பதற்காக ஆண்டவர் உங்கள்மீது அன்பு கொண்டு உங்களைத் தேர்ந்து கொள்ளவில்லை. உண்மையில், எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்களே! 8 மாறாக, உங்களிடம் அன்புகூர்ந்ததனாலும், உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டும், ஆண்டவர் தமது வலிமைமிகு கரத்தால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்து மன்னனாகிய பார்வோனின் கையினின்றும் உங்களை விடுவித்தார். 9 எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் எனவும், அவரே உண்மையான இறைவன் எனவும் அறிந்து கொள்ளுங்கள். அவர்மீது அன்பு கூர்வோர்க்கும் அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கும் ஆயிரம் தலைமுறைவரைக்கும் தம் இரக்கத்தின் உடன்படிக்கையைக் காக்கின்றவர் அவரே! 10 ஆனால், அவரைப் பகைப்பவரை அழிப்பதன் மூலம் நேரடியாகப் பதிலளிப்பார்; அவரை வெறுப்பவரை நேரடியாகத் தண்டிப்பதற்கும் காலம் தாழ்த்த மாட்டார். 11 எனவே, நீங்கள் கடைப்பிடிக்கும்படி நான் உங்களுக்கு இன்று இடும் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுங்கள். கீழ்ப்படிதலுக்கான ஆசிகள் (இச 28:1-14) 12 இந்த முறைமைகளை நீங்கள் கேட்டு, அவைகளைக் கடைப்பிடித்து நிறைவேற்றுவீர்களாயின் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் மூதாதையரிடம் ஆணையிட்டுச் செய்த இரக்கத்தின் உடன்படிக்கையைக் காப்பார். 13 அவர் உங்களிடம் அன்பு கூர்வார். உங்களுக்குத் தரப்படுமென்று உங்கள் மூதாதையருக்கு அவர் ஆணையிட்டு வாக்களித்த நாட்டில் உங்களைப் பெருகச் செய்வார். உங்கள் கருவின் கனிகளும், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகிய உங்கள் நிலத்தின் விளைவுகளும், உங்கள் கால்நடையின் கன்றுகளும், உங்கள் மந்தையின் குட்டிகளும் பெருகும்படி செய்து ஆசி வழங்குவார். 14 மற்றெல்லா மக்களினங்களையும்விட நீங்கள் ஆசி பெற்றவர்களாய் இருப்பீர்கள். உங்களுக்குள்ளும் உங்கள் கால்நடைகளுக்குள்ளும் ஆணிலும் பெண்ணிலும் மலடு இராது. 15 எல்லா நோய்களும் உங்களிடமிருந்து அகலும்படி ஆண்டவர் செய்வார். நீங்கள் அறிந்துள்ள எகிப்தியரின் கொடிய நோய்கள் எல்லாம் உங்களிடையே இல்லாமல் உங்கள்பகைவர் மேல் வரும்படி செய்வார். 16 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களிடம் கையளிக்கவிருக்கும் எல்லா மக்களையும் முற்றிலும் அழித்துவிடுங்கள். உங்கள் கண்கள் அவர்களுக்கு இரங்காதிருக்கட்டும். அவர்களின் தெய்வங்களுக்கு நீங்கள் பணிய வேண்டாம். அது உங்களுக்குக் கண்ணியாக ஆகிவிடும். 17 இந்த மக்களினங்கள் எல்லாம் எங்களைவிடத் திரளானவர்களாய் உள்ளதால், அவர்களை விரட்டியடிக்க எங்களால் எப்படி முடியும் என்று உங்கள் உள்ளத்தில் நீங்கள் உரையாடும்போது, 18 அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். மாறாக, பார்வோனுக்கும் எகிப்தியர் அனைவருக்கும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் செய்ததை நினைவில் நிறுத்துங்கள். 19 உங்கள் கண்கள் கண்ட கொடிய வாதைகளையும், உங்களைப் புறப்படும்படி செய்யுமாறு, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் வலிமைமிகு கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும், புரிந்த அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் நினைவில் நிறுத்துங்கள்; நீங்கள் அஞ்சுகின்ற எல்லா மக்களினங்களுக்கும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவ்வாறே செய்வார். 20 அதற்கும் தப்பி, உங்களிடமிருந்து ஓடி ஒளிந்து கொள்பவர்களுக்குள்ளே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் செங்குளவிகளை அனுப்பி அவர்களை அழிப்பார். 21 அவர்களுக்கு அஞ்சவேண்டாம்; ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களிடையே உள்ளார்; அஞ்சுதற்குரிய ஆற்றல்மிகு கடவுள் அவரே. 22 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அந்த மக்களை, உங்கள் கண்கள் காண, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகச் செய்வார். உடனடியாக அவர்களை அழித்துவிட வேண்டாம். அப்படிச் செய்தால், உங்களிடையே காட்டு விலங்குகள் பெருகிவிடும். 23 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்களிடம் கையளிப்பார். அவர்கள் அழிந்துபோகுமட்டும் அவர்களைப் பெரிதாகக் கலங்கடிப்பார். 24 அவர்களின் மன்னர்களையும் உங்களிடம் கையளிப்பார். அவர்களது பெயர் மண்ணினின்று மறைந்து போகச் செய்யுங்கள். நீங்கள் அவர்களை முற்றிலும் அழிக்கும்வரை எந்த மனிதரும் உங்களுக்கு எதிராக நிற்க முடியாது. 25 கைவினையான அவர்களின் தெய்வச் சிலைகளைத் தீயில் எரித்து விடுங்கள்; அவைகளின் மேலுள்ள வெள்ளியையோ தங்கத்தையோ நீங்கள் விரும்பவோ உங்களுக்காக எடுக்கவோ வேண்டாம்; ஏனெனில், அவை உங்களுக்குக் கண்ணியாக ஆகிவிடும். அவை உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவை. 26 அவைகளைப்போலச் சாபத்துக்கு உள்ளாகாதபடி, அருவருப்பான எதையும் உங்கள் வீட்டுக்குக் கொண்டு வராதிருங்கள், அவைகளை முற்றிலும் அருவருக்கவேண்டும். ஏனெனில், அவை சாபத்துக்கு உள்ளானவை. 7:1 திப 13:19. 7:5 இச 12:3. 7:6 விப 19:5; இச 4:20; 14:2; 26:18; தீத் 2:14; 1 பேது 2:9. 7:9-10 விப 20:5-6; 34:6-7; எண் 14:18; இச 5:9-10. 7:12-16 இச 11:13-17.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-7
160
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 8 – திருவிவிலியம்
உடைமை ஆகவிருக்கும் வளநாடு 1 இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அதனால், நீங்கள் வாழ்ந்து, பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டில் புகுந்து, அதை உங்கள் உடைமையாக்கிக் கொள்வீர்கள். 2 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன்மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். 3 அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார். 4 இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் மேலுள்ள ஆடை நைந்து போகவில்லை; உங்கள் காலடிகள் வீங்கவும் இல்லை. 5 ஒருவன் தன் மகனுக்குக் கற்றுக்கொடுப்பதுபோல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கும் கற்றுக்கொடுத்தார் என்பதை உங்கள் உள்ளத்தில் உணர்வீர்களாக. 6 உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள். அதுவே அவர்தம் வழிகளில் நடந்து அவருக்கு அஞ்சி வாழ்வதாகும். 7 ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது. 8 கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு. அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு. 9 அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள். அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது. அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு. அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம். 10 நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள். ஆண்டவரை மறப்பது குறித்த எச்சரிக்கை 11 இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள். 12 நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும் போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், 13 உங்கள் ஆடுமாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்ககு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும், 14 நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். 15 அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். 16 உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்; இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே. 17 எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள். 18 உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள். 19 மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். 20 உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் கீழ்ப்படியாமலிருந்தால், உங்கள் கண்கள் காண, அவர் அழியச் செய்த மற்ற மக்களினங்கள் போல, இறுதியில் நீங்களும் அழிந்து போவீர்கள். 8:3 மத் 4:4; லூக் 4:4. 8:11-16 ஓசே 13:5-6.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-8
161
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 9 – திருவிவிலியம்
மக்களின் கீழ்ப்படியாமை 1 இஸ்ரயேலரே, செவிகொடுங்கள்! நீங்கள் இன்று யோர்தானைக் கடந்து, உங்களைவிட எண்ணிக்கையும் வலிமையும் மிகுந்த நாடுகளையும், வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையும் கைப்பற்றுவீர்கள். 2 அந்த மக்கள், எண்ணிக்கையிலும் உயரத்திலும் மிகுந்த ஏனாக்கின் வழிமரபினர். அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ‘ஏனாக்கின் புதல்வரை எதிர்த்து நிற்கக் கூடியவன் எவன்?’ என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பது அவர்களைப்பற்றியே. 3 சுட்டெரிக்கும் நெருப்பைப் போன்று உங்களை வழி நடத்திச் செல்பவர் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் அவர்களை முறியடித்து உங்கள் முன் வீழ்ச்சியுறச் செய்வார். அதனால், ஆண்டவர் வாக்களித்தபடி, நீங்கள் அவர்களைத் துரத்தி விரைவில் அழிப்பீர்கள். 4 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னின்று அவர்களை விரட்டியடித்தபின், ‘எங்களுடைய நேரிய நடத்தையின் பொருட்டே இந்த நாட்டை உடைமையாக்கிக்கொள்ளும்படி ஆண்டவர் எங்களைக் கூட்டி வந்தார்’, என்று உங்கள் உள்ளத்தில் எண்ண வேண்டாம். ஏனெனில், அந்த நாடுகளின் நெறிகெட்ட நடத்தையின் பொருட்டே ஆண்டவர் அவைகளை உங்கள் முன்னின்று விரட்டியடிப்பார். 5 அவர்களது நாட்டை நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போவது உங்களது நேரிய நடத்தையினாலோ உங்களது உள்ளத் தூய்மையினாலோ அன்று; மாறாக, அந்த நாடுகளின் நெறிகெட்ட நடத்தையின் பொருட்டே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னின்று அவர்களை விரட்டியடிப்பார். அதனால், உங்கள் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு ஆண்டவர் ஆணையிட்டு உரைத்த வாக்கு நிறைவேறும். 6 எனவே, நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளும்படி இந்த வளமிகு நாட்டை உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குத் தரப்போவது உங்களது நேரிய நடத்தையின் பொருட்டு அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் வணங்காக் கழுத்தினர். 7 பாலைநிலத்தில் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் சினத்துக்கு உள்ளாக்கினதை நினையுங்கள்; அதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியே வந்த நாள் முதல் இந்த இடத்திற்கு வரும்வரை ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள். 8 ஓரேபிலும் நீங்கள் ஆண்டவரைக் கடுஞ்சினத்துக்கு உள்ளாக்கினீர்கள். அதனால், உங்களை அழிக்கும் அளவுக்கு ஆண்டவர் சினம்கொண்டார். 9 ஆண்டவர் உங்களோடு செய்து கொண்ட உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக் கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தேன். அப்பொழுது, நான் அப்பம் உண்டதுமில்லை; நீர் பருகியதுமில்லை. 10 கடவுளின் விரலால் எழுதப்பட்டிருந்த இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார். சபை கூடிய நாளில், மலையில் நெருப்பின் நடுவிலிருந்து ஆண்டவர் உங்களோடு பேசிய எல்லா வார்த்தைகளும் அவற்றில் இருந்தன. 11 நாற்பது பகலும் நாற்பது இரவும் கழிந்த பின், உடன்படிக்கைப் பலகைகளான இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார். 12 அப்பொழுது ஆண்டவர் என்னிடம், ‘எழுந்து, இங்கிருந்து விரைந்து இறங்கிச் செல். ஏனெனில், நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த உன் மக்கள் சீரழிந்து விட்டனர். நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகிவிட்டனர். வார்ப்புச்சிலை ஒன்றை அவர்களுக்கெனச் செய்து கொண்டனர்’ என்றார். 13 மேலும், அவர் என்னிடம், ‘நானும் இந்த மக்களைப் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்; இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள். 14 என்னை விட்டு விடு. நான் அவர்களை அழிப்பேன். மண்ணினின்று அவர்கள் பெயர் இல்லாது ஒழிப்பேன். பிறகு, அவர்களைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுதியான மக்களினமாக உன்னை ஆக்குவேன்’ என்றார். 15 பின்னர், நான் திரும்பி, மலையிலிருந்து இறங்கினேன். மலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடன்படிக்கையின் இரு பலகைகளும் என் இருகைகளிலும் இருந்தன. 16 நான் பார்த்தபொழுது நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்து கொண்டிருந்தீர்கள். உங்களுக்கென வார்ப்புக் கன்றுக்குட்டியைச் செய்து, ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகியிருந்தீர்கள். 17 அப்பொழுதுநான் இரு பலகைகளையும் தூக்கி என் இரண்டு கைகளிலுமிருந்து வீசி எறிந்து உங்கள் கண்களுக்கு முன்னே உடைத்தேன். 18 பிறகு, ஆண்டவர் சினம்கொள்ளுமாறு நீங்கள் அவர் முன்னிலையில் தீச்செயல் செய்து புரிந்த பாவம் அனைத்துக்காகவும் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் ஆண்டவர்முன் தாழ்ந்து பணிந்து கிடந்தேன். முன்புபோலவே நான் அப்பம் உண்ணவும் இல்லை, நீர் பருகவும் இல்லை. 19 உங்களை அழிக்கும்படி ஆண்டவர் உங்கள்மேல் கொண்டிருந்த சினத்தையும் கோபக் கனலையும் கண்டு நான் அஞ்சினேன். ஆனால், ஆண்டவர் மீண்டும் ஒருமுறை என் மன்றாட்டைக் கேட்டார். 20 ஆரோன் மீதும் ஆண்டவர் கடும் சினம் கொண்டு அவனை அழிக்க எண்ணியிருந்தார். நான் ஆரோனுக்காகவும் மன்றாடினேன். 21 அப்பொழுது, நீங்கள் செய்த உங்கள் பாவப் பொருளாகிய கன்றுக்குட்டியை நான் எடுத்து, நெருப்பில் சுட்டெரித்து, தூசுபோல் ஆகுமட்டும் நொறுக்கித் தூளாக்கி, அந்தத் தூளை மலையிலிருந்து கீழே ஓடும் ஆற்றில் கொட்டினேன். 22 தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத்து அத்தாவாவிலும் ஆண்டவருக்குக் கடும் சினம் வரச் செய்தீர்கள். 23 ஆண்டவர் உங்களைக் காதேசு பர்னேயாவிலிருந்து அனுப்பி, ‘நான் உங்களுக்குக் கொடுத்துள்ள நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுங்கள்’ என்றார். நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள். அவர்மீது நம்பிக்கை கொள்ளவும் இல்லை; அவர் குரலுக்குச் செவி கொடுக்கவும் இல்லை. 24 நான் உங்களை அறிந்த நாளிலிருந்து நீங்கள் ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்துகொண்டே இருக்கிறீர்கள். 25 ஆண்டவர், ‘நான் உங்களை அழிப்பேன்’ என்று சொன்னதால் நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவர் முன்னால் தாழ்ந்து பணிந்து கிடந்தேன். 26 அப்போது இறைவனாகிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடியது: ‘என் தலைவராம் ஆண்டவரே! நீர் உமது மாட்சியால் விடுவித்து, உமது வலிமைமிகு கரத்தால் எகிப்திலிருந்து அழைத்துவந்த உம் உடைமையாகிய மக்களை அழிக்க வேண்டாம். 27 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உம் அடியார்களை நினைவு கூர்ந்தருளும், இம்மக்களின் வணங்காக் கழுத்தையும், அவர்களது தீய நடத்தையையும், பாவங்களையும் பொருட்படுத்த வேண்டாம். 28 இல்லையெனில், நீர் எந்த நாட்டினின்று எங்களை விடுவித்து அழைத்து வந்தீரோ, அந்த நாட்டினர் ‘ஆண்டவர் அவர்களுக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுச் சொன்ன நாட்டில் அவர்களைக் கொண்டு போக இயலாததாலும், அவர்களை வெறுத்ததாலும், பாலை நிலத்தில் அவர்களைக் கொல்லுமாறு எகிப்திலிருந்து கூட்டிவந்தார்’ என்று ஏளனம் செய்வர் அன்றோ! 29 ஆண்டவரே, உமது மிகுந்த வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும் வெளிக்கொணர்ந்த இவர்கள் உமது உடைமையாகிய மக்களாய் உள்ளனர் அன்றோ! 9:9 விப 24:18. 9:19 எபி 12:21. 9:22 எண் 11:3,34; விப 17:7. 9:23 எண் 13:25-14:38; இச 1:21,26; எபி 3:16.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-9
162
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 10 – திருவிவிலியம்
பத்துக் கட்டளைகளை மோசே மீண்டும் பெறுதல் (விப 34:1-10) 1 அந்நாளில் ஆண்டவர் என்னை நோக்கி, ‘முன்னவைப்போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக் கொண்டு மலைமேல் ஏறி என்னிடம் வா. மரத்தால் ஆன பேழையையும் உனக்காகச் செய்துகொள். 2 நீ உடைத்துப் போட்ட முன்னைய பலகைகளில் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளிலும் எழுதுவேன். நீ அவற்றைப் பேழையில் வை’ என்றார். 3 எனவே, சித்திம் மரத்தாலான ஒரு பேழையைச் செய்தேன். முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்தேன். அவ்விரு கற்பலகைகளையும் என் கையில் எடுத்துக்கொண்டு மலைமேல் ஏறினேன். 4 சபை கூடிய நாளில், மலையில் நெருப்பினின்று, உங்களுக்குக் கூறிய பத்துக்கட்டளைகளை முன்பு எழுதியது போலவே ஆண்டவர் அப்பலகைகளில் எழுதினார். பின்னர், அவர் அவற்றை என்னிடம் கொடுத்தார். 5 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, நான் செய்திருந்த பேழையில் பலகைகளை வைத்தேன். ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி அவை அங்கே உள்ளன. 6 அதன்பின், இஸ்ரயேல் மக்கள் பெனயாக்கானுக்கு அருகிலுள்ள பெயரோத்திலிருந்து மோசேராவுக்குப் பயணம் செய்தார்கள். அங்கே ஆரோன் இறந்து அடக்கம் செய்யப்பட்டார். அவர் மகன் எலயாசர் அவருக்குப் பதிலாக குரு ஆனார். 7 அங்கிருந்து அவர்கள் குத்கோதாவுக்கும் தொடர்ந்து பாய்ந்தோடும் ஆறுகள் உள்ள யோற்றுபாத்தாவுக்கும் பயணம் செய்தார்கள். 8 அந்நாளில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கவும், இந்நாள்வரை இருப்பது போல ஆண்டவர் திருமுன் நின்று பணிபுரியவும், அவருடைய பெயரால் ஆசி வழங்கவும், ஆண்டவர் லேவியின் குலத்தைத் தனித்து வைத்தார். 9 எனவேதான், லேவியர்க்குத் தம் சகோதரர்களுடன் பங்கு இல்லை; உரிமைச் சொத்தும் இல்லை; உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களுக்குச் சொல்லி இருப்பதுபோல, ஆண்டவரே அவர்களது உரிமைச் சொத்து. 10 முதன்முறை போன்றே நான் நாற்பது பகலும் நாற்பது இரவும் மலைமீது தங்கியிருந்தேன். மீண்டும் ஒருமுறை ஆண்டவர் என் மன்றாட்டைக் கேட்டார். உங்களை அழிப்பதை ஆண்டவர் விரும்பவில்லை. 11 ஆண்டவர் என்னிடம், ‘நீ எழுந்து மக்களுக்குமுன் புறப்பட்டுச் செல். நான் அவர்களுக்கு அளிப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்குள் சென்று அதை அவர்கள் உடைமையாக்கிக்கொள்ளட்டும்’ என்றார். கடவுள் எதிர்பார்ப்பவை 12 எனவே, இஸ்ரயேலரே, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவர்தம் அனைத்து வழிகளிலும் நடந்து, அவர் மீது அன்புகூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து, 13 உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்? 14 விண்ணும் விண்ணின் வானங்களும், மண்ணும் அதில் உள்ள அனைத்தும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியன. 15 இருப்பினும், உங்கள் மூதாதையரின்மீது பற்றுவைத்து அன்பு கூர்ந்தார். அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினராகிய உங்களை எல்லா மக்களினங்களினின்றும், இந்நாளில் இருப்பதுபோலத் தெரிந்துகொண்டார். 16 ஆகவே, உங்கள் உள்ளத்தை விருத்த சேதனம் செய்யுங்கள். வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள். 17 ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுதற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை. 18 அநாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அந்நியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே. 19 அந்நியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில், எகிப்தில் நீங்களும் அந்நியராய் இருந்தீர்கள். 20 உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்; அவருக்கே பணிபுரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் பெயராலே ஆணையிடுங்கள். 21 அவரே உங்கள் புகழ்ச்சி! அவரே உங்கள் கடவுள்! உங்கள் கண்கள் கண்ட ஆற்றல்மிகு அச்செயல்களை உங்களுக்காகச் செய்தவர் அவரே. 22 உங்கள் மூதாதையர் எழுபது ஆள்களாய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வானத்து விண்மீன்கள் போல் பெருகச் செய்துள்ளார். 10:6 எண் 20:28; 33:38. 10:8 எண் 3:5-8. 10:10 விப 34:28. 10:17 1 திமொ 6:15; திவெ 17:14; 19:16; திப 10:34; உரோ 2:11; கலா 2:6; எபே 6:9. 10:22 தொநூ 15:5; 22:17; 46:27.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-10
163
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 11 – திருவிவிலியம்
ஆண்டவரின் மேன்மை 1 ஆகையால், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூருங்கள். அவருடைய நெறிகளையும், நியமங்களையும், முறைமைகளையும், கட்டளைகளையும் எந்நாளும் கடைப்பிடியுங்கள். 2 உங்கள் பிள்ளைகள், கடவுளாகிய ஆண்டவரின் படிப்பினைகள் அறிந்ததுமில்லை; பார்த்ததுமில்லை. அவர்தம் மாட்சி, வலிய கரம், ஓங்கிய புயம், 3 எகிப்திய மன்னனாம் பார்வோனுக்கும் அவனது நாடு முழுமைக்கும் எகிப்தில் அவர் செய்த எல்லாச் செயல்கள், அவர்தம் அடையாளங்கள், 4 எகிப்தியப்படையும், அவர்கள் குதிரைகளும், தேர்களும் உங்களைப் பின்தொடர்ந்து வருகையில், செங்கடலின் நீரை ஆண்டவர் அவர்கள் மேல் பொங்கி வரச்செய்து இந்நாள்வரை இருப்பது போல அவர்களை அழித்தது, 5 நீங்கள் இந்த இடத்திற்கு வரும்வரை பாலைநிலத்தில் அவர் உங்களுக்குச் செய்தது, 6 ரூபனின் பேரர்களும், எலியாபின் புதல்வர்களுமான தாத்தானையும், அபிராமையும், அவர்கள் குடும்பங்கள், அவர்கள் கூடாரங்கள், அவர்களைப் பின்பற்றிய எல்லா உயிரினங்கள் ஆகியவற்றை இஸ்ரயேலர் எல்லோர் நடுவிலும் நிலம் தன் வாயைப் பிளந்து விழுங்கும்படி செய்தது ஆகியவை அனைத்தையும் எண்ணிப் பாருங்கள். 7 ஏனெனில், ஆண்டவர் செய்த மாபெரும் செயல்கள் அனைத்தையும் உங்கள் கண்கள் கண்டன. வாக்களிக்கப்பட்ட நாட்டின் சிறப்புகள் 8 எனவே, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள். அதனால் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி கடந்து சென்றடையும் நாட்டை உடைமையாக்கும் வலிமை பெறுவீர்கள். 9 மேலும், உங்கள் மூதாதையருக்கும் அவர்கள் வழிமரபினருக்கும் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்ன மண்ணில் நீங்கள் நெடிது வாழ்வீர்கள். அது பாலும் தேனும் நிறைந்து வழியும் நாடு. 10 ஏனெனில், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாடு, நீங்கள் விட்டு வந்த எகிப்து நாட்டைப் போன்றது அன்று. அங்கு நீங்கள் விதை விதைத்து, காய்கறித் தோட்டத்திற்குப் பாய்ச்சுவதுபோல மெய்வருத்தி நீர் பாய்ச்சி வந்தீர்கள். 11 ஆனால், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளுமாறு கடந்து சென்றடையவிருக்கும் நாடு, மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த நாடு; வானத்தின் மழை நீரையே குடிக்கும் நாடு! 12 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கண்காணிக்கும் நாடு! ஆண்டின் தொடக்கம் முதல் ஆண்டின் முடிவுவரை உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கண் காத்திடும் நாடு! 13 இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற என் கட்டளைகளைப் பின்பற்றி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்தால், 14 தக்க காலத்தில் அவர் உங்கள் நிலத்திற்கு மழை தருவார், முன்மாரியும் பின்மாரியும் தருவார். அதனால் உங்கள் தானியத்தையும், திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் சேகரிப்பீர்கள். 15 வயல்வெளிகளில் உங்கள் கால்நடைகளுக்கு அவர் புல் தருவார். நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். 16 நீங்கள் வேற்றுத் தெய்வங்கள் பக்கம் திரும்பி, அவற்றுக்கு ஊழியம் செய்து, அவற்றை வணங்கிடுமாறு, உங்கள் உள்ளங்கள் வஞ்சிக்கப்படாதபடி கவனமாய் இருங்கள். 17 இல்லையெனில், ஆண்டவரின் சினம் உங்கள் மீது வரும். மழையே இல்லாதபடி வானங்களை அவர் மூடிவிடுவார். உங்கள் நிலம் தன்பலனைத் தராது. அவர் உங்களுக்குக் கொடுக்கும் அந்த வளமிகு நாட்டினின்று விரைவில் அழிந்து போவீர்கள். 18 எனவே, என் வார்த்தைகளை உங்கள் நெஞ்சிலும் நினைவிலும் நிறுத்துங்கள். அவற்றை உங்கள் கைகளில் அடையாளமாகக் கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் கண்களுக்கிடையே அவை அடையாளப் பட்டமாக இருக்கட்டும். 19 நீங்கள் அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், பயணம் செய்யும்போதும், படுக்கும் போதும், எழும்போதும் அவற்றைப் பேசுங்கள். 20 உங்கள் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழைவாயில்களிலும் அவற்றை எழுதுங்கள். 21 அதனால், விண்ணுலகு மண்ணுலகின்மீது நிற்குமட்டும், உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீங்களும் உங்கள் மக்களும் நெடுநாள் வாழ்வீர்கள். 22 ஏனெனில், நீங்கள் பின்பற்றுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிடும் இந்த எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் நீங்கள் கருத்தாய் இருந்தால், 23 உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூர்ந்து அவர் வழிகளில் நடந்து, அவரைப் பற்றிக் கொண்டால், அவர் இந்த நாட்டினரை எல்லாம் உங்கள் முன்பே விரட்டியடிப்பார். உங்களைவிட எண்ணிக்கையிலும் வலிமையிலும் மிகுந்த அந்நாடுகளை நீங்கள் முறியடிப்பீர்கள். 24 உங்கள் காலடிபடும் இடங்கள் எல்லாம் உங்களுடையவை ஆகும். பாலைநிலமும் ,லெபனோனும், யூப்பிரத்தீசு ஆறும், மேற்குக் கடற்கரையும் உங்கள் எல்லையாயிருக்கும். 25 எவனாலும் உங்களை எதிர்த்து நிற்க இயலாது. ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் செல்லும் நாடுகள் அனைத்திலும் உங்களைப்பற்றி அச்சத்தையும் திகிலையும் உண்டாக்குவார். 26 இதோ! இன்று உங்கள் முன்பாக ஆசியையும் சாபத்தையும் வைக்கின்றேன். 27 நான் இன்று உங்களுக்கு விதித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடித்தால், ஆசியும், 28 உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், நான் இன்று உங்களுக்கு விதித்த வழிகளினின்று விலகி நடந்து, நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினால் சாபமும் உண்டாகும். 29 நீங்கள் சென்று உடைமையாக்கிக் கொள்ளப் போகும் நாட்டுக்குள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை இட்டுச் செல்லும் போது, கெரிசிம் மலையிலிருந்து ஆசியையும் ஏபால் மலையிலிருந்து சாபங்களையும் அறிவிப்பீர்கள். 30 யோர்தானுக்கு அப்பால், சாலைக்கு மேற்கே கதிரவன் மறையும் திசையில், அராபாவில் வாழும் கானானியரின் நாட்டில், கில்காலுக்கு எதிர்ப்புறமாக மோரே தோப்பு அருகே அல்லவா அவ்விடம் உள்ளது? 31 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டை உடைமையாக்கிக்கொள்ள நீங்கள் யோர்தானைக் கடந்து செல்ல வேண்டும். அதை உடைமையாக்கி, அங்கு வாழும்போது, 32 நான் இன்று உங்கள்முன் வைக்கின்ற நியமங்களையும் முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள். 11:3 விப 7:8-12:13. 11:4 விப 14:28. 11:6 எண் 16:31-32. 11:13-17 லேவி 26:3-5; இச 7:12-16; 28:1-14. 11:20 இச 6:6-9. 11:24-25 யோசு 1:3-5. 11:29 இச 27:11-14; யோசு 8:33-35.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-11
164
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 12 – திருவிவிலியம்
வழிபாட்டிற்கான ஒரே இடம் 1 மண்ணில் வாழும் நாளெல்லாம், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளுமாறு, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் கவனமாய்ப் பின்பற்ற வேண்டிய நியமங்களும் முறைமைகளும் இவையே: 2 நீங்கள் விரட்டியடிக்கப்போகும் மக்களினங்கள் தங்கள் தெய்வங்களுக்கு, உயர்ந்த மலைகளின்மீதும், குன்றுகளின் மீதும், பசுமையான மரங்களின் மீதும், ஊழியம் செய்த எல்லா இடங்களையும் முற்றிலும் அழித்து விடுங்கள். 3 அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத்தூண்களை நொறுக்கி, அவர்களின் அசேராக் கம்பங்களைத் தீயில் சுட்டெரித்து, அவர்களின் கைவினையான தெய்வங்களின் சிலைகளை உடைத்து, அவர்களின் பெயர் அவ்விடங்களில் இல்லாது ஒழியுங்கள். 4 ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அவ்விதம் செய்யாதீர்கள். 5 ஆண்டவராகிய கடவுள் தம் பெயர் விளங்கவும், அங்கே குடியமரவும், உங்கள் எல்லாக் குலங்களிலிருந்து தெரிந்தெடுக்கும் இடத்தையே நீங்களும் நாடி அங்கே செல்லுங்கள். 6 உங்கள் எரி பலிகளையும், மற்றப் பலிகளையும், பத்திலொரு பங்கையும், அர்ப்பணக் காணிக்கைகளையும், நேர்ச்சைக் காணிக்கைகளையும் தன்னார்வப் பலிகளையும், ஆடுமாடுகளின் தலையீற்றையும் அங்கே கொண்டு வாருங்கள். 7 அங்கே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்பீர்கள். உங்கள் உழைப்பின் பயனும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரால் ஆசி பெற்றதுமாகிய எல்லாவற்றுக்காகவும் நீங்களும் உங்கள் வீட்டார் அனைவரும் மகிழ்வீர்கள். 8 இந்த நாள்களில் இங்கே நாம் செய்வது போல ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனத் தோன்றுவதைச் செய்ய வேண்டாம். 9 ஏனெனில், உங்கள் ஆண்டவராகிய கடவுள் கொடுக்கப்போகும் உரிமைச் சொத்துக்கும் ஓய்வுக்கும் இன்னும் நீங்கள் போகவில்லை. 10 ஆனால், நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று, உங்கள் ஆண்டவராகிய கடவுள் உரிமையாகத் தருகின்ற நாட்டில் குடியமரும்போது, நீங்கள் அச்சமின்றி வாழும்பொருட்டு, உங்களைச் சுற்றிலுமுள்ள உங்கள் பகைவர் அனைவரிடமிருந்தும் உங்களுக்கு அவர் ஓய்வு தரும்போது, 11 அவர்தம் பெயர் விளங்குமாறு அவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்கு நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் கொண்டு செல்வீர்கள். உங்கள் எரி பலிகளையும், மற்றப் பலிகளையும், பத்திலொரு பங்கையும், அர்ப்பணக் காணிக்கைகளையும், ஆண்டவருக்கு நேர்ந்துகொண்ட சிறந்த நேர்ச்சைக் காணிக்கைகள் அனைத்தையும் கொண்டு செல்வீர்கள். 12 நீங்களும், உங்கள் புதல்வரும், உங்கள் புதல்வியரும், அடிமைகளும், அடிமைப் பெண்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன் அகமகிழ்வீர்களாக! தங்களுக்கெனத் தனிப்பங்கோ உரிமைச் சொத்தோ இல்லாத நிலையில், உங்கள் நகர்களில் உள்ள லேவியரும் அவ்விதமே மகிழ்வார்களாக! 13 கண்ட இடமெல்லாம் உங்கள் எரி பலிகளைச் செலுத்தாதபடி கவனமாய் இருங்கள். 14 ஆனால், உங்கள் குலங்களுள் ஒன்றிலிருந்து ஆண்டவர் ஓர் இடத்தைத் தெரிந்தெடுப்பார். அங்கே நீங்கள் உங்கள் எரி பலிகளைச் செலுத்துங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் அங்கே நிறைவேற்றுங்கள். 15 ஆயினும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு அளித்துள்ள ஆசிக்கு ஏற்ப, உங்கள் நகர்களில், உங்கள் விருப்பப்படியே விலங்குகளை அடித்து உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் அவற்றிலிருந்து உண்ணலாம். பெண் மானையும் கலைமானையும் உண்பதுபோல் உண்ணலாம். 16 இரத்தத்தை மட்டும் அருந்த வேண்டாம்; தண்ணீரை ஊற்றுவதுபோல அதைத் தரையில் ஊற்றி விடுங்கள். 17 உங்கள் விளைச்சலின் பத்திலொரு பங்கிலிருந்தோ, திராட்சை இரசத்திலிருந்தோ, ஆடு மாடுகளின் தலையீற்றுக்களிலிருந்தோ, நீங்கள் நேர்ந்துகொண்ட சிறந்த நேர்ச்சைக் காணிக்கைகளிலிருந்தோ, உங்கள் தன்னார்வப் பலிகளிலிருந்தோ, உங்கள் அர்ப்பணப் பலிகளிலிருந்தோ எதையும் எடுத்து உங்களது நகரில் உண்ண வேண்டாம். 18 ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் நீங்கள் அதை அவர் முன்னிலையில் உண்ணுங்கள். நீங்களும், உங்கள் மகன், மகள், அடிமை, அடிமைப்பெண் ஆகியோரும் உங்கள் நகர்களில் உள்ள லேவியரும் உண்ணுங்கள். நீங்கள் செய்யும் அனைத்திலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரில் அகமகிழுங்கள்! 19 உங்கள் நாட்டில் வாழும் நாளெல்லாம் லேவியரைக் கைவிடாதபடி கவனமாய் இருங்கள். 20 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தபடி உங்களது எல்லையை விரிவுபடுத்தும் போது நீங்கள் இறைச்சி உண்ண விரும்பி, “நான் இறைச்சி உண்பேன்” என்றால் நீங்கள் விரும்பிய அளவு உண்ணலாம். 21 அவர்தம் பெயர் விளங்குமாறு ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடம் உங்களுக்கு வெகு தொலைவில் இருந்தால், அவர் உங்களுக்குக் கொடுத்துள்ள ஆட்டையோ மாட்டையோ நான் உங்களுக்கு விதித்துள்ளபடி, உங்கள் நகரிலேயே அடித்து நீங்கள் விரும்புவதுபோல் உண்ணலாம். 22 பிணைமானையும் கலைமானையும் உண்பதுபோல உண்ணலாம். தீட்டுள்ளவர்களும் தீட்டற்றவர்களும் உண்ணலாம். 23 இரத்தத்தை அருந்தாதபடி மட்டும் கவனமாய் இருங்கள். ஏனெனில், இரத்தமே உயிர். சதையோடு உயிரையும் சேர்த்து உண்ணாதீர்கள். 24 இரத்தத்தை நீங்கள் அருந்த வேண்டாம். தண்ணீரை ஊற்றுவதுபோல அதைத் தரையில் ஊற்றிவிடுங்கள். 25 நீங்கள் அதை அருந்தலாகாது. அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப்பின் உங்கள் மக்களுக்கும் எல்லாம் நலமாகும். ஆண்டவரின் பார்வையில் நீங்கள் நேரியன செய்தவர்கள் ஆவீர்கள். 26 உங்களிடமிருந்து வரவேண்டிய புனிதப் பொருள்களையும் உங்களது நேர்ச்சைக் காணிக்கைகளையும் எடுத்துக்கொண்டு ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்லுங்கள். 27 அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பீடத்தில் உங்கள் எரிபலிகளைச் செலுத்துங்கள். சதையோடும் இரத்தத்தோடும் செலுத்துங்கள். உங்கள் பலிப்பொருள்களின் இரத்தத்தை நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பீடத்திலே ஊற்றி விடுங்கள். ஆனால், இறைச்சியை நீங்கள் உண்ணலாம். 28 நான் உங்களுக்கு விதிக்கும் இக்கட்டளைகளை எல்லாம் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீங்கள் நலமானதையும் நேரியதையும் செய்தால் உங்களுக்கும் உங்களுக்குப்பின் உங்கள் பிள்ளைகளுக்கும் என்றும் எல்லாம் நலமாகும். சிலைவழிபாடு குறித்து எச்சரித்தல் 29 நீங்கள் சென்று விரட்டியடிக்கும் மக்களினங்களை உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேரறுப்பார். நீங்கள் அவர்களை விரட்டியடித்துவிட்டு அவர்களது நாட்டில் குடியேறுங்கள். 30 உங்கள் முன்னிலையில் அவர்கள் முறியடிக்கப்பட்டபின் அவர்களைப் பின்பற்றி வஞ்சிக்கப்படாதபடியும், ‘இந்த மக்களினங்கள் தங்கள் தெய்வங்களுக்கு எப்படி ஊழியம் செய்தனவோ அவ்விதமே நாங்களும் செய்வோம்,’ என்று சொல்லி அவர்களின் தெய்வங்களைப்பற்றிக் கேட்டறியாதபடியும் கவனமாய் இருங்கள். 31 உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அவர்களது முறைப்படி செய்யவேண்டாம். ஏனெனில், ஆண்டவர் வெறுக்கும் எல்லா அருவருப்பானவற்றையும் அவர்களுடைய தெய்வங்களுக்கு அவர்கள் செய்தார்கள். தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் கூட அவர்களின் தெய்வங்களுக்கென நெருப்பில் சுட்டெரித்தார்கள். 32 நான் உங்களுக்கு விதிக்கிற யாவற்றையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருங்கள். அவற்றோடு எதையும் கூட்டவோ அவற்றிலிருந்து எதையும் குறைக்கவோ வேண்டாம். 12:3 இச 7:5. 12:16 தொநூ 9:4; லேவி 7:26-27; 17:10-14; 19:26; இச 15:23. 12:23-24 லேவி 17:10-14. 12:32 இச 4:2; திவெ 22:18-19.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-12
165
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 13 – திருவிவிலியம்
1 உங்கள் நடுவில் ஓர் இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவன் தோன்றி உங்களிடையே ஓர் அடையாளம் அல்லது அருஞ்செயல் காட்டுவேன் என்று சொல்லலாம். 2 அவன் சொல்வதுபோல் அடையாளம் அல்லது அருஞ்செயல் நடக்கலாம். அதன்பின் அவன், ‘வாருங்கள், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் புரிவோம்’ என்று கூறலாம். அவை நீங்கள் அறியாதவை. 3 அந்த இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவனின் சொற்களுக்குச் செவி கொடுக்க வேண்டாம். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது நீங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்கின்றீர்களா என்று அவர் உங்களைச் சோதிக்கின்றார். 4 உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றி அவருக்கு அஞ்சி, அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கு ஊழியம் செய்து அவரைப் பற்றிக் கொள்ளுங்கள். 5 ஆனால், அந்த இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவன் கொல்லப்பட வேண்டும். ஏனெனில், எகிப்து நாட்டிலிருந்து, உங்களை அழைத்துவந்த, அடிமைத்தனத்தின் வீட்டிலிருந்து உங்களை விடுவித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக, அவர் உங்களை வாழச் சொன்ன வழிகளிலிருந்து கலகம் செய்ய அவன் தூண்டினான். இத்தகைய தீமையை உங்களிடமிருந்து கருவறுங்கள். 6 உன்தாயின் மகனாகிய உன் சகோதரன், உன் மகன், மகள், அன்பு மனைவி, ஆருயிர் நண்பன் ஆகியோருள் எவராவது, நீயும் உன் மூதாதையரும் அறிந்திராத வேற்றுத் தெய்வங்களிடம் சென்று அவற்றுக்கு ஊழியம் செய்வோம், என்று இரகசியமாக, நயவஞ்சகமாகக் கூறலாம். 7 உன்னைச் சுற்றிலும், உனக்கு அருகிலோ தொலையிலோ உலகின் ஒரு முனை முதல் மறுமுனை வரையிலோ உள்ள மக்களினத்தாரின் சில தெய்வங்களைப்பற்றி உன்னிடம் கூறலாம். 8 நீ அவனுக்கு இணங்கவோ, செவிகொடுக்கவோ, இரக்கம் காட்டவோ வேண்டாம். அவனைத் தப்பவிடவோ ஒளித்துவைக்கவோ வேண்டாம். 9 மாறாக, நீ அவனைக் கொல்வாய். முதலில் உன் கையும், பின்னர் மக்கள் அனைவரின் கைகளும் அவனைக் கொல்வதற்காக அவன்மீது படட்டும். 10 அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளிக் கொணர்ந்த உன் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து உன்னை விலக்கிவிட அவன் முயற்சி செய்த காரணத்தால் நீ அவனைக் கல்லால் எறிந்து கொல்வாய். 11 இஸ்ரயேல் முழுவதும் இதைக் கேட்டு அஞ்சட்டும். அதனிடையே இதுபோன்ற தீயசெயல்கள் இனி ஒருபோதும் நடவாதிருக்கட்டும். 12 நீங்கள் குடியேறும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கும் நகர் ஒன்றினுள் 13 சில கயவர் வந்து அந்நகரின் மக்களில் சிலரிடம், ‘வாருங்கள் வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் புரிவோம்’ என்று கூறிச் சிலரைத் தவறான வழியில் இட்டுச் சென்றதாக நீங்கள் கேள்விப்படலாம். அவற்றை நீங்கள் அறியீர்கள். 14 நீங்கள் நன்றாக விசாரித்து, ஆராய்ந்து, கவனமுடன் கேட்டுத் தெளிந்தபின், உண்மையாகவும் உறுதியாகவும் உங்களிடையே இத்தகைய அருவருக்கத்தக்க செயல் நடந்தது என்று அறிய வரலாம். 15 அப்பொழுது நீங்கள் அந்த நகரின் மக்களைக் கருக்கு வாய்ந்த வாளால் வெட்டுங்கள். அந்நகரிலுள்ள எல்லோரையும் கால்நடைகளையும் வாளுக்கு இரையாக்குங்கள். அதை முற்றிலும் அழித்துவிடுங்கள். 16 அந்நகரில் உள்ள பொருள்களை எல்லாம் அதன் நாற்சந்தியில் ஒன்று சேர்த்து நகரையும் பொருள்களையும் தீயால் சுட்டெரித்து உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலி ஆக்குங்கள். அந்நகர் ஒரு மேடாக என்றும் இருக்கும். அது மீண்டும் கட்டி எழுப்பப்படாது. 17 அழிவுக்குரிய அப்பொருள் எதையும் உங்கள் கை தொடவேண்டாம். அதனால் ஆண்டவர் தமது கடுஞ்சினத்திலிருந்து மனம்மாறி, பேரிரக்கம் காட்டுவார். உங்கள் மூதாதையருக்கு அவர் வாக்களித்தபடி உங்களைப் பலுகச் செய்வார். 18 நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் அனைத்துக் கட்டளைகளையும் நான் இன்று உங்களுக்கு விதித்தபடி கடைப்பிடியுங்கள். அவர் பார்வையில் நேரியதைச் செய்யுங்கள்!
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-13
166
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 14 – திருவிவிலியம்
துக்கம் கொண்டாடும் முறைக்குத் தடை 1 நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் மக்கள். எனவே, இறந்தவருக்காக உங்கள் உடலைச் சிதைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் தலைமுடியை மழித்துக்கொள்ளவும் வேண்டாம். 2 ஏனெனில், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். மண்ணுலகின்மீது உள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் தனிச்சொத்தாக ஆண்டவர் தேர்ந்துகொண்டார். உண்ணத் தக்க, தகாத விலங்குகள் (லேவி 11:1-47) 3 தீட்டான எதையும் உண்ணவேண்டாம். 4 நீங்கள் உண்ணத்தகும் விலங்குகள் இவையே: மாடு, செம்மறியாடு, 5 வெள்ளாடு, கலைமான், காட்டுமான், கவரிமான், காட்டு வெள்ளாடு, கொம்புமான், காட்டெருது, காட்டுச் செம்மறி ஆகியன. 6 மேலும், விரிகுளம்பு உள்ள விலங்குகளில் குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருப்பதும் அசை போடுவதுமான விலங்குகளை உண்ணலாம். 7 ஆயினும், அசைபோடுவனவற்றிலும், விரிகுளம்பு உள்ளவைகளிலும், ஒட்டகம், முயல், குழி முயல் போன்றவற்றை உண்ண வேண்டாம். ஏனெனில், அவை அசை போடுகின்றன. ஆனால், அவற்றுக்கு விரிகுளம்பு இல்லை. அவை உங்களுக்குத் தீட்டானவை. 8 பன்றி விரிகுளம்பு உள்ளதாயினும், அசைபோடுவதில்லை; அதுவும் உங்களுக்குத் தீட்டானது. இவற்றின் இறைச்சியை உண்ணவும் வேண்டாம்; இவற்றின் இறந்த உடலைத் தொடவும் வேண்டாம். 9 நீர்வாழ்வன அனைத்திலும் சிறகும் செதிலும் உள்ளவற்றை நீங்கள் உண்ணலாம். 10 சிறகும் செதிலும் அற்ற எதையும் உண்ணலாகாது. அவை உங்களுக்குத் தீட்டானவை. 11 தீட்டற்ற எல்லாப் பறவைகளையும் நீங்கள் உண்ணலாம். 12 ஆனால், பறவைகளில் பின்வருவனவற்றை நீங்கள் உண்ணலாகாது; 13 கழுகு, கருடன், பைரி, வல்லூறு, எல்லாவிதப் பருந்துகள், 14 எல்லாவிதக் காகங்கள், 15 நெருப்புக் கோழிகள், கூகைகள், செம்புகங்கள், எல்லாவிதமான வேட்டைப் பருந்துகள், 16 ஆந்தை, கோட்டான், நாரை 17 மீன்கொத்தி, நீர்க்காகங்கள், நீர்க்கோழி, 18 கொக்கு மற்றும் எல்லாவித வல்லூறு, புழுக்கொத்தி, வெளவால் ஆகியன. 19 மேலும், பறப்பனவற்றில் பூச்சிகள் யாவும் உங்களுக்குத் தீட்டானவை. அவற்றை உண்ண வேண்டாம். 20 தீட்டற்ற பறவைகள் அனைத்தையும் நீங்கள் உண்ணலாம். 21 தானாய் இறந்துபோன எதையும் உண்ண வேண்டாம். ஆனால், அதை உன்வீட்டிலிருக்கும் அந்நியனுக்கு உண்ணும்படி நீ கொடுக்கலாம், அல்லது வேற்றினத்தானுக்கு விற்கலாம். ஏனெனில், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாய்ப்பாலில் சமைக்க வேண்டாம். பத்திலொரு பாகம் அளிப்பதற்கான சட்டம் 22 ஆண்டுதோறும் உன் நிலத்தில் விளையும் எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்தெடு. 23 தம்பெயர் விளங்கும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்ட இடத்தில், உன் தானியங்களிலும், உன் திராட்சை இரசத்திலும், எண்ணெயிலும் பத்திலொரு பாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுக்களையும் அவரது திருமுன் உண்பாய். அதனால், உன் கடவுளாகிய ஆண்டவருக்கு என்றும் அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வாய். 24 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசியளிக்கும் போது, அவர் தம் பெயர் விளங்கும்படி தேர்ந்து கொண்ட இடம் உனக்கு வெகு தொலையில் இருந்தால், நெடும் பயணம் செய்யவேண்டியதாயும், உன் பொருள்களைத் தூக்கிச் செல்ல முடியாததாயும் இருந்தால், 25 நீ அதை விற்று, பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்குச் செல். 26 அங்கே உன் விருப்பம் போல் மாடு, ஆடு, திராட்சை இரசம், அல்லது மது ஆகியவற்றையும் உன் நெஞ்சம் விரும்பும் எதையும் அந்தப் பணத்திற்கு வாங்கி, நீயும் உன் வீட்டாரும் உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்டு மகிழ்வீர்களாக! 27 உன் நகரில் குடியிருக்கும் லேவியனுக்கு உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாததால், அவனைக் கைவிட்டு விடாதே. 28 மூன்றாம் ஆண்டின் இறுதியில் அவ்வாண்டில் விளைகின்ற எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்து, உனது நகரின் வாயிலருகே வை. 29 உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாத லேவியரும், உன் நகரில் வாழும் அந்நியரும், அநாதைகளும், கைம்பெண்களும் உண்டு நிறைவு கொள்வர். அப்போது அனைத்துச் செயல்களிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். 14:1 லேவி 19:28; 21:5. 14:2 விப 19:5-6; இச 4:20; 7:6; 26:18; தீத் 2:14; 1 பேது 2:9. 14:21 விப 23:19; 34:26. 14:22-29 லேவி 27:30-33; எண் 18:21.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-14
167
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 15 – திருவிவிலியம்
ஏழாம் ஆண்டு (லேவி 25:1-7) 1 ஏழாம் ஆண்டின் முடிவில் நீ விடுதலை அளிப்பாய். 2 விடுதலையின் விவரம் இதுவே; ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து அவனை விடுதலை செய்யட்டும். அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத் தண்டல் செய்ய வேண்டாம். 3 வேற்றினத்தானின் கடனை நீ தண்டலாம். ஆனால், உன் சகோதரன் பட்ட கடனிலிருந்து விடுதலை கொடு. 4 உன்னிடம் வறியவர் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது நீ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் உன்னை ஆசியால் நிரப்புவார். 5 நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு. 6 அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குத் தந்த வாக்குறுதியின்படி உனக்கு ஆசி வழங்குவார். நீ பல இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்க மாட்டாய். நீ பல இனத்தாரையும் ஆளுவாய். உன்னையோ எவனும் ஆள மாட்டான். 7 உன்கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள எந்த நகரிலாவது உன் சகோதரன் ஒருவன் வறியவனாய் இருந்தால், உன் வறிய சகோதரன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடிக்கொள்ளாதே. 8 மாறாக, அவனுக்கு உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கு ஏற்ப, எவ்வளவு தேவையானாலும், கடன் கொடு. 9 விடுதலை ஆண்டாகிய ஏழாம் ஆண்டு அண்மையில் உள்ளதே என்று ஏங்குமாறு உன் உள்ளத்தில் நெறி கெட்ட சிந்தனைகள் எழாதபடி எச்சரிக்கையாய் இரு. ஏனெனில், உன் வறிய சகோதரனை எரிச்சலுடன் நோக்கி, அவனுக்கு எதுவும் தரவில்லையெனில், உனக்கு எதிராக அவன் ஆண்டவரிடம் முறையிடுவான். அது உன்னைக் குற்றத்திற்கு உள்ளாக்கும். 10 நீ அவனுக்குத் தாராளமாய்க் கொடு. அவனுக்குக் கொடுக்கும்போது உள்ளத்தில் பொருமாதே. அப்போது, நீ செய்யும் அனைத்துச் செயல்களிலும், மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். 11 உனது நாட்டில் ஏழைகள் என்றும் இருப்பர். எனவே, நான் உனக்குக் கட்டளையிட்டுச் சொல்கிறேன்; உன் சகோதரனுக்கும், உன் நாட்டிலுள்ள வறியவர்க்கும், தேவையுள்ளோர்க்கும் உன் கையைத் தாராளமாய்த் திற. அடிமைகளை நடத்தும் முறை (விப 21:1-11) 12 உன் இனத்து ஓர் எபிரேயனோ ஓர் எபிரேயளோ உன்னிடம் அடிமையாய் விலைப்பட்டிருந்தால் ஆறு ஆண்டுகள் அவர்கள் உனக்குப் பணிபுரியட்டும். ஏழாம் ஆண்டில் உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பி விடு. 13 உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பும்போது, வெறுங்கையராய் அனுப்பாதே. 14 கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளபடி, உன் ஆட்டுமந்தையிலும், உன்களத்திலும், உன் திராட்சை ஆலையிலுமிருந்து தாராளமாக அவனுக்குக் கொடுத்து அனுப்பு. 15 எகிப்து நாட்டில் நீ அடிமையாக இருந்தாய் என்பதையும் உன் கடவுளாகிய ஆண்டவரே உன்னை மீட்டார் என்பதையும் நினைவில் கொள். எனவே, நான் உனக்கு இதைக் கட்டளையிடுகிறேன். 16 ஆனால், அவன் உன்மீதும் உன் வீட்டார் மீதும் அன்பு கூர்வதாலும், உன்னிடம் தங்குவது அவனுக்கு நலமென்று தோன்றுவதாலும்,‘உம்மைவிட்டுப் போகமாட்டேன்’ என்று உன்னிடம் கூறுவானாகில், 17 நீ ஒரு குத்தூசியால் அவன் காதைக் கதவோடு சேர்த்துக் குத்துவாய். அதன்பின் அவன் என்றென்றும் உன் அடிமையாய் இருப்பான். உன் அடிமைப் பெண்ணுக்கும் அவ்வாறே செய். 18 நீ அவனுக்கு விடுதலை கொடுத்து அனுப்பிவிடுவது உனக்கு வருத்தம் தரலாகாது. ஏனெனில், அவன் ஒரு வேலையாளின் பாதிக்கூலிக்கு ஆறு ஆண்டுகள் உனக்குப் பணி செய்திருப்பான். மேலும், உன் கடவுளாகிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும், உனக்கு ஆசி வழங்குவார். ஆடு மாடுகளின் தலையீற்று 19 உன் ஆடு மாடுகளின் ஆண் தலையீற்றுகளை உன் கடவுளாகிய ஆண்டவருக்கென ஒப்புக்கொடு. உன் மாட்டின் தலையீற்றிடம் வேலை வாங்காதே; உன் ஆட்டின் தலையீற்றின் உரோமத்தை கத்தரியாதே. 20 கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளுமிடத்தில், நீயும் உன் வீட்டாரும், ஆண்டுதோறும் அவர்தம் திருமுன் அவற்றை உண்பீர்கள். 21 அவை ஏதாகிலும் குறை உள்ளனவாய் இருப்பின்-முடம், குருடு அல்லது வேறு எந்த ஊனமும் இருப்பின் அவற்றை உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடாதே. 22 அவற்றை உன் நகர எல்லைக்குள் உண்பாயாக. கலைமானையும் கவரிமானையும் உண்பது போல் உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் உண்ணலாம். 23 அதன் இரத்தத்தையோ உண்ண வேண்டாம். தண்ணீரைப் போல் அதைத் தரையில் ஊற்றிவிடு. 15:7-8 லேவி 25:35. 15:11 மத் 26:11; மாற் 14:7; யோவா 12:8. 15:12-18 லேவி 25:39-46. 15:19 விப 13:12. 15:23 தொநூ 9:4; லேவி 7:26-27; 17:10-14; 19:26; இச 12:16-23.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-15
168
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 16 – திருவிவிலியம்
பாஸ்காத் திருவிழா (விப 12:1-20) 1 ஆபீபு மாதத்தை நினைவில்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவருக்கெனப் பாஸ்காவைக் கொண்டாடு. ஏனெனில் ஆபீபு மாதத்தில்தான், ஓர் இரவில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தார். 2 தம் பெயர் விளங்கும் பொருட்டு ஆண்டவர் தெரிந்து கொள்ளும் இடத்தில், உன் ஆடுமாடுகளிலிருந்து உன் ஆண்டவராகிய கடவுளுக்குப் பாஸ்காப் பலிசெலுத்து. 3 அதனுடன் புளிப்புள்ள அப்பத்தை உண்ணாதே. எகிப்து நாட்டிலிருந்து நீ வெளியேறிய நாளை உன் வாழ்நாளெல்லாம் நினைவுகூரும் வண்ணம், ஏழு நாள்கள் அவற்றைப் புளிப்பற்ற அப்பத்தோடு உண்பாய். அது துயரத்தின் அப்பம். ஏனெனில், நீ எகிப்து நாட்டிலிருந்து அவசரமாய்ப் புறப்பட்டு வந்தாய். 4 உன் எல்லைக்குள் எங்கும் ஏழு நாள்களுக்குப் புளிப்புள்ள அப்பம் இருத்தலாகாது. நீ முதல் நாள் மாலையில் செலுத்தும் பலியின் இறைச்சி எதுவும் இரவு முழுவதும் காலை வரையிலும் இருத்தலாகாது. 5 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் எந்த நகருக்குள்ளும் நீ பாஸ்காப் பலியைச் செலுத்தவேண்டாம். 6 ஆனால் அவர்தம் பெயர் அதில் நிலைக்கும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில், நீ பாஸ்காப்பலியைச் செலுத்து, கதிரவன் மறையும் மாலை வேளையில், நீ எகிப்திலிருந்து புறப்பட்ட அந்த நேரத்தில், பலி செலுத்து. 7 உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அதை நெருப்பில் வாட்டி உண்பாய். விடியற் காலையில் உன் கூடாரத்திற்குத் திரும்பிச் செல்வாய். 8 ஆறு நாள்களுக்கு நீ புளிப்பற்ற அப்பத்தை உண்பாய். ஏழாம் நாள் உன் கடவுளாகிய ஆண்டவருக்காகத் திருப்பேரவை கூடும். அன்று நீ வேலை ஏதும் செய்யாதே. அறுவடை விழா (விப 34:22; லேவி 23:15-21) 9 நீ ஏழு வாரங்களை எண்ணிக்கொள். விளைந்து நிற்கும் கதிரில் கதிரரிவாளை முதலில் வைத்தநாள் தொடங்கி ஏழு வாரங்களைக் கணக்கிடு. 10 அதன்பின், உன் கடவுளாகிய ஆண்டவருக்கென வாரங்களின் விழாவைக் கொண்டாடு. அவர் உனக்கு ஆசி வழங்குவதற்கேற்ப, உன் கைகளால் அவருக்குத் தன்னார்வக் காணிக்கைகளைச் செலுத்து. 11 உன் கடவுளாகிய ஆண்டவர் தம்பெயர் விளங்குமாறு தெரிந்தெடுக்கும் இடத்தில் நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் ஆண் ஊழியர்களும், பெண் ஊழியர்களும், உன் நகரில் உள்ள லேவியனும், அந்நியனும் ,அநாதைகளும், கைம்பெண்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் மகிழ்வீர்களாக. 12 நீ எகிப்தில் அடிமையாய் இருந்தாய் என்பதை நினைவிலிருத்தி, இந்த முறைமைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. கூடார விழா (லேவி 23:33-43) 13 உன் களத்தின் பலனையும் ஆலையின் பலனையும் சேகரித்தபின், கூடார விழாவை ஏழு நாள்கள் கொண்டாடுவாய். 14 நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் அடிமைகளும், உன் அடிமைப் பெண்களும், உன் நகரில் உள்ள லேவியனும், அந்நியனும், அநாதைகளும், கைம்பெண்களும் இவ்விழாவில் மகிழுங்கள். 15 உன் ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏழு நாள்கள் விழாக் கொண்டாடு. ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார். அப்பொழுது நீ நிறைவாக மகிழ்ச்சியுறுவாய். 16 ஆண்டில் மூன்று முறை உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும், புளிப்பற்ற அப்ப விழாவிலும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். ஆண்டவர் திருமுன் அவர்கள் வெறுங்கையராய் வரவேண்டாம். 17 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளதற்கேற்ப, ஒவ்வொருவனும் தன்னால் ஆனதைக் கொண்டு வருவானாக! நீதி வழங்கும் முறை 18 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் குலங்களுக்கெனக் கொடுக்கும் எல்லா நகர்களிலும் நீதிபதிகளையும் தலைவர்களையும் நியமனம் செய்வாய். அவர்கள் நீதியுடனும் நேர்மையுடனும் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும். 19 நீதியைத் திரித்துவிடாதே. ஒருதலைச்சார்பாகச் செயல்படாதே. கையூட்டு வாங்காதே. ஏனெனில், கையூட்டு ஞானிகளின் கண்களைக் குருடாக்கும், நேர்மையாளரின் வழக்கைப் புரட்டிவிடும். 20 நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து. அதனால், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உடைமையாக்கிக் கொள்வாய். 21 உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நீ எழுப்பவிருக்கும் பீடத்தின் அருகில் அசேராக் கம்பங்களை ஊன்ற வேண்டாம். 22 சிலைத் தூண்களையும் நிறுத்தாதே. ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் அவற்றை வெறுக்கிறார். 16:1-8 லேவி 23:5-8; எண் 28:16-25. 16:9-12 எண் 28:26-31. 16:13-15 எண் 29:12-38. 16:19 விப 23:6-8; லேவி 19:15. 16:21 விப 34:13. 16:22 லேவி 26:1.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-16
169
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 17 – திருவிவிலியம்
1 ஊனமோ வேறு எந்தக் குறையோ உள்ள மாட்டையாவது ஆட்டையாவது உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலி செலுத்த வேண்டாம். ஏனெனில், அதை உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார். 2 கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கிற நகர்கள் ஒன்றில், ஓர் ஆண் அல்லது பெண், உன் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி, அவருக்கு எதிராகக் குற்றம் செய்வதாக உனக்குத் தெரிந்தால், 3 நான் கட்டளையிட்டதற்கு எதிராக, வேற்றுத் தெய்வங்கள் அல்லது நிலா, கதிரவன் அல்லது வேறு யாதொரு வான் கோளங்களைப் பின்சென்று, பணிந்து வணங்கினால், 4 அது பற்றி உனக்குச் சொல்லப்படும் போது அல்லது நீ கேள்விப்படும் போது அதை நீ நன்கு விசாரி. அது உண்மை எனவும் அத்தகைய அருவருப்பான செயல் இஸ்ரயேலில் நடந்தது உறுதி எனவும் நீ கண்டால், 5 அக்குற்றத்தைச் செய்த ஆணையோ பெண்ணையோ உன் நகர வாயிலுக்குக் கூட்டிச் சென்று அவனை அல்லது அவளைக் கல்லால் எறிந்து கொல். 6 இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும். ஒரே சாட்சியின் வாக்குமூலத்தை முன்னிட்டு எவரும் கொலை செய்யப்படலாகாது. 7 முதலில் சாட்சிகளின் கைகளும் பின்னர் எல்லா மக்களின் கைகளும் கொல்லப்பட வேண்டியவனுக்கு எதிராக ஓங்கட்டும். இவ்வாறு, உன் நடுவிலிருந்து தீமையை அகற்றுவாய். 8 இரத்தப் பழிகளைக் குறித்தோ, உரிமை வழக்குகளைக் குறித்தோ, தடியடியைக் குறித்தோ தீர்ப்புக் கூறுவது கடினமாய் இருந்தால் அல்லது உன் நகரிலுள்ள வேறு எந்த வழக்கும் சிக்கலானதாக இருந்தால், நீ எழுந்து உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல். 9 அங்கு, லேவியரான குருக்களிடத்திலும் அன்றைய நாளின் நீதிபதிகளிடமும் அறிவுரை கேள். நியாயத் தீர்ப்பை அவர்கள் உனக்குத் தெரிவிப்பார்கள். 10 ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்திலிருந்து அவர்கள் உனக்குத் தெரிவிப்பதன்படி நட. அவர்கள் கற்பித்தபடி எல்லாம் செயல்படுவதில் கருத்தாயிரு. 11 அவர்கள் உனக்குக் கற்பித்த சட்டங்களின்படியும், அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பின்படியும் செயல்படு. அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பினின்று இடமோ வலமோ பிறழாதே. 12 கடவுளாகிய ஆண்டவருக்கு ஊழியம் புரிய அங்கே நிற்கும் குருக்களுக்கோ நீதிபதிகளுக்கோ செவிகொடாமல் செருக்குடன் செயல்படுகிறவன் சாகவேண்டும். இவ்வாறு, இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்றுவாய். 13 எல்லா மக்களும் அதைக் கேட்டு, அஞ்சுவர்; எவரும் செருக்குடன் செயல்படார். அரசனுக்கான விதிமுறைகள் 14 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், ‘என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும் போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன்’ என்று நீ சொல்வாய். 15 அப்போது உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய். உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் இனத்தான் அல்லாத அந்நியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே. 16 அவன் தனக்கெனக் குதிரைகளை மிகுதியாக்கிக் கொள்ளாமலும், குதிரைகளை மிகுதியாக்கிக்கொள்ளும் பொருட்டு மக்களை மீண்டும் எகிப்துக்குப் போகச் சொல்லாமலும் இருக்கட்டும். ஏனெனில், இனி அந்த வழியாகத் திரும்பவும் செல்லக்கூடாதென ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியுள்ளார். 17 அவன் இதயம் ஆண்டவரைவிட்டு விலகாதிருக்க வேண்டுமானால், பல மனைவியரைக் கொள்ளலாகாது; வெள்ளியும் பொன்னும் அளவுமீறிச் சேர்க்கலாகாது. 18 அவன் தன் அரசுக் கட்டிலில் அமர்ந்தபின், லேவியராகிய குருக்கள் பொறுப்பிலுள்ள இச்சட்ட நூலின் நகல் ஒன்றைத் தனக்கென ஓர் ஏட்டில் எழுதிக் கொள்ளட்டும். 19 அதைத் தன்னோடு வைத்துக்கொள்ளட்டும். அதை நாள்தோறும் அவன் வாழ்நாள் முழுவதும் வாசிக்கட்டும். அதனால், அந்தச் சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், அதன் நீதிமுறைகளையும் நிறைவேற்றுதவன் மூலம் அவன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வான். 20 அதனால், அவன் இதயத்தில் இறுமாப்புக்கொண்டு, தன் சகோதரருக்கு மேல் தன்னை உயர்த்திக் கொள்ளாமலும், கட்டளைகளிலிருந்து வலமோ இடமோ பிறழாமலும் இருப்பான். அப்போது அவனும் அவன் புதல்வர்களும் இஸ்ரயேலில் நெடுநாள் ஆட்சி புரிவர். 17:3 விப 22:20. 17:6 எண் 35:30; இச 19:15; மத் 18:16; 2 கொரி 13:1; 1 திமொ 5:19; எபி 10:28. 17:14 1 சாமு 8:5. 17:16 1 அர 10:28; 2 குறி 1:16; 9:28. 17:17 1 அர 10:14, 22-27; 11:1-8; 2 குறி 1:15; 9:27.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-17
170
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 18 – திருவிவிலியம்
குருக்களுக்கான பங்கு 1 லேவிய குருக்களுக்கும் அனைத்து லேவிய குலத்தாருக்கும் இஸ்ரயேல் மக்களிடையே பங்கும் சொத்துரிமையும் இல்லை. ஆண்டவருக்கெனச் செலுத்தப்படும் எரிபலிகளையும் அவருக்கே உரியவைகளையும் அவர்கள் உண்பார்கள். 2 அவர்கள் சகோதரர்கள் நடுவே அவர்களுக்கு உரிமைச்சொத்து இல்லாதிருக்கட்டும். ஆண்டவர் அவர்களுக்கு வாக்களித்தபடி அவரே அவர்களின் உரிமைச் சொத்து. 3 மக்களிடமிருந்து குருக்களுக்குச் சேரவேண்டிய உரிமம் ஆவது; பலியிட வருவோர் பலியிடப்படும் ஆடு, மாடு இவற்றின் முன்னந்தொடை, தாடைகள், இரைப்பை ஆகியவற்றைக் குருவுக்குக் கொடுக்க வேண்டும். 4 உன் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் இவற்றின் முதற்பலனையும், கத்தரித்த ஆட்டு மயிரின் முதற்பங்கையும் அவனுக்குக் கொடுக்க வேண்டும். 5 ஏனெனில், அவனும் அவன் புதல்வர்களும் உன் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் அவர் முன்னிலையில் என்றென்றும் ஊழியம் செய்யும்படி அவர் அவனை உங்களது குலங்கள் அனைத்திலிருந்தும் தேர்ந்து கொண்டார். 6 இஸ்ரயேலில் பரவியுள்ள யாதொரு நகரில் வாழும் ஒரு லேவியன் அங்கிருந்து புறப்பட்டு ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்திற்கு விரும்பி வந்தால், 7 அங்கே ஆண்டவரின் முன்னிலையில் ஊழியம் செய்யும் லேவியராகிய தன் சகோதரரைப் போல, அவனும் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் ஊழியம் செய்வான். 8 அவன் தன் தந்தைவழிச் சொத்தில் வரவேண்டியதை அனுபவிப்பதுமின்றி, தன் ஊழியத்திற்கான பங்கையும் உணவுக்காகப் பெற்றுக்கொள்ளட்டும். வேற்றின வழக்கங்கள் குறித்த எச்சரிக்கை 9 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டுக்குள் போனபின், அந்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்களைக் கற்றுக் கொள்ளாதே. 10 தன் புதல்வனை அல்லது புதல்வியைத் தீ மிதிக்கச் செய்கிறவனும், குறி சொல்கிறவனும், நாள் பார்க்கிறவனும், சகுனங்களை நம்புகிறவனும், சூனியக்காரனும், 11 மந்திரவாதியும், ஏவிவிடுகிறவனும், மாயவித்தைக்காரனும், இறந்தவர்களிடம் குறிகேட்கிறவனும் உங்களிடையே இருத்தலாகாது. 12 ஏனெனில், இவற்றையெல்லாம் செய்கிறவன் ஆண்டவருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களின் நிமித்தம், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் முன்னிலையினின்று அவனைத் துரத்திவிடுவார். 13 கடவுளாகிய ஆண்டவருக்கு நீ முற்றிலும் உண்மையாய் இரு. இறைவாக்கினரை அனுப்புவதற்கான உறுதிமொழி 14 ஏனெனில், நீ துரத்திவிடவிருக்கும் இந்த வேற்றினத்தார் குறிசொல்லுகிறவர்களுக்கும், நாள் பார்க்கிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள். அவ்வாறு செயல்பட உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுமதிக்கவில்லை. 15 கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. 16 ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, ‘நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக’ என்று விண்ணப்பித்தபோது, 17 ஆண்டவர் என்னைநோக்கி, ‘அவர்கள் சொன்னதெல்லாம் சரி’ என்றார். 18 உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். 19 என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன். 20 ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான். 21 ‘ஆண்டவர் சொல்லாத வார்த்தை இன்னதென்று எப்படி நான் அறிவது?’ என்று நீ உன் மனத்தில் எண்ணலாம். 22 ஓர் இறைவாக்கினன் ஆண்டவரின் பெயரால் உரைப்பது நடைபெறாமலும் நிறைவேறாமலும் போனால், அந்த இறைவாக்கினன் தன் எண்ணப்படியே பேசுபவன். அவனுக்கு நீ அஞ்ச வேண்டியதில்லை. 18:2 எண் 18:20. 18:10 லேவி 19:26; விப 22:18. 18:11 லேவி 19:31. 18:13 மத் 5:48. 18:15 திப 3:22; 7:37. 18:19 திப 3:23.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-18
171
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 19 – திருவிவிலியம்
அடைக்கல நகர்கள் (எண் 35:9-28; யோசு 20:1-9) 1 கடவுளாகிய ஆண்டவர் வேற்றினத்தாரை வேரறுத்து, அவர்களின் நாடுகளை உனக்குக் கொடுப்பார். நீ அவற்றை உடைமையாக்கி, அவர்களது நகர்களிலும் வீடுகளிலும் குடியேறுவாய். 2 நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் நாட்டினிடையே மூன்று நகர்களை உனக்கென ஒதுக்கி வை. 3 கொலை செய்தவன் எவனும் அங்கே தப்பி ஓடும்படி சாலைகளை அமை. இவ்வாறு, உன் உரிமைச் சொத்தாகுமாறு கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை மூன்று பாகங்களாகப் பிரி. 4 அங்கே ஓடிப்போவதன் மூலம் உயிர் வாழத்தக்க கொலையாளி யாரெனில், தற்செயலாய் முன்பகை ஏதுமின்றித் தனக்கு அடுத்திருப்பவனைக் கொலைசெய்பவனே. 5 சான்றாக; ஒருவன் மரம் வெட்டுவதற்காகத் தனக்கு அடுத்திருப்பவனோடு காட்டுக்குள் செல்கிறான். மரத்தை வெட்டுவதற்காகக் கோடரியைத் தன் கையால் ஓங்கும்போது, கோடரியின் இரும்பு கைப்பிடியினின்று கழன்று அடுத்திருப்பவன் மீது விழ அவன் இறந்து போகிறான். அப்போது அப்படிப்பட்டவன் இந்நகர்கள் ஒன்றினுக்குள் தப்பியோடி அங்கே வாழலாம். 6 இல்லையெனில், கொலை செய்யப்பட்டவனின் முறை உறவினன், கோப வெறியால் பழிவாங்கும்படி கொலையாளியைப் பின்தொடரும் போது, செல்லும் வழி நீண்டதாக இருந்தால் அவனைப் பிடித்துக் கொன்றுவிட ஏதுவாகும். ஆனால், கொலை செய்யப்பட்டவன் மீது கொலையாளிக்கு முன்பகை இல்லாததால் அவன் சாவுக்குரிய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது உண்மை. 7 எனவேதான், நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்; மூன்று நகர்களை உனக்கென ஒதுக்கி வை. 8-9 நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்றுவதில் நீ கருத்தாய் இருந்து, உன் கடவுளாகிய ஆண்டவர்மேல் அன்புகூர்ந்து, அவரது வழிகளில் என்றும் நடந்தால், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு வாக்களித்தபடி, உனக்கு இந்த நாடுகள் அனைத்தையும் கொடுத்து, உன் எல்லைகளை விரிவாக்குவார். அப்போது இன்னும் மூன்று நகர்களை இந்த நகர்களோடு சேர்த்துக்கொள். 10 இல்லையெனில், நீ உரிமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் நாட்டில், குற்றமில்லாதவனின் இரத்தம் சிந்தப்படுவதால், உன் மேல் இரத்தப்பழி வரலாம். 11 ஆனால், ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனைப் பகைத்து, அவனுக்காகப் பதுங்கியிருந்து, அவனைத் தாக்கி, அவனை வெட்டிச் சாகடித்தபின், இந்த நகர்கள் ஒன்றினுக்குள் ஓடி ஒளிந்தால், 12 அவனது நகர்ப் பெரியோர்கள் ஆளனுப்பி, அங்கிருந்து அவனைக் கொண்டுவந்து கொலை செய்யப்பட்டவனின் முறை உறவினனின் கையில் அவனை ஒப்படைப்பர். இரத்தப்பழிக்காக அவன் சாவான். 13 நீ அவனுக்கு இரக்கம் காட்டாதே. குற்றமில்லாதவனின் இரத்தப்பழியை இஸ்ரயேலில் இருந்து துடைத்துவிடு. அப்போது உனக்கு நலமாகும்! வழி முறை எல்லைக்கல் 14 நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் உன் உரிமைச் சொத்தாகிய நாட்டில் முன்னோர்கள் குறித்துள்ள உனக்கு அடுத்திருப்பவனின் எல்லைக் கல்லை நகர்த்தி வைக்காதே. சாட்சிகளைப் பற்றிய விதிமுறைகள் 15 ஒருவனது எந்தக் குற்றத்தையும் எந்தப் பழிபாவச்செயலையும் உறுதி செய்ய, ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதிசெய்யப்பட வேண்டும். 16 ஒருவன்மேல் குற்றம் சுமத்தும்படி ஒரு பொய்ச்சாட்சி முன்வந்தால், 17 வழக்காடுகிற இருவரும் ஆண்டவரின் திருமுன் அன்றைய நாளில் ஊழியம் புரியும் குருக்களிடமும் நீதிபதிகளிடமும் வரட்டும். 18 நீதிபதிகள் தீர விசாரிப்பர். சான்று சொன்னவன் பொய்ச்சாட்சி என்றும், தன் சகோதரனை அநியாயமாகக் குற்றம் சாட்டியுள்ளான் என்றும் அறிந்தால், 19 அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்ததுபோலவே, அவனுக்குச் செய்யுங்கள். இவ்வாறு, உங்கள் நடுவிலிருந்து தீமையை அகற்றுங்கள். 20 அப்போது அதைக்கேட்டு மற்றவர்களும் அஞ்சுவர். அத்தகைய தீச்செயலை உங்களிடையே எவரும் செய்யத் துணியார். 21 நீ அவனுக்கு இரக்கம் காட்டாதே; உயிருக்கு உயிர்; கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்; கைக்குக் கை; காலுக்குக் கால்! 19:14 இச 27:17. 19:15 எண் 35:30; இச 17:6; மத் 18:16; யோவா 19:31; 2 கொரி 13:1; 1 திமொ 5:19; எபி 10:18. 19:21 விப 21:23-25; லேவி 24:19-20; மத் 5:38.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-19
172
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 20 – திருவிவிலியம்
போரைப் பற்றிய விதிமுறைகள் 1 நீ உன் பகைவருக்கு எதிராகப் போருக்குப் போகையில், உன்னிடம் உள்ளதைவிட மிகுதியான குதிரைகளையும், தேர்களையும், பெரும் படையையும் நீ கண்டால், அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உன்னை வெளியே கூட்டிவந்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு உள்ளார். 2 நீ போரிடத் தொடங்குமுன், குருக்கள் முன்வந்து வீரர்களிடம் கூற வேண்டியது; 3 ‘இஸ்ரயேலே கேள்! இன்று நீங்கள் உங்கள் பகைவர்களுக்கு எதிராகப் போர்புரிய முன்வந்துள்ளீர்கள். உங்கள் இதயம் சோர்ந்து போக வேண்டாம்; அஞ்ச வேண்டாம்; கலங்க வேண்டாம்; அவர்களைப் பார்த்துத் தத்தளிக்கவும் வேண்டாம். 4 ஏனெனில், உங்களுக்காக உங்கள் பகைவருக்கு எதிராகப் போர்புரியவும், உங்களைக் காப்பாற்றவும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களோடு செல்கிறார். 5 அதன்பின், படைத்தலைவர்கள் வீரர்களிடம் கூறவேண்டியது: ‘புது வீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதை அர்ப்பணம் செய்ய வேண்டியிருக்கும். 6 திராட்சைத் தோட்டம் அமைத்து அதன் பயனை அனுபவிக்காதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதன் பயனை அனுபவிக்க வேண்டியிருக்கும். 7 ஒரு பெண்ணை மண உறுதிப்பாடு செய்தும் அவளோடு கூடி வாழாதவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால் வேறு ஒருவன் அவளை மணக்க வேண்டியிருக்கும்.’ 8 மீண்டும் படைத்தலைவர்கள் வீரர்களிடம் கூறவேண்டியது: ‘உங்களில் அச்சமுற்று உள்ளம் சோர்ந்திருப்பவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். இல்லையெனில், அவன் தோழனும் அவனைப்போல் ஊக்கம் இழந்து விடுவான்.’ 9 இவ்வாறு, படைத்தலைவர்கள் வீரர்களிடம் பேசி முடித்தபின், அவர்களை நடத்திச் செல்லும் படைத்தளபதிகளை நியமிக்கட்டும். 10 ஒரு நகரோடு போரிட நீ அதை நெருங்கும் போது, அது சரணடையுமாறு முயற்சி செய். 11 அது சரணடைந்து, தன் வாயில்களை உனக்குத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லாரும் உனக்கு அடிமைகளாகி உனக்குப் பணிவிடை செய்வர். 12 அது உன்னிடம் சரணடையாது உனக்கு எதிராகப் போர் தொடுத்தால், நீ அதை முற்றுகையிடு. 13 கடவுளாகிய ஆண்டவர் அதை உன்கையில் ஒப்படைக்கும்போது, அதிலுள்ள எல்லா ஆண்களையும் வாளால் கொன்றுவிடு. 14 ஆனால், பெண்களையும் சிறுவர்களையும், ஆடு மாடுகளையும் நகரிலுள்ள அனைத்தையும் உன் கொள்ளைப் பொருளாகக் கொள். உன் கடவுளாகிய ஆண்டவர் எதிரியிடமிருந்து உனக்குக் கொடுத்துள்ள கொள்ளைப் பொருள்களை நீ அனுபவிக்கலாம். 15 இந்த நாடுகளைச் சாராத தொலையிலுள்ள எல்லா நகர்களுக்கும் அவ்வாறே செய்வாய். 16 ஆனால், இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாமல் விடாதே. 17 இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர் மற்றும் எபூசியர் அனைவரையும் உன் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி அழித்தொழிப்பாய். 18 அதனால், தங்கள் தெய்வங்களுக்காகச் செய்கின்ற அருவருக்கத்தக்கவற்றை உனக்குக் கற்றுக்கொடுத்து, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ய உன்னைத் தூண்டமாட்டார்கள். 19 ஒரு நகருக்கு எதிராகப் போர் தொடுத்து நீ அதை நெடுநாள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினால், அதிலுள்ள மரங்களைக் கோடரியால் வெட்டி அழிக்காதே. நீங்கள் அவற்றின் பழங்களை உண்ணலாம். ஆனால், அவற்றை வெட்டலாகாது. வயல்வெளி மரங்கள் உன்னை முற்றுகையிட வரும் மனிதர் அல்லவே! 20 உணவுக்கு உதவாத மரங்கள் என்று உனக்குத் தெரிபவற்றை மட்டும் வெட்டி அழிக்கலாம். உன்னோடு போர் புரியும் நகருக்கு எதிராக அதை வீழ்த்தும்வரை அவற்றைக் கொண்டு முற்றுகைக் கொத்தளங்களை எழுப்பலாம்.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-20
173
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 21 – திருவிவிலியம்
துப்புத் துலங்காத கொலைகள் குறித்த விதிமுறைகள் 1 நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுத்த மண்ணில் திறந்த வெளியில் ஒருவன் கொலையுண்டு கிடக்க, அவனைக் கொலைசெய்தவன் யாரென்று தெரியாதிருந்தால், 2 உன் தலைவர்களும் நீதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலையுண்டு கிடப்பவனைச் சுற்றிலுமுள்ள நகர்களுக்கு உள்ள தொலைவு எவ்வளவு என்று அளப்பார்களாக. 3 கொலையுண்டு கிடப்பவனுக்கு மிக அருகிலுள்ள நகர்த் தலைவர்கள், வேலையில் பழக்கப்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஓர் இளம் பசுவை மந்தையிலிருந்து பிடிப்பர். 4 பின்னர், உழப்படாததும் விதைக்கப்படாததும் நீரோடுவதுமான பள்ளத்தாக்கிற்கு அந்தக் கிடாரியை அந்நகர்த்தலைவர்கள் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கில் அதன் கழுத்தை முறிப்பர். 5 அப்பொழுது, தனக்கு ஊழியம் செய்யவும், ஆண்டவர் பெயரால் ஆசி வழங்கவும், உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்ட லேவியின் புதல்வர்களாகிய குருக்கள் முன்வர வேண்டும். ஏனெனில், அவர்களது வாக்கின்படியே எல்லா வழக்குகளும் எல்லாத் தடியடிகளும் தீர்க்கப்படவேண்டும். 6 அப்போது கொலையுண்டவனுக்கு மிக அருகில் உள்ள நகர்த் தலைவர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கில் கழுத்து முறிக்கப்பட்ட கிடாரியின் மீது அவர்கள் கைகளைக் கழுவி, 7 உரத்துச் சொல்ல வேண்டியது: ‘எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தியதுமில்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை. 8 ஆண்டவரே, நீர் மீட்ட உம் மக்களாகிய இஸ்ரயேலை மன்னித்தருளும். குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தினபழியை உம்மக்கள் இஸ்ரயேல்மேல் சுமத்தாதேயும். இரத்தப் பழியிலிருந்து அவர்களை விடுவித்தருளும்.’ 9 இவ்வாறு, குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தின பழியை உன்னிடமிருந்து நீக்கி விடுவாய். ஏனெனில், ஆண்டவரின் முன்னிலையில் நேரியதைச் செய்துள்ளாய். போர்ப் பெண்கைதிகளைக் குறித்த விதிமுறைகள் 10 உன் பகைவர்களுக்கு எதிராகப் போர் புரியப்போகையில், உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கையில் ஒப்படைப்பார். நீ அவர்களைச் சிறைப்பிடிப்பாய். 11 அப்போது, சிறைப்பட்டவர்களில் அழகிய தோற்றமுடைய ஒரு பெண்ணைக் கண்டு, அவள்மேல் காதல்கொண்டு, அவளை உன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால், 12 அவளை உன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போ. அவள் தன் தலையை மழித்து, நகங்களை வெட்டிக்கொள்வாள். 13 அவள் சிறைக் கைதியின் ஆடையைக் கழற்றிவிட்டு, உன்வீட்டில் தங்கி, ஒரு மாதகாலம் தன் தந்தையையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். அதன்பின் நீ அவளோடு கூடி அவள் கணவனாவாய்; அவள் உனக்கு மனைவியாவாள். 14 அவள்மேல் உனக்கு விருப்பமில்லாமற் போனால், அவள் விருப்பம் போல் அவளைப் போகவிடு. நீ அவளைக் கெடுத்துவிட்டதால் பணத்துக்கு விற்கவோ அடிமைபோல் நடத்தவோ வேண்டாம். தலைச்சனின் பங்கு குறித்த விதிமுறை 15 இரண்டு மனைவியரைக் கொண்ட ஒருவன் ஒருத்தியின்மேல் விருப்பாகவும், மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்கும்போது, இருவருமே அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கையில், வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் தலைப்பேறாக இருப்பானாயின், 16 அவன் தனக்குண்டான சொத்தைத் தன் புதல்வர்களுக்குப் பங்கிடும் நாளில், தலைச்சனுக்குரிய உரிமையைத் தலைச்சனாகிய வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனுக்கன்றி, விரும்ப்பட்ட பெண்ணின் புதல்வனுக்குக் கொடுக்கக்கூடாது. 17 வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனையே தலைச்சனாக ஏற்றுக் கொண்டு, தன்னிடம் உள்ள சொத்துக்களில் அவனுக்கு இரண்டு பங்கு கொடுக்க வேண்டும். ஏனெனில், அவனே தன் தந்தையின் ஆற்றலது முதற் கனி. தலைச்சனுக்குரிய உரிமை அவனையே சாரும். கீழ்ப்படியாத மகனைக் குறித்த விதிமுறை 18 ஒருவனுடைய புதல்வன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய், தந்தை சொல்லையோ தாய் சொல்லையோ கேளாமல், அவர்களால் தண்டிக்கப்பட்ட பின்பும் அடங்காமல் போனால், 19 தந்தையும் தாயும் அவனைப் பிடித்து, அவனது நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கொண்டு போவர். 20 ‘எங்கள் மகனாகிய இவன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய் இருக்கிறான்; எங்கள் சொல் கேட்பதில்லை; பெருந்தீனிக்காரனும் குடிவெறியனுமாய் இருக்கிறான்’ என்று நகர்த் தலைவர்களிடம் அவர்கள் சொல்ல வேண்டும். 21 உடனே, அந்நகரத்து மனிதர் எல்லோரும் அவனைக் கல்லால் எறிவர்; அவனும் செத்தொழிவான். இவ்வாறு, உன்னிடமிருந்து தீமையை அகற்று. அதைக் கேட்டு இஸ்ரயேலர் எல்லோரும் அஞ்சுவர். பிற சட்டங்கள் 22 சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்டபின் அவனது பிணத்தை ஒரு மரத்திலே தொங்கவிடு, 23 ஆனால், அவன் பிணம் இரவில் மரத்தில் தொங்கக்கூடாது. அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும். ஏனெனில், தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டைத் தீட்டுப் படுத்தாதே. 21:23 கலா 3:13.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-21
174
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 22 – திருவிவிலியம்
1 உன் இனத்தவன் ஒருவனின் ஆடோ மாடோ வழிதவறித் திரிவதைக் கண்டும், அதைக் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதை உன் இனத்தானிடம் திருப்பிக் கொண்டு போ. 2 உனக்கு அடுத்திருப்பவன் உன்னிடமிருந்து வெகு தொலையில் இருந்தால், அல்லது அவன் யாரென்று நீ அறியாதிருந்தால், அதை உன் வீட்டுக்குள் கொண்டுபோய் உன்னோடு வைத்துக்கொள். உனக்கு அடுத்திருப்பவன் அதைத் தேடி வரும்பொழுது அதை அவனிடம் திரும்பக் கொடு. 3 உனக்கு அடுத்திருப்பவனிடமிருந்து காணாமல் போன கழுதைக்கோ, ஆடைக்கோ வேறு எந்தப் பொருளுக்கோ அவ்விதமே செய். நீ அவற்றைக் கண்டும் காணாதவன் போல் இருந்துவிடாதே. 4 உனக்கு அடுத்திருப்பவனின் கழுதையோ மாடோ வழியில் விழுந்து கிடப்பதைக் கண்டும் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதைத் தூக்கிவிட அவனுக்கு உதவிசெய். 5 ஆண்களின் ஆடைகளைப் பெண்கள் அணியலாகாது. பெண்களின் உடைகளை ஆண்கள் உடுத்தலாகாது. ஏனெனில், அப்படிச் செய்பவர்கள் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவர்கள். 6 வழியோரமாய், மரத்திலோ தரையிலோ, குஞ்சுகள் அல்லது முட்டைகள் உள்ள பறவைக்கூட்டையும், அந்தக் குஞ்சுகள் அல்லது முட்டைகள்மேல் தாய் உட்கார்ந்து கொண்டிருப்பதையும் கண்டால், குஞ்சுகளோடு தாயைப் பிடிக்காதே. 7 தாயைப் போகவிடு. குஞ்சுகளை உனக்கென எடுத்துக்கொள். அப்போது உனக்கு நலமாகும். நீ நெடுநாள் வாழ்வாய். 8 நீ புது வீட்டைக் கட்டும்போது உன் வீட்டு மாடியைச் சுற்றிக் கைப்பிடிச் சுவரைக் கட்டு. இல்லையெனில், ஒருவன் மாடியிலிருந்து விழுந்தால், விழுந்தவனின் இரத்தப்பழி உன் வீட்டின்மீது வரும். 9 திராட்சைத் தோட்டத்தில் வேறு விதைகளை விதைக்காதே. அப்படிச் செய்தால், நீ விதைத்தவற்றின் பயிரையும் திராட்சைத் தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய். 10 மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழலாகாது. 11 ஆட்டுமயிரும் நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்தாதே. 12 உன்னை நீ மூடிக்கொள்ளும் மேற்போர்வையின் நான்கு மூலைகளிலும் தொங்கல்களை அமைத்துக்கொள். பாலுறவுத் தூய்மை பற்றிய சட்டங்கள் 13 ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளை வெறுத்து, 14 அவள் மீது அவதூறுசொல்லி, அவளது பெயரைக் கெடுத்து, ‘நான் இந்தப்பெண்ணை மணம் முடித்தேன்; ஆனால், அவளோடு உறவுகொண்டபோது, அவள் கன்னியல்ல என்று கண்டுகொண்டேன்’ என்று கூறினால், 15 அப்பெண்ணின் தந்தையும் தாயும் அவளது கன்னிமையின் அடையாளத்தை எடுத்துக்கொண்டு, அவளை நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கூட்டி வருவார்கள். 16 அப்போது, அப்பெண்ணின் தந்தை தலைவர்களிடம், ‘என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன்; அவனோ அவளை வெறுக்கிறான். 17 அத்தோடு, ‘உன் மகளிடம் கன்னிமையைக் காணவில்லை’ என்று கூறி அவளைப் பற்றி அவதூறு சொல்லுகிறான்; ‘இதோ என் மகளின் கன்னிமைக்கான சான்று’ என்று சொல்லுவான். பின்பு அவர்கள் நகர்த் தலைவர்களின் முன்னர் அந்தத் துணியை விரிப்பார்கள். 18 அப்போது அந்நகர்த் தலைவர்கள் அம்மனிதனைப் பிடித்துத் தண்டிப்பார்கள். 19 பின்னர், அவனுக்கு நூறு வெள்ளிக் காசுகள் தண்டம் விதித்து, அதைப் பெண்ணின் தந்தையிடம் கொடுப்பார்கள். ஏனெனில், இஸ்ரயேலின் கன்னி ஒருத்தியின் மேல் அவன் அவதூறு கூறியுள்ளான். அவளே இவனுக்கு மனைவியாக இருப்பாள். அவன் வாழ்நாள் முழுவதும் அவளைத் தள்ளிவிட முடியாது. 20 ஆனால், அப்பெண்ணிடம் கன்னிமை காணப்படவில்லை என்பது உண்மையானால், 21 அந்தப் பெண்ணை அவள் தந்தையின் வீட்டு வாயிலுக்கு வெளியே கொண்டுவந்து அவளது நகரின் மனிதர் அவளைக் கல்லால் எறிவர். அவளும் சாவாள். ஏனெனில், அவள் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போதே வேசித்தனம் பண்ணி இஸ்ரயேலுக்கு இழுக்கானதைச் செய்தாள். இவ்வாறு தீமையை உன்னிடமிருந்து அகற்று. 22 ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர். இவ்வாறு, இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்று. 23 மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை நகரில் ஒருவன் சந்தித்து அவளோடு உறவுகொண்டால், 24 அவர்கள் இருவரையும் நகர் வாயிலுக்குக் கொண்டு போய்க் கல்லால் எறிவர்; அவர்களும் சாவர். அவள் நகரில் இருந்தும் உதவிக்காகக் கூக்குரலிடாததாலும், அவன் மற்றொருவனின் மனைவியைக் கெடுத்ததாலும் அவர்கள் சாவர். இவ்வாறு, உன்னிடமிருந்து தீமையை அகற்று. 25 ஆனால், மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை வயல்வெளியில் ஒருவன் கண்டு அவளைப் பலவந்தமாகப் பிடித்து அவளோடு உறவுகொண்டால், அவளோடு உறவுகொண்ட அம்மனிதன் மட்டுமே சாகட்டும். 26 அந்தப் பெண்ணுக்கு ஒரு தீங்கும் செய்ய வேண்டாம். சாவுக்கு ஏதுவான பாவம் எதுவும் அவள் செய்யவில்லை. தனக்கு அடுத்திருப்பவனை ஒருவன் தாக்கி அவனைக் கொல்வது போலத்தான் இதுவும். 27 ஏனெனில், அவன் அவளை வயல்வெளியில் மேற்கொண்டான். மணமாகியும் கன்னிமை கழியாத அவள் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்ற எவரும் இல்லை. 28 மணமாகாத ஒரு கன்னிப் பெண்ணை ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தப்படுத்தி, அவளோடு உறவுகொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், 29 அப்பெண்ணின் தந்தைக்கு அவளோடு உறவு கொண்டவன் ஐம்பது வெள்ளிக்காசுகள் தரவேண்டும். அவன் அவளைக் கெடுத்துவிட்டதால் அவளை மனைவியாக்கிக்கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அவளை மணமுறிவு செய்யமுடியாது. 30 எவனும் தன் தந்தையின் மனைவியோடு கூடலாகாது; தன் தந்தையின் படுக்கையை இழிபுபடுத்தலாகாது. 22:1-4 விப 23:4-5. 22:9-11 லேவி 19:19. 22:12 எண் 15:37-41. 22:28-29 விப 22:16-17. 22:30 லேவி 18:8; 20:11; இச 27:20.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-22
175
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 23 – திருவிவிலியம்
ஆண்டவரின் மக்களிடமிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் 1 விதையடிக்கப்பட்டவனும் ஆண் குறி அறுக்கப்பட்டவனும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது. 2 வேசித்தனத்தால் பிறந்தவன், அவனது பத்தாம் தலைமுறை வரைக்கும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது. 3 அம்மோனியரும் மோவாபியரும், அவர்களது பத்தாம் தலைமுறைவரைக்கும், அவர்களைச் சார்ந்த எவரும் எக்காலத்திலும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையக்கூடாது. 4 ஏனெனில், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்வழியில் அவர்கள் அப்பங்களோடும் தண்ணீரோடும் உங்களை எதிர்கொள்ளவில்லை. அத்தோடு, ஆராம் நகராயிலுள்ள பெத்தோர் எனும் ஊரிலிருந்து பெகோரின் மகன் பிலயாமை உன்னைச் சபிக்கும்படி கூலிக்கு அமர்த்தினார்கள். 5 ஆயினும், உன் கடவுளாகிய ஆண்டவர் பிலயாமுக்குச் செவிகொடுக்கமனமின்றி, சாபத்தை உனக்கு ஆசியாக மாற்றினார். ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்மீது அன்புகூர்கிறார். 6 உன் வாழ்நாள் எல்லாம் நீ அவர்களது நல்லுறவையும் நலத்தையும் நாடாதே. 7 ஏதோமியனை வெறுக்காதே; ஏனெனில், அவன் உன் சகோதரன். எகிப்தியனை வெறுக்காதே; ஏனெனில், அவன் நாட்டில் நீ அந்நியனாய் வாழ்ந்தாய். 8 அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் மூன்றாம் தலைமுறை தொடங்கி ஆண்டவரின் திருப்பேரவைக்குள் வரலாம். பாளையத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளல் 9 நீ உன் பகைவருக்கு எதிராகச் சென்று பாளையம் இறங்கியிருக்கையில் எல்லாத் தீச்செயல்களிலிருந்தும் விலகியிரு. 10 உங்களில் ஒருவன் இரவில் நிகழ்ந்த செயலால் தீட்டுப்பட்டிருந்தால், அவன் பாளையத்திற்கு வெளியே செல்லட்டும். பாளையத்திற்குள்ளே வரக்கூடாது. 11 மாலையானதும் நீரில் குளித்து கதிரவன் மறைந்ததும் அவன் பாளையத்துக்குள் வரட்டும். 12 நீ வெளிக்குச் செல்வதற்கெனப் பாளையத்திற்கு வெளியே ஓர் இடம் இருக்கட்டும். 13 படைக்கலன்களோடு ஒரு மண்வெட்டியும் வைத்துக்கொள். நீ வெளிக்குச் செல்கையில் அதனால் ஒரு குழி தோண்டு. நீ கழித்ததை அதனால் மூடிவிட்டுத் திரும்பு. 14 ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைக் காக்கவும் உன் பகைவர்களை உன்னிடம் ஒப்படைக்கவும் பாளையத்துக்குள்ளே உலா வருகிறார். அவர் உன்னிடத்தில் கழிவைக்கண்டு உன்னைவிட்டு விலகாதவாறு உன் பாளையம் தூய்மையாய் இருக்கட்டும். பிற சட்டங்கள் 15 தம் தலைவனிடமிருந்து தப்பிவந்து உன்னிடம் அடைக்கலம் தேடியுள்ள அடிமைகளை அவனிடம் ஒப்படைக்காதே. 16 குடியிருப்பு ஒன்றில் தமக்குப் பிடித்தமானதைத் தேர்ந்து கொண்டு அவர்கள் உன்னோடு உன்னிடையே இருப்பாராக. நீ அவர்களைக் கொடுமைப்படுத்தாதே. 17 இஸ்ரயேலின் புதல்வியருள் எவளும் விலைமகளாய் இருத்தலாகாது. இஸ்ரயேலின் புதல்வர் எவனும் விலைமகனாய் இருத்தலாகாது. 18 விலைமாதின் வாடகையையோ, விலை மகளின் கூலியையோ எவ்வித நேர்ச்சையின் பொருட்டும் உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்திற்குள் கொண்டு வராதே. ஏனெனில், இவை இரண்டுமே அவருக்கு அருவருப்பானவை. 19 உன் இனத்தவனிடமிருந்து வட்டி வாங்காதே. பணத்துக்கோ, தானியத்துக்கோ, கடனாகக் கொடுத்த எந்தப் பொருளுக்கோ வட்டி வாங்காதே. 20 வேற்று இனத்தானிடமிருந்து நீ வட்டி வாங்கலாம். ஆனால், நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில், நீ மேற்கொள்ளும் செயல்களில் எல்லாம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கும் பொருட்டு உன் இனத்தானிடம் வட்டி வாங்காதே. 21 உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்திருந்தால், அதைச் செலுத்துவதற்குக் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், அது உனக்குப் பாவமாகும். உன் கடவுளாகிய ஆண்டவரும் அதை உன்னிடம் கேட்பார் என்பது உறுதி. 22 ஆனால், நேர்ச்சை செய்யாதிருந்தால் அது உனக்குப் பாவமாகாது. 23 உனது வாயால் வாக்களித்து, உன் சொந்த விருப்பத்தினால் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்வதால் உன்வாயால் சொல்வதைச் செயலில் காட்டக் கருத்தாயிரு. 24 உனக்கு அடுத்திருப்பவனின் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்றால், உன் விருப்பம்போல் திராட்சையை உண்ணலாம்; ஆனால், உன் கூடையில் எதையும் வைத்தலாகாது. 25 உனக்கு அடுத்திருப்பவனுடைய விளை நிலத்திற்குச் சென்றால், உன்கையால் கதிர்களைக் கொய்யலாம்; ஆனால், கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே. 23:3-5 நெகே 13:1-2. 23:4 எண் 22:1-6. 23:17 லேவி 19:29. 23:19-20 விப 22:25; லேவி 25:36-37; இச 15:7-11. 23:21 எண் 30:1-16; மத் 5:33.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-23
176
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 24 – திருவிவிலியம்
மணவிலக்கும் மறுமணமும் 1 ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான். 2 அவள் அவனது வீட்டைவிட்டு வெளியே சென்று வேறொருவனுக்கு மனைவி ஆகிறாள். 3 இரண்டாம் கணவனும் அவளை வெறுத்து, முறிவுச்சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான், அல்லது அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்ட இரண்டாம் கணவன் இறந்துவிடுகிறான். 4 இந்நிலையில், அவள் தீட்டுப்பட்டுவிட்ட காரணத்தால், அவளைத் தள்ளிவைத்த முதல் கணவன் அவளை மீண்டும் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெனில், அது ஆண்டவர் முன்னிலையில் வெறுப்பானதாகும். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டை நீ பாவத்துக்கு உள்ளாக்காதே! பிற சட்டங்கள் 5 ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம் செய்திருந்தால், அவன் போருக்குப் போக வேண்டாம். அவன்மீது யாதொரு பொறுப்பும் சுமத்தப்படலாகாது. அவன் ஓராண்டு காலம் எவ்வித இடையூறுமின்றித் தன்வீட்டில் இருந்துகொண்டு தன் மனைவியை மகிழ்விப்பான். 6 மாவரைக்கும் கல்லின் கீழ்க்கல்லையாவது மேற்கல்லையாவது அடகாக வாங்காதே. அது அவன் மனித உயிரை அடகாக வாங்குவது போலாகும். 7 இஸ்ரயேலின் மக்களாகிய தன் இனத்தாருள் ஒருவரைக் கடத்திக் கொண்டு போய் அவரை அடிமையாக நடத்துவதாக அல்லது விற்பதாக ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் கடத்தல்காரன் சாகட்டும். இவ்வாறு உன்னிடமிருந்து தீமையை அகற்று. 8 தொழுநோயைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. லேவிய குருக்கள் உனக்குக் கற்பிப்பதுபோல் அனைத்தையும் செய்வதில் மிகக் கவனமாயிரு. நான் அவர்களுக்குக் கட்டளையிட்டுள்ளவாறு செய்வதில் கருத்தாயிரு. 9 எகிப்திலிருந்து நீ புறப்பட்டு வரும் வழியில் உன் கடவுளாகிய ஆண்டவர் மிரியாமுக்குச் செய்ததை நினைவில் இருத்து. 10 உனக்கு அடுத்திருப்பவருக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அதற்கு அடகாக எதையும் வாங்க அவரது வீட்டினுள் நுழையாதே. 11 வெளியே நில். உன்னிடம் கடன் வாங்கியவர், வெளியே உன்னிடம் அடகைக் கொண்டுவரட்டும். 12 அவர் வறியவராயின், நீ அந்த அடகை வைத்துக்கொண்டு தூங்கச் செல்லாதே. 13 மாறாக, கதிரவன் மறைவதற்குள் அந்த அடகை அவரிடம் நீ திருப்பிக்கொடுத்தாக வேண்டும். அதனால், அவர் தம் மேலாடையை விரித்துப் படுக்கும்போது உனக்கு ஆசி வழங்குவார். உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீ ஏற்புடையவன் ஆவாய். 14 வறியவரும் எளியவருமான கூலியாள்கள், உன் இனத்தாராயினும் சரி அல்லது உன்நாட்டில் உன் நகர்வாயிலுக்குள் உள்ள அந்நியராயினும் சரி, அவரைக் கொடுமைப்படுத்தாதே. 15 அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்துவிடு. கதிரவன் மறையுமுன்னே கொடு. ஏனெனில், அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது. இல்லையெனில், உனக்கெதிராக ஆண்டவரை நோக்கி முறையிடுவார். அப்போது அது உனக்குப் பாவமாகும். 16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும். 17 அந்நியர் அல்லது அநாதைக்கு உரிய நீதியைப் புரட்டாதே. கைம்பெண்ணின் ஆடையை அடகாக வாங்காதே. 18 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை விடுவித்ததையும் நீ நினைவில் இருத்தி, இவற்றைச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். 19 உன் வயலில், விளைச்சல் அறுவடை செய்யும்போது, அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டு வந்தால், அதை எடுக்கத் திரும்பிப் போகாதே. அதை அந்நியருக்கும் அநாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. அப்போது நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். 20 நீ உன் ஒலிவ மரத்தை அடித்து உதிர்க்கும்போது, உதிராததைப் பறிக்காதே. அதை அந்நியருக்கும் அநாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. 21 நீ உன் திராட்சைத் தோட்டக் கனிகளைச் சேகரித்தபின், பொறுக்காமல் கிடப்பதை எடுக்கச் செல்லாதே. அதை அந்நியருக்கும் அநாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. 22 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததை நினைவிலிருத்தி, இவற்றைச் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். 24:1 மத் 5:31; 19:7; மாற் 10:4. 24:7 விப 21:16. 24:8 லேவி 13:1-14:54. 24:9 எண் 12:10. 24:10-13 விப 22:26-27. 24:14-15 லேவி 19:13. 24:16 2 அர 14:6; 2 குறி 25:4; எசே 18:20. 24:17-18 விப 23:9; லேவி 19:33-34; இச 27:19. 24:19-21 லேவி 19:9-10; 23:22.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-24
177
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 25 – திருவிவிலியம்
1 மனிதரிடையே வழக்கு ஏற்பட்டு அவர்கள் நீதிமன்றத்தை நாடும்பொழுது, நீதிபதிகள் நேர்மையாளரை நேர்மையாளர் என்றும், குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்ப்பிடுவர். 2 குற்றவாளி அடிபட வேண்டியவனென்றால், நீதிபதி அவனைப் படுக்கச்செய்து தம் முன்னிலையில் அடிக்கச் செய்வார். அவனது குற்றத்திற்கு ஏற்ப அடிகளின் எண்ணிக்கையும் இருக்கும். 3 அவனுக்கு நாற்பது அடிகள் கொடுக்கலாம்; அதற்குமேல் வேண்டாம். அதற்குமேல் அடித்தால் உன் கண்களுக்கு முன்பாக உன் இனத்தான் மானமிழந்தவன் ஆவான். 4 போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே. இறந்த சகோதரனுக்குச் செய்ய வேண்டிய கடமை 5 உடன்பிறந்தோர் சேர்ந்து வாழ்கையில், அவர்களில் ஒருவன் மகப்பேறின்றி இறந்துபோனால், இறந்தவனின் மனைவி குடும்பத்திற்கு வெளியே அந்நியனுக்கு மனைவியாக வேண்டாம். அவள் கொழுந்தனே அவளைத் தன் மனைவியாக ஏற்று, அவளோடு கூடிவாழ்ந்து, கணவனின் உடன்பிறந்தோன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்யட்டும். 6 அவளுக்குப் பிறக்கும் ஆண் தலைப்பேறு இறந்துபோன சகோதரனின் பெயரிலேயே வளரட்டும். இதனால் அவன் பெயர் இஸ்ரயேலிலிருந்து அற்றுப்போகாது. 7 இறந்தவனின் உடன்பிறந்தான் தன் அண்ணியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில், அவள் நகர்வாயிலில் உள்ள தலைவர்களிடம் சென்று, ‘தன் அண்ணன் பெயரை இஸ்ரயேலில் நிலைநிறுத்தும்படி ஒரு கணவனின் தம்பிக்குரிய கடமையை எனக்குச் செய்ய என் கொழுந்தனுக்கு விருப்பமில்லை’ என்று கூறுவாள். 8 அப்போது நகர்த் தலைவர்கள் அவனைக் கூப்பிட்டு அவனோடு பேசுவர். அவனோ விடாப்படியாக ‘அவளை ஏற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினால் 9 அவன் அண்ணி அவனை அணுகி, தலைவர்களின் கண்முன்பாக, அவன் காலிலுள்ள மிதியடிகளைக் கழற்றி, அவன் முகத்தில் துப்பி, ‘தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படும்’ என்று கூறுவாள். 10 இஸ்ரயேலில் அவனது பெயர் ‘மிதியடிகழற்றப்பட்டவனின் வீடு’ என்றழைக்கப்படும். பிற சட்டங்கள் 11 ஆண்கள் ஒருவரோடொருவர் சண்டையிடுகையில், ஒருவனுடைய மனைவி, தன் கணவனை, அவனை அடிப்பவனின் கையிலிருந்து விடுவிப்பதற்காக வந்து, கையை நீட்டி, மற்றவனது ஆண்குறியைப் பிடிப்பாளாகில், 12 அவளுடைய கையைத் துண்டிப்பாய். அவளுக்கு இரக்கம் காட்டாதே. 13 பெரியதும் சிறியதுமான ஏமாற்று எடைக்கற்களை உன் பையில் வைத்திருக்காதே. 14 பெரியதும் சிறியதுமான ஏமாற்று முகத்தல் அளவைகளை உன் வீட்டில் வைத்திருக்காதே. 15 நிறைவான நேர்மையான எடைக்கற்கள் உன்னிடம் இருக்கட்டும். நிறைவான நேர்மையான முகத்தல் அளவைகள் உன்னிடம் இருக்கட்டும். அதனால், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் உன் நாள்கள் நீடித்திருக்கும்; நீ நெடுநாள் வாழ்வாய்; 16 மாறாக, மேற்குறிப்பிட்டவற்றில் நேர்மையற்று நடப்போர் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவர். அமலேக்கியரைக் கொல்வதற்கான கட்டளை 17 நீ எகிப்திலிருந்து புறப்பட்டு வருகையில் அமலேக்கு உனக்குச் செய்ததை நினைவில் இருத்து. 18 நீ களைத்துச் சோர்ந்திருக்கையில் வழியிலே அவன் உன்னை எதிர்த்து, உன் பின்னால் வலுவற்றவர்களை வெட்டி வீழ்த்தினான். ஏனெனில், அவன் கடவுளுக்கு அஞ்சவில்லை. 19 ஆகவே, உன் கடவுளாகிய ஆண்டவர், உனது உரிமைச் சொத்தாக உடைமையாக்கிக் கொள்ளுமாறு உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டைச் சுற்றியுள்ள பகைவர் அனைவரையும் உனக்குக் கீழ்ப்படுத்தி, உனக்கு ஓய்வு தரும்போது, அமலேக்கின் நினைவு வானத்தின் கீழ் இல்லாதவாறு அழிக்க வேண்டும். இதை மறந்துவிடாதே! 25:3 2 கொரி 11:24. 25:4 1 கொரி 9:9; 1 திமோ 5:18. 25:5-6 மத் 22:24; மாற் 12:19; லூக் 20:28. 25:7-10 ரூத் 7:4-8. 25:13-16 லேவி 19:35-36. 25:17-19 விப 17:8-14; 1 சாமு 15:2-9.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-25
178
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 26 – திருவிவிலியம்
அறுவடைக் காணிக்கைகள் 1 உனது உரிமைச்சொத்தாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குள் சென்று, அதை உன் உடைமையாக்கி, அதில் நீ குடியேறும்போது, 2 அந்த நாட்டின் நிலத்து முதற்பலன் அனைத்தையும் எடுத்துக்கூடையில் வைத்து, உன் கடவுளாகிய ஆண்டவர் தம் பெயர் விளங்குமாறு தேர்ந்து கொள்ளும் இடத்திற்குக் கொண்டுபோ. 3 அன்றைய நாளில் அங்கு பணியில் இருக்கும் குருவிடம் சென்று அவரை நோக்கி, ‘எங்களுக்குக் கொடுப்பதாக எங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் வந்து சேர்ந்துள்ளேன் என எம் கடவுளாகிய ஆண்டவர்முன் இன்று அறிக்கையிடுகிறேன்’ என்று சொல். 4 அப்போது, குரு அந்தக் கூடையை உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார். 5 நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: ‘நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அந்நியராய் இருந்தார். ஆனால், அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார். 6 எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். 7 அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார். 8 தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். 9 அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார். 10 எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன்’ என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய். 11 பின்னர், நீயும் லேவியரும், உன்னோடு உள்ள அந்நியரும், கடவுளாகிய ஆண்டவர் உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த அனைத்து நன்மைகளை முன்னிட்டு அக்களியுங்கள். 12 பத்திலொரு பகுதி செலுத்தும் ஆண்டாகிய மூன்றாம் ஆண்டில், அவ்வாண்டின் விளைச்சலில் பத்திலொரு பாகத்தை, லேவியருக்கும், அந்நியருக்கும், அநாதைக்கும் கைம்பெண்ணுக்கும் கொடு. அதனால் அவர்கள் உன் வாயில்களுக்குள்ளே உண்டு நிறைவு அடைவர். 13 அதன்பின், நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிவிக்க வேண்டியது: நீர் எனக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி, தூய பகுதியை என் வீட்டிலிருந்து எடுத்து அவற்றை லேவியருக்கும், அந்நியருக்கும், அநாதைக்கும், கைம்பெண்ணுக்கும் கொடுத்துள்ளேன். உம் கட்டளைகளை நான் மீறவில்லை, அவைகளை நான் மறக்கவுமில்லை. 14 எனது துயர நாளில் அதிலிருந்து உண்டதுமில்லை; தீட்டான போது அதிலிருந்து எடுக்கவுமில்லை; இழவுக்காக அதிலிருந்து கொடுக்கவும் இல்லை. என் கடவுளாகிய ஆண்டவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, நீர் எனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்துள்ளேன். 15 நீர் உமது தூய உறைவிடமாகிய விண்ணிலிருந்து கண்ணோக்கி, நீர் எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கூறியபடி உம் மக்களாகிய எங்களுக்கும் எங்களுக்குக் கொடுத்துள்ள பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்கும் ஆசிவழங்குவீராக’. ஆண்டவரின் சொந்த மக்கள் 16 இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு. 17 ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும் உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும், கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச் செவி கொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய். 18 நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், 19 அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார். 26:2 விப 23:19. 26:12 இச 14:28-29. 26:18 விப 19:5; இச 4:20; 7:6; 14:2; தீத் 2:14; 1 பேது 2:9.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-26
179
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 27 – திருவிவிலியம்
கடவுளின் கட்டளைகள் கற்களில் எழுதப்படல் 1 மோசே இஸ்ரயேலின் தலைவர்களோடு சேர்ந்து மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: ‘இன்று நான் உங்களுக்கு விதிக்கும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள். 2 நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நுழையும் நாளில், பெரிய கற்களை நாட்டி, அவற்றின்மேல் சாந்து பூசுங்கள். 3 உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தது போல், உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்குள் நீங்கள் நுழையுமாறு கடந்து சென்றதும், அக்கற்களின் மீது திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் எழுதிவையுங்கள். 4 நீங்கள் யோர்தானைக் கடந்து சென்றதும், நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டது போல, இத்தகைய கற்களை ஏபால் மலைமீது நாட்டி, அவற்றின் மீது சாந்து பூசுங்கள். 5 அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குக் கற்களாலான ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். அவற்றின்மீது இரும்புக்கருவிபடவேண்டாம். 6 கற்களால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிபீடம் கட்டுங்கள். அதன்மேல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலிகளைச் செலுத்துங்கள். 7 நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அங்கேயே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உணவருந்தி மகிழ்ச்சி கொள்ளுங்கள். 8 மேலும், அக்கற்களின்மீது இத்திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் மிகத் தெளிவாக எழுதிவையுங்கள். 9 பின்னர், மோசே லேவியக் குருக்களோடு சேர்ந்து இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் சொன்னதாவது: ‘இஸ்ரயேலே, கவனமாகக் கேள். நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவரின் மக்களினம் ஆகியுள்ளாய். 10 எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நிறைவேற்று’. கீழ்ப்படியாமைக்குச் சாபங்கள் 11 மோசே அன்று மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: 12 நீங்கள் யோர்தானைக் கடந்தபின், மக்களுக்கு ஆசிவழங்குமாறு, சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமின் ஆகியோர் கெரிசிம் மலைமீது நிற்கட்டும். 13 மக்களுக்குச் சாபம் வழங்குமாறு, ரூபன், காத்து, ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோர் ஏபால் மலைமீது நிற்கட்டும். 14 லேவியர் இஸ்ரயேலர் அனைவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியது: 15 ‘ஆண்டவருக்கு அருவருப்பானதும், சிற்பியின் கைவினைப் பொருள்களுமான வார்ப்புச் சிலையையோ செதுக்குச் சிலையையோ செய்து அதை மறைவான இடத்தில் வைப்பவர் சபிக்கப்படட்டும்’. உடனே மக்கள் அனைவரும் பதில் மொழியாக ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். 16 ‘தம் தந்தையையோ தாயையோ பழிக்கிறவர் சபிக்கப்படட்டும். உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். 17 ‘தமக்கு அடுத்திருப்பவரின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்துபவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். 18 ‘பார்வையற்றவரை வழிதவறச் செய்பவர் சபிக்கப்படட்டும்’. உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். 19 ‘அந்நியருக்கும், அநாதைக்கும், கைம்பெண்ணுக்கும் உரிய நீதியைப் புரட்டுபவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். 20 ‘தன் தந்தையின் மனைவியோடு கூடுகிறவன் தன் தந்தைக்கு உரியவளின் உடையைத் திறந்ததனால் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். 21 ‘எந்தவொரு விலங்கோடும் புணர்கிறவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். 22 ‘தன் தந்தையின் புதல்வி அல்லது தன் தாயின் புதல்வியாகிய தன் சகோதரியுடன் கூடுகிறவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். 23 ‘தன் மனைவியின் தாயோடு கூடுபவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். 24 ‘தமக்கு அடுத்திருப்பவரை ஒளிந்திருந்து கொல்பவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். 25 ‘குற்றமற்றவரைக் கொல்வதற்காகக் கையூட்டு வாங்குபவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். 26 ‘இத்திருச் சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். 27:2-8 யோசு 8:30-32. 27:5-6 விப 20:25. 27:12 இச 11:29; யோசு 8:33-35. 27:15 விப 20:4; 34:17; லேவி 19:4; 26:1; இச 4:15-18; 5:8. 27:16 விப 20:12; இச 5:16. 27:17 இச 19:4; 27:18; லேவி 19:14. 27:19 விப 22:21; 23:9; லேவி 19:33-34; இச 24:17-18; 27:20; லேவி 18:8; 20:11; இச 22:30. 27:21 விப 22:19; லேவி 18:23; 20:15. 27:22 லேவி 18:9; 20:17. 27:23 லேவி 18:17; 20:14. 27:26 கலா 3:10.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-27
180
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 28 – திருவிவிலியம்
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள் (லேவி 26:3-13; இச 7:12-24) 1 உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிக்கொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார். 2 உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும். 3 நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய்; வயல் வெளியிலும் ஆசிபெற்றிடுவாய். 4 உன் கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும் உன் கால்நடைகளின் ஈற்றுகளும், உன் மாடுகளின் கன்றுகளும் உன் ஆடுகளின் குட்டிகளும் ஆசி பெற்றிடும். 5 உன் கூடையும் உன் மாவுபிசையும் தொட்டியும் ஆசி பெற்றிடும். 6 நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய். 7 உனக்கு எதிராக எழும் உன் பகைவர்கள் உனக்குமுன் முறியடிக்கப்படும்படி ஆண்டவர் அவர்களை உன்னிடம் ஒப்படைப்பார். அவர்கள் ஒருவழியாய் உனக்கு எதிராக வருவர்; ஆனால், ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன்னே ஓடிப்போவர். 8 உன் களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையிடுவார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீ ஆசி பெற்றிடுவாய். 9 உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவர்தம் வழிகளில் நடந்தால், அவர் உனக்கு ஆணையிட்டுச் சொன்னபடி, உன்னைத் தம் தூய மக்களினமாக நிலைநிறுத்துவார். 10 அப்போது, பூவுலகில் மக்களினத்தார் அனைவரும், ஆண்டவர் தம் பெயரை உனக்கு வழங்கி இருக்கிறார் எனக்கண்டு உனக்கு அஞ்சுவர். 11 உனக்குக் கொடுப்பதாக, உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில், உன் கருவின் கனி உன் கால் நடைகளின் ஈற்றுகள், உன் நிலத்தின் பயன்கள் ஆகியவற்றில் நலன்களால் நீ நிறைவு பெறும்படி ஆண்டவர் அருள்வார். 12 தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார். நீ பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய்; நீயோ கடன் வாங்கமாட்டாய். 13 இன்று நான் உனக்கு விதிக்கும் உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி, கடையனாக ஆக்கமாட்டார். நீ உயர்வாயேயன்றித் தாழ்ந்து போகமாட்டாய். 14 எனவே, நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எதிலிருந்தும் விலகாதே. வலமோ இடமோ விலகி நடக்காதே, வேற்றுத் தெய்வங்களின் பின்சென்று அவற்றுக்கு ஊழியம் செய்யாதே. கீழ்ப்படியாமையின் பின் விளைவுகள் (லேவி 26:14-46) 15 ஆனால், உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாமலும், இன்று நான் உனக்கு விதிக்கும் இந்தக் கட்டளைகளையும், நியமங்களையும் கடைப்பிடிப்பதில் கருத்தின்றியும் இருந்தால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும். 16 நீ நகரிலும் சபிக்கப்படுவாய், வயல்வெளியிலும் சபிக்கப்படுவாய். 17 உன் கூடையும் உன் மாவு பிசையும் தொட்டியும் சபிக்கப்படும். 18 உன் கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும், உன் மாடுகளின் கன்றுகளும், உன் ஆடுகளின் குட்டிகளும் சபிக்கப்படும். 19 நீ வருகையிலும் சபிக்கப்படுவாய், செல்கையிலும் சபிக்கப்படுவாய். 20 நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும், நீ கெட்டு விரைவில் அழியுமட்டும், ஆண்டவர் உன்மீது சாபமும், குழப்பமும் பேரழிவுமே வரச்செய்வார். ஏனெனில், உன் பொல்லாத செயல்களினால் என்னைவிட்டு விலகிவிட்டாய். 21 நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலிருந்து, ஆண்டவர் உன்னை அழிக்குமட்டும், கொள்ளை நோய் உன்னைவிடாது தொற்றிக்கொள்ளச் செய்வார். 22 உருக்கு நோய், காய்ச்சல், கொப்புளம், எரிவெப்பம், வாள், இடி, நச்சுப்பனி ஆகியவற்றால் ஆண்டவர் உன்னை வதைப்பார். நீ அழியுமட்டும் அவை உன்னை வாட்டும். 23 உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமாகவும் உனக்குக் கீழேயுள்ள நிலம் இரும்பாகவும் இருக்கும். 24 ஆண்டவர் புழுதியையும் தூசியையும் உன் நாட்டின் மழையாகப் பொழியச் செய்வார். நீ அழியுமட்டும் அவை வானத்திலிருந்து உன்மேல் விழும். 25 உன் பகைவர்களுக்கு முன்னால் நீ முறியடிக்கப்படுமாறு ஆண்டவர் உன்னை விட்டுவிடுவார். ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த நீ ஏழு வழியாய் அவர்கள் கண்களுக்கு முன்னே ஓடிப்போவாய். உனக்கு நேர்வதைக்கண்டு பூவுலகின் எல்லா நாடுகளும் பேரச்சம் கொள்ளும். 26 உன் பிணம் வானத்துப் பறவைகள் அனைத்திற்கும் நிலத்தின் விலங்குகளுக்கும் இரையாகும். அவற்றை விரட்டியடிப்பார் எவரும் இரார். 27 எகிப்தின் கொப்புளங்களாலும், மூல நோயாலும், சொறியினாலும், சிரங்கினாலும், ஆண்டவர் உன்னை வதைப்பார். அவற்றிலிருந்து நீ நலம் பெற முடியாது. 28 மூளைக்கோளாறினாலும், பார்வையிழப்பாலும், மனக் குழப்பத்தாலும் ஆண்டவர் உன்னை வதைப்பார். 29 பார்வையற்றோன், இருளில் தடவித்திரிவது போல் நீ பட்டப்பகலில் தடவித்திரிவாய். உன் முயற்சிகளில் நீ வெற்றிபெறமாட்டாய். நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறி கொடுக்கிறவனுமாய் இருப்பாய். உன்னை விடுவிக்க எவரும் இரார். 30 நீ ஒரு பெண்ணை மணமுடிப்பாய்; வேறு ஒருவன் அவளோடு கூடி வாழ்வான். நீ ஒரு வீட்டைக்கட்டுவாய்; ஆனால், அதில் நீ குடியிருக்க மாட்டாய். நீ திராட்சைத் தோட்டத்தை அமைப்பாய்; ஆனால், அதன் பயனை அனுபவிக்கமாட்டாய். 31 உன் மாடு உன் கண்களுக்கு முன்னால் வெட்டப்படும்; ஆனால், அதிலிருந்து நீ உண்ண முடியாது. உன் கழுதை உன் கண்களுக்கு முன்னால் கொள்ளையிடப்படும்; அது உன்னிடம் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது. உன் ஆடுகள் உன் பகைவனுக்குக் கொடுக்கப்படும். அவற்றை விடுவிப்பார் எவரும் இரார். 32 உன் கண்முன்னே, உன் புதல்வரும் புதல்வியரும் வேற்று மக்களுக்குக் கொடுக்கப்படுவர். அவர்களைப் பார்க்க நாள்தோறும் உன் கண்கள் ஏங்கி எதிர்பார்த்துப் பூத்துப்போகும். உன் கைகளும் வலிமையற்றுப்போகும். 33 நீ அறியாத மக்களினம் உன் நிலத்தின் கனிகளையும் உன் உழைப்பின் பயனையும் உண்ணும். நீயோ எந்நாளும் ஒடுக்கப்பட்டவனும் நொறுக்கப்பட்டவனுமாய் இருப்பாய். 34 உன்கண்கள் காணும் இக்காட்சிகளால் உனக்குப் பைத்தியம் பிடிக்கும். 35 முழங்கால்களிலும் தொடைகளிலும் தோன்றும், குணப்படுத்தவே முடியாத, கொடிய கொப்புளங்களால் ஆண்டவர் உன்னை வதைப்பார். உன் உள்ளங்கால்முதல் உச்சந்தலைவரை அது பரவும். 36 உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திய அரசனையும், உனக்கும், உன் மூதாதையருக்கும் தெரியாத இனத்தாரிடம் ஆண்டவர் போகச் செய்வார். அங்கு மரத்தாலும் கல்லாலுமான வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய். 37 ஆண்டவர் உன்னைக் கொண்டுபோய்விடும் அனைத்து மக்கள் நடுவிலும், நீ அருவருப்புப் பொருளாக, கேலிப் பழமொழியாக, நகைப்புச் சொல்லாக ஆகிவிடுவாய். 38 வயலில் மிகுதியாக விதைத்துக் கொஞ்சமே அறுப்பாய்; ஏனெனில், வெட்டுக் கிளிகள் அதைத்தின்று அழித்துவிடும். 39 திராட்சைத் தோட்டங்களை அமைத்துப் பேணுவாய்; ஆயினும், இரசம் குடிக்கவும் மாட்டாய்; பழங்களைச் சேகரிக்கவும் மாட்டாய்; ஏனெனில், புழுக்கள் அவற்றைத் தின்றழிக்கும். 40 ஒலிவ மரங்கள் உனக்குரிய நிலமெங்கும் இருக்கும்; ஆனால், நீ எண்ணெய் தேய்க்க மாட்டாய். ஏனெனில், உன் ஒலிவம்பிஞ்சுகள் உதிர்ந்துவிடும். 41 நீ புதல்வரையும் புதல்வியரையும் பெற்றெடுப்பாய்; ஆயினும், அவர்கள் உனக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் அடிமைகளாக கொண்டு போகப்படுவர். 42 உன் மரங்கள் எல்லாவற்றையும், உன் நிலத்தின் பயனையும் வெட்டுக்கிளி உடைமையாக்கிக் கொள்ளும். 43 உன்னிடையே வாழும் அந்நியர் உன்னைவிட மேம்பட்டு மேலும் மேலும் உயர்வர்; நீயோ படிப்படியாகத் தாழ்ந்து போவாய். 44 உனக்கு கடன் கொடுக்க அவர்களால் முடியும். அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னால் இயலாது. அவர்கள் முதல்வராய் இருக்க நீ கடையன் ஆவாய். 45 இந்தச் சாபங்கள் அனைத்தும் உன்னைத் துரத்திவந்து பிடித்து, நீ அழியுமட்டும் உன்னை வதைக்கும். ஏனெனில், நான் உனக்குக் கட்டளையிட்ட அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீ கடைப்பிடிக்கவில்லை; உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவுமில்லை. 46 இச்சாபங்கள் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் அடையாளமாகவும் வியத்தகு செயலாகவும் என்றும் இருக்கும். 47 எல்லா நலன்களும் நிறைந்திருக்கையில் நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு மன மகிழ்வோடும் இதயக்களிப்போடும் ஊழியம் செய்யவில்லை. 48 எனவே, பசியோடும், தாகத்தோடும், வெற்றுடம்போடும் யாதுமற்ற நிலையிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கெதிராக அனுப்பும் உன் பகைவர்களுக்கு நீ பணிவிடை செய்வாய். அவர்கள் உன்னை அழித்தொழிக்கும் மட்டும் இரும்பு நுகத்தடியை உன் கழுத்தில் வைப்பர். 49 வெகு தொலையிலிருந்து, பூவுலகின் கடைக்கோடியிலிருந்து, ஓர் இனத்தை ஆண்டவர் உனக்கு எதிராக எழச்செய்வார். அது கழுகைப்போல மிக வேகமாக வரும். அந்த இனத்தின் மொழி உனக்குப் புரியாது. 50 அந்த இனம் கொடிய முகம் கொண்டது; முதியவர்களை மதிக்காது; இளைஞர்களுக்கு இரக்கம் காட்டாது. 51 நீ அழிந்து போகும்வரை அந்த இனம் உன் கால்நடைகளின் ஈற்றுகளையும் உன் நிலத்தின் பயனையும் உண்ணும். உன்னை அழிக்கும்வரை, உன் தானியத்தையும், இரசத்தையும், எண்ணெயையும், உன் மாடுகளின் கன்றுகளையும், உன் ஆடுகளின் குட்டிகளையும் அந்த இனம்விட்டு வைக்காது. 52 உனது நாடெங்கும், நீ நம்பியிருக்கும் உயர்ந்தவையும், அரண்சூழ் கொத்தளங்கள் கொண்டவையுமான மதிற்சுவர்கள் விழும்வரை, அந்த இனம் உன் நகர் வாயில்களையெல்லாம் முற்றுகையிடும். ஆம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த நாடெங்கிலுமுள்ள உன் நகர் வாயில்களை முற்றுகை இடும். 53 உன் பகைவன் முற்றுகையிட்டு உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்துள்ள உன் கருவின் கனிகளான உன் புதல்வர், புதல்வியரின் சதையைக்கூட உண்பாய். 54-55 உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவன், இனி எதுவுமே இல்லாததால், தான் உண்ணும் தன் பிள்ளையின் சதையைத் தன் சகோதரனுக்கோ, தன் அன்பு மனைவிக்கோ, எஞ்சியுள்ள தன் பிள்ளைகளுக்கோ கொடுக்கமாட்டான்; உணவின் பொருட்டு அவர்களை வெறுப்பான். 56-57 உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவள், தன் உள்ளங்காலைத் தரையில் நன்றாக ஊன்றி நடக்காத அளவு இனிமையும் மென்மையும் மிக்கவள், இனி எதுவுமே இல்லாததால், குழந்தை பிறந்த உடனே தன் குழந்தையையும் அதனோடு வருகின்ற கழிவுகளையும் மறைவாக உண்பாள்; எவருக்கும் கொடுக்க மாட்டாள். உணவின் பொருட்டுத் தன் இனிய கணவனையும், தன் புதல்வர் புதல்வியரையும் வெறுப்பாள். 58 ‘உன் கடவுளாகிய ஆண்டவர்’ என்னும் மாட்சிமிகு, அச்சந்தரும் இந்தத் திருப்பெயருக்கு அஞ்சும்படி, இந்நூலில் எழுதியுள்ள திருச்சட்டத்தின் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. 59 இல்லையெனில், உன்மீதும் உன் வழிமரபினர்மீதும் விவரிக்க இயலாத வாதைகளை, கொடிய, நீங்கா வாதைகளை, கடின, நீங்கா நோய்களை ஆண்டவர் வரச்செய்வார். 60 மேலும், நீ கண்டு அஞ்சிய, அனைத்து எகிப்திய கொள்ளை நோய்களையெல்லாம் உன்மீது வரச் செய்வார். அவை உன்னைத் தொற்றிக்கொள்ளும். 61 இந்த திருச்சட்ட நூலில் எழுதப்படாத எல்லா நோய்களையும் வாதைகளையும் நீ அழிந்து போகும்வரை ஆண்டவர் உன்மீது வரச்செய்வார். 62 எண்ணிக்கையில் வானத்து விண்மீன்களைப் போன்று இருந்த உங்களுள் மிகச் சிலரே எஞ்சியிருப்பீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் செவிகொடுக்கவில்லை. 63 உங்களுக்கு நன்மைகள் செய்து உங்களைப் பெருகச் செய்வதில் மகிழ்ந்த ஆண்டவர், உங்கள்மேல் அழிவைக் கொணர்ந்து உங்களை வேரறுப்பதில் மகிழ்வார். நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிலிருந்து நீங்கள் பிடுங்கி எறியப்படுவீர்கள். 64 உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உள்ள எல்லா மக்களினங்களிடையிலும் ஆண்டவர் உன்னைச் சிதறடிப்பார். அங்கு, நீயும் உன் மூதாதையரும் அழியாத, மரத்தாலும் கல்லாலும் ஆன வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய். 65 அந்த மக்களினங்களிடையே உனக்கு ஓய்வு இராது; உன் உள்ளங்கால்கள் தங்கி இளைப்பாற இடம் இராது. அங்கே ஆண்டவர் நடுநடுங்கும் இதயத்தையும், பஞ்சடைந்த கண்களையும், தளர்வுற்ற மனத்தையும் உனக்குக் கொடுப்பார். 66 உன் உயிர் உனக்குக் கேள்விக் குறியாகும். உன் வாழ்வுமீது நம்பிக்கையிழந்து இரவும் பகலும் அச்சத்தோடு வாழ்வாய். 67 உன் கண்களால் காணும் காட்சிகளால் உன் இதயம் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், காலையானதும், ‘இது மாலையாக இருக்கக் கூடாதா?’ என்பாய்; மாலையானதும், ‘இது காலையாக இருக்கக்கூடாதா?’ என்பாய். 68 நீங்கள் இனி ஒரு நாளும் மீண்டும் மேற்கொள்ள மாட்டீர்கள் என எந்தப் பயணத்தைப்பற்றி நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேனோ, அந்தப் பயணத்தைக் கப்பல்களில் மேற்கொண்டு நீங்கள் எகிப்துக்குத் திரும்பிச் செல்லுமாறு ஆண்டவர் செய்வார். அங்கே உங்களை நீங்களே அடிமைகளாக, ஆண், பெண் அடிமைகளாக, உங்கள் பகைவர்களுக்கு விற்க முயல்வீர்கள்; ஆனால் உங்களை எவரும் விலைக்கு வாங்கமாட்டார். 28:1-4 இச 11:13-17. 28:57 2 அர 6:28-29; புல 4:10.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-28
181
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 29 – திருவிவிலியம்
மோவாபு நாட்டில் ஆண்டவர் இஸ்ரயேலுடன் செய்துகொண்ட உடன்படிக்கை 1 ஓரேபில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மேவாபு நாட்டில் அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு மோசேக்குக் கட்டளையிட்டு உரைத்த வார்த்தைகள் பின்வருமாறு: 2 மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியது: எகிப்து நாட்டில் பார்வோனுக்கும், அவன் அலுவலர் அனைவருக்கும், அவன் நாடு முழுமைக்கும் உங்கள் கண்முன்பாக ஆண்டவர் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள். 3 கொடிய சோதனைகளையும், அடையாளங்களையும், அருஞ்செயல்களையும், வியத்தகு செயல்களையும் அங்கே உங்கள் கண்களால் கண்டீர்கள். 4 ஆயினும், புரிந்துகொள்ளும் உள்ளத்தையும், காண்கின்ற கண்களையும், கேட்கின்ற செவிகளையும் இந்நாள் வரை ஆண்டவர் உங்களுக்குத் தரவில்லை. 5-6 ‘நாற்பது ஆண்டுகள் நான் உங்களைப் பாலைநிலத்தில் கூட்டிவந்தேன். அப்பொழுது உங்கள் மேலுள்ள ஆடைகள் நைந்து போகவில்லை; உங்கள் காலிலுள்ள காலணிகள் பழுதடைந்து போகவுமில்லை. நீங்கள் அப்பம் உண்ணவோ, இரசம் குடிக்கவோ, மதுபானம் அருந்தவோ இல்லை. இதனால், நானே கடவுளாகிய ஆண்டவர் என்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.’ 7 நீங்கள் இந்த இடத்திற்கு வந்தபோது எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் நமக்கு எதிராகப் போர்புரிய வந்தனர். நாம் அவர்களை முறியடித்தோம். 8 அவர்களது நாட்டைப் பிடித்து, ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் குலத்தாருக்கும் உரிமைச் சொத்தாகக் கொடுத்தோம். 9 எனவே, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். 10 இன்று நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றீர்கள். உங்கள் குலங்களின் தலைவர்களும், உங்கள் பெரியோர்களும், உங்கள் அலுவலர்களும், இஸ்ரயேலின் ஆடவர் ஏனையோரும். 11 உங்கள் சிறுவரும், உங்கள் மனைவியரும், உங்கள் பாளையத்தில் உங்களோடு உள்ள அந்நியராகிய விறகு வெட்டிகளும், தண்ணீர் சுமப்பவர்களும் ஆகிய எல்லோரும் நிற்கின்றீர்கள். 12 ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு ஆகிய உங்கள் மூதாதையருக்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னது போலவும், அவர் உங்களுக்கு வாக்களித்தது போலவும், அவர் இன்று உங்களைத் தம் சொந்த மக்களாக நிலைநிறுத்தி உங்கள் கடவுளாக இருக்குமாறும், 13 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இன்று உங்களோடு செய்யப்போகின்ற அவர்தம் உடன்படிக்கையிலும் வாக்குறுதியிலும் பங்கு கொள்ளுமாறும் நீங்கள் நிற்கின்றீர்கள். 14 வாக்குறுதியுடன் கூடிய இந்த உடன்படிக்கையை உங்களோடு மட்டும் அவர் செய்து கொள்ளவில்லை. 15 மாறாக, இங்கு நம்மோடு நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றவர்களோடும், இன்று இங்கு நம்மோடு இல்லதாவர்களோடும் செய்துகொள்கிறார். 16 எகிப்து நாட்டில் நாம் எவ்வாறு குடியிருந்தோம் என்பதையும் வேற்றினங்களிடையே நாம் எவ்வாறு கடந்து வந்தோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். 17 அவர்களின் அருவருப்புகளை, மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும் பொன்னாலுமான அவர்களின் தெய்வச் சிலைகளை நீங்கள் பார்த்தீர்கள். 18 அந்த வேற்றினங்களின் தெய்வங்களுக்குப் பணிபுரியுமாறு நம் கடவுளாகிய ஆண்டவரைவிட்டு விலகிச் செல்லும் மனமுள்ள ஆணோ, பெண்ணோ, குடும்பமோ, குலமோ உங்களிடையே இன்று இல்லாதிருக்கட்டும். நச்சுத்தன்மையும் கறையான் அரிப்பும் கொண்ட வேரைப் போன்ற எவரும் உங்களிடையே இல்லாதிருக்கட்டும். 19 அத்தகையோர் இந்த வாக்குறுதியின் வார்த்தைகளைக் கேட்ட பின்பும், ‘நாங்கள் இதயப்பிடிவாதத்தோடு நடந்தாலும், எங்களுக்கு எல்லாம் நலமாகும்’ என்று சொல்லித் தங்களையே தேற்றிக் கொள்வார்களாகில், பசுமையானதும் உலர்ந்ததும் சேர்ந்தழியும். 20 ஆண்டவர் அவர்களுக்கு இரக்கம் காட்டமாட்டார். மாறாக, ஆண்டவரின் சினமும் சகிப்பின்மையும் அவர்கள் மீது கனன்றெரியும். இந்த நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தும் அவர்கள்மேல் விழும். ஆண்டவர் அவர்களது பெயரை மண்ணுலகினின்று துடைத்து விடுவார். 21 இந்த திருச்சட்ட நூலில் எழுதியுள்ள உடன்படிக்கையின் சாபங்களுக்கு ஏற்ப, ஆண்டவர் அத்தகையோரை இஸ்ரயேலின் குலங்கள் அனைத்தினின்றும் பிரித்தெடுத்துத் தீமைக்கு உள்ளாக்குவார். 22 அப்பொழுது, உங்களுக்குப் பின்வரும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், நெடுந்தொலை நாட்டிலிருந்து வரும் அந்நியரும், ஆண்டவர் இந்த நாட்டின்மேல் வரச்செய்த வாதைகளையும், நோய்களையும் காணும்போது, 23 ஆண்டவர் தம் சினத்திலும் சீற்றத்திலும் வேரறுத்த சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் போன்ற இடங்கள் அழிந்ததைப்போல, இந்த நாட்டின் நிலம் முழுவதும், கந்தகமும் உப்புமாக வெந்துபோய் விதைப்பும், விளைச்சலுமின்றி யாதொரு புற்பூண்டும் முளைக்காமல் இருப்பதைக் காணும் போது, 24 வேற்றினத்தார் அனைவரும் ‘ஆண்டவர் ஏன் இவ்வாறு இந்த நாட்டுக்குச் செய்தார்? இந்தக் கடுஞ்சீற்றம் கனன்றெழக் காரணம் என்ன?’ என்று கேட்பர். 25 அதற்கு மறுமொழியாக, அவர்களுடைய மூதாதையரின் கடவுள் அவர்களை எகிப்திலிருந்து கூட்டி வரும்பொழுது, அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை அவர்கள் விட்டு விலகினர். 26 அவர் அவர்களுக்குக் கொடுக்காதவையும் அவர்கள் அறியாதவையுமான வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு ஊழியம் செய்தனர். 27 ஆகவே, ஆண்டவர் சீற்றம் கொண்டு, இந்நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தையும் இந்நாட்டின்மீது வரச்செய்தார். 28 அவர் தம் சினத்தாலும், கோபத்தாலும், சீற்றத்தாலும், அவர்களை அவர்களது நாட்டிலிருந்து வேரறுத்தார். இந்நாளில் இருப்பது போல் அவர்களை வேற்று நாட்டுக்கு விரட்டியடித்தார் என்று சொல்லப்படும். 29 எனவே, மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை. வெளிப்படுத்தப்பட்டவையோ, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை. 29:7 எண் 21:21-35. 29:8 எண் 32:33. 29:18 எபி 12:15. 29:23 தொநூ 19:24-25.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-29
182
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 30 – திருவிவிலியம்
மறுவாழ்வும் ஆசியும் பெறுதலுக்கான நிபந்தனைகள் 1 இவை எல்லாம் நிகழும்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிதறடித்துள்ள மக்களினங்களுக்கிடையே வாழ்கையில், நான் உனக்கு முன்னே வைத்த ஆசி, சாபம் ஆகியவற்றை, உன் உள்ளத்தில் சிந்தனை செய். 2 நான் இன்று உனக்கு அளிக்கும் அனைத்துக் கட்டளைகளின்படி உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா. நீயும் உன் பிள்ளைகளும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால், 3 உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அடிமைத்தனத்தினின்று விடுவிப்பார். உன்மேல் இரக்கம்கொண்டு, உன்னை அவர் சிதறடித்துள்ள எல்லா நாடுகளிலுமிருந்து மீண்டும் கூட்டிச் சேர்ப்பார். 4 நீ வானத்தின் கடையெல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் கடவுளாகிய ஆண்டவர், அங்கிருந்து உன்னைக் கூட்டிச் சேர்ப்பார். ஆண்டவர் அங்கிருந்து உன்னை அழைத்துக் கொண்டு வருவார். 5 உன் கடவுளாகிய ஆண்டவர், உன் மூதாதையர் உடைமையாக்கியிருந்த நாட்டுக்குள் உன்னைக் கொணர்வார். நீயும் அதை உடைமையாக்கிக்கொள்வாய். உனக்கு நன்மைகள் ஈந்து உன் மூதாதையரைவிட உன்னைப் பெருகச் செய்வார். 6 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் உள்ளத்தையும் உன் வழிமரபின் உள்ளத்தையும் பண்படுத்துவார். அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர்மீது நீ முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்வாய். அப்போது, நீயும் வாழ்வு பெறுவாய். 7 உன் கடவுளாகிய ஆண்டவர், இந்தச் சாபங்களை எல்லாம் உன் பகைவர்மீதும், உன்னை வெறுப்பவர்மீதும், உன்னைக் கொடுமைப்படுத்துவோர் மீதும் வரச்செய்வார். 8 நீ ஆண்டவரிடம் திரும்பிவா. அவரது குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் கடைப்பிடி. 9 நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீ நிறைவு பெறும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் செய்வார். உனது கருவின் கனி, உன் கால்நடைகளின் ஈற்று உனது நிலத்தின் பயன் அனைத்தும் நலமே அமையுமாறு செய்வார். உன் மூதாதையரில் மகிழ்வு கொண்டது போல், உன் நன்மையின் பொருட்டு உன்மீது மீண்டும் மகிழ்வார். 10 எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு. 11 ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. 12 ‘நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. 13 ‘நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. 14 ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது. 15 இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். 16 அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார். 17 ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், 18 இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்துபோவாய். நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது. 19 உன் மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். 20 உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக் கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய். 30:12-14 உரோ 10:6-8. 30:20 தொநூ 12:7; 26:3; 28:13.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-30
183
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 31 – திருவிவிலியம்
தமக்கு அடுத்துவரும் தலைவராக யோசுவாவை மோசே ஏற்படுத்தல் 1 மோசே தொடர்ந்து பின்வரும் வார்த்தைகளை இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறினார்: 2 அவர் சொன்னது: “இன்று எனக்கு வயது நூற்று இருபது. இனி என்னால் நடமாட இயலாது. மேலும், ‘நீ யோர்தானைக் கடக்க மாட்டாய்’ என்று ஆண்டவர் எனக்குக் கூறியுள்ளார். 3 உன் கடவுளாகிய ஆண்டவரே உன்முன் செல்வார். அவரே உன் முன்னின்று இந்த வேற்றினங்களை அழிப்பார். நீ அவற்றுக்கு உரியவற்றை உடைமையாக்கிக் கொள்வாய். ஆண்டவர் சொன்னபடி, யோசுவா உனக்கு முன்பாகச் செல்வான். 4 எமோரியரின் மன்னர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் அவர்களின் நாட்டுக்கும் செய்ததுபோல — அவர்களை அழித்தது போல — ஆண்டவர் அவற்றுக்கும் செய்வார். 5 ஆண்டவர் அவர்களை உங்களிடம் ஒப்படைப்பார். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். 6 வலிமைபெறு; துணிவுகொள்; அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே; ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்; உன்னைக் கைவிடவும் மாட்டார். 7 பின்னர், மோசே யோசுவாவை வரவழைத்து, இஸ்ரயேலர் அனைவர் முன்னிலையிலும் அவரிடம் கூறியது: வலிமை பெறு; துணிவுகொள்; இவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், இந்த மக்களோடு நீ செல்லவேண்டும். அதை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்யவேண்டும். 8 ஆண்டவரே உனக்குமுன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே! ஏழாம் ஆண்டில் திருச்சட்டம் உரக்க வாசிக்கப்படல் 9 பின்னர், மோசே இந்தத் திருச்சட்டநூலை எழுதி, ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கிற லேவியின் வழி வந்த குருக்களிடமும் இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவரிடமும் ஒப்படைத்தார். 10 மேலும், மோசே அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது; விடுதலை ஆண்டாகிய ஒவ்வொரு ஏழாம் ஆண்டின் முடிவில் வரும் கூடார விழாவில், 11 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்தில், இஸ்ரயேலர் அனைவரும் அவர் முன்னிலையில் வந்து கூடும்போது, அவர்கள் அனைவரும் கேட்க இத்திருச்சட்ட நூலை அவர்களுக்கு உரக்க வாசியுங்கள். 12 மக்களை ஒன்று திரட்டுங்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உங்கள் நகரில் வாழும் அந்நியரும் அதைக் கேட்டு அறிந்து கொள்ளட்டும். அவர்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இருக்கட்டும். 13 இவற்றை அறியாத அவர்களுடைய புதல்வர்களும், நீங்கள் யோர்தானைக் கடந்து, உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் வாழும் நாளெல்லாம், இவற்றைக் கேட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சக் கற்றுக் கொள்ளட்டும். மோசேக்கு ஆண்டவர் இட்ட இறுதிக்கட்டளை 14 பின்னர், ஆண்டவர் மோசேயிடம், “நீ இறக்கும் நாள் நெருங்கிவிட்டது. யோசுவாவைக் கூப்பிடு. இருவரும் சந்திப்புக் கூடாரத்துக்கு வாருங்கள். நான் அவனுக்குப் பணிப் பொறுப்புத் தரவேண்டும்” என்றார். அவ்வாறே மோசேயும் யோசுவாவும் போய்ச் சந்திப்புக் கூடாரத்தில் நின்றனர். 15 ஆண்டவர் கூடாரத்தில் மேகத்தூணில் தோன்றினார். மேகத்தூண் கூடாரத்தின் நுழைவாயிலில் நின்றது. 16 அப்பொழுது ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “நீ உன் மூதாதையரோடு துஞ்சப்போகிறாய். இந்த மக்களோ தாங்கள் போகவிருக்கும் நாட்டில் கிளர்ந்தெழுந்து வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றிக் கள்ள உறவு கொள்வர். அவர்கள் என்னைவிட்டு விலகி, நான் அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மீறுவர். 17 அப்போது, எனது சினம் அந்நாளில் அவர்களுக்கு எதிராகக் கனன்றெரியும். நான் அவர்களைக் கைவிடுவேன். அவர்களிடமிருந்து என் முகத்தை மறைத்துக் கொள்வேன். அவர்கள் அறியும்படி பல தீங்குகளும், இன்னல்களும் அவர்கள் மேல் வரும். அந்நாளில் அவர்கள் ‘நம் கடவுள் நம்மோடு இல்லாததால் அன்றோ இத்தகைய தீங்குகள் நமக்கு வந்துள்ளன’ என்பர். 18 அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி, செய்த தீய செயல்கள் அனைத்தின் பொருட்டும், அந்நாளில் நான் என்முகத்தை மறைத்துக் கொள்வேன். 19 எனவே, இப்பொழுது நீ இந்தப்பாட்டை எழுது. அதை இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக்கொடு. அதை அவர்கள் நாவில் வை. அதனால், இந்தப் பாடலே இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக நான் தரும் சான்றாக விளங்கும். 20 ஏனெனில், அவர்களின் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொன்ன, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டுக்குள் நான் அவர்களைக் கொண்டு போனதும் அவர்கள் உண்டு நிறைவு பெற்று கொழுத்துப் போவர். அப்போது அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி அவற்றுக்கு ஊழியம் செய்து, எனக்குச் சினமூட்டுவர்; என் உடன்படிக்கையையும் மீறுவர். 21 பல்வேறு தீங்குகளும் இன்னல்களும் அவர்கள் மேல் வரும்போது, அவர்களுடைய மரபினரின் வாய், பாடலை மறந்து போகாதிருக்கும். இப்பாடலே அவர்களுக்கு எதிராகச் சான்று பகரும். ஏனெனில், இப்பொழுதே அவர்கள் தீட்டியுள்ள திட்டத்தை நான் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுபோகுமுன்பே அறிவேன்” என்றார். 22 ஆகையால், மோசே இப்பாடலை அன்றே எழுதி இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார். 23 மேலும், ஆண்டவர் நூனின் மகனாகிய யோசுவாவுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: ‘வலிமை பெறு, துணிவு கொள், ஏனெனில் நீ இஸ்ரயேல் மக்களை நான் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் கொண்டு போவாய். நான் உன்னோடு இருப்பேன்’ என்றார். 24 மோசே இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளை ஒரு நூலாய் எழுதி முற்றிலும் முடித்த பின்பு, 25 ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கி வந்த லேவியரை நோக்கிக் கட்டளையிட்டுக் கூறியது: 26 “இத்திருச்சட்ட நூலை எடுத்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் அருகில் வையுங்கள். அங்கே அது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும். 27 ஏனெனில், நான் உங்கள் கலகக் குணத்தையும் முரட்டுப் பிடிவாதத்தையும் அறிவேன். இன்று நான் உங்களுடன் உயிரோடு இருக்கையில், ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்கள்: நான் இறந்த பின் இன்னும் எவ்வளவு செய்வீர்களோ? 28 எனவே, உங்கள் குலங்களின் தலைவர்கள் அனைவரையும் உங்கள் அலுவலர்களையும் ஒன்று கூட்டுங்கள். அவர்கள் கேட்க நான் இவ்வார்த்தைகளை எடுத்துரைத்து, அவர்களுக்கு எதிராக விண்ணையும் மண்ணையும் சான்றாக வைப்பேன். 29 ஏனெனில், நான் இறந்தபின் நீங்கள் கெட்டுச் சீரழிவீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழிகளிலிருந்து விலகி, ஆண்டவரின் முன்னிலையில் அருவருப்பானவைகளைச் செய்வீர்கள். நீங்கள் செய்துகொள்ளும் சிலைகளால் அவருக்குச் சினமூட்டுவீர்கள். ஆகையால், இறுதிக் காலத்தில் உங்களுக்குத் தீங்குகள் நேரிடும் என்பதையெல்லாம் நான் அறிவேன்.” மோசேயின் பாடல் 30 பின்னர், இஸ்ரயேல் சபையினர் அனைவரும் கேட்க, மோசே பின்வரும் பாடலின் வார்த்தைகள் அனைத்தையும் சொன்னார்: 31:2 எண் 20:12. 31:4 எண் 21:21-35. 31:8 யோசு 1:5; எபி 13:5. 31:10 விப 15:1; 16:13-15. 31:23 எண் 27:23; யோசு 1:6.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-31
184
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 32 – திருவிவிலியம்
1 வானங்களே! நான் பேசுவேன்; செவிகொடுப்பீர்: பூவுலகே! என் சொல்லை உற்றுக்கேள். 2 பெருமழை பைந்தளிர்மீது பொழிவதுபோல், மென்சாரல் பசும்புல்மீது விழுவதுபோல், என் அறிவுரை மழையெனப் பெய்திடுக! என் சொற்கள் பனியென இறங்கிடுக! 3 நான் ஆண்டவரின் பெயரைப் பறைசாற்றுவேன்; நம் கடவுளின் மாட்சியைப் பாராட்டுவேன். 4 அவரே பாறை! அவர் செயல் நிறைவானது! அவர்தம் வழிகள் அனைத்தும் நீதியானவை! வஞ்சகம் அற்ற உண்மைமிகு இறைவன்! அவரே நீதியும் நேர்மையும் உள்ளவர்! 5 அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள் அவரிடம் பொய்ம்மையாய் நடந்துகொண்டனர்; அவர்கள் நெறிபிறழ்ந்த வஞ்சகம் மிக்க தலைமுறையினர்! 6 ஞானமற்ற, மதிகெட்ட மக்களே! ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறு இதுதானா? உங்களைப் படைத்து, உருவாக்கி, நிலை நிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா? 7 பண்டைய நாள்களை நினைத்துப்பார்! பலதலைமுறையின் ஆண்டுகளைக் கவனித்துப்பார்! உன் தந்தையிடம் கேள்; அவர் உனக்கு அறிவிப்பார்; பெரியோரிடம் கேள்; அவர்கள் உனக்குச்சொல்வர். 8 உன்னதமானவர் வெவ்வேறு இனங்களுக்கு உரிமைச்சொத்துக்களைப் பங்கிட்டபோது, ஆதாமின் பிள்ளைகளை அவர் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்கள் இனங்களின் எல்லைகளையும் திட்டமிட்டார். 9 ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே! அவரது உரிமைச் சொத்து யாக்கோபே! 10 பாழ்வெளியில் அவர் அவனைக் கண்டார்; வெறுமையான ஓலமிடும் பாலையில் அவனைக் கண்டார்; அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்; கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார். 11 கழுகு தன் கூட்டின்மேல் அசைத்தாடித் தன் குஞ்சுகளின் மேல் படர்ந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்து செல்வது போலும் அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போல், 12 ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; வேற்றுத் தெய்வங்கள் அவனோடு இருந்ததில்லை. 13 பூவுலகின் முகடுகளில் அவனை வாழச்செய்தார்; வயல்வெளியின் விளைச்சலை அவன் உண்டான்; கன்மலைத் தேனை அவன் சுவைத்தான்; கற்பாறை எண்ணெயைப் பயன்படுத்தினான். 14 பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் செம்மறிக்கிடாய், வெள்ளாட்டுக்கிடாய் இவற்றின் கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும் அவர்கள் உண்ணும்படி ஆண்டவர் கொடுத்தார். 15 ஆனால், கொழுத்த காளை மார்பிலே பாய்ந்தது; எசுரூன்* கொழுத்துப் பருத்து முரடனானான்; தனைப் படைத்த கடவுளை விட்டு அவன் விலகினான்; தனது மீட்பின் பாறையை எள்ளி நகைத்தான். 16 வேற்றுத் தெய்வங்களால் அவருக்கு எரிச்சலூட்டினர்; அருவருப்புகளால் அவருக்குச் சினமூட்டினர். 17 இறையல்லாத பேய்களுக்குப் பலி செலுத்தினர்; அவர்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களுக்கு, நேற்று முளைத்த புதிய தெய்வங்களுக்கு, உங்கள் முன்னோர் அஞ்சாத அவற்றிற்குப் பலியிட்டனர். 18 ‘உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்து விட்டாய்’. 19 தன் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். 20 அவர் உரைத்தார்; எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள். 21 இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். 22 எனது சினத்தில் நெருப்புப்பொறி தெறிக்கும்; கீழுலகின் அடிமட்டம்வரை அது எரிக்கும்; பூவுலகையும் அதன் விளைபலன்களையும் அழிக்கும்; மாமலைகளின் அடித்தளமே தீப்பற்றி எரியும். 23 தீங்குகளை அவர்கள்மேல் கொட்டிக் குவிப்பேன்; என் அம்புகளை அவர்கள்மேல் எய்து தீர்ப்பேன். 24 பசியினால் அவர்கள் வாடுவர்; கொள்ளை நோயால் மாய்வர்; கொடிய வாதைகளால் மடிவர்; விலங்குகளின் பற்களுக்கு இரையாவர்; புழுதியில் ஊரும் நச்சுப்பூச்சிகளால் மடிவர். 25 வெளியிலே வாள்; உள்ளே பேரச்சம்! இளைஞனும் கன்னிப் பெண்ணும் பால்குடி மறைவாக் குழந்தையும் முடிநரைத்த கிழவனும் அழிவர். 26 நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்; அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன். 27 ஆயினும், ‘எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!’ என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன். 28 அவர்கள் புத்தி கெட்ட மக்கள்; அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை. 29 அவர்கள் ஞானமடைந்து இதனை உணர்ந்து தங்களுக்கு நிகழப்போவதை உய்த்துணர்ந்தால் எத்துணை நலம்! 30 ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ? 31 அவர்களது பாறை நமது பாறை போன்றன்று என்று நம்முடைய பகைவர்களே ஏற்றுக்கொள்கின்றனர். 32 அவர்களது கொடிமுந்திரி சோதோமிலிருந்து வருவதாகும்; கொமோராவின் வயல் வெளியிலிருந்து வருவதாகும்; அவர்களது திராட்சைகள் நச்சுத் திராட்சைகள்; அவர்களது திராட்சைக் கொத்துக்கள் கசப்பானவை. 33 அவர்களது இரசம் பாம்பின் நஞ்சு போன்றது; விரியன் பாம்பின் கொடிய நஞ்சு போன்றது. 34 இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளது அன்றோ? என் கருவூலங்களில் முத்திரையிடப் பட்டுள்ளது அன்றோ? 35 பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன; உரிய நாளில் அவர்களின் கால்கள் தள்ளாடும்; அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன. 36 அவர்கள் ஆற்றல் இழந்து விட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும் போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்; அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார். 37 அப்பொழுது அவர் உரைப்பார்: அவர்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே? 38 அவர்கள் பலியிட்டவற்றின் கொழுப்பை உண்டவர்கள் எங்கே? நீர்மப்படையல் இரசத்தைக் குடித்தவர்கள் எங்கே? அவர்கள் இப்போது முன்வந்து உனக்கு உதவட்டுமே! அவர்கள் உனது புகலிடம் ஆகட்டுமே! 39 நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும் நானே; குணமாக்குபவரும் நானே! என் கைகளிலிருந்து விடுவிப்பார் எவரும் இரார். 40 ஏனெனில், என் கைகளை வானோக்கி உயர்த்தி என்றும் வாழும் என்மீது ஆணையிட்டு உரைக்கிறேன். 41 மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழி வாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன். 42 கொலையுண்டோர், சிறைப்பட்டோரின் இரத்தத்திலும் நீள்முடித் தலைவரின் இரத்தத்திலும் என் அம்புகள் குடிக்கச் செய்வேன்; என் வாள் சதையை உண்ணச் செய்வேன். 43 வேற்றினங்களே! ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்; அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப் பழி வாங்கினார்; அவர் தம் பகைவர்களுக்குப் பதிலடி கொடுத்தார். தம் மக்களின் நாட்டைக் கறைநீக்கம் செய்தார். 44 மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எடுத்துரைத்தார்கள். மோசேயின் இறுதி மொழிகள் 45 இந்த வார்த்தைகளை எல்லாம் இஸ்ரயேலுக்குச் சொல்லி முடித்தபின், மோசே அவர்களுக்குச் சொன்னது; 46 உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள். 47 இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு. யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள். 48 அதே நாளில் ஆண்டவர் மோசேயுடன் பேசியது: 49 மோவாபு நாட்டில் எரிகோவுக்கு எதிரேயுள்ள, அபாரிம் மலையில் நெபோ என்னும் மலைமீது ஏறிக் கானான் நாட்டைப் பார். உன் மக்கள் இஸ்ரயேலுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாடு அதுவே. 50 உன் சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து, உன் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அதுபோல நீ ஏறிச் செல்லவிருக்கும் மலையில் நீயும் இறந்து உன் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்படுவாய். 51 ஏனெனில், சீன் என்னும் பாலை நிலத்தில், மெரிபத்து-காதேசு எனும் நீர்ச்சுனைக்கு அருகில், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் எனக்குத் துரோகம் செய்தாய். அதனால், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் என்னைப் புனிதப்படுத்தவில்லை. 52 எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய். அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன். நீயோ அதனுள் செல்ல மாட்டாய். 32:8 திப 17:26. 32:17 1 கொரி 10:20. 32:18 திப 17:26. 32:21 1 கொரி 10:22; உரோ 10:19. 32:35 உரோ 12:19; எபி 10:30. 32:36 திபா 135:14. 32:43 உரோ 15:10; திவெ 19:2. 32:48-52 எண் 27:12-14; இச 2:23-27. 32:15 இஸ்ரயேலின் மறுபெயர்; எபிரேயத்தில், ‘நேரியவன்’ என்பது பொருள்.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-32
185
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 33 – திருவிவிலியம்
இஸ்ரயேலின் குலங்களுக்கு மோசேயின் ஆசிகள் 1 கடவுளின் அடியவரான மோசே, தாம் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது: 2 ஆண்டவர் சீனாயினின்று வந்தார்; சேயிரினின்று அவர்களுக்குத் தோன்றினார்; பாரான் மலையினின்று அவர்கள் மீது ஒளிர்ந்தார்; பல்லாயிரம் புனிதர் புடைசூழ வந்தார்; அவரது வலப்புறத்தினின்று மின்னல் ஒளிர் திருச்சட்டம் ஏந்திவந்தார். 3 உண்மையாகவே, மக்களினங்களின் அன்பர் அவர்; அவர்தம் புனிதர்கள் அவர் கையில் உள்ளனர். அவர்கள் அவரது பாதங்களில் அமர்வர்; அனைவரும் அவரது கூற்றுகளை ஏற்றுக்கொள்வர். 4 மோசே எங்களுக்குத் திருச்சட்டத்தைக் கட்டளையாக வழங்கினார்; அதுவே யாக்கோபினது திருக்கூட்டத்தின் உடைமை. 5 மக்கள் தலைவர்களும் இஸ்ரயேலின் குலங்களும் ஒன்று திரட்டப்பட்டபொழுது அவர் எசுரூன்மீது அரசனாய் இருந்தார். 6 ரூபன் வாழட்டும்; அவன் மடிந்து போகாதிருக்கட்டும்; அவன்தன் புதல்வர் குறையாதிருக்கட்டும்! 7 யூதாவுக்கான ஆசி இதுவே. அவர் கூறியது: ஆண்டவரே, யூதாவின் குரலைக் கேளும்; அவனை அவனுடைய மக்களிடம் கொண்டு வாரும்; அவனது கைகள் அவனுக்குப் போதுமானது ஆகட்டும். அவனுக்குத் துணை நின்று அவனுடைய பகைவரிடமிருந்து காத்தருளும். 8 லேவியைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரே, உம் தும்மிம், ஊரிம் என்பவை மாசாவில் சோதிக்கப்பட்டு மெரிபாவின் நீரூற்றருகில் வழக்காடிய உம் பற்றுமிகு அடியானிடம் இருக்கட்டும். 9 அவனிடமே அவற்றைக் கொடும்; ஏனெனில் அவன் தன் தந்தையையும் தாயையும் நோக்கி ‘நான் உங்களைப் பாரேன்’ என்றவன்; தன் சகோதரர்களை அடையாளம் கண்டு கொள்ளாதவன்; தன் சொந்தப் பிள்ளைகளையே அறியாதவன்; உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்து உம் உடன்படிக்கையை நிறைவேற்றுபவன்; 10 யாக்கோபுக்கு உம் நீதிமுறைமைகளையும் இஸ்ரயேலுக்கு உம் திருச் சட்டத்தையும் கற்றுத்தருபவன்; உமது முன்னிலையில் தூபம் காட்டுபவன்; உமது பீடத்தில் எரிபலிகளைச் செலுத்துபவன். 11 ஆண்டவரே, அவனது ஆற்றலை ஆசியால் நிரப்பும்; அவனுடைய கரங்களின் உழைப்பை ஏற்றுக்கொள்ளும்; அவனுக்கு எதிராக எழும்புவோரை அவர்களின் இடுப்பு ஒடிந்து விழும் வண்ணம் வதையும். அவனைப் பகைப்பவர் மீண்டும் எழாதவாறு செய்யும். 12 பென்யமினைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரின் அன்புக்கு உரியவன்; அவரால் அவன் பாதுகாப்புடன் வாழ்வான். எக்காலமும் அவனை அவர் அரவணைத்துக் காப்பார்; அவர்தம் கரங்களுக்கிடையே அவன் வாழ்வான். 13 யோசேப்பைக் குறித்து அவர் கூறியது: அவனது நிலம் ஆண்டவரால் ஆசி பெற்றது; அது வானத்தின் செல்வத்தாலும் பனியாலும், 14 ஆழ்நிலத்தின் நீரூற்றுகளாலும், கதிரவன் வழங்கும் கனிகளாலும், பருவங்கள் விளைவிக்கும் பயன்களாலும் 15 பண்டைய மலைகளின் உயர் செல்வங்களாலும், என்றுமுள குன்றுகளின் அரும் பொருள்களாலும் ஆசிபெற்றது. 16 நிலம் தரும் பெரும் விளைச்சலும் அதன் நிறைவும், முட்புதரில் வீற்றிருந்தவரின் அருளன்பும், எல்லா ஆசிகளும் யோசேப்பின் தலைமீதும் தன் சகோதரருள் தேர்ந்தெடுக்கப்பட்டவனின் உச்சந்தலைமீதும் தங்குவதாக! 17 அவனது நடை தலையீற்றுக் காளையின் பீடுநடை போன்றது. அவனின் கொம்புகள் காட்டெருமையின் கொம்புகள் போன்றவை; அவற்றால் மக்களினத்தாரைப் பூவுலகின் கடை எல்லைவரை முட்டித் துரத்துவான். அவை எப்ராயிமின் பதினாயிரம் படைகளும் மனாசேயின் ஆயிரம் படைகளும் ஆகும். 18 செபுலோனைக் குறித்து அவர் கூறியது: செபுலோனே, நீ பயணம் செய்கையில் மகிழ்ந்திடு! இசக்காரே, நீ கூடாரங்களில் தங்கும் போது மகிழ்ந்திடு! 19 அவர்கள் மக்களினங்களை மலைக்கு அழைத்துச் செல்வர்; அங்கு அவர்கள் ஏற்புடைய பலிகளைச் செலுத்துவர்; அவர்கள் கடலில் பலுகியிருப்பதும் மணலில் புதைந்திருப்பதுமான திரளான செல்வங்களை அனுபவிப்பார். 20 காத்தைக் குறித்து அவர் கூறியது: காத்தைப் பெருகச் செய்பவர் போற்றி! போற்றி! காத்து சிங்கத்தைப்போல் தங்கியிருந்து புயத்தையும் தலையையும் பீறிப் பிளந்திடுவான். 21 அவன் தனக்கெனச் சிறந்த இடத்தைத் தேர்ந்து கொண்டான்; தலைவனுக்குரிய பங்கு அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது; மக்களின் தலைவனாகி, அவன் ஆண்டவரின் நீதியை நிலை நிறுத்தினான்; ஏனைய இஸ்ரயேலரோடு சேர்ந்து, அவர்தம் நீதிமுறையை நிலைநாட்டினான். 22 தாணைக் குறித்து அவர் கூறியது: தாண் பாசானினின்று பாய்ந்துவரும் சிங்கக்குட்டி. 23 நப்தலியைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரின் அருளன்பால் நிறைவு பெற்றவன்; கலிலேயக் கடலையும் தென்திசையையும் உடைமையாக்கிக் கொள்வான். 24 ஆசேரைக் குறித்து அவர் கூறியது: ஆசேர் எல்லாக் குலங்களிடையே ஆசி பெற்றவனாவான்; தன் உடன்பிறந்தாருக்கு உகந்தவனாய் இருப்பான்; அவன் தன் காலை எண்ணெயில் தோய்ப்பான். 25 உன் தாழ்ப்பாள்கள் இரும்பாலும் செம்பாலும் ஆனவை; உன் வாழ்நாள் அனைத்தும் நீ பாதுகாப்புடன் இருப்பாய். 26 எசுரூபின் இறைவன்போல் எவருமில்லை; அவர் உனக்கு உதவிட வானங்களின் வழியாக தமது மாட்சியுடன் மேகங்கள்மீது ஏறிவருவார். 27 என்றுமுள கடவுளே உனக்குப் புகலிடம்; என்றுமுள அவரது புயம் உனக்கு அடித்தளம்; ‘பகைவரை உன் முன்னின்று விரட்டியடித்து, அவர்களை அழித்துவிடு’ என்பார் அவர். 28 அப்போது, இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழ்ந்திடும்; யாக்கோபின் உறைவிடம் தானியமும், இரசமும் மிகுந்த நிலத்தில் இருக்கும்; அவர்தம் மேகங்கள் பனி மழை பொழியும். 29 இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்; ஆண்டவரால் மீட்கப்பட்ட மக்களினமே! உன்னைப்போல் வேறு இனம் உண்டோ? உன்னைக் காக்கும் கேடயமும் உன் வெற்றி வாளும் அவரே! உன் பகைவர் உன்முன் கூனிக் குறுகுவர்! அவர்களின் தொழுகைமேடுகளை நீ ஏறி மிதிப்பாய். 33:8 விப 17:7; 28:30; எண் 20:13.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-33
186
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 34 – திருவிவிலியம்
மோசேயின் இறப்பு 1 அதன்பின், மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார். 2 மேலும், நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும், மேற்கே மத்தியதரைக் கடல் வரையிலும் காட்டினார்; 3 மற்றும் நெகேபையும் பேரீச்சை மாநகராகிய எரிகோ முதல் சோவார் வரையிலும் உள்ள நிலப்பரப்பையும் காட்டினார். 4 அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது: ‘நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால், நீ அங்கு போகமாட்டாய்’. 5 எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார். 6 மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால், இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது. 7 மோசே இறக்கும் போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை; அவரது வலிமை குறைந்ததுமில்லை. 8 மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் மோசேக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். மோசேக்காக இஸ்ரயேல் மக்கள் அழுது துக்கம் கொண்டாடின நாள்கள் நிறைவுற்றன. 9 நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவுக்குச் செவிகொடுத்து, மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி நடந்தார்கள். 10 ஆண்டவர் நேருக்குநேர் சந்திக்க மோசேயைப்போல், இறைவாக்கினர் வேறெவரும் இஸ்ரயேலில் இதுகாறும் எழுந்ததில்லை. 11 ஏனெனில், எகிப்து நாட்டில், பார்வோனுக்கும், அவன் அலுவலருக்கும், அவன் நாடு முழுவதற்கும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்யும்படி ஆண்டவர் மோசேயை அனுப்பினார். 12 இஸ்ரயேலர் அனைவரின் கண்கள் காணுமாறு அவர் ஆற்றிய அனைத்து ஆற்றல்மிகு செயல்களும் அச்சுறுத்தும் மாபெரும் செயல்களுமே இதற்குச் சான்றாகும். 34:4 தொநூ 12:7; 26:3; 28:13. 34:10 விப 33:11.
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-34
187
யோசுவா
யோசுவா அதிகாரம் – 1 – திருவிவிலியம்
கானானைக் கைப்பற்ற யோசுவாவுக்கு அழைப்பு 1 ஆண்டவரின் ஊழியர் மோசே இறந்தபின், நூனின் மகனும் மோசேயின் உதவியாளருமாகிய யோசுவாவிடம் ஆண்டவர் பின்வருமாறு கூறினார்: 2 “என் ஊழியன் மோசே இறந்துவிட்டான். இப்பொழுது நீ புறப்பட்டு, யோர்தானைக் கடந்து, இந்த மக்கள் அனைவரோடும் நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் செல். 3 மோசேக்கு நான் கூறியவாறு உன் காலடிபடும் இடத்தை எல்லாம் உங்களுக்குக் கொடுப்பேன். 4 பாலைநிலத்திலிருந்து இந்த லெபனோன் வரையிலும், யூப்பிரத்தீசு பேராறு தொடங்கி இத்தியர் நாடு முழுவதுமாகக் கதிரவன் மறையும் பெருங்கடல் வரையிலும் உங்கள் நிலமாக இருக்கும். 5 உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான். மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன்; கைவிடவும் மாட்டேன். 6 வீறுகொள், துணிந்துநில். ஏனெனில், இம்மக்களின் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நாட்டை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்வாய். 7 திடமும் உறுதியும் கொண்டு என் ஊழியன் மோசே கட்டளையிட்ட எல்லாச் சட்டங்களையும் கடைப்பிடிப்பதில் கவனமாயிரு. நீ அதனின்று வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே. அப்பொழுதுதான் நீசெல்லும் வழியெல்லாம் வெற்றி பெறுவாய். 8 இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் நீ செல்லும் இடம்எல்லாம் நலம் பெறுவாய்; வெற்றி காண்பாய். 9 நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன். 10 யோசுவா மக்களின் மேற்பார்வையாளருக்குக் கட்டளையிட்டுக் கூறியது: 11 “பாளையத்தின் நடுவே சென்று இவ்வாறு மக்களுக்குரிய கட்டளையாகக் கூறுங்கள்: ‘உங்களுக்கு வேண்டிய உணவைத் தயார் செய்யுங்கள். ஏனெனில், இன்னும் மூன்று நாள்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் உடைமையாக உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உரிமையாக்கிக்கொள்ள இந்த யோர்தானைக் கடப்பீர்கள்.’” 12 ரூபன், காத்தின் மக்களுக்கும், மனாசேயின் அரைக் குலத்திற்கும் யோசுவா கூறியது: 13 “உங்களுக்கு ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டதை நினைவுகொள்ளுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு அமைதி அருள்வார். இந்நாட்டை உங்களுக்கு அளிப்பார். 14 உங்கள் மனைவியரும், குழந்தைகளும், கால்நடைகளும், மோசே உங்களுக்குக் கொடுத்த கீழை யோர்தானில் தங்கலாம். ஆனால், வலிமைமிக்க நீங்கள் படைக்கலம் தாங்கிய போர் வீரர்களாக உங்கள் சகோதரர்களுக்கு முன்பாகக் கடந்து சென்று அவர்களுக்கு உதவுங்கள். 15 ஆண்டவர் உங்களுக்குச் செய்ததுபோல் உங்கள் சகோதரர்களையும் அந்நாட்டில் குடியேற்றி அவர்களுக்கும் அமைதி அருள்வார். அதுவரை அவர்களுக்கு உதவுங்கள். அவர்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கும் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர். பின்னர், கதிரவன் உதிப்பதும், கடவுளின் ஊழியர் மோசே உங்களுக்கு அளித்ததும், நீங்கள் ஏற்கெனவே உடைமையாக்கிக் கொண்டதுமான கீழையோர்தானுக்குத் திரும்பிவந்து அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.” 16 அவர்கள் யோசுவாவிடம், “நீர் எங்களுக்குக் கட்டளை இடுவதை நாங்கள் செய்வோம். நீர் அனுப்பும் இடத்திற்கெல்லாம் நாங்கள் செல்வோம். 17 நாங்கள் மோசேக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்ததுபோல் உமக்கும் கீழ்ப்படிவோம். உம் கடவுளாகிய ஆண்டவர் மோசேயுடன் இருந்ததுபோல் உம்மோடும் இருப்பாராக. 18 உம் வாய் மொழியை எதிர்ப்பவன் எவனும், நீர் எங்களுக்குக் கட்டளை இடுபவை அனைத்திற்கும் செவிகொடுக்காதவன் எவனும் கொல்லப்பட வேண்டும். வீறுகொண்டு துணிந்து நிற்பீராக” என்றனர். 1:3-5 இச 11:24-25. 1:5 இச 31:6,8; எபி 13:5. 1:6 இச 31:6,7,23. 1:12-15 எண் 32:28-32; இச 3:18-20; யோசு 22:1-6.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-1
188
யோசுவா
யோசுவா அதிகாரம் – 2 – திருவிவிலியம்
யோசுவாவின் ஒற்றர்களும் இராகாபும் 1 நூனின் மகனாகிய யோசுவா சித்திமிலிருந்து இரண்டு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்பினார். அவர்களிடம், “நீங்கள் சென்று நிலப்பகுதியையும், குறிப்பாக எரிகோ நகரையும் பாருங்கள்” என்றார். அவர்கள் சென்று இராகாபு என்ற பெயருள்ள விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர். 2 சில இஸ்ரயேலர், இரவில் நாட்டைப்பற்றிய உளவு அறிய வந்தனர் என்ற செய்தி எரிகோ மன்னனுக்கு எட்டியது. 3 உடனே அவன், “உன் வீட்டுக்கு வந்து உன்னோடு தங்கியிருக்கும் ஆள்களை வெளியே கொண்டுவா. ஏனெனில், அவர்கள் நாடு முழுவதையும் உளவறிய வந்துள்ளனர்” என்று இராகாபிடம் சொல்லுமாறு ஆள் அனுப்பினான். 4 அப்பெண் அவ்விருவரையும் அழைத்து ஒளித்துவைத்தபின், “சில மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது. 5 இருட்டியபின் வாயில் கதவு சாத்தப்படும்பொழுது அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. விரைவாக அவர்களைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்” என்றார். 6 அவர் அவர்களை மாடியில் ஏற்றி அங்கிருந்த சணல் தட்டைகளுக்குள் மறைத்து வைத்தார். 7 அந்த ஆள்கள் யோர்தானுக்குச் செல்லும் வழியில் ஆற்றந்துறைவரை அவர்களைத் தேடிச் சென்றனர். தேடி வந்தவர்கள் வெளியேறியதும் வாயிற்கதவு மூடப்பட்டது. 8 அவரோ, மாடியில் இருந்த ஒற்றர்கள் உறங்குமுன் அவர்களிடம் சென்றார். 9 அவர்களிடம் அவர், “இந்நாட்டை ஆண்டவர் உங்களுக்கு அளிப்பார் என்று நான் அறிவேன். ஏனெனில், உங்களைப் பற்றிய அச்சம் எங்களிடையே எழுந்துள்ளது. உலகில் வாழ்வோர் அனைவரும் உங்கள்முன் நடுங்குகின்றனர். 10 எகிப்தினின்று நீங்கள் வெளியேறும்பொழுது செங்கடலின் நீரை ஆண்டவர் வற்றச்செய்தது பற்றி அவர்கள் கேள்விப்பட்டுள்ளனர். நீங்கள் கீழை யோர்தானில் இரண்டு எமோரிய அரசர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் அவர்களை அழித்ததையும் அவர்கள் அறிவார்கள். 11 அதைக் கேள்விப்பட்டவுடன் எங்கள் இதயம் கலக்கமுற்றது. உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள். 12 நான் உங்களுக்கு இரக்கம் காட்டியதுபோல் நீங்களும் என் தந்தை வீட்டிற்கு இரக்கம் காட்டுவீர்கள் என்று இப்பொழுது எனக்கு ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளியுங்கள். நம்பத் தகுந்த அடையாளம் ஒன்றினை எனக்குக் கொடுங்கள். 13 என் தாய், தந்தை, என் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான குடும்பங்கள் அனைத்தையும் வாழவிடுங்கள். சாவிலிருந்து எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்” என்றார். 14 அதற்கு அந்த ஒற்றர்கள், “எங்கள் உயிர் உம்கையில் உள்ளது. எங்களைப் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தால் ஆண்டவர் எங்களுக்கு நாட்டை அளிக்கும்போது நாங்கள் உங்களுக்கு இரக்கம் காட்டுவோம். நம்பிக்கையுடன் நடந்துகொள்வோம்” என்றனர். 15 அவர் ஒரு கயிற்றின்மூலம் அவர்களைச் சாளரம் வழியாக இறக்கிவிட்டார். ஏனெனில், அவரது வீடு கோட்டைச் சுவரோடு இணைந்திருந்தது. அங்கே அவர் வாழ்ந்து வந்தார். 16 அவர் அவர்களிடம், “உங்களைத் துரத்துபவர்கள் கண்டுபிடிக்காதபடி நீங்கள் மலையை நோக்கிப் போங்கள். துரத்துபவர்கள் திரும்பும்வரை அங்கே மூன்று நாள்கள் ஒளிந்து கொள்ளுங்கள். பின்னர், உங்கள் வழியே செல்லுங்கள்” என்றார். 17 அப்பொழுது ஒற்றர்கள், “நீர் எங்களிடமிருந்து பெற்ற வாக்குறுதியிலிருந்து நாங்கள் தவற மாட்டோம். 18 நாங்கள் இந்நாட்டுக்குத் திரும்பி வரும்பொழுது நீர் இந்தச் சிவப்புக் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட சாளரத்தில் கட்டிவையும். உம் தாய், தந்தை, உம் சகோதரர்கள், மற்றும் உம் தந்தை வீட்டில் உள்ள அனைத்தையும் உம் வீட்டில் சேர்த்து வைத்திரும். 19 உம் வீட்டிலிருந்து கதவுக்கு வெளியே எவராவது வந்தால் அவரது சாவுக்கு அவரே பொறுப்பாவார். நாங்கள் குற்றமற்றவர்கள். ஆனால், உம்மோடு வீட்டிலிருப்பவர் மீது எவராவது கை வைத்தால் அந்த இரத்தப்பழி எங்கள் தலைமீது விழும். 20 நமக்குள் நடந்த இந்தப் பேச்சு வார்த்தையை நீர் வெளிப்படுத்தினால், எங்களிடமிருந்து நீர் பெற்ற வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல” என்றனர். 21 அவர், “உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் வெளியே சென்றபின் அவர் ஒரு கருஞ்சிவப்புக் கயிற்றைச் சாளரத்தில் கட்டி வைத்தார். 22 அவர்கள் மலைக்குச் சென்று, துரத்தி வந்தவர்கள் திரும்பிச் செல்லும் வரை மூன்று நாள்கள் அங்கே தங்கினார்கள். துரத்தியவர்கள் வழிநெடுகத்தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 23 அங்கே தங்கியிருந்த இரண்டு ஒற்றர்களும் மலையிலிருந்து கீழே இறங்கிப் பயணம் செய்து நூனின் மகன் யோசுவாவிடம் வந்து தங்களுக்கு நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர். 24 மேலும், அவர்கள் யோசுவாவிடம், “நாடு அனைத்தையும் கடவுள் நம் கையில் ஒப்படைத்துள்ளார். நாட்டில் வாழ்பவர் அனைவரும் நம்மைக் கண்டு நடுங்குகின்றனர்” என்றார்கள். 2:1 எபி 11:31; யாக் 2:25. 2:10 விப 14:21; எண் 21:21-35.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-2
189
யோசுவா
யோசுவா அதிகாரம் – 3 – திருவிவிலியம்
இஸ்ரயேலர் யோர்தானைக் கடத்தல் 1 யோசுவா அதிகாலையில் விழித்தெழுந்தார். அவரும் இஸ்ரயேல் மக்களனைவரும் சித்திமிலிருந்து புறப்பட்டு யோர்தான் வந்தடைந்தனர். அதைக் கடக்குமுன் அங்கே தங்கினர். 2 மூன்று நாள்கள் கழிந்தபின் மேற்பார்வையாளர் பாளையமெங்கும் போய், 3 மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை லேவியக் குருக்கள் தூக்குவதை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் இடங்களிலிருந்து புறப்பட்டு அதன் பின்னால் செல்லவேண்டும். 4 ஆயினும், உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அடி இடைவெளி இருக்கட்டும். யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் வழி உங்களுக்குத் தெரியவேண்டும். ஏனெனில், நீங்கள் அவ்வழியில் இதுவரை சென்றதில்லை.” 5 யோசுவா மக்களிடம், “உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்” என்றார். 6 யோசுவா குருக்களிடம், “உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிப் பிடியுங்கள். மக்கள்முன் கடந்து செல்லுங்கள்” என்றார். அவ்வாறே, அவர்களும் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள்முன் சென்றனர். 7 ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உன்னை உயர்த்தத் தொடங்குகிறேன். அதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். 8 உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிவரும் குருக்கள் யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தவுடன் அங்கேயே நிற்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடு” என்றார். 9 யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், “இங்கே வாருங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளுங்கள். 10 வாழும் இறைவன் உங்களிடையே இருக்கின்றார் என்று இதனால் அறிவீர்கள். அவர் உங்கள் முன்னிருந்து கானானியர், இத்தியர், இவ்வியர், பெரிசியர், கிர்காசியர், எமோரியர், எபூசியர் ஆகியோரை விரட்டிவிடுவார். 11 இதோ, உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது. 12 இப்போது இஸ்ரயேலின் பன்னிரு குலங்களிலிருந்தும் குலத்திற்கு ஒருவராக நீங்கள் தேர்ந்தெடுங்கள். 13 உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும். மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும்” என்றார். 14 மக்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர். 15 உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும். 16 மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல்** வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர்எதிராகக் கடந்து சென்றனர். 17 இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர். 3:16 ‘உப்புக் கடல்’ என்பது மறுபெயர்.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-3
190
யோசுவா
யோசுவா அதிகாரம் – 4 – திருவிவிலியம்
பன்னிரு நினைவுக் கற்கள் 1 மக்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து முடிந்தபின் ஆண்டவர் யோசுவாவை நோக்கி, 2 “மக்களிலிருந்து குலத்திற்கு ஒருவராகப் பன்னிருவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிடுங்கள். 3 “குருக்களின் பாதங்கள் இருக்கும் இடத்திலிருந்து பன்னிரு கற்களை எடுத்து உங்களுடன் கொண்டு வாருங்கள். அவற்றை நீங்கள் இவ்விரவு தங்குமிடத்தில் வையுங்கள்” என்றார். 4 யோசுவா இஸ்ரயேல் மக்களிலிருந்து குலத்திற்கு ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிருவரை அழைத்தார். 5 யோசுவா அவர்களிடம், “உங்கள் கடவுளாகிய ஆண்டவரது பேழைக்கு முன்பாக யோர்தான் நடுவில் கடந்து செல்லுங்கள். இஸ்ரயேல் குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப உங்களில் ஒவ்வொருவனும் ஒரு கல்லைத் தோளில் சுமந்து செல்லட்டும். 6 இவை உங்களிடையே ஓர் அடையாளமாக இருக்கும். இக்கற்கள் உங்களுக்கு எதைக் குறிக்கும் என்று பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகள் கேட்பார்கள். 7 அப்பொழுது நீங்கள் அவர்களுக்கு இவ்வாறு சொல்லுங்கள்: ‘யோர்தான் நீர் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையின்முன் பிரிந்து நின்றது. அப்பேழை யோர்தானைக் கடக்கும்பொழுது யோர்தானின் தண்ணீர் பிரிந்து நின்றது. இக்கற்கள் இஸ்ரயேல் மக்களுக்கு என்றும் இந்நிகழ்ச்சியை நினைவூட்டுவதற்காக உள்ளன’ என்று சொல்லுங்கள்” என்றார். 8 யோசுவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் செய்தனர். ஆண்டவர் யோசுவாவிடம் சொல்லியபடி யோர்தான் நதியின் நடுவிலிருந்து இஸ்ரயேல் மக்களின் குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப பன்னிரு கற்களை எடுத்துக் கொண்டு தாங்கள் தங்கிய இடத்திற்குச் சென்று அங்கே வைத்தனர். 9 யோசுவா பன்னிரு கற்களையும் யோர்தான் நடுவில் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்களின் பாதங்கள் நின்ற இடத்தில் வைத்தார். அவை அங்கே இந்நாள்வரை உள்ளன. 10 இவ்வாறு, மக்களுக்குக் கூறும்படி ஆண்டவர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். இவை அனைத்தும் முடியும் வரை பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவிலேயே நின்று கொண்டிருந்தனர். மக்களும் விரைவாகக் கடந்தனர். இதுவே மோசே யோசுவாவுக்கு அளித்திருந்த கட்டளை. 11 மக்கள் அனைவரும் கடந்த பின், ஆண்டவரது பேழையோடு குருக்களும், மக்கள் காணக் கடந்து வந்தனர். 12 மோசே அவர்களுக்குக் கூறியபடி ரூபன், காத்தின் மக்களும் மனாசேயின் அரைக் குலமும் படைக்கலன்கள் தாங்கியவராய், இஸ்ரயேல் மக்கள் காணக் கடந்து வந்தனர். 13 ஏறக்குறைய நாற்பதாயிரம் பேர் போருக்குத் தயாராக ஆண்டவரின் முன்னால் எரிகோ சமவெளிக்குச் சென்றனர். 14 அன்று ஆண்டவர் யோசுவாவை இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உயர்த்தினார். அவர்கள் மோசேயை மதித்தது போல் இவரையும் வாழ்நாள் முழுவதும் மதித்தனர். 15 ஆண்டவர் யோசுவாவிடம் கூறியது: 16 “உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிநிற்கும் குருக்களை யோர்தானிலிருந்து வெளியேறுமாறு கட்டளையிடு!” 17 அவ்வாறே, யோசுவா குருக்களுக்கு “யோர்தானிலிருந்து வெளியேறுங்கள்” என்று கட்டளையிட்டார். 18 ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானின் நடுவிலிருந்து வெளியேறி, தங்கள் பாதங்களைக் கரையில் வைத்தவுடன் யோர்தான் நீர் தன்னிடத்திற்குத் திரும்பியது. முன்புபோல் கரைகளைத் தொட்டு ஓடியது. 19 முதல் மாதத்தின் பத்தாம் நாளன்று மக்கள் யோர்தானிலிருந்து வெளியேறினர். அவர்கள் எரிகோவில் கிழக்குப் பகுதியில் இருந்த கில்காலில் தங்கினர். 20 யோர்தானிலிருந்து எடுத்து வந்த பன்னிரு கற்களையும் யோசுவா கில்காலில் நாட்டினார். 21 அவர் இஸ்ரயேலரிடம், “எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ‘ஏன் இந்தக் கற்கள்?’ என்று வினவினால், 22 அவர்களிடம், இவ்வாறு தெரிவியுங்கள்: ‘உலர்ந்த தரை வழியாக இஸ்ரயேலர் இந்த யோர்தானைக் கடந்தனர்.’ 23 உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நாங்கள் கடக்கும் வரை செங்கடலின் நீரை எங்கள் கண்முன் வற்றச் செய்ததுபோல, நீங்கள் கடக்கும் வரையிலும் யோர்தான் நீரை உங்கள் கண்முன் வற்றச் செய்துள்ளார்”. 24 அதனால் உலகின் எல்லா மக்களும் ஆண்டவரின் கை வலிமையுள்ளது என்று அறிவர். நீங்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வாழ்நாள் முழுவதும் அஞ்சுவீர்கள்” என்றார்.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-4
191
யோசுவா
யோசுவா அதிகாரம் – 5 – திருவிவிலியம்
1 மேலை யோர்தானில் இருந்த எமோரிய நாட்டு அரசர்களும் கடலுக்கு அருகிலிருந்த கானானிய மன்னர்களும் ஆண்டவர் யோர்தான் நீரை இஸ்ரயேலர் கண்முன் அவர்கள் கடக்கும் வரையில் வற்றச்செய்தார் என்று கேள்வியுற்றபொழுது, அவர்களின் இதயங்கள் கலக்கமுற்றன. இஸ்ரயேலர்முன் அவர்கள் மனந்தளர்ந்தனர். கில்காலில் விருத்தசேதனம் 2 அப்பொழுது ஆண்டவர் யோசுவாவிடம், “கற்களால் கத்திகள் செய்துகொள். இஸ்ரயேலருக்கு மீண்டும் விருத்தசேதனம் செய்” என்றார். 3 அவ்வாறே யோசுவா கற்களால் கத்திகள் செய்து கொண்டார். கிபயத்துகாரலோத்து என்னுமிடத்தில் அவர் இஸ்ரயேலருக்கு விருத்தசேதனம் செய்தார். 4 விருத்தசேதனம் செய்ததன் காரணம்; எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரிலும் போர்வீரர்களான ஆண்கள் எல்லாரும் வழியில் பாலைநிலத்தில் இறந்துவிட்டனர். 5 வெளியேறிய மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தனர். எகிப்திலிருந்து வெளியேறியபின் வழியில் பாலைநிலத்தில் பிறந்தவர் எவருக்கும் விருத்தசேதனம் செய்யப்படவில்லை. 6 எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரிலும் போர்வீரர்களான ஆண்கள் எல்லாரும் அழியும்வரை, இஸ்ரயேலர் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் அலைந்தனர். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் குரலைக் கேட்கவில்லை. ஆகவே, ஆண்டவர் அவர்களுக்குக் கொடுப்பதாக ஏற்கெனவே அவர்கள் மூதாதையருக்கு உறுதியளித்திருந்த அந்தப் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை அவர்கள் காணக் கூடாதென ஆணையிட்டுக் கூறினார். 7 அழிந்தவர்களுக்குப் பதிலாக அவர்களின் பிள்ளைகளுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்தார். ஏனெனில், வழியில் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை. 8 எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்பெற்று முடிந்ததும், அவர்கள் குணமாகும் வரையில் அங்கேயே பாளையத்தில் தங்கினர். 9 ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்றார். ஆகவே, அந்த இடம் இந்நாள்வரை ‘கில்கால்’* என்று அழைக்கப்படுகின்றது. 10 இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். 11 பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர். 12 நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது.இஸ்ராயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர். யோசுவா கண்ட காட்சி 13 அச்சமயத்தில் யோசுவா எரிகோவில் இருந்தார். அப்போது அவர் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ! ஓர் ஆடவர் அவர் எதிரில் தோன்றினார். கையில் உருவிய கத்தியுடன் அவர்நின்று கொண்டிருந்தார். யோசுவா அவரிடம் சென்று, “நீர் எங்கள் பக்கமா? அல்லது எதிரிகள் பக்கமா?” என்று கேட்டார். 14 அவரோ, “இல்லை, நான் ஆண்டவரின் படைத்தலைவன் என்ற முறையில் இப்பொழுது வந்துள்ளேன்” என்றார். யோசுவா முகம் தரையில்பட வீழ்ந்து வணங்கி அவரிடம், “என் ஆண்டவர் தம் அடியானுக்கு என்ன கூறியுள்ளார்?” என்று கேட்டார். 15 ஆண்டவரின் படைத்தலைவர் யோசுவாவிடம், “உன் காலணியை உன் காலிலிருந்து அகற்று. ஏனெனில், நீ நிற்கும் இடம் புனிதமானது” என்றார். யோசுவாவும் அப்படியே செய்தார். 5:6 எண் 14:28-35. 5:10 விப 12:1-13. 5:12 விப 16:35. 5:9 எபிரேயத்தில், ‘நீக்குதல்’ என்பது பொருள்.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-5
192
யோசுவா
யோசுவா அதிகாரம் – 6 – திருவிவிலியம்
எரிகோவைக் கைப்பற்றல் 1 இஸ்ரயேல் மக்களுக்கு அஞ்சி, எரிகோ இறுக்கமாக அடைக்கப்பட்டது. ஒருவரும் வெளியே வரவுமில்லை; உள்ளே போகவுமில்லை. 2 கடவுள் யோசுவாவிடம், “பார்! எரிகோவையும், அதன் மன்னனையும், அதன் வலிமை மிக்க போர்வீரர்களையும் உன் கையில் ஒப்படைத்துவிட்டேன். 3 போர்வீரர்களாகிய நீங்கள் அனைவரும் நகரை வளைத்துக் கொண்டு அதை ஒருமுறை சுற்றி வாருங்கள். இவ்வாறு, ஆறு நாள்கள் செய்யுங்கள். 4 ஏழு குருக்கள் கொம்புகளால் ஆகிய எக்காளங்களைப் பேழைக்கு முன் ஏந்திச் செல்லட்டும். ஏழாம் நாளில் நீங்கள் நகரை ஏழுமுறை சுற்றி வாருங்கள். அப்பொழுது குருக்கள் எக்காளங்களை முழங்கட்டும். 5 அவர்களுடைய எக்காளத்தின் நீண்ட முழக்கத்தை நீங்கள் கேட்டவுடன்,நீங்கள் அனைவரும் பேரொலி எழுப்புங்கள். அப்பொழுது நகரின் மதில்கள் இடிந்துவிழும். உடனே மக்கள் அவரவர்களுக்கு முன்னே உள்ள பகுதிக்கு ஏறிச்செல்ல வேண்டும்” என்றார். 6 நூனின் மகனாகிய யோசுவா குருக்களை அழைத்து அவர்களிடம், “உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொள்ளுங்கள். ஏழு குருக்களும் ஏழு எக்காளங்களை ஆண்டவரது பேழைக்குமுன் ஏந்திக்கொண்டு போகட்டும்” என்று உரைத்துவிட்டு, 7 மக்களை நோக்கி, “முன்னால் போங்கள்; நகரைச் சுற்றி வாருங்கள். போர்வீரர்கள் ஆண்டவரது பேழைக்குமுன் செல்லட்டும்” என்றார். 8 இவ்வாறு, யோசுவா மக்களுக்குக் கூறியவுடன் கொம்புகளால் ஆகிய ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் முன் எக்காளம் முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். உடன்படிக்கைப் பேழை அவர்களுக்குப் பின் சென்றது. 9 முன்னணி வீரர் எக்காளங்களை ஊதிய குருக்களுக்குமுன் நடந்து சென்றனர். பின்னணி வீரர் பேழைக்குப்பின் நடந்து சென்றனர். எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின. 10 யோசுவா மக்களை நோக்கி, “நான் சொல்லும் நாள்வரை நீங்கள் ஆரவாரம் செய்யாமலும், யாதோர் ஓசை எழுப்பாமலும் இருங்கள். உங்கள் வாயினின்று ஒரு வார்த்தையும் புறப்படலாகாது. நான் கூறும்பொழுது ஆர்ப்பரியுங்கள்” என்று கட்டளையிட்டார். 11 ஆண்டவரின் பேழை நகரை ஒருமுறை சுற்றி வந்தது. பின்னர், அவர்கள் பாளையத்திற்கு வந்து அங்கே இரவைக் கழித்தார்கள். 12 யோசுவா அதிகாலையில் எழுந்தார். குருக்கள் ஆண்டவரின் பேழையைச் சுமந்து சென்றார்கள். 13 கொம்புகளாலான ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் பேழைக்குமுன் அவற்றை முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். முன்னணி வீரர் அவர்களுக்கு முன் நடந்து சென்றனர். பின்னணி வீரர் ஆண்டவரின் பேழைக்குப்பின் நடந்து சென்றனர். எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின. 14 இரண்டாம் நாளிலும் அவர்கள் நகரை ஒருமுறை சுற்றி வந்தனர். பின்னர், பாளையத்திற்குத் திரும்பினர். இவ்வாறு, ஆறுநாள்கள் செய்தனர். 15 ஏழாம் நாள் வைகறையில் அவர்கள் எழுந்து முன்போலவே நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். அன்று மட்டும் நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். 16 ஏழாவது முறை குருக்கள் எக்காளங்களை முழங்குகையில் யோசுவா மக்களிடம், “இப்பொழுது ஆரவாரம் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்களிடம் நகரை ஒப்படைத்துவிட்டார். 17 நகரும் அதனுள் இருக்கும் அனைத்தும் ஆண்டவருக்குரியன. ஆகவே, அவை அழிவுக்குரியன. விலைமாது இராகாபும் அவருடன் வீட்டில் உள்ள அனைவரும் உயிருடன் இருப்பர். ஏனெனில், நாம் அனுப்பிய போர்வீரர்களை அவர் ஒளித்துவைத்தார். 18 நீங்கள் அழிந்து போகாதபடி கைப்பற்றிய பொருள்களிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எதையாவது கவர்ந்தால், இஸ்ரயேலின் பாளையத்தையும் அழிவுக்குரியதாக்கிக் கலங்கச் செய்வீர்கள். 19 எல்லா வெள்ளியும் பொன்னும் வெண்கல இரும்புப் பாத்திரங்களும் ஆண்டவருக்குப் புனிதமானவை. எனவே,ஆண்டவரின் கருவூலத்தைச் சேரும்” என்றார். 20 மக்கள் ஆரவாரம் செய்தனர். எக்காளங்கள் முழங்கின. எக்காளத்தின் ஓசையைக் கேட்ட மக்கள் பேரொலி எழுப்பினர். மதில் இடிந்து விழுந்தது. மக்கள் நகரினுள் நுழைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு முன்னிருந்த பகுதியைத் தாக்கி நகரைக் கைப்பற்றினர். 21 நகரில் இருந்த அனைத்தையும் அழித்தனர். ஆண்பெண், இளைஞர் முதியோர், ஆடு, மாடு கழுதை அனைத்தையும் வாள் முனையால் அழித்தனர். 22 நாட்டை உளவு பார்த்த இரண்டுபேரிடம் யோசுவா, “விலைமாதின் வீட்டுக்குச் செல்லுங்கள். அவருக்கு வாக்களித்தபடி அங்கிருந்து அப்பெண்ணையும், அவருக்குரிய அனைத்தையும் வெளியே கொண்டுவாருங்கள்” என்றார். 23 உளவு பார்த்த இளைஞர்கள் சென்றனர். இராகாபையும் அவர் தந்தையையும் தாயையும் அவர் சகோதரர்களையும் அவருக்கிருந்த அனைத்தையும் வெளியே கொண்டுவந்தனர். அவருடைய உறவினர்களையும் அழைத்து வந்தனர். அவர்களை இஸ்ரயேலின் பாளையத்திற்கு வெளியே தங்கச் செய்தனர். 24 நகரையும் அதனுள் இருந்த அனைத்தையும் நெருப்பிலிட்டு எரித்தனர். வெள்ளியையும், பொன்னையும், வெண்கல இரும்புப் பாத்திரங்களையும் மட்டுமே ஆண்டவரது வீட்டின் கருவூலத்தின் சேர்த்தனர். 25 விலைமாது இராகாபையும் அவர் தந்தையின் வீட்டாரையும் அவரைச் சார்ந்த அனைவரையும் யோசுவா உயிருடன் காப்பாற்றினார். அவர் இஸ்ரயேல் நடுவில் இன்றுவரை வாழ்கின்றார். ஏனெனில், எரிகோவை உளவு பார்க்க அனுப்பப்பட்ட தூதர்களை அவர் ஒளித்துவைத்தார். 26 அச்சமயம் யோசுவா எழுந்து, “எரிகோ என்னும் இந்நகரை மீண்டும் கட்டும் மனிதன் சபிக்கப்பட்டவன். அவன் கடைக்கால் இடுகையில் தன் முதல் மகனையும், அதன் வாயிற்கால்களை இடுகையில் தன் கடைசி மகனையும் இழப்பான்” என்றார். 27 ஆண்டவர் யோசுவாவுடன் இருந்தார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவிற்று. 6:25 எபி 11:31. 6:26 1 அர 16:34.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-6
193
யோசுவா
யோசுவா அதிகாரம் – 7 – திருவிவிலியம்
ஆக்கான் செய்த பாவம் 1 இஸ்ரயேல் மக்கள் அழிவுக்குரியவைபற்றிய கட்டளையை மீறினார்கள். யூதா குலத்தைச் சார்ந்த செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் என்பவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றைக் கவர்ந்து கொண்டான். இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டது. 2 பெத்தேலுக்குக் கிழக்கே, பெத்தாவேனுக்கு அருகில் இருந்த ஆயி என்னும் நகருக்கு எரிகோவிலிருந்து யோசுவா ஆள்களை அனுப்பினார். அவர்களிடம், “சென்று, நாட்டை உளவறிந்து வாருங்கள்” என்றார். அவர்கள் சென்று ஆயி நகரை உளவறிந்தார்கள். 3 அவர்கள் திரும்பி வந்து யோசுவாவிடம், “மக்கள் எல்லாரையும் அனுப்பவேண்டாம். இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் சென்று ஆயி நகரைத் தாக்கட்டும். மக்கள் எல்லாரும் அங்குச் சென்று களைப்படைய வேண்டாம். ஏனெனில், அங்குள்ளவர்கள் சிலரே” என்றனர். 4 அவ்வாறே, மக்களிலிருந்து மூவாயிரம் பேர் சென்றனர். ஆனாலும், அவர்கள் ஆயி நகரின் ஆள்களுக்குமுன் தோற்று ஓடினார்கள். 5 ஆயி நகரின் ஆள்கள் நகரின் வாயிலிலிருந்து செபாரிம் வரை அவர்களைத் துரத்திச்சென்று மலைச்சரிவில் அவர்களில் முப்பத்தாறு பேரைக் கொன்றார்கள். எனவே, மக்களின் நெஞ்சம் உறுதி இழந்து தண்ணீர்போல் ஆனது. 6 யோசுவா தம் ஆடைகளைக் கிழித்துக்கொள்ள, அவரும் அவருடன் இஸ்ரயேலின் முதியோரும் ஆண்டவரின் பேழைக்குமுன் மாலைவரை தரையில் முகம்குப்புற விழுந்து கிடந்தனர். தம் தலைமீது புழுதியைப் போட்டுக் கொண்டனர். 7 யோசுவா, “ஐயோ, என் தலைவராகிய ஆண்டவரே! மக்களை எமோரியர் கையில் ஒப்படைத்து, அழிப்பதற்காகவா யோர்தானைக் கடக்குமாறு செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்பாலேயே மனநிறைவோடு தங்கி இருந்திருக்க வேண்டும். 8 என் ஆண்டவரே! இஸ்ரயேலர் தங்கள் எதிரிகளின்முன் புறமுதுகுகிட்டு ஓடிவிட்டார்களே! நான் இப்போது என்ன சொல்வேன்? 9 கானானியரும் நாட்டில் வாழும் அனைவரும் இதைக் கேட்டு எங்களைச் சூழ்ந்துகொண்டு எங்கள் பெயரை உலகிலிருந்தே அழித்துவிடுவார்களே? அப்போது உமது பெருமை மிக்க பெயரைக் காக்க என்ன செய்வீர்?” என்றார். 10 ஆண்டவர் யோசுவாவிடம், “எழுந்திரு! ஏன் முகம்குப்புற விழுந்து கிடக்கின்றாய்? 11 இஸ்ரயேலர் பாவம் செய்தனர். நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டனர். அவர்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எடுத்துக்கொண்டனர்; களவுசெய்தனர்; வஞ்சித்தனர்; அவற்றைத் தங்கள் பொருள்களுடன் சேர்த்துக் கொண்டனர். 12 ஆகவேதான், இஸ்ரயேல் மக்கள் தங்கள் எதிரிகளின்முன் நிற்க முடியவில்லை; புறமுதுகிட்டு ஓடினர். அவர்கள் அழிவுக்குரியவர்கள். உங்கள் நடுவிலிருந்து அழிவுக்குரியவற்றை நீங்கள் அழிக்காவிடில் நான் இனி உங்களுடன் இருக்கமாட்டேன். 13 எழுந்திரு. மக்களைப் புனிதமாக்கு; ‘நாளையதினம் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறு. ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இஸ்ரயேலரே! உங்களிடையே உள்ள அழிவுக்குரியவற்றை உங்களிடமிருந்து நாங்கள் விலக்கும்வரை உங்கள் எதிரிகளின்முன் உங்களால் நிற்க முடியாது. 14 காலையில் நீங்கள் உங்கள் குலங்களுக்கு அருகில் வருவீர்கள். எந்தக் குலத்தைக் கடவுள் குறிப்பிடுகிறாரோ அந்தக் குலம் குடும்பம் குடும்பமாக அருகில் வரும். எந்தக் குடும்பத்தைக் கடவுள் குறிப்பிடுகிறாரோ, அந்தக் குடும்பம் வீடுவீடாக வரும். எந்த வீட்டைக் குறிப்பிடுகின்றாரோ, அந்த வீட்டார் ஆள் ஆளாக வருவர். 15 அழிவுக்குரியவற்றுடன் பிடிபடுபவனும் அவனுடையதனைத்தும் நெருப்பில் எரிக்கப்படும். ஏனெனில், அவன் ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி இஸ்ரயேலுக்குத் தீமை செய்தான்” என்றார். 16 யோசுவா காலையில் எழுந்து இஸ்ரயேலைக் குலம் குலமாக முன்னே வரச்செய்தார். யூதா குலம் பிடிபட்டது. 17 எனவே, அவர் யூதா குலத்தை முன்னே வரச்செய்தார். செராகின் குடும்பம் பிடிபட்டது. ஆகவே, அவர் செராகின் குடும்பத்தை வீடு வீடாக முன்னே வரச் செய்தார். சபதி வீடு பிடிபட்டது. 18 அவனது வீட்டாரை ஆள் ஆளாக முன்னே வரச்செய்தார். செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் பிடிபட்டான். அவன் யூதா குலத்தைச் சார்ந்தவன். 19 யோசுவா ஆக்கானிடம், “என் மகனே! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு மாட்சி செலுத்தி அவருக்கு நன்றி கூறு! நீ என்ன செய்தாய் என்பதை எனக்குச் சொல். என்னிடமிருந்து மறைக்காதே” என்றார். 20 ஆக்கான் யோசுவாவுக்கு மறுமொழியாக, “உண்மையில் நான் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன். நான் செய்தது இதுவே: 21 அழிவுக்குரியவற்றுள்ஓர் அழகான பாபிலோனிய மேலாடையையும், ஒரு கிலோ முந்நூறு கிராம் வெள்ளியையும், ஐந்நூற்று எழுபத்தைந்து கிராம் தங்கக் கட்டியையும் கண்டேன். அவற்றின்மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக்கொண்டேன். எனது கூடாரத்திற்குள் வெள்ளி அடிப்பகுதியில் இருக்க அவற்றைத் தரையில் புதைத்து வைத்துள்ளேன்” என்றான். 22 யோசுவா தூதரை அனுப்பினார். அவர்கள் கூடாரத்திற்குள் விரைந்து சென்றனர். இதோ! வெள்ளி அடிப்பகுதியில் இருக்க, அவை அவனது கூடாரத்திற்குள் தரையில் புதைக்கப்பட்டிருந்தன. 23 அவர்கள் கூடாரத்திலிருந்து அவற்றைக் கைப்பற்றினர். அவர்கள் அவற்றை யோசுவாவிடமும் எல்லா இஸ்ரயேல் மக்களிடமும் கொண்டுவந்து ஆண்டவர் திருமுன் பரப்பி வைத்தனர். 24 செராகின் மகன் ஆக்கான், வெள்ளி, மேலாடை, தங்கக்கட்டி, அவனுடைய புதல்வர், புதல்வியர், அவனுடைய மாடு, கழுதை, ஆடு, கூடாரம் ஆகிய அவனுக்கிருந்த அனைத்தையும் யோசுவா கைப்பற்றி அவர்களோடு எல்லா இஸ்ரயேல் மக்களையும் ஆக்கோர் பள்ளத்தாக்கிற்குக் கூட்டி வந்தார். 25 யோசுவா, “ஏன் நீ எங்களுக்குத் தொல்லை வருவித்தாய்? இன்றே ஆண்டவரும் உனக்குத் தொல்லை வருவிப்பார்” என்றார். இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர். அப்பொருள்களைத் தீக்கிரையாக்கி அவனைச் சார்ந்தவர்களைக் கல்லால் எறிந்து கொன்றனர். 26 அவன்மீது ஒரு பெரும் கற்குவியல் எழுப்பினர். அது இந்நாள்வரை உள்ளது. ஆண்டவர் தம் கடுஞ்சினத்தைத் தணித்துக்கொண்டார். ஆதலால், இந்நாள் வரை அவ்விடத்தின் பெயர் “ஆக்கோர்* பள்ளத்தாக்கு” என அழைக்கப்படுகின்றது. 7:26 எபிரேயத்தில், ‘பேரிடர்’ என்பது பொருள்.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-7
194
யோசுவா
யோசுவா அதிகாரம் – 8 – திருவிவிலியம்
ஆயி நகரைக் கைப்பற்றல் 1 ஆண்டவர் யோசுவாவிடம், “அஞ்சாதே, கலங்காதே; உன்னுடன் எல்லாப் போர்வீரர்களையும் சேர்த்துக் கொள். ஆயியை நோக்கிப் புறப்பட்டுச்செல்! இதோ! ஆயியின் மன்னனையும், அதன் மக்களையும், அவனது நகரையும் அவனது நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன். 2 எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல் ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்வாய்; கைப்பற்றப்பட்ட பொருள்களையும் கால்நடைகளையும் உங்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள். நகருக்குப் பின்புறத்தில் ஒரு பதுங்கிடம் அமை” என்றார். 3 அவ்வாறே, யோசுவாவும் எல்லாப் போர்வீரர்களும் ஆயிக்குப் புறப்படத் தயாராயினர். யோசுவா முப்பதாயிரம் வலிமை வாய்ந்த போர் வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினார். 4 அவர்களிடம், “பாருங்கள், நீங்கள் அந்நகருக்குப் பின்புறம் பதுங்கி இருங்கள். நகரிலிருந்து மிகவும் தொலையில் போய்விடாதீர்கள். அனைவரும் தயாராக இருங்கள். 5 நானும் என்னுடன் இருக்கும் மக்கள் எல்லாரும் நகருக்கு அருகில் வருவோம். நம்மைப் பிடிக்க முன்புபோல் அவர்கள் வெளியே வருவார்கள். அவர்கள்முன் நாங்கள் ஓடுவோம். 6 அவர்கள் எங்கள்பின் வெளியே வருவார்கள். நகரிலிருந்து வெகுதூரம் வரும்வரை அவர்களைக் கொண்டுவந்து விடுவோம். அவர்கள் “முன்புபோலத் தப்பி ஓடுகின்றார்கள்” என்று சொல்லிக்கொள்வார்கள். நாங்கள் அவர்கள் முன் ஓடுவோம். 7 நீங்கள் பதுங்கிடத்திலிருந்து எழுந்து நகரைக் கைப்பற்றுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அதை உங்கள் கையில் கொடுப்பார். 8 நீங்கள் நகரைக் கைப்பற்றியதும், அதை நெருப்பினால் எரியுங்கள். கடவுள் கூறியது போலவே செய்யுங்கள். உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கவனமாயிருங்கள்” என்றார். 9 யோசுவா அவர்களை அனுப்ப, அவர்கள் பதுங்கிடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் ஆயிக்கு மேற்காகப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் பதுங்கிக்கொண்டனர். யோசுவா இரவில் மக்கள் நடுவே தங்கினார். 10 யோசுவா வைகறையில் எழுந்து மக்களை எண்ணினார். அவரும் இஸ்ரயேலின் முதியோரும் மக்களுக்கு முன்னே ஆயிக்குச் சென்றனர். 11 அவருடன் இருந்த போர்வீரர்கள் எல்லாரும் புறப்பட்டுச் சென்று, அந்நகருக்கு அருகில் வந்தனர். அவர்கள் ஆயிக்கு வடக்கே பாளையம் இறங்கினார்கள். அவர்களுக்கும் ஆயிக்கும் இடையில் ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. 12 யோசுவா ஏறக்குறைய ஐயாயிரம் பேரைக் கூட்டிக் கொண்டு சென்று பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் நகருக்குக் கிழக்கே பதுங்கிடத்தில் தங்கச் செய்தார். 13 மக்கள் நகருக்கு வடக்காகவும், பள்ளத்தாக்கிற்குக் கிழக்காகவும் இருந்த இடத்தில் பாளையம் இறங்கினார்கள். யோசுவா அவ்விரவைப் பள்ளத்தாக்கில் கழித்தார். 14 ஆயியின் மன்னன் இதைக் கண்டதும், அந்நகர மக்கள் காலையில் விரைந்து எழுந்து இஸ்ரயேலுடன் போரிட வெளியே வந்தனர். அவனும் மக்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு, அராபாவுக்குமுன் வந்தனர். நகருக்குப் பின்புறம் எதிரிகள் பதுங்கியிருந்ததை அவன் அறியவில்லை. 15 யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அவர்கள் முன் தோற்றவர்கள்போல் பாலைநிலம் நோக்கி ஓடினார்கள். 16 நகரில் இருந்த மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி அவர்களைத் துரத்தினர். அவர்கள் யோசுவாவின்பின் ஓட, நகரிலிருந்து பிரிக்கப்பட்டனர். 17 இஸ்ரயேலைத் துரத்தி ஆயி, பெத்தேல் இவற்றிலிருந்து வெளியே வராதவன் எவனும் இல்லை. அனைவரும் நகரைத் திறந்துவிட்டபடியே வெளியேறி இஸ்ரயேலின் பின்னே ஓடினர். 18 ஆண்டவர் யோசுவாவிடம், “உன் கையிலுள்ள ஈட்டியை ஆயியை நோக்கி ஓங்கு. ஏனெனில், நான் அதை உன் கையில் ஒப்படைப்பேன்” என்றார். அவ்வாறே, யோசுவா தம் கையில் இருந்த ஈட்டியை ஆயியை நோக்கி ஓங்கினார். 19 பதுங்கியிருந்தவர் வேகமாகத் தம் இடத்திலிருந்து எழுந்தனர். யோசுவா கையை ஓங்கியதும் அவர்கள் வேகமாக ஓடிவந்து நகரினுள் புகுந்து அதைக் கைப்பற்றி விரைவாக அந்நகரை நெருப்பால் எரித்தனர். 20 ஆயியின் மக்கள் திரும்பிப் பார்த்தனர். இதோ நகரினின்று எழும்பிய புகை விண்ணை நோக்கிப் போவதைக் கண்டனர். எப்பக்கமும் தப்பியோட அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. பாலைநிலம் நோக்கி ஓடிய இஸ்ரயேல் மக்கள் தங்களைத் துரத்தியவர்மீது திரும்பிப் பாய்ந்தனர். 21 பதுங்கியிருந்தவர்கள் நகரைக் கைப்பற்றியதையும் ஆயியின் புகை மேலே எழும்புவதையும் கண்ட யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் திரும்பிச்சென்று ஆயி மக்களைத் தாக்கினார். 22 இந்நேரத்தில் பதுங்கியிருந்தோரும் நகரிலிருந்து வெளியே வந்து அவர்களைத் தாக்கினர். எனவே, இருபக்கமும் இஸ்ரயேலருக்கு இடையே அவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களுள் ஒருவனும் உயிரோடு தப்பிக்காதபடி அவர்கள் தாக்கப்பட்டனர். 23 இஸ்ரயேலர் ஆயியின் மன்னனை உயிருடன் பிடித்து யோசுவாவிடம் கொண்டுவந்தனர். 24 இஸ்ரயேலர் ஆயி மக்கள் அனைவரையும் பாலை நிலத்தில் துரத்திச் சென்று கொன்றனர்; அனைவரையும் வாள் முனையில் அடியோடு அழித்தனர். பின்னர், இஸ்ரயேலர் அனைவரும் ஆயிக்குத் திரும்பி அதையும் வாள்முனைக்கு இரையாக்கினர். 25 ஆண்களும் பெண்களுமாக அன்று இறந்தவர் பன்னிரண்டாயிரம் பேர். ஆயியின் ஆண்கள் எல்லாருமே அன்று வீழ்ந்தனர். 26 ஆயியின் எல்லா மக்களையும் கொல்லும் வரை, யோசுவா ஈட்டியுடன் ஓங்கிய கையை மடக்கவில்லை. 27 யோசுவாவுக்கு ஆண்டவர் கூறியபடியே, கால்நடையையும், நகரின் பொருள்களையும் மட்டும் இஸ்ரயேல் மக்கள் கொள்ளைப் பொருளாக எடுத்துக் கொண்டனர். 28 யோசுவா ஆயியைத் தீக்கிரையாக்கி, அது என்றென்றும் அழிவின் மேடாக இருக்குமாறு செய்தார். 29 அது இன்றுவரை அப்படியே உள்ளது. அவர் ஆயி மன்னனைத் தூக்கிலேற்றினார். கதிரவன் சாய்ந்தவுடன் யோசுவாவின் கட்டளைப்படி அவர்கள் அவன் உடலைத் தூக்கிலிருந்து இறக்கி, நகரின் நுழைவாயிலில் எறிந்தார்கள். அதன் மீது பெரும் கற்குவியலை எழுப்பினர். அது இன்றுவரை உள்ளது. ஏபால் மலையில் திருச்சட்டம் வாசித்தல் 30 இதன்பின் யோசுவா இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏபால் மலையில் ஒரு பீடம் எழுப்பினார். 31 அது ஆண்டவரின் ஊழியராகிய மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடி அமைந்தது. மோசேயின் திருச்சட்டநூலில் எழுதியுள்ளது; ‘இரும்புக் கருவிகளைக் கொண்டு செதுக்காத முழுக் கற்களால் பீடம் அமைக்கப்பட வேண்டும்.’ அவர்கள் அதன்மீது ஆண்டவருக்கு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தனர். 32 அங்குக் கற்களின் மீது மோசேயின் கட்டளையை யோசுவா இஸ்ரயேலர் முன்னிலையில் எழுதினார். 33 இஸ்ரயேல் மக்களும் வெளிநாட்டவரும் முதியோர், அலுவலர், நீதிபதிகளுடன் பேழைக்கு முன்னே இருமருங்கிலும் நின்றுகொண்டிருந்தனர். லேவியக் குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஏந்திக்கொண்டிருந்தனர். பாதிப்பேர் கெரிசிம் மலை முன்பும், பாதிப்பேர் ஏபால் மலை முன்பும், கடவுளின் ஊழியராகிய மோசே ஏற்கெனவே கட்டளையிட்டபடி, இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி தர நின்றுகொண்டிருந்தனர். 34 அதன்பின் திருச்சட்டநூலில் எழுதியுள்ள அனைத்து ஒழுங்குகளின்படி ஆசிகளையும், சாபங்களையும், சட்டத்தின் எல்லா நியமங்களையும் அவர் வாசித்தார். 35 மோசே கட்டளையிட்ட எல்லாவற்றினின்றும் இஸ்ரயேல் சபைமுன் யோசுவா வாசிக்காதது எதுவுமில்லை. அப்போது பெண்கள், குழந்தைகள், அவர்களிடையே வாழ்ந்த அயலார் ஆகியோரும் உடன் இருந்தனர். 8:30-32 இச 27:2-8. 8:31 விப 20:25. 8:33-35 இச 11:29; 27:11-14.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-8
195
யோசுவா
யோசுவா அதிகாரம் – 9 – திருவிவிலியம்
கிபயோனியர் யோசுவாவை ஏமாற்றல் 1 யோர்தானுக்கு இப்பக்க மலைப்பகுதிகளிலும் பள்ளத்தாக்கிலும் பெருங்கடலின் கரை முழுவதிலும் லெபனோனின் முன்பக்கம்வரை இருந்த மன்னர்கள் அனைவரும் இத்தியர், எமோரியர், கானானியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரும் இதைப்பற்றிக் கேள்வியுற்றனர். 2 யோசுவாவுடனும் இஸ்ரயேலருடனும் போர் தொடுக்க அவர்கள் ஒன்றுகூடினர். 3 கிபயோன் குடிமக்கள் எரிகோவிற்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைப் பற்றிக் கேள்வியுற்றனர். 4-5 கிபயோன் குடிமக்கள் தூதர் போல் தந்திரமாகச் சென்றார்கள். அவர்கள் தங்கள் கழுதைகளின் மீது கிழிந்த மூட்டைகளையும், பழைய கிழிந்து தைக்கப்பட்ட திராட்சை இரசத் தோல்பைகளையும் ஏற்றிக் கொண்டு, பழைய தைக்கப்பட்ட காலணிகளையும், பழைய ஆடைகளையும் அணிந்துகொண்டு, காய்ந்து சாம்பல் பூத்துவிட்ட அப்பங்களை உணவாக எடுத்துக்கொண்டு சென்றனர். 6 அவர்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் சென்றார்கள். அவர்கள் யோசுவாவிடமும் இஸ்ரயேல் மக்களிடமும், “நாங்கள் தொலைநாட்டிலிருந்து வருகின்றோம். இப்பொழுது எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ளுங்கள்” என்றனர். 7 இஸ்ரயேல் மக்கள் இவ்வியரிடம், “நீங்கள் எங்கள் நடுவில் வாழ்கின்றீர்கள். நாங்கள் உங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ளமாட்டோம்” என்றார்கள். 8 அவர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உங்கள் பணியாளர்கள்” என்றனர். யோசுவா அவர்களிடம் “நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டார். 9 அவர்கள் அவரிடம், “மிகவும் தொலையில் உள்ள நாட்டிலிருந்து உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரால் உங்கள் பணியாளர்கள் வந்திருக்கின்றார்கள். ஏனெனில், அவரது பெயரைப் பற்றியும், அவர் எகிப்து நாட்டில் செய்த அனைத்தைப்பற்றியும் கேள்விப்பட்டோம். 10 யோர்தானுக்கு அப்பால் வாழ்ந்த எஸ்போன் மன்னன் சீகோன், அஸ்தரோத்திலிருந்த பாசான் மன்னன் ஓகு ஆகிய இரண்டு எமோரிய மன்னர்களுக்கும் அவர் என்ன செய்தார் என்பதைப் பற்றியும் கேள்வியுற்றோம். 11 எங்கள் பெரியோர்களும் எங்கள் நாட்டில் வாழ்வோர் அனைவரும் எங்களிடம், “உங்கள் கைகளில் வழி உணவை எடுத்துக்கொண்டு அவர்களைச் சந்திக்கச் செல்லுங்கள். அவர்களிடம் நாங்கள் உங்கள் பணியாளர்கள். இப்போது எங்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள் என்று கூறுங்கள்” என்றனர். 12 நாங்கள் உங்களிடம் வர எங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, வழி உணவாக எடுத்துக் கொண்ட இந்த அப்பம் சூடாக இருந்தது. இப்போதோ காய்ந்து சாம்பல் பூத்துவிட்டது. 13 “இவை திராட்சை ரசத் தோல்பைகள். நாங்கள் நிரப்பிய போது புதியனவாக இருந்தன. இப்போதோ கிழிந்துவிட்டன. எங்கள் ஆடைகளும் எங்கள் மிதியடிகளும் மிகநெடும் பயணத்தினால் கிழிந்து விட்டன” என்றனர். 14 இஸ்ரயேல் மக்கள் அவர்களது உணவை எடுத்துக் கொண்டனர்; ஆண்டவரது வார்த்தையை நாடவில்லை. 15 யோசுவா கிபயோன் மக்களை நல்லிணக்கத்தோடு ஏற்று, அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அவர்களை வாழவிட்டார். சபைத்தலைவர்கள் அவர்களுக்கு ஆணையிட்டு வாக்களித்தனர். 16 அவர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட மூன்றாம் நாள் இஸ்ரயேல் மக்கள் அவர்கள் தங்களுக்கு அருகில் உள்ளவர்கள் என்றும், அடுத்து வாழ்பவர்கள் என்றும் கேள்வியுற்றனர். 17 இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு, மூன்றாம் நாள் அவர்கள் நகருக்கு வந்தனர். கிபயோன், கெபிரா, பெயரோத்து, கிரியத்து எயாரிம் ஆகியவையே அந்நகர்கள். 18 இஸ்ரயேல் மக்கள் அவர்களைக் கொல்லவில்லை. ஏனெனில், சபையின் தலைவர்கள் அவர்களுக்கு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் ஆணையிட்டு வாக்களித்திருந்தார்கள். சபை முழுவதும் தலைவர்களுக்கு எதிராக முணுமுணுத்தது. 19 எல்லாத் தலைவர்களும் சபையின் அனைவரிடமும், “அவர்களுக்கு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளித்துவிட்டோம். இப்பொழுது நாங்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. 20 நாம் இவ்வாறு செய்வோம்: அவர்களை வாழ விடுவோம். நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் குறித்து ஆண்டவரின் சினம் நம்மீது விழாமலிருக்கும்” என்றனர். 21 மேலும், தலைவர்கள் அவர்களிடம், “அவர்கள் வாழட்டும். ஆனால், சபை முழுவதற்கும் அவர்கள் மரம் வெட்டுபவர்களாகவும் தண்ணீர் எடுப்பவர்களாகவும் ஆகட்டும்” என்று கூறித் தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொண்டனர். 22 யோசுவா அவர்களை அழைத்து, “நீங்கள் எங்களுக்கு மிக அருகில் வாழ்கின்றீர்களே! பின்னர், “நாங்கள் உங்களிடமிருந்து வெகு தொலையில் வாழ்பவர்கள்” என்று கூறி எங்களை ஏன் ஏமாற்றினீர்கள்? 23 நீங்கள் இப்போது சபிக்கப்பட்டவர்கள். உங்கள் அடிமைத்தனம் நீங்காது. மரம் வெட்டுபவர்களாகவும் என் கடவுளின் இல்லத்திற்குத் தண்ணீர் எடுப்பவர்களாகவும் இருப்பீர்கள்” என்றார். 24 அவர்கள் யோசுவாவிற்கு மறுமொழியாக, “உங்கள் கடவுளாகிய ஆண்டவர், தம் ஊழியர் மோசேக்கு எல்லா நாட்டையும் உங்களுக்குக் கொடுக்கவும், உங்கள் முன்னிலையில் நாட்டில் வாழ்பவர்கள் அனைவரையும் அழிக்கவும் கட்டளையிட்டார் என்று உங்கள் பணியாளர்களுக்குக் கூறப்பட்டது. ஆகவே, நாங்கள் மிகவும் அஞ்சி இவ்வாறு செய்தோம். 25 இப்பொழுது இதோ! நாங்கள் உங்கள் கையில் உள்ளோம். எது நல்லதும் நீதியும் ஆனதோ அதைச் செய்யுங்கள்” என்றனர். 26 அவர் அவர்களுக்குச் செய்தது; அவர் இஸ்ரயேல் மக்களின் கைகளினின்று அவர்களை விடுவித்தார். இஸ்ரயேல் மக்கள் அவர்களைக் கொல்லவில்லை. 27 யோசுவா, அந்நாளில் அவர்களை மரம் வெட்டுபவர்களாகவும், சபைக்கும் ஆண்டவரின் பீடத்திற்கும் தண்ணீர் எடுப்பவர்களாகவும் நியமித்தார். அவர் அவர்களுக்குக் குறித்த இடத்தில் இன்றுவரை அவர்கள் உள்ளனர். 9:7 விப 23:32; 34:12; இச 7:2. 9:10 எண் 21:21-35.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-9
196
யோசுவா
யோசுவா அதிகாரம் – 10 – திருவிவிலியம்
யோசுவா எமோரியரைத் தோற்கடித்தல் 1 யோசுவா ஆயியைக் கைப்பற்றி அழித்தார் என்றும், எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்தது போல ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்தார் என்றும் கிபயோன் குடிமக்கள் இஸ்ரயேலுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களிடையே வாழ்கின்றார்கள் என்றும், எருசலேமின் மன்னன் அதோனிசெதக்கு கேள்விப்பட்டான். 2 அவன் மிகவும் அச்சமுற்றான். ஏனெனில், பெருநகரான கிபயோன் அரச நகர்களில் ஒன்றாகவும் ஆயியைவிடப் பெரிய நகராகவும் அதன் மக்கள் அனைவரும் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தும் அது சமாதானம் செய்து கொண்டது. 3 எபிரோன் மன்னன் ஓகாம், யார்முத்து மன்னன் பிராம், இலாக்கிசு மன்னன் யாப்பியா, எக்லோன் மன்னன் தெபீர் ஆகியோருக்கு எருசலேம் மன்னன் அதோனிசெதக்கு 4 “எனக்கு உதவி செய்ய வாருங்கள். நாம் கிபயோனைத் தாக்குவோம். ஏனெனில், அது யோசுவாவுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் சமாதானம் செய்து கொண்டுள்ளது” என்று சொல்லியனுப்பினான். 5 அவ்வாறே, எமோரிய இனத்தைச் சார்ந்த எருசலேம், ஏபிரோன், யார்முத்து, இலாக்கீசு, எக்லோன் ஆகியவற்றின் ஐந்து மன்னர்களும் ஒன்றுகூடி அவர்கள் படைகளுடன் சென்றார்கள்; கிபயோனுக்கு எதிரில் பாளையம் இறங்கி அதன்மீது போர்தொடுத்தார்கள். 6 கிபயோன் மக்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவுக்குச் சொல்லி அனுப்பியது: “உம் பணியாளர்களைக் கைவிடாதீர். விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றும். எங்களுக்கு உதவி செய்யும். ஏனெனில், மலைப்பகுதியில் வாழும் எல்லா எமோரிய மன்னர்களும் எங்களை எதிர்க்க ஒன்று கூடியுள்ளனர்.” 7 எனவே, கில்காலிலிருந்து, யோசுவா தம் போர்வீரர்கள் அனைவருடனும் வலிமைமிக்க வீரர்களுடனும் புறப்பட்டுச் சென்றார். 8 ஆண்டவர் யோசுவாவிடம், “அவர்கள் முன் அஞ்சாதே; ஏனெனில், அவர்களை உன்கையில் ஒப்படைத்துள்ளேன். அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்” என்றார். 9 யோசுவா கில்காலிலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து, அவர்களை நோக்கித் திடீரென வந்தார். 10 ஆண்டவர் இஸ்ரயேல்முன் எமோரியரைத் துன்புறுத்தினார்; கிபயோனில் அவர்களை வன்மையாகத் தாக்கித் தோல்வியுறச் செய்தார்; அவர் அவர்களைப் பெத்கோரோனின் மேட்டு வழியே அசேக்கா, மக்கேதா வரை துரத்தித் தாக்கினார். 11 அவர்கள் இஸ்ரயேலரிடமிருந்து பெத்கோரோனுக்குத் தப்பி ஓடுகையில் ஆண்டவர் அவர்கள்மீது அசேக்காவரை பெரும் கற்களை வானத்திலிருந்து பொழிந்தார். இஸ்ரயேலரின் வாளால் கொல்லப்பட்டவர்களைவிடக் கல்மழையால் இறந்தவர்கள் அதிகம். 12 கடவுள் எமேரியரை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்த அன்று யோசுவா ஆண்டவரிடம் பேசினார். அவர் இஸ்ரயேலர் கண்முன், “கதிரவனே! கிபயோனில் நில்! நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில்” என்றார். 13 அவர்கள் தம் எதிரியின் மீது வஞ்சம் தீர்க்கும்வரை கதிரவனும் நிலவும் அசையாது நின்றன. இது யாசாரின் நூலில் எழுதப்படவில்லையா? ‘கதிரவன் நடுவானில் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது இறங்குவதற்கு விரையவில்லை’. 14 ஆண்டவர் மனிதக் குரலைக் கேட்டு, இஸ்ரயேலுக்காகப் போரிட்ட அந்நாளைப்போன்று அதற்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை. 15 யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர். 16 அந்த ஐந்து எமோரிய மன்னர்களும் தப்பி ஓடி, மக்கேதாவில் ஒரு குகையில் ஒளிந்து கொண்டார்கள். 17 அவர்கள் மக்கேதாக் குகையில் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பற்றி யோசுவாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. 18 யோசுவா, “குகையின் வாயிலில் பெருங்கற்களை வையுங்கள். அவர்களைக் காவல் காக்க அதற்கருகில் ஆள்களை நிறுத்துங்கள். 19 நீங்கள் நிற்காதீர்கள். உங்கள் பகைவர்களைத் துரத்திச் செல்லுங்கள். அவர்களைப் பின்புறத்திலிருந்து தாக்குங்கள். அவர்களைத் தங்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்காதீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்” என்றார். 20 யோசுவாவும் இஸ்ரயேல் மக்களும் அவர்களை வன்மையாகத் தாக்கி அவர்கள் முற்றிலும் அழியும்வரை அவர்களைக் கொன்று முடித்தனர். அவர்களிடமிருந்து தப்பி ஓடியவர்கள் பாதுகாக்கப்பட்ட நகர்களுக்குள் நுழைந்தார்கள். 21 மக்கேதாவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் மக்கள் அனைவரும் நலமே திரும்பினர். இஸ்ரயேலுக்கு எதிராக எவரும் வாய்திறக்கக்கூட இல்லை. 22 யோசுவா, “குகையின் வாயிலைத் திறந்து, அந்த ஐந்து மன்னர்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார். 23 அவர்கள் அவ்வாறே செய்தனர்; எருசலேம், எபிரோன், யார்முத்து, இலாக்கிசு, எக்லோன் ஆகிய நகர்களின் ஐந்து மன்னர்களையும் குகையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள். 24 அவர்கள் அந்த மன்னர்களை யோசுவாவிடம் கொண்டு வந்தபொழுது, யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் ஒருங்கே அழைத்து, அவருடன் சென்ற போர்த் தலைவர்களிடம், “அருகில் சென்று உங்கள் பாதங்களை இம்மன்னர்களின் கழுத்தின்மீது வையுங்கள்” என்றார். அவர்கள் நெருங்கி வந்து தங்கள் பாதங்களை அவர்கள் கழுத்தின்மீது வைத்தனர். 25 யோசுவா அவர்களிடம், “அஞ்சாதீர்கள்; கலங்காதீர்கள்; திடமும் துணிவும் கொண்டிருங்கள். ஏனெனில், ஆண்டவர் நீங்கள் போரிடும் எதிரிகள் அனைவருக்கும் இவ்வாறே செய்வார்” என்றார். 26 அதற்குப்பின் யோசுவா அந்த ஐந்து மன்னர்களை வாளால் வெட்டிக் கொன்றார். அவர்களின் சடலங்களை ஐந்து மரங்களில் மாலைவரை தொங்கவிட்டார். 27 கதிரவன் மறையும் நேரத்தில் யோசுவா அச்சடலங்களை இறக்கிவிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவற்றை அவர்கள் முன்பு ஒளிந்திருந்த குகைக்குள் எறிந்தார்கள். குகையின் வாயிலில் பெருங்கற்களை வைத்தார்கள். அவை இந்நாள்வரை உள்ளன. 28 யோசுவா அன்று மக்கேதாவைப் கைப்பற்றினார். அதையும் அதன் மன்னனையும் வாள்முனையில் கொன்றார். அவர்களைக் கொன்று அழித்தார். அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை. எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், மக்கேதா மன்னனுக்கும் செய்தார். 29 யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் மக்கேதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதனுடன் போர் தொடுத்தனர். 30 ஆண்டவர் லிப்னா மக்களையும் மன்னனையும் இஸ்ரயேல் மக்கள் கையில் ஒப்படைத்தார். அதை அவர் வாள்முனையில் அழித்தார். அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை. எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், அதன் மன்னனுக்கும் செய்தார். 31 யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் லிப்னாவிலிருந்து இலாக்கிசுக்குச் சென்று அதை முற்றுகையிட்டுத் தாக்கினார்கள். 32 ஆண்டவர் இலாக்கிசை இஸ்ரயேலின் கையில் ஒப்படைத்தார். அதை இரண்டாம் நாளில் யோசுவா கைப்பற்றினார். வாள்முனையில் அதை அழித்தார்; அதனுள் இருந்த அனைவருக்கும் லிப்னாவுக்குச் செய்தது போல் செய்தார். 33 கெசேரின் மன்னன் ஓராம் இலாக்கிசுக்கு உதவி செய்யச் சென்றான். யோசுவா அவனையும் அவன் மக்களையும் எவரும் தப்பாதபடி கொன்றார். 34 யோசுவாவும் அவருடன் இஸ்ரயேலர் எல்லாரும் இலாக்கிசிலிருந்து எக்லோனுக்குச் சென்று, அதை முற்றுகையிட்டுத் தாக்கினர். 35 அவர்கள் அதை அன்றே கைப்பற்றி, இலாக்கிசுக்குச் செய்ததுபோல், அன்றே அதையும் அதில் வாழ்ந்த அனைவரையும் கொன்று அழித்தனர். 36 யோசுவாவும் அவர் மக்களாகிய இஸ்ரயேலர் எல்லாரும் எக்லோனிலிருந்து எபிரோனுக்குச் சென்று அதைத் தாக்கினர். 37 அதைத் தாக்கி, அதன் மன்னனையும், அதன் நகர்களையும், அதனுள் இருந்த அனைத்து உயிர்களையும் வாள்முனையில் கொன்றனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. எக்லோனுக்கு செய்த அனைத்தையும் அதற்கும் அவர் செய்தார்; அதையும் அதனுள் இருந்த அனைவரையும் அழித்தார். 38 யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்களும் தெபீருக்குத் திரும்பி அதனைத் தாக்கினர். 39 அதன் மன்னனையும் எல்லா நகர்களையும் கைப்பற்றினர். அவர்களை வாள்முனையில் தாக்கினர். அதனுள் இருந்த அனைவரையும் அழித்தனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. லிப்னாவுக்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல், தெபீருக்கும் அதன் மன்னனுக்கும் அவர் செய்தார். 40 யோசுவா எல்லா மலைநாட்டையும் தாக்கினார். நெகேபு சமவெளியையும், பள்ளத்தாக்கையும் அதன் மன்னர்களையும் கைப்பற்றினார்; எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டது போல் அவர்களை அழித்தார். 41 யோசுவா காதேசு பர்னேயாவிலிருந்து காசா வரை கோசேன் நாடு முழுவதையும் கிபயோன்வரை தோற்கடித்தார். 42 யோசுவா எல்லா மன்னர்களையும் நாடுகளையும் ஒரே படையெடுப்பில் கைப்பற்றினார். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இஸ்ரயேலுக்காகப் போரிட்டார். 43 யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர். 10:13 2 சாமு 1:18.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-10
197
யோசுவா
யோசுவா அதிகாரம் – 11 – திருவிவிலியம்
யாபினையும் பிற மன்னர்களையும் தோற்கடித்தல் 1 ஆட்சோர் மன்னன் யாபின் இதைக் கேள்வியுற்று மாதோன் மன்னன் யோபாபுக்கும், சிம்ரோன் மன்னனுக்கும், அக்சாபு மன்னனுக்கும் ஆளனுப்பினான். 2 மலைப்பகுதியின் வடபுறத்திலும், கினரேத்திற்குத் தெற்கில் அராபாவிலும், சமவெளிப்பகுதிகளிலும் மேற்கே நாபோத்தோரில் இருந்த மன்னர்களுக்கும் 3 கிழக்கிலும் மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், மலைவாழ் எபூசியர், மிஸ்பா நாட்டில் எர்மோனின் அடிவாரத்தில் இருந்த இவ்வியர் ஆகியோருக்கும் ஆளனுப்பினான். 4 அவர்களும் அவர்களுடைய படைகளும் கடற்கரையில் உள்ள மணலைப் போல் எண்ணிறந்த மக்களும் குதிரைகளும் தேர்களும் சென்றனர். 5 அந்த மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக மேரோம் நீரோடைக் கரையில் இஸ்ரயேலருடன் போரிடப் பாளையம் இறங்கினார்கள். 6 ஆண்டவர் யோசுவாவிடம், “அவர்கள் முன் அஞ்சாதே, ஏனெனில், நாளை இந்நேரம் நான் அவர்கள் அனைவரையும் கொலையுண்டவர்களாய் இஸ்ரயேல்முன் ஒப்படைப்பேன். அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை நீ வெட்டுவாய். அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்குவாய்” என்றார். 7 யோசுவாவும் அவருடன் இருந்த எல்லாப் போர்வீரர்களும் திடீரென அவர்களுக்கெதிராக மேரோம் நீரோடைக்கருகில் வந்து அவர்களைத் தாக்கினர். 8 ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்தார். அவர்களை இஸ்ரயேலர் கொன்றனர். அவர்களைப் புகழ்மிக்க சீதோன் வரையிலும், மிஸ்ரபோத்துமயிம் வரையிலும், கிழக்கே மிஸ்பே பள்ளத்தாக்கு வரையிலும் எவரும் தப்பி விடாதவாறு தாக்கினர். 9 ஆண்டவர் சொன்னபடியே யோசுவா அவர்களுக்குச் செய்தார். குதிரைகளின் குதிகால் நரம்புகளை வெட்டினார். அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்கினார். 10 இச்சமயம் யோசுவா திரும்பி வந்து ஆட்சோரைக் கைப்பற்றினார். அதன் மன்னனை வாளால் தாக்கினார். ஏனெனில், ஆட்சோர் அந்த அரசுகள் அனைத்திற்கும் தலைமை தாங்கி வந்தது. 11 இஸ்ரயேலர் அந்நகரில் இருந்த உயிர்கள் அனைத்தையும் வாள் முனையில் கொன்று அடியோடு அழித்தனர்; ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை; ஆட்சோரைத் தீக்கிரையாக்கினர். 12 யோசுவா, அந்த எல்லா நகர்களையும் அவற்றின் மன்னர்களையும் கைப்பற்றினார். ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டிருந்தபடி அவர்களை வாள்முனையில் கொன்று அடியோடு அழித்தார். 13 மேட்டுப் பகுதியில் நிறுவப்பட்ட நகர்களை இஸ்ரயேல் மக்கள் எரிக்கவில்லை. யோசுவா ஆட்சோரை மட்டும் எரித்தார். 14 அந்நகர்களில் கைப்பற்றிய பொருள்களையும் கால்நடைகளையும் இஸ்ரயேலர் கொள்ளைப் பொருளாகக் கொண்டனர். மனிதர்களை மட்டும், எவரும் தப்பாமல் அடியோடு அழியும்வரை, வாள்முனையில் கொன்றனர்; ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை. 15 தம் ஊழியர் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தார். யோசுவா அதன்படியே செய்தார். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவை அனைத்திலும் யோசுவா ஒன்றையும் விட்டுவிடவில்லை. யோசுவா கைப்பற்றிய நிலப்பகுதிகள் 16 யோசுவா இந்த எல்லா நாடுகளையும், மலைகளையும், நெகேபு அனைத்தையும், கோசேன் நாடு முழுவதையும், சமவெளிப் பகுதிகளையும், அராபாவையும், இஸ்ரயேல் மலைகளையும் அதன் சமவெளிப் பகுதிகளையும் கைப்பற்றினார். 17 ஆலாக்கு மலையிலிருந்து சேயிர் வரை உயர்ந்து செல்லும் எர்மோன் மலைக்குக்கீழ் லெபனோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகால்காது வரை இருந்த பகுதிகளைக் கைப்பற்றி, அவற்றின் அரசர்களைப் பிடித்து, வெட்டிக் கொன்றார். 18 யோசுவா அந்த அரசர்களுடன் நீண்டநாள் போர் புரிந்தார். 19 கிபயோன் குடிமக்களான இவ்வியரைத்தவிர வேறெந்த நகரினரும் இஸ்ரயேலருடன் நல்லுறவு கொள்ளவில்லை. எல்லோரையும் போரில் இஸ்ரயேலர் தோற்கடித்தனர். 20 இஸ்ரயேலருடன் போர் புரியுமாறு அவர்கள் இதயங்களை ஆண்டவர் கடினப்படுத்தினார். அதனால் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டதுபோல் அவர்கள் இரக்கமின்றி அழிக்கப்பட்டனர். 21 இச்சமயம் யோசுவா சென்று, மலைநாடு, எபிரோன், தெபீர், அனாபு, யூதாவின் அனைத்து மலைப்பகுதிகள், இஸ்ரயேலின் அனைத்து மலைப்பகுதிகள் ஆகியவற்றிலிருந்த அனாக்கியரை அழித்தார். அவர்களை அவர்களின் நகர்களுடன் யோசுவா முற்றிலும் அழித்தார். 22 இஸ்ரயேல் நாட்டில் அனாக்கியர் பெருமளவில் எஞ்சி இருக்கவில்லை. காசா, காத்து, அஸ்தோது ஆகிய இடங்களில் மட்டும் எஞ்சி இருந்தனர். 23 ஆண்டவர் மோசேக்குக் கூறிய அனைத்தின்படி, யோசுவா எல்லா நிலத்தையும் கைப்பற்றினார். யோசுவா அதை அவர்கள் குலப் பிரிவுகளின்படி இஸ்ரயேலுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். நாடு முழுவதும் போரின்றி அமைதிகண்டது. 11:20 இச 7:16.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-11
198
யோசுவா
யோசுவா அதிகாரம் – 12 – திருவிவிலியம்
மோசே தோற்கடித்திருந்த அரசர்கள் 1 யோர்தானுக்கு அப்பால் கதிரவன் உதிக்கும் பக்கம் அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரை கிழக்குப் பகுதியில் அராபா முழுவதிலும் இஸ்ரயேலர் கைப்பற்றிய நாடுகளின் அரசர்கள் இவர்களே; 2 எமோரிய மன்னன் சீகோன் எஸ்போனில் வாழ்ந்தான். அவன் அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையிருக்கும் அராயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் கிலயாதின் பகுதிவரையிலும் அம்மோனியரின் எல்லையான யப்போக்குப் பள்ளத்தாக்குவரையிலும் 3 அராபாவிலிருந்து கிழக்கே கினரோத்துக் கடல்வரையிலும் உப்புக்கடலான அராபா கடல்வரையிலும், கிழக்கு நோக்கி பெத்தசிமோத்து வரையிலும், தெற்கில் பிஸ்கா மலைச்சரிவு வரையிலும் அரசாண்டான். 4 இரபாயியருள் எஞ்சி இருந்தவனும் பாசானின் மன்னனுமான ஓகின் எல்லை இதுவே; அவன் அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வாழ்ந்தான். 5 எர்மோன்மலை, சல்காமலை, கெசூரியர், மாக்காத்தியரின் எல்லைவரையிலும் எஸ்போன் மன்னன் சீகோனின் எல்லையான கிலயாதின் பாதிவரையிலும் ஆண்டான். 6 ஆண்டவரின் ஊழியரான மோசேயும் இஸ்ரயேலரும் அவர்களைத் தோற்கடித்தனர். ஆண்டவரின் ஊழியரான மோசே அதை ரூபனுக்கும் காத்துக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உரிமையாகக் கொடுத்தார். யோசுவா தோற்கடித்த மன்னர்கள் 7 யோசுவாவும் இஸ்ரயேலரும் கைப்பற்றிய நாடுகளின் மன்னர்கள் இவர்களே. யோர்தானுக்கு மேற்கே பாகால்காதில் லெபனோன் பள்ளத்தாக்கிலிருந்து சேயிர்பக்கம் செல்லும் ஆலாக்கு மலைவரை இருந்த மன்னர்களின் நாட்டை யோசுவா இஸ்ரயேலருக்கு அவர்களின் குலப்பிரிவின்படி உடைமையாக அளித்தார். 8 மலைச்சரிவு, பள்ளத்தாக்கு, அராபா மலைச்சரிவு, பாலைநிலம், நெகேபு, இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரின் நாடுகள். 9 எரிகோ மன்னன் ஒருவன்; பெத்தேலுக்கு அருகில் இருந்த ஆயி மன்னன் ஒருவன். 10 எருசலேம் மன்னன் ஒருவன்; எபிரோன் மன்னன் ஒருவன், 11 யார்முத்து மன்னன் ஒருவன்; இலாக்கிசு மன்னன் ஒருவன். 12 எக்லோன் மன்னன் ஒருவன்; கெசேர் மன்னன் ஒருவன். 13 தெபீர் மன்னன் ஒருவன்; கெதேர் மன்னன் ஒருவன். 14 ஒர்மா மன்னன் ஒருவன்; அராது மன்னன் ஒருவன். 15 லிப்னா மன்னன் ஒருவன்; அதுல்லாம் மன்னன் ஒருவன். 16 மக்கேதா மன்னன் ஒருவன்; பெத்தேல் மன்னன் ஒருவன். 17 தப்புவாகு மன்னன் ஒருவன்; ஏபேர் மன்னன் ஒருவன். 18 அப்பேக்கு மன்னன் ஒருவன்; இலாசரோன் மன்னன் ஒருவன். 19 மாதோன் மன்னன் ஒருவன்; ஆட்சோர் மன்னன் ஒருவன். 20 சிம்ரோன் மெரோன் மன்னன் ஒருவன்; அக்சாபு மன்னன் ஒருவன். 21 தானாக்கு மன்னன் ஒருவன்; மெகிதோ மன்னன் ஒருவன். 22 கெதேசு மன்னன் ஒருவன்; யோக்னயாம் கர்மேல் மன்னன் ஒருவன். 23 நாபோத்தோரில் இருந்த தோர் மன்னன் ஒருவன்; கில்காலில் ஒருந்தகோயிம் மன்னன் ஒருவன். 24 திர்சா மன்னன் ஒருவன்; ஆக மொத்தம் முப்பத்தொரு மன்னர்கள். 12:1-5 எண் 21:21-35; இச 2:26; 3:11. 12:6 எண் 32:33; இச 3:12.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-12
199
யோசுவா
யோசுவா அதிகாரம் – 13 – திருவிவிலியம்
யோசுவாவுக்கு ஆண்டவர் இட்ட கட்டளை 1 யோசுவா வயதாகி முதுமை அடைந்தார். ஆண்டவர் அவரிடம், “உனக்கு வயதாகி, நீ முதுமை அடைந்துவிட்டாய். இன்னும் உடைமையாக்க வேண்டிய நிலம் ஏராளமாக உள்ளது. 2 எஞ்சியுள்ள நிலங்கள் இவையே; பெலிஸ்தியர், கெசூரியரின் எல்லாப் பகுதிகள். 3 எகிப்துக்கு எதிரில் உள்ள சீகோரிலிருந்து வடக்கில் எக்ரோன் எல்லைவரை, கானானியருடையதாகக் கருதப்பட்ட காசா, அஸ்தோத்து, அஸ்கலோன், காத்து, எக்ரோன் ஆகிய பகுதிகளின் ஐந்து பெலிஸ்திய மன்னர்கள், மற்றும் அவ்வாயர், 4 தெற்கிலிருந்து கானான் நாடு முழுவதும் சீதோனியருக்குச் சொந்தமான மெயாரா, அபேக்கு வரையிலும், எமோரியரின் எல்லை வரையிலும் உள்ள பகுதிகள், 5 கெபாலியரின் நாடு, லெபனோன் முழுவதும், எர்மோன் மலையின்கீழ் கதிரவன் உதிக்கும் பாகால்காதிலிருந்து ஆமாத்துக் கணவாய் வரை உள்ள பகுதியும். 6 லெபனோனிலிருந்து மிஸ்ரபோத்துமயிம் வரை உள்ள அனைத்து மலைவாழ் மக்கள், அனைத்து சீரோனியர் — இவர்களை இஸ்ரயேல் முன்னிலையில் நானே வெளியேற்றுவேன். நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீயும் அதை இஸ்ரயேலுக்கு உடைமையாகக் கொடு. 7 இப்போது இந்த நாட்டை ஒன்பது குலங்களுக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உடைமையாகக் குறித்துக்கொடு” என்றார். யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பகுதியைப் பங்கிடல் 8 அத்துடன் ரூபன், காத்து மக்களுக்கும், மனாசேயின் பாதிக் குலத்திற்கும் யோர்தானுக்கு கிழக்கே ஆண்டவரின் ஊழியர் மோசே குறித்துக் கொடுத்தவாறே உடைமையாக்கப் பெற்றவை; 9 அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையில் உள்ள அரோயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் உள்ள நகர்வரையிலும் மெதபா சமவெளி முழுவதும், தீபோன் வரையிலும், 10 எஸ்போனில் ஆட்சிசெய்த எமோரியரின் மன்னன் சீகோனின் நகரங்கள் அனைத்தும், அம்மோனியரின் எல்லை வரையிலும், 11 கிலயாத்து, கெசூரியர், மாக்காத்தியரின் எல்லைகள், எர்மோன்மலை முழுவதும், சால்காவரை பாசான் முழுவதும்; 12 இரபாத்தியரில் எஞ்சியிருந்தவனும், பாசானில் இருந்து அஸ்தரோத்தையும் எதிலேயியையும் ஆட்சி செய்தவனுமாகிய ஓகின் பகுதி முழுவதும், மோசே அவர்களைத் தாக்கிக் கைப்பற்றியிருந்தார். 13 கெசூரியர், மாக்காத்தியரின் நாடுகளையோ இஸ்ரயேலர் கைப்பற்றவில்லை. கெசூரியரும் மாக்காத்தியரும் இந்நாள்வரை இஸ்ரயேலர் இடையே வாழ்கின்றனர். 14 லேவியர் குலத்திற்கு மட்டும் அவர் உடைமை அளிக்கவில்லை. அவர் அவர்களுக்குக் கூறியபடி அவர்களது உடைமை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் செலுத்தப்படும் எரிபலியாகும். ரூபனுக்கு அளிக்கப்பட்ட பகுதி 15 ரூபனின் குலத்திற்கு அவர்களின் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன: 16 அவர்களது எல்லை அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்தில் அரோயேரிலிருந்து சமவெளியின் நடுவில் உள்ள நகர்வரை, மற்றும் மேதபாவில் உள்ள சமவெளி முழுவதும்; 17 சமவெளியில் உள்ள எஸ்போனும் அதன் எல்லா நகர்களும், தீபோன் பாமோத்துபாகால், பெத்பாகால்மெகோன்; 18 யாகசு, கெதமோத்து, மேபாத்து; 19 கிரியத்தாயிம், சிப்மா, கர் சமவெளியில் உள்ள செரெத்துசாகர்; 20 பெத்பெகோர், பிஸ்கா பள்ளத்தாக்கு, பெத்தசிமோத்து; 21 அதாவது, சமவெளியில் உள்ள எல்லா நகர்களும், எஸ்போனில் ஆண்டு வந்த எமோரிய அரசன் சீகோனின் எல்லா அரசுகளும், மோசே அவனையும், மிதியான், ஏவி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியவற்றின் தலைவர்களையும், அந்நாட்டில் வாழ்ந்த சீகோன் தலைவர்களையும் தாக்கினார். 22 இஸ்ரயேல் மக்கள் வாளால் கொன்றவர்களில் நிமித்திகள் பெகோரின் மகன் பிலயாமும் ஒருவன். 23 ரூபன் மக்களின் எல்லை யோர்தான் நதிக்கரை. அப்பகுதியின் நகர்களும், குடியிருப்புகளும், அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் மக்களின் உடைமையாகியது. காத்துக்கு அளிக்கப்பட்ட பகுதி 24 காத்தின் குலத்தைச் சார்ந்த மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன; 25 யாசேர், கிலயாதின் எல்லா நகர்கள், இரபாவின் கிழக்கில் அரோயேர்வரை, அம்மோனியரின் நிலத்தில் பாதி, 26 எஸ்போனிலிருந்து இராமத்து மிட்சப்பே வரை, பெத்தோனிம் மகனயிம் இவற்றிலிருந்து தெபீரின் எல்லைவரை. 27 பெத்தோராம் பள்ளத்தாக்கில் பேத்நிம்ரா, சுக்கோத்து, சாபோன், எஸ்போனின் மன்னன் சீகோனின் எஞ்சியிருந்த அரசுகள், யோர்தான் எல்லையாக கினரேத்துக் கடல் முடிவு வரை. யோர்தானுக்கு அப்பால் கிழக்குவரை உள்ள பகுதிகள். 28 காத்தின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி இப்பகுதி நகர்களும் குடியிருப்புகளும் உடைமையாயின. மனாசேக்கு அளிக்கப்பட்ட பகுதி 29 மனாசேயின் பாதிக் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன; 30 அவர்களுடைய எல்லை, மகனயிமிலிருந்து பாசான் முழுவதும், பாசானின் அரசன் ஓகின் அரசு முழுவதும், பாசானில் உள்ள அறுபது நகர்களும் யாயிரின் குடியிருப்புகள் முழுவதும்; 31 கிலயாதில் பாதி, அஸ்தரோத்து, எதிரேயி, பாசானில் இருந்த ஓகின் அரசு நகர்கள். இவை மனாசேயின் மகன் மாக்கிருக்கும், மாக்கிரின் பாதி மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் அளிக்கப்பட்டன. 32 எரிகோவிற்குக் கிழக்கே யோர்தானுக்கு அப்பால் மோவாபுச் சமவெளியில் இருந்தபோது, மோசே இப்பகுதிகளை உடைமையாகக் கொடுத்தார். 33 ஆனால், லேவியர் குலத்திற்கு மோசே உடைமை அளிக்கவில்லை. அவர்களுக்கு அவர் கூறியபடி இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே அவர்களின் உடைமை. 13:6 எண் 33:54. 13:8 எண் 32:33; இச 3:12. 13:14 இச 18:1. 13:33 எண் 18:20; இச 18:2.
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-13